Wednesday, February 10, 2010

இந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)

எப்போதோ சோனி ஆரம்பித்துவைத்தது. இலியட் முதற்கொண்டு சில கருவிகள் வந்தன. ஆனால் பயன் ஏதும் இல்லை. பிறகு அமேசான் தன் கிண்டில் கருவியை அறிமுகப்படுத்தியது. அங்குதான் மாற்றம் ஆரம்பித்தது.

கிண்டில் வெறும் படிப்பான் மட்டும் அல்ல; அதன்மூலம் புத்தகங்களை வாங்கமுடியும், வான் வழியாகப் பெறவும் முடியும். அதுதான் பெரிய மாற்றமே. அதன் விளைவாக மின் புத்தகங்களை வாங்கிப் படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. அடுத்து பார்ன்ஸ் & நோபிளின் நூக் என்னும் கருவி. இது கிண்டில் போல கறுப்பு/வெள்ளை என்றில்லாமல் கலரில் இருந்தது. இதிலும் வயர்லெஸ் மூலம் புத்தகங்களைப் பெறமுடியும். ஆனால் தீவிர வாசகர்கள் கலர் ஸ்க்ரீன் வேண்டும் என்றெல்லாம் கேட்பார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஆப்பிள் தன் ஐ-பேட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இதுவும் வண்ணத் திரை கொண்டது. ஆப்பிள் என்றாலே கோயில் கட்டிக் கும்பிடும் ஒரு கூட்டம் அமெரிக்காவில் உள்ளது. இந்தியாவில் இல்லை.

சரி, இதெல்லாம் அமெரிக்காவில். இந்தியாவில் என்ன நிலை?

முதலில் விலைதான் இங்கு விஷயமே. எவ்வளவு குறைந்த விலைக்குக் கருவிகள் சந்தைக்கு வரப்போகின்றன என்பது முக்கியமான விஷயம். இந்த தில்லி புத்தகக் காட்சியில் infibeam என்ற ஒரு நிறுவனம் தங்களது கருவியைக் காட்சிக்கு வைத்திருந்தனர். பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. ஆங்கிலம் தவிர இந்திய மொழிகளிலும் படிக்கலாம் என்று சொன்னார்களே தவிர அதெல்லாம் pdf கோப்பாகத்தான். அப்படியென்றால் ஸ்க்ரால் செய்துதான் படிக்கவேண்டும். படிக்கும் தரம் நன்றாகக் குறையும். வாங்கும் புத்தகங்களில் சரியான DRM இருக்காது என்றே தோன்றுகிறது. அது பற்றி அங்கே கடையில் இருந்த அடிமட்ட ஊழியர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் இணையம் வழியாக வாங்கிப் படிக்கவேண்டும். அத்துடன் அவர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் Project Gutenberg வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான நூல்களைத்தான் உயர்வாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். எல்லாமே இலவசம், எனவே இந்தக் கருவியை வாங்குங்கள் என்ற வாசகம் ஓரளவுக்குத்தான் மக்களைக் கவரும். கணினியிலேயே இவற்றை இறக்கி இலவசமாகப் படிக்கலாமே?

இந்தியாவில் அறிமுகம் செய்யும் எந்த மின் படிப்பான் கருவியாக இருந்தாலும் அதற்கென சில முக்கியமான குணாதிசயங்கள் இருக்கவேண்டும்.

1. கொஞ்சம் மெதுவாக இறங்கினாலும், வயர்லெஸ் மூலம் நேரடியாகக் கருவிக்கே வந்துசேரும் வழியில் தொடர்பு இருக்கவேண்டும்.

2. இதற்கென தனியான கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. எப்படி அச்சுப் புத்தகத்தில் தாள், அச்சு, பைண்டிங் கூலி உள்ளதோ அதற்குப் பதில் இந்த வயர்லெஸ் இணைப்புக் கூலி. அதை விற்கும்/உருவாக்கும் நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. பதிப்பாளர்கள் மனம் விரும்பும் அளவுக்கு DRM இருக்கவேண்டும். (அதாவது புத்தகங்களை எளிதில் பைரேட் செய்யமுடியாத நிலை இருக்கவேண்டும்.)

