Tuesday, February 09, 2010

தில்லி உலகப் புத்தகக் காட்சி 2010

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறுகிறது உலகப் புத்தகக் காட்சி. ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும்.

நான் புத்தகத் தொழிலுக்கு வந்ததற்குப் பிறகு மூன்று முறை நடந்துள்ளது. முதல்முறை 2006 ஜனவரியில் நானும் சத்யாவும் சும்மா சுற்றிப் பார்க்க என்று சென்றோம். 2008 ஜனவரியில் இரண்டு இடங்களில் கடைகள் எடுத்தோம். ஆனால் தெளிவாக என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருக்கவில்லை. இப்போது 2010 ஜனவரியில் எங்கள் அலுவலகத்திலிருந்து பலர் சென்றுவந்துள்ளோம். இந்தக் காலகட்டத்தில் பிற மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனாயாசமானவை.

2008-லேயே இந்திப் பதிப்பகங்கள் கண்ணைக் கவர்ந்தன. இம்முறை அவர்கள் செய்யும் பல விஷயங்கள் நன்கு புரிந்துள்ளது. அதைப்போன்றே இம்முறை பார்த்ததில் மராத்தி பதிப்பகங்கள்மீதும் பெரும் மதிப்பு வந்துள்ளது. இந்த இரண்டு மொழிகளைத் தவிர பிற மொழிகள் பழையபடியே பின்தங்கியே உள்ளன. Of course, ஆங்கிலப் பதிப்பகங்கள் எங்கேயோ பாய்ச்சல் இட்டபடி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்தியில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவர்களது அளவு. ஒரு நல்ல புத்தகம் என்றால், அவர்களால் நான்கைந்து மாதங்களுக்குள் 50,000 பிரதிகள் அல்லது அதற்குமேல் விற்கமுடிகிறது. மோசம் என்றால் 5,000 பிரதிகளாவது விற்றுவிடுகிறார்கள். இந்த எண்ணிக்கை தரும் சுதந்தரம் அதிகம்.

மற்றபடி குடும்ப நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இந்தி பதிப்பாளர்களில் ஒரு சிலர் நன்கு நவீனமாகியிருக்கிறார்கள். வாணி, ராஜ்கமல், ராஜ்பால்/ராதாகிருஷ்ணா, மஞ்சுல், பிரபாத் ஆகியோருடன் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் ஆகியோரின் இந்தி பதிப்புகளும் சேர்ந்துகொண்டுள்ளன.

இவர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர்?

1. ஒரு பக்கம் உலக கிளாசிக் புத்தகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இது வெறும் ரஷ்யப் புத்தகங்களுக்கு மட்டும் என்றில்லை. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளவற்றுக்கும் இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இத்துடன் தமிழை ஒப்பிட்டுப் பாருங்கள். கிளாசிக் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் தடவ வேண்டியுள்ளது.

2. அடுத்து நவீன உலக இலக்கியத்துக்கான மொழிபெயர்ப்பு. இதுவும் சர்வசாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இங்கே பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் இருவரும் தங்கள் கையில் இருக்கும் ஆங்கிலப் புத்தகங்களை இந்தியாக்கம் செய்துவிடுகிறார்கள். மிகுதியை நான் மேலே சொன்ன பலருள் ஒருவர் எடுத்துக்கொள்கிறார். இந்தி போகவேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பாதை தெளிவாக உள்ளது. மஞ்சுல் கொண்டுவந்த ஹாரி பாட்டர் மொழியாக்கம் ஓர் உதாரணம். இந்திய மொழிகளில் இந்தியில் மட்டுமே ஹாரி பாட்டர் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவை மொத்தமாகச் சேர்ந்து 2 லட்சம் பிரதிகள் விற்றுள்ளனவாம்! சேதன் பகத்தின் கதைகள் அனைத்தும் கிடைக்கின்றன். அவையும் பல்லாயிரக்கணக்கில் விற்றுள்ளன. தீவிர உலக இலக்கியம் என்று பார்த்தால் மலையாளத்தில் ஓரளவுக்கு மொழிபெயர்ப்புகள் வருகின்றன.

3. அடுத்து உலக அளவிலான non-fiction மொழிபெயர்ப்பு. இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். தன்னம்பிக்கை நூல்கள். அறிவுசார்ந்த நூல்கள். தன்னம்பிக்கை நூல்களில் உலக அளவில் எந்தப் பெயர் முன்னுக்கு வந்தாலும் பிரபாத், மஞ்சுல் ஆகியோர் அடித்துப் பிடித்துக்கொண்டு வாங்கிவிடுகின்றனர். (தமிழில் கண்ணதாசன் மட்டுமே இதுவரையில் இந்தத் துறையில் கொஞ்சம் புத்தகங்கள் கொண்டுவந்திருந்தனர். அதற்குமேல் வேறு யாரும் தலையிடவில்லை.) தமிழில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் ஆண்டுக்கு 3000 விற்கிறது என்றால், இந்தியில் 30,000 விற்கிறது! இதனால் இந்தி பதிப்பாளர்கள் சிலர் இந்திய மொழிகளுக்கான ஒட்டுமொத்த மொழிமாற்ற உரிமத்தை வாங்கிவிடுகிறார்கள்.

