Thursday, February 11, 2010

In defence of மதி

படிக்க: இட்லிவடை பதிவு

மதி போடும் கார்ட்டூன்கள் கருணாநிதிக்கு இவ்வளவு கோபம் வரவழைக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் முரசொலி படிப்பதே இல்லை.

சில தினங்களுக்குமுன் மதியுடன் அடுத்த புத்தக ப்ராஜெக்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது முரசொலியில் வந்திருந்த ஒரு கட்டுரையை என்னிடம் காண்பித்தார். அதில் மதியின் கார்ட்டூன் ஒன்றைக் குறிப்பிட்டு, அதன்கீழ் மதியைத் தரக்குறைவாக விமரிசித்து எழுதப்பட்டிருந்தது. அந்தக் கார்ட்டூன் இதுதான்.



பார்த்தவுடனேயே சிரிப்பை வரவழைத்த கார்ட்டூன் இது. இதைப்போல பல கார்ட்டூன்களை மதி வரைந்துள்ளார். இன்றைய ஆட்சியாளரான கருணாநிதிதான் இதில் பல கார்ட்டூன்களுக்குத் தீனி. உதாரணமாக ‘உளியின் ஓசை’ படத்துக்கு சிறந்த வசனத்துக்கான விருது கருணாநிதிக்குத் தரப்பட்டபோது அந்த விழாவுக்கும் கருணாநிதியே தலைமை தாங்கி விருதுகளைத் தருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. (கார்ட்டூன் தினமணி தளத்தில் இருக்கும். இப்போது தேடி எடுக்க நேரமில்லை.) அப்போது அவரவர் ட்விட்டர், ப்லாகர் என்று எல்லா இடங்களிலும் கேலி பேசியிருந்தனர். ஆனால் மதி அநாயாசமாக ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார். இரண்டு பேர் பேசிக்கொள்வதாக வரும். ஒருவர் சொல்வார்: “அதாங்க எனக்கும் புரியலை. இவரே விருதை மேலே தூக்கிப்போட்டு கேட்ச் பிடிச்சுப்பாரா?” மாய்ந்து மாய்ந்து பக்கம் பக்கமாக எழுதுவதைவிட சிறப்பானதில்லையா இந்தக் கார்ட்டூன்? இதைவிட நச்சென்று இந்த வெட்கக்கேடான விஷயத்தை எப்படி வெளிப்படுத்துவது?

ஆங்கிலத்தில் propriety என்றொரு சொல் உண்டு. தமிழ் விக்‌ஷனரி இதற்கு “ஒழுங்கு முறை; ஒழுங்குமுறை; தகுதி; நேர்மை; பொருத்தமுடைமை; பொருத்தம்; முறைமை; நியாயம்” போன்ற சொற்களை முன்வைக்கிறது. சரியான ஒழுக்கநடத்தை என்று வைத்துக்கொள்வோம். தானே நடத்தும் ஒரு போட்டியில், தானே நடுவராக இருக்கும் ஒரு போட்டியில் தனது படைப்பாக்கம் அல்லது தன் உறவினர்களின் படைப்பாக்கத்தை விண்ணப்பிப்பது பொதுவாக ஒழுக்கநடத்தையில் சேராது. அதேபோல, நடுவுநிலைமையுடன் தேர்ந்தெடுக்கப்படாது, நடுவர்கள் மனத்தில் அச்சம் நிலவலாம் என்றால் அந்த நிலையில் ஒரு சில போட்டிகளில் பங்கெடுக்கக்கூடாது என்பதும் ஒழுக்கநடத்தை என்பதற்குள்ளாக வரும்.

உளியின் ஓசை சிறந்த படமாக இருந்தாலுமே, அதன் வசனங்கள் உலக மகாத் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தாலுமே, கருணாநிதி முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் அந்தப் படம் வசனம் என்ற பிரிவில் போட்டியில் அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. கருணாநிதியாகவே முன்வந்து அதனை திரும்பப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதையும் தாண்டி அந்தப் படம் வசனத்துக்காக முதல் பரிசு பெறுகிறது. அதற்கான விழாவுக்கு கருணாநிதியே தலைமை தாங்கி பரிசளிக்கிறார். எல்லாவித ஒழுக்கநடத்தை விதிகளின்படியும் இது கேலிக்கூத்து என்பதைத் தவிர வேறு என்ன? அண்ணா விருதை நிறுவி, அதை முதலில் கருணாநிதிக்குத் தருவது. ஒரு ஆண்டில் பலமுறை சினிமாக் காரிகளை பயமுறுத்தி ஜல்சா டான்ஸ் வைத்து நிகழ்ச்சி நடத்தி அதனை கலைஞர் தொலைக்காட்சியில் exclusive-ஆகக் காண்பிப்பது. இப்படி அனைத்துவிதமான நாகரிக வரைமுறைகளையும் மீறி நடந்துகொள்கிறார் இன்றைய முதல்வர் கருணாநிதி.

அதை இன்று மனச்சாட்சிக்குக் குறை இல்லாமல் சரியாகக் கண்டிப்பவர் மதி ஒருவர் மட்டுமே. அவர் சார்ந்திருக்கும் கார்ட்டூன் என்ற ஊடகம் இந்த சுதந்தரத்தை அவருக்குத் தருகிறது.

மேற்சென்று இடித்தற் பொருட்டு நட்புகள் இல்லாதபோது, அனைவருமே ஜால்ராக்களாக மாறிவிட்டபோது, ஊடகங்கள் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

மதி ஜெயலலிதாவை கேலி செய்துள்ளாரா என்று கேட்கும் முரசொலி, மதியின் கார்ட்டூன்களை முழுவதுமாகப் பார்த்ததில்லை என்றே தோன்றுகிறது. சம்பந்தப்பட்டவர் எனக்கு முகவரி அளித்தால் மதியின் கார்ட்டூன்கள் அடங்கிய முழு செட்டையும் அவருக்குப் பரிசாக அளிக்க விரும்புகிறேன். அவரே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

மதியின் மற்றொரு கார்ட்டூன். ஒரு சாமியார் ஜெயிலுக்கு உள்ளே வருகிறார். அங்கே உள்ளே இருக்கும் குற்றவாளி அந்தச் சாமியாரிடம் சொல்கிறார்: “சாமி, விடுதலை ஆனதும் நேர உங்ககிட்ட வந்துதான் ஆசீர்வாதம் வாங்கணும்னு இருந்தேன். நல்லவேளை, நீங்களே இங்க வந்துட்டீங்க!” இது பதிப்பான காலகட்டம் சங்கராச்சாரியார்கள் ஜெயிலில் இருந்த நேரம்.

முரசொலியில் மதிக்கு பூணூல் வரைந்து குடுமியெல்லாம் வைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டுள்ளது. அர்ச்சனை எப்போதும் உண்டு. ஆனால் இதையெல்லாம் மீறி, கருணாநிதி கொஞ்சம் இந்தக் கார்ட்டூன்களை உளமாற ஆராய்ந்து பார்த்தால் தன் இத்தனை ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் எங்கெல்லாம் சறுக்கியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சரி, அடுத்து கஸ்டமரி விளம்பரங்கள். மதியின் அனைத்து கார்ட்டூன் தொகுப்புப் புத்தகங்களையும் வாங்க இங்கே செல்லவும்.

                       

14 comments:

  1. // (கார்ட்டூன் தினமணி தளத்தில் இருக்கும். இப்போது தேடி எடுக்க நேரமில்லை.)//

    மெனக்கெட வேண்டாம். இங்க பாருங்க.

    http://www.orkut.co.in/Main#AlbumZoom?uid=6999689162674870754&pid=1260515739533&aid=1255498718

    ReplyDelete
  2. நல்ல கருத்து, இந்த விழாவில் மற்றும் ஒரு சிறப்பம்சம் உள்ளது,ஆனால் அது யார் கண்ணுக்கும் படவில்லை. நம் கலாச்சாரத்தில் ஒரு திருமணம் ஆன ஆண் மற்றெறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அது கள்ள உறவு என்று பெயர். ஒரு கள்ளக்காதல் ஜோடி நடனம் ஆட அதையும் ஒரு மாநில முதல்வர் இரசித்துப் பார்ப்பது. நல்ல கூத்து.

    ReplyDelete
  3. We find very few who can say this so well and so precisely.

    ReplyDelete
  4. முரசொலியில் இப்படி வருவது புதிது அல்ல.மதி மட்டுமல்ல,வேறு பலரைக் குறித்தும் அதில் அப்படி வருவது தொடர்கதை, இன்று நேற்று துவங்கவில்லை அது.