4. இந்திய மொழிப் புத்தகங்கள் எல்லாம் pdf கோப்பின் வாயிலாகத்தான் என்று இருக்கக்கூடாது. அவையும் யூனிகோட் எழுத்துருக்கள் வாயிலாகக் கிடைக்கவேண்டும். அப்போதுதான் page re-flow ஒழுங்காக நடக்கும். இதனைச் செய்யாதவர்கள் எல்லோரும் விற்கும் கருவிகள் வெறும் பஜனைக் கருவிகளே.

5. பதிப்பாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் ஃபைல்களை அவை எந்த எழுத்துக் குறியீட்டில் இருந்தாலும் சரி, இந்த மின் புத்தகக் கருவி எதிர்பார்க்கும் யூனிகோட் எழுத்துக் குறியீட்டுக்கு மாற்றித்தரும் மென்பொருள் kit உருவாக்கித் தரப்படவேண்டும்.

6. இணையப் புத்தகச் சந்தைகளான indiaplaza, firstandsecond, flipkart (இன்னபிற) ஆகியவற்றின் வழியாக இந்தக் கருவியைச் சந்தைப்படுத்த வேண்டும்.

7. சர்வதேச எடிஷன் ஆங்கிலப் புத்தகங்கள் யாவும் இந்த இந்தியக் கருவியில் இந்திய விலையில் கிடைப்பது கஷ்டம். ஏனெனில் பிற நாடுகளில் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் - உள்ளவர்கள் இந்திய எடிஷனை குறைந்த விலையில் வாங்கிவிடக்கூடும். எனவே இந்தக் கருவிகளை இந்தியாவில் விற்பது ஆரம்பத்தில் பெரும் கஷ்டமாகவே இருக்கும். ஆனால் இந்திய மொழிப் புத்தகங்களை விற்பதில் கஷ்டம் ஏதும் இருக்காது.

இந்த ஆண்டு (2010) குறைந்தபட்சம் 7-8 கருவிகளாவது இந்தியச் சந்தையில் கிடைக்க ஆரம்பிக்கும். இவை எவற்றிலும் நான் மேலே சொன்ன எதுவும் இருக்காது! ஆனாலும் எங்காவது ஆரம்பித்துதானே ஆகவேண்டும்!

15 comments:

 1. ஐபேட் ஒரு ஈபுக் ரீடரா?

  அமேசான் கிண்டில், சோனி ஈபுக் ரீடர், பார்ன்ஸ் அண்ட் நோபிள் நூக் இவை எதிலாவது யூனிக்கோட் சப்போர்ட் இருக்கிறதா?

  தமிழ்ப் புத்தகங்கள் நீங்கள் கேட்கும் DRM வசதிகளோடு இவற்றில் கிடைக்கிறதா?

  ReplyDelete
 2. ஐபேட் - ஆப்பிள் அதனை மின் புத்தகப் படிப்பானாக மட்டும் அறிமுகம் செய்யவில்லை. இணைய உலாவி + மின் படிப்பான் + குட்டிக் கணினி என்ற வகையில்தான் அறிமுகம் செய்துள்ளனர். ஆனால் இந்தப் பதிவு மின் படிப்பான்கள் என்பதால்...

  கிண்டிலில் யூனிகோட் கிடையாது. நூக் பற்றித் தெரியாது.

  சோனி போன்ற பலவற்றில் தமிழ்ப் புத்தகங்களை PDF ஆக்கிப் பார்க்கலாம். ஆனால் அவற்றில் மிக எளிதான password போன்ற DRM மட்டுமே இருக்கும்.

  ReplyDelete
 3. Your wishlist is for a very ideal situation. DRM is not available/implemented even in CD/DVDs ? Even so, do we not seek hacking software ? If printing is disabled,that should work in the first phase. That can be implemented in a unicode supported pdf format.
  Paul coulnho has demonstrated the folly of online editions eating into print share. Now Bollywood movies are released on DTH channels which does not affect their revenue stream but reduces piracy.

  ReplyDelete
 4. நல்ல பதிவு.

  படிப்பான் எனும் பதம் வசீகரமாக இருக்கிறது. உங்களுடைய கண்டுபிடிப்பா?!

  ReplyDelete
 5. DRM என்றால் என்ன?

  - சிமுலேஷன்

  ReplyDelete
 6. Digital Rights Management - DRM

  ReplyDelete
 7. http://www.infibeam.com/Pi#specsAnchor This might be an answer, but again its not feature rich, with your req. specifications.

  ReplyDelete
 8. Infibeam தவிர,

  Coralhub என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒரு மின் படிப்பானைக் கொண்டுவருகிறார்கள்.

  அத்துடன் கேரளாவின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான DC Books + சென்னையின் Calsoft இணைந்து ஒரு மின் படிப்பானை வெளியிடுகிறார்கள்.

  இப்போதைக்கு இந்த மூன்று.

  ReplyDelete
 9. //இந்திய மொழிப் புத்தகங்கள் எல்லாம் pdf கோப்பின் வாயிலாகத்தான் என்று இருக்கக்கூடாது. அவையும் யூனிகோட் எழுத்துருக்கள் வாயிலாகக் கிடைக்கவேண்டும். அப்போதுதான் page re-flow ஒழுங்காக நடக்கும். இதனைச் செய்யாதவர்கள் எல்லோரும் விற்கும் கருவிகள் வெறும் பஜனைக் கருவிகளே.//

  கிண்டிலில் இப்போது இந்த வசதி உள்ளதா?

  ReplyDelete
 10. இப்போதுதான் இந்தப் பதிவைப் படித்தேன். நீங்கள் PDF குறித்து தெரிவித்த சில கருத்துகளுடன் வேறுபடுகிறேன்.

  //ஆங்கிலம் தவிர இந்திய மொழிகளிலும் படிக்கலாம் என்று சொன்னார்களே தவிர அதெல்லாம் pdf கோப்பாகத்தான். அப்படியென்றால் ஸ்க்ரால் செய்துதான் படிக்கவேண்டும். படிக்கும் தரம் நன்றாகக் குறையும்.//

  //இந்திய மொழிப் புத்தகங்கள் எல்லாம் pdf கோப்பின் வாயிலாகத்தான் என்று இருக்கக்கூடாது. அவையும் யூனிகோட் எழுத்துருக்கள் வாயிலாகக் கிடைக்கவேண்டும். அப்போதுதான் page re-flow ஒழுங்காக நடக்கும். இதனைச் செய்யாதவர்கள் எல்லோரும் விற்கும் கருவிகள் வெறும் பஜனைக் கருவிகளே.//

  PDF கோப்புகளைப் படிப்பது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. என்னிடம் உள்ள Sony PRS-500 கருவியில் பல தமிழ் நூல்களைப் படித்திருக்கிறேன் (பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் இணையத்தில் கிடைக்கும் கல்கியின் இதர நூல்கள், ஆகியன). அடிப்படை இதுதான் - ஒரு A4 அளவு ஆவணத்தை எனது படிப்பானின் சிறிய திரையில் படிக்க முற்பட்டால் அது resize ஆகி மிகச்சிறிய எழுத்துகளாகக் காட்சியளிக்கும் (உங்கள் Iliad கருவியில் scrolling முறையில் அதைப் படிக்கலாம் போலிருக்கிறது). ஆகவே, ஆவணங்களை படிப்பானின் திரைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். ஓப்பன் ஆபீஸில் பக்க அளவை 9cm x 12cm அளவுக்கு வரையறுத்து, அதில் தமிழ் ஆவணங்களை வெட்டி ஒட்டி, அதை PDF கோப்பாக சேமித்துக் கொள்ளலாம். இந்த அளவுள்ள ஆவணத்தை எனது படிப்பான் கருவியில் எந்தப் பிரச்சனையுமின்றி படிக்க முடியும்.இதைப் போலவே மற்ற திரை அளவுகளுக்கும் ஏற்றவாறு ஆவணத்தை வடிவமைத்து அந்தந்த கருவிகளில் படித்துப் கொள்ளலாம்.