4. அறிவுசார்ந்த புத்தகங்களும் அதிக அளவில் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணத்துக்கு அமர்த்யா சென்னின் அனைத்துப் புத்தகங்களும் இந்தியில் இன்று கிடைக்கின்றன. வங்காள மொழியில் கிடைக்குமா என்பதே சந்தேகம்! இங்கும் வரும் சில ஆண்டுகளில் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்றவை முன்னணியில் இருக்கும். பெங்குவின் வெளியிட்ட நாராயண மூர்த்தி, நந்தன் நீலகனி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களை அவர்களே இந்தியிலும் வெளியிட்டுவிட்டனர். அதுவும் வேகவேகமாக. பிற மொழிகளில் இது நடப்பது அரிது.

பிரபாத் பிரகாஷன் போன்றவர்களும் இன்னும் பலரும் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் பல non-fiction புத்தகங்களை இந்தியில் கொண்டுவர விரும்புகின்றனர். ஆனால் நேரடியாக தமிழிலிருந்து இந்திக்கு மொழிமாற்ற ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்த ஆண்டு இதனை அதிக அளவில் செய்ய இருக்கிறோம்.

மொத்தத்தில் இன்றைய இந்தி வாசகனுக்கு தமிழ் வாசகனுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகத் தீனி கிடைக்கிறது.

மராத்தியில் மேத்தா என்ற ஒரு பதிப்பக நிறுவனம் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவந்துள்ளது. மேலும் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் விற்கும் பிரதிகளின் எண்ணிக்கை இந்தி அளவுக்கு இல்லை, தமிழ் அளவுக்குத்தான். ஆனாலும் பெருமளவு நவீன உலக இலக்கியங்கள், அ-புதினங்கள் என்று மொழிமாற்றுவதோடு உலக விஷயங்கள் பற்றி ஒரிஜினல் புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளனர். நான் பார்த்தவரை இலங்கைப் பிரச்னை பற்றி புத்தகம் கொண்டுவந்திருந்த தமிழ் (மற்றும் ஆங்கிலம்) அல்லாத ஒரே இந்திய மொழி மராத்தி மட்டும்தான்.

இந்த ஆண்டு பூனா சென்று அங்குள்ள மராத்தி பதிப்பகங்கள் என்ன செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை முற்றிலுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மற்றபடி மலையாளத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசி புக்ஸ் தனி ஆளாக ஓடிக்கொண்டிருக்க, பின்னால் யாருமே தென்படவில்லை. வங்காள மொழியில் ஆனந்தா எங்கேயோ சென்றுகொண்டிருக்க பின்னால் யாரும் இல்லை.

இம்முறை பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் தவிர்த்து வேறு பல ஆங்கிலப் பதிப்பகங்களிடமும் நிறையப் பேசினோம். பெங்குவின், ஹார்ப்பர் ஆகியோர் பல புதினங்களைக் கொண்டுவருகிறார்கள். அவற்றுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகள் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் கிழக்கு பதிப்பகம் அதில் அவ்வளவு ஈடுபாட்டுடன் இல்லை. புதினத்தில் ஆர்வம் கொண்டுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

ஹார்ப்பர் காலின்ஸ் உரிமம் தொடர்பான அலுவலரிடம் பேசும்போது நீங்கள் ஏன் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதில்லை என்று கேட்டோம். இங்கு வந்து என்ன பெரிதாக வியாபாரம் ஆகப்போகிறது என்று பதில் கேள்வி கேட்டார். இந்த ஆண்டு கொல்கத்தா கண்காட்சிக்கே அவர்கள் செல்லவில்லையாம். குறைந்தபட்சம் ‘மொழிமாற்றம் உரிமம்’ விற்பதற்காகவேனும் சென்னை வந்து ஒரு கடையை எடுத்துக்கொண்டு அதில் உட்காரலாமே என்றோம். தில்லியிலேயே NBT இதில் ஆர்வம் காண்பிப்பதில்லை என்றார். அடுத்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போது உரிமம் விற்க, வாங்க என்ற தனியான பகுதி ஒன்றை உருவாக்கச் சொல்லி கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதவேண்டும். துண்டு துண்டாக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதிச் சேர்க்கிறேன்.

2 comments:

  1. மராத்தியில் இலங்கைப் பிரச்சனை பற்றிய புத்தகத்திற்கு சிவசேனா காரணமாக இருக்கலாம். 2 - 3 வருடங்களுக்கு முன், சிவசேனை "தலை" விடுதலைப்புலிகள் இந்துக்கள், இது ஓர் இந்து- பெளத்தப் போராட்டம் என்கிற ரீதியில் அறிக்கை விட்டதாக நினைவு. அதன் விளைவாக, விற்றாலும் விற்கும் என்று புத்தகம் வந்திருக்கலாம். !! !!

    ReplyDelete
  2. ஹாரி பாட்டர் புத்தகத்தின் குஜராத்திய மொழிபெயர்ப்பாளரை நான் பிரோஸ்.காமின் மும்பை சந்திப்பில் பார்த்து பேசி கொண்டிருந்தேன். வருடம் 2004-ல்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete