Tuesday, February 02, 2010

திரு சிராப்பள்ளி - 3

ஆனால் இந்தக் கருவறைகளைக் காண முடியாத அளவுக்கு உங்களை ஈர்ப்பது பின் சுவற்றில் காணப்படும் ஐந்து சிற்பத் தொகுப்புகள். நடுநாயகமாக உங்களை ஈர்ப்பது பிரம்மன். அவரது முன் தலையுடன் இரு பக்கவாட்டுத் தலைகளைக் காணமுடியும். அவருக்கு இரு பக்கங்களிலும் யார் யார்?

இடது கோடியிலிருந்து பார்வையைத் திருப்புவோம். முதலில் கணபதி! இதுதான் தமிழகத்தில் காணக்கிடைக்கும் முதல் விநாயகர் சிற்பமோ? ஆளுயர கணபதி, தொந்தியும் தொப்பையுமாக, யானைக் காதுகள் பெரிதாக இல்லை. தும்பிக்கை சற்றே சிதைந்துள்ளது, ஆனாலும் தெளிவாகத் தெரிகிறது. இரு குட்டைக் கால்கள். இரு பக்கங்களிலும் கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையுடன். நான்கு கரங்களில் இரு கரங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மற்ற இரு கரங்களில் மலர்களை ஏந்தியுள்ளதுபோல் தெரிகிறது. இடுப்பில் கௌபீனம். ருத்ராக்‌ஷ மாலையால் ஆன பூணூல்.

விநாயகருக்கு அடுத்து யார்? நீண்ட நெடிய கால்கள். ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூல், நிவீதம். கைகளில் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆயுதங்கள் ஏதும் இல்லை. இது சுப்ரமண்யராகத்தான் இருக்கவேண்டும். ஏன் என்று கீழே பார்ப்போம். கீழே இரு கணங்கள். மேலே இரு தேவர்கள். கௌபீனம்தான் ஆடை.

அடுத்து நாம் முன்பே சொன்ன பிரம்மன். ஒரு கையில் ருத்ராக்‌ஷ மாலை. மறு கையில் சக்கரம். ஒரு கை அபய முத்திரையில், மற்றொன்று இடுப்பில். முழு ஆடை. கீழே கணங்கள் நிற்கவில்லை, ஆனால் இரு அடியவர்கள் உட்கார்ந்துள்ளனர். பார்த்தால் ரிஷிகளாகத் தெரியவில்லை. தேவர் சாயல் தெரிகிறது. மேலே மற்ற இரு தொகுப்பில் உள்ளதுபோல தேவர்கள், விஸ்மய முத்திரையில்.

அடுத்து யார்? சூரியன். தலையைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டம். ஒரு கையில் தாமரைப்பூ. மறு கையில் ருத்ராக்‌ஷ மாலை. ஒரு கை இடுப்பில். ஒரு கை அபய முத்திரையில். இடுப்பில் கௌபீனம். பிரம்மன்கீழ் அமர்ந்திருப்பதுபோலவே இங்கும் இரு அடியார்கள் அமர்ந்துள்ளனர். மேலே இரு தேவர்கள் விஸ்மய முத்திரையில்.


அடுத்து? தேவி, சக்தி, துர்கை. இது முழுதாகச் செதுக்கி முடிக்காத பகுதி என்று தெரிகிறது. மேலே உள்ள இரு தேவர்களில் ஒன்றும் மட்டும்தான் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றை முடிக்கவில்லை. கீழே சற்றே விகாரமான இருவர். அதில் ஒருவர் தன் தலையை கத்தியால் தானே வெட்டிக்கொள்கிறார். இந்த தற்கொலைப் படையல் வடிவத்தை வராகமண்டபத்தில் உள்ள துர்கை சிற்பத்தொகுப்பிலும் திரௌபதி ரதத்தில் உள்ள துர்கை சிற்பத்திலும் காணலாம். துர்கையின் ஒரு கையில் சக்கரம். மறு கை தெளிவாக இல்லை. ஒரு கை இடுப்பில். மற்றொரு கை எதையோ ஏந்துவதுபோல் தெரிகிறது.

இது இந்துமதத்தில் குறிப்பிடும் ஷண்மதம் என்பதைக் குறிக்கும் தொகுப்புச் சிற்பம் எனலாம். சிவன், விஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சூரியன், சக்தி ஆகிய ஆறு பேர்களை வழிபடும் ஆறு மதங்கள். இதில் கூடவே பிரமனும் காட்சி தருகிறாரே ஒழிய பிரமனை வழிபடும் மதம் என்று ஒன்றும் இல்லை. இந்தக் காரணத்தாலேயே நம்மால் எளிதில் கண்டுபிடிக்கக்கூடியவர்களைத் தவிர எஞ்சியிருக்கும் இடது பக்கத்திலிருந்து இரண்டாவது சிற்பம் சுப்ரமணியராக மட்டுமே இருக்கமுடியும் என்று சொன்னேன்.

***

திருச்சி செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கோயில்கள் இவை. இரண்டிலும் வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.

(முற்றும்)

7 comments:

 1. ரொம்ப அருமையான பயணக்கட்டுரை. அதுவும் கங்காதரர் பற்றிய விவரணைகள் மீண்டும் ஒரு தரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆசையைக் கொடுக்கிறது. நன்றி பத்ரி. nice photos too.

  ReplyDelete
 2. நல்ல பதிவு. திருச்சி சென்றால் கட்டாயம் செல்கின்றேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 3. நேற்று முன்தினம் பெரியவர் ஐராவதத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மற்றொருமுறையாக் என்னிடம் உடனே திருச்சியைப்பற்றி நான் எழுதவேண்டுமென் விரும்பினார்.
  அன்பர்கள் திருச்சியைப்பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பிவைக்கலாம்.
  நரசய்யா
  narasiah@yahoo.com
  narasiah267@gmail.com

  ReplyDelete
 4. பத்ரி இது போன்ற கட்டுரைகளில் இணைக்க பட்டுள்ள ஒளிபடங்கள் அனேகமாக அளவில் பெரிதாக (pix) இருக்க கூடும். அவைகளை வேறு ஏதும் flickr, picasa போன்ற இடங்களில் போட்டு ஒரு சுட்டியை தரலாமே. பெரிதாக பார்ப்பது அருமையான அனுபவத்தை தருமே.

  ReplyDelete
 5. பத்ரி - நல்ல கட்டுரை. நன்றிகள்!

  ஒருவகையில் இதையெல்லாம் பார்க்க, விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்ல வாய்க்கப்பெற்ற உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. நான் இந்தியா வரும்பொழுது முழுக்குடும்பத்தையும் கட்டியிழுத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் செலவிடமுடிகிறது. - வெங்கட்

  ReplyDelete
 6. இந்த இரண்டாவது குகைக்கோயில் பல்லவர்களால் அல்ல, பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் பேரா. சுவாமிநாதன். தொடர்பாக ஒரு புத்தகத்தை எனக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் அது தொடர்பாக மேலும் எழுதுகிறேன்.

  ReplyDelete
 7. வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.
  அப்படி போடுங்க. :-)

  ReplyDelete