  ReplyDelete
 11. desktop ebook readerஇல் தற்போது இலவசமாகவே amazon kindle-யை தரவிறக்கி கொள்ள முடிகிறது. ஏற்கெனவே செல்போன், ஐபோட், லேப்டாப், desktop என்று அளவிற்கு அதிகமாக உபகரணங்கள் இருக்கும் போது எதற்கு தனியாக kindle? பார்ப்போம் வருங்காலத்தில் மேற்சொன்ன அனைத்தும் ஒரே உபகரணமாய் மாறுமா அல்லது மேன்மேலும் சிறுசிறு உபகரணங்கள் வந்து எக்கசக்க தோடுகளுடன் சுற்றும் மாடர்ன் இளைஞர்கள் போல நாமும் பல உபகரணங்களுடன் சுற்றும் மனிதர்களாய் மாறி போவோமா என்று?

  ReplyDelete
 12. Kindle DX பயன்படுத்தி வருகிறேன்.Kindleல் தமிழ் எழுத்துக்கள் தெரிவதில்லை. ??? யாகவே தெரிகின்றன. ஆனால் பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொண்டால் நன்றாகவே தெரிகிறது. தமிழ் இணைய கட்டுரைகளை பிடிஎஃப் கோப்பாக மாற்றி கிண்டிலில் தான் படிக்கிறேன். எழுத்துரு அளவை மாற்ற முடியாது, நூலினுள் தேட முடியாது என்பதை தவிர பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. நன்றாகவே இருக்கின்றது.

  - சித்தார்த்.

  ReplyDelete
 13. ஐபோன் அளவுக்கு ஐபேட் ஒரு தொழில் நுட்ப வெற்றியாகுமா , பயனருக்கு புதிய அனுபவம் தருமா என்பது ஐயமே

  எ.கா : ஐபோன் வெளி வந்த காலத்தில் touch screen போன்ற செயல்பாடுகள் முன்பு கண்டிராதவை... ஆப்பிள் அவற்றை கொண்டு வந்து செல் போன் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியது

  ஆனால் ஐபேடில் அப்படி ஒன்றும் வியக்க வைப்பதாய் இல்லை என்றே சொல்லலாம்

  ஐபேட்டில் flash player, USD support ஆகியவை இல்லாமை ஒரு குறையே. இதை விட நல்ல கையடக்க கணிணிகள் சந்தையில் இருக்கின்றன.

  ஆனால் விளம்பர உத்தி ( marketing and media hype) , மென்பொருள் (apps store) ஆகியவற்றால் ஐபேட் முன் நிற்கலாம்

  மேலும் சிந்தனைகள்
  http://manakkan.blogspot.com/2010/04/apple.html

  ReplyDelete
 14. kindle ல் உள்ள மிகப்பெரிய சாதகமான அம்சம் அதன் பேட்டரி தான்.

  இ.இங்க் தவிர்த்து எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட tablet பி.சி (ஆப்பிள் ஐபேட்) எல்லாம் ரெம்ப நேரம் வைத்துப்படிக்க முடியாது. கண் வலி வரக்கூடும்.

  கிண்டில் போன்ற ஒரு கருவியில் தமிழ் யூனிகோடும் வந்துவிட்டால் அது தான் சூப்பர். ரஷியா மொழி எழுத்துக்கள் தெரிய ஏற்கனவே கிண்டில் hack கள் இணையத்தில் விரவிக்கிடக்கின்றன. தமிழையும் இப்படி இணைய திருட்டுத்தனம் மூலம் வளர்க்க முடியும் என்றால் வெட்கப்படாமல் தமிழ் ஆர்வம் கொண்ட ஐ.டி மக்கள் அதைச் செய்யவேண்டும்.

  தற்போது கிண்டில் 3 (மூன்றாம் தலைமுறை) யின் விலை $ 139 மட்டுமே.

  ReplyDelete
 15. http://www.mobileread.com/forums/showthread.php?t=116098

  கிண்டிலில் தமிழ் வர என்ன செய்யவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள்.

  ReplyDelete