    ReplyDelete
  5. முரசொலியில் அந்த நூல்கள் இருக்கவே வாய்ப்புண்டு, எதற்கும் சின்ன குத்தூசியிடம் கேட்கவும் :)

    ReplyDelete
  6. Like in MAH there is a different intimidation provess that is slowly gaining momentum in TN. MK's family has grown so large and powerfu, the thought of opposing or even staying neutral has become offensive. They are getting away with anything and everything . The irony is we are forced to think that JAYA is better than Mk when MK rules and vice -versa during Jaya's rule.

    WHO will be the saviour ?? - Srividhya

    ReplyDelete
  7. தனக்குத்தானே விருது வழங்கிக்கொள்வது என்பது 'சுய இன்பம்' அனுபவிப்பதற்கு ஒப்பாகும்.
    இல்லையென்றால் தான் தொடங்கும் திட்டம் அனைத்திற்கும் 'கலைஞர் காப்பீட்டு திட்டம்' 'கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயரா கருணாநிதி.

    அதோடு மட்டுமல்லாமல் தமது பிறந்தநாள், மகன் பிறந்த நாளில் அரசு பணத்தை வாரி இறைத்து விழா கொண்டாடுவாறா?

    பத்ரி சார் ....
    தன்னை விமர்சித்து மதி கார்டூன் போடுகிறார் என்றால் மதி பார்பனன் என்பார்.

    ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து விட்டார் என்றால் 'அவர் தாழ்த்தபட்டவர் அதனால் வீன்பழி போடுகிறீர்கள்' என்பார்.

    'அர்ர்ரசியல்ல்ல்ல இதெல்லாம் சாதாரணம்பபா?.......'

    - செத

    ReplyDelete
  8. தைரியமான பதிவு, பத்ரி. கார்டூனிஸ்ட்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே?

    ReplyDelete
  9. //முரசொலியில் மதிக்கு பூணூல் வரைந்து குடுமியெல்லாம் வைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டுள்ளது.//

    சைவ வேளாளரான மதியைத் தன்னுடைய ஜாதிக்காரராகக் காண்பித்துக்கொள்வதில் திருவாரூப் பார்ப்பனர் சின்னக்குத்தூசி தியாகராஜ ஐயருக்கு அப்படி என்னதான் பெருமையோ?

    ReplyDelete
  10. இதை மதிக்கு எதிராக எடுத்துக் கொள்ள முடியாது. பறவலாக வைக்கும் விமர்சனத்தை மதி சமூக தளத்தில் சுருக்கென்ரு வைப்பதால் .அவரை பயன் படுத்தி பலருக்கு பதில் சொல்கிறார்கள். மொக்கை பதில்

    ReplyDelete
  11. Look at these... It needs real courage..

    http://dinamani.com/Images/New_Gallery/2010/2/5/cartoon.JPG

    http://dinamani.com/Images/New_Gallery/2010/2/6/car.jpg

    http://dinamani.com/Images/New_Gallery/2010/1/20/car20.jpg

    http://dinamani.com/Images/New_Gallery/2010/2/4/cartoon.JPG

    ReplyDelete
  12. தனக்குத்தானே விருது வழங்கிக்கொள்வது என்பது 'சுய இன்பம்' அனுபவிப்பதற்கு ஒப்பாகும்.
    முற்றிலும் உண்மை. 86வயதுக் கிழவனார் 6-7மணி நேரம் குத்தாட்டக் கிளுகிளுப்பைக் கண்டு மகிழ்வதும், அவரை விமர்சிப்பவரை, அவாள் என்றும் அய்யர்வாள் என்றும் (மேட்டுக்குடி என்று நாசூக்காகச் சொன்னது அந்தக்காலம். இன்று பயம் விட்டுபோச்சு) விமர்சிப்பதை மனவிகாரம் என்றுதான் சொல்லமுடியும்

    ReplyDelete
  13. //சினிமாக் காரிகளை பயமுறுத்தி ஜல்சா டான்ஸ் வைத்து நிகழ்ச்சி //

    சற்றே மரியாதையுடன் எழுதியிருக்கலாம்

    ReplyDelete
  14. நல்ல கருத்தை வெளிப்படுத்தி இருக்கும் பதிவு.சந்தடி சாக்கில் ஒரு தட்டி வச்சுட்டுப் போறேன்...



    விமர்சனங்களை அவராவது மாற்று விமர்சனத்துடன் அல்லது வசையுடன் எதிர் கொள்கிறார்.

    ஆட்டோ அனுப்புதல் அல்லது தீ வைத்துக் கொல்லுதல் போன்ற எதிர் வினைகளுக்கு என்ன செய்ய?!!!!

    ReplyDelete