உச்சிப் பிள்ளையார் வெகு பிரசித்தம். தரையில் தாயுமானவ சுவாமியை தரிசித்துவிட்டு சரேலென ஏறும் படிகளின் வழியாக பிள்ளையாரை தரிசிக்க ஒரு கூட்டம் செல்லும். இளைஞர்கள் தம் பிடித்து ஏறுவார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் சிரமப்பட்டேதான் ஏறமுடியும்.
திடீரென இடையில் கார்கள் செல்லக்கூடிய ஒரு பாதை வரும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாதையைக் கடந்து மேலே மேலே ஏறி, இடக்கைப் பக்கம் திரும்பி, ஒரு வளைவு வளைந்து மேலே சென்றால், கொஞ்சம் திறந்தவெளி வரும். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இடதுபக்கம் (டிக்கெட் பரிசோதகரைத் தாண்டியதும்) மகேந்திரன் கட்டிய குடைவரைக் கோயில் தென்படும்.
பொழுதுபோக்க, அல்லது ஃபிகரை கரெக்ட் செய்ய வந்த சிலர் மட்டும் அங்கே உட்கார்ந்திருப்பார்கள். அவர்களை நோக்காமல் நீங்கள் அங்கே சென்றால் அற்புதமான ஒரு சுவர்ச் சிற்பக் காவியத்தைக் காணலாம். லலிதாங்குர பல்லவேசுவர கிருஹம் எனப்படும் இந்த மண்டபம் பொதுவான மகேந்திர மண்டபங்களிலிருந்து வித்தியாசப்பட்டது. அதில் கருவறை மண்டபத்தில் முகப்பிலிருந்து பார்த்தால் நேராகத் தெரியும். ஆனால் இங்கே மண்டபத்தில் நுழைந்து வலதுபக்கம் (கிழக்குப் பக்கம்) திரும்பினால்தான் கருவறையைக் காணலாம். சிவனுக்கான கருவறை என்பது துவார பாலர்களின் கையில் உள்ள தடிக்கழியைக் கொண்டே உணரலாம்.
கருவறையில் உள்ளே ஏதும் இல்லை. அக்காலத்தில் துணியில் வரைந்த அல்லது மரச்சட்டத்தில் செதுக்கிய உருவமே வழிபடப்படும் கடவுளாக இருந்தது. ஆனால் எதிர்ப்பக்கம் (மேற்குப் பக்கம்), கருவறைக்கு நேர் எதிராகப் பார்த்தால் மிக அற்புதமான ஒரு கங்காதரர் சிற்பம் உங்கள் கண்களுக்குப் புலப்படும். சொல்லப்போனால், உள்ளே நுழையும் எவரும் கருவறையைப் பார்க்கமாட்டார்கள். கங்காதரரில்தான் உங்கள் பார்வை நிலைக்கும்.
நெருங்கி அருகே வந்து பார்த்தால், சிவன்; நான்கு கரங்களில் மேலுள்ள வலக்கரம் பெண் வடிவில் காணப்படும் கங்கையை ஏந்துகிறது. அதே கரத்தில் சிவனின் ஜடைமுடி ஒரு சரம் வருகிறது. ஆக கங்கையை வாங்கி ஜடையில் செலுத்துகிறார். கீழுள்ள வலக்கரம் பாம்பை ஏந்துகிறது. அந்தப் பாம்பு வளைந்து எதிர்த்து முகத்தை மேல் நோக்கி உயர்த்தியபடி உள்ளது. மேலுள்ள இடக்கரத்தில் ருத்திராட்ச மாலை உள்ளது. அதற்கு மேல் ஒரு மான் உட்கார்ந்தாற்போல உள்ளது. கீழுள்ள இடக்கரம் இடுப்பில் ஒயிலாக (கடிஹஸ்தம்) உட்கார்ந்திருக்கிறது. வலக்கால் முயலகன் என்ற ராட்சசனின் தலையின்மேல் பதிந்துள்ளது. முயலகனின் இடக்கை சிவனின் பாதத்தின் குதிகாலை ஏந்தியுள்ளது. சிவனின் இடது கால் லேசாக வளைந்துள்ளது.
சிவனின் இடுப்பில் முழுமையான ஆடை உள்ளது. பொதுவாக சிவனுக்கு கௌபீனம் மட்டும்தான் இருக்கும். விஷ்ணுதான் முழுமையான கச்சம் அணிந்திருப்பார். இங்கே கங்காதரர் முழுமையான ஆடை உடுத்திருப்பது அபூர்வம். மாமல்லையில் ஆதிவராஹ மண்டபத்திலும் தர்மராஜ ரதத்திலும் கங்காதரர் சிலைகள் உள்ளன. அவற்றில் இருவரும் கௌபீனம்தான் அணிந்துள்ளனர். பூணூல் துணியால் ஆனது, நிவீத முறையில் கைக்கு மேலாக அணியப்பட்டுள்ளது.
கங்காதரர் தலையில் கிரீடம் அணிந்துள்ளார். கூம்பு வடிவிலான கிரீடம். ஒரு காதில் மகரக் காதணி, மறு காதில் குண்டலங்கள்.
கங்காதரருக்கு இரு பக்கத்திலும் நான்கு தேவர்கள் விஸ்மய (ஆச்சரிய) முத்திரையில் ஒரு கையையும் இடுப்பில் ஒரு கையையும் வைத்துள்ளனர். இரு முனிவர்கள் ஒவ்வொரு பக்கமும் (அவர்களது மேலுடம்பு மட்டும்தான் தெரிகிறது) காணப்படுகின்றனர்.
இந்தச் சிற்பத் தொகுப்பு ஆச்சரியமான ஒன்று. மகேந்திரன் காலத்தில் அதிகபட்ச வேலைப்பாடு என்றால் அது துவாரபாலர்களுடன் முடிந்துவிடுகிறது. இந்த கங்காதரர் மட்டுமே ஒரு முழு panel ஆக, மொத்தம் 10 உருவங்கள், எக்கச்சக்கமான விவரணைகள் என்று செதுக்கப்பட்டுளது.
இந்த அளவுக்கு விஸ்தாரமாக இந்த ஓரிடத்தில்தான் மகேந்திரன் முயற்சி செய்துள்ளான்.
நான்கு தூண்கள் முன் வரிசையில் இருப்பதுபோல பின்வரிசையிலும் உள்ளன. மகேந்திரன் தூண்கள் - மேலும் கீழும் சதுரவடிவம், இடையில் எட்டு பட்டிகள். தூண்களில் நிறைய டிசைன்கள். பல்லவ கிரந்தத்தில் நிறைய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பின்வரிசை நான்கு தூண்களுக்குப் பின்புறம் ஒரு சுவர் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்புறச் சுவருக்கும் பின்வரிசைத் தூண்களுக்கும் இடையில் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு இடைவெளி உள்ளது. இந்தச் சுவர் முழுவதிலும் பிற்காலத்தில் (10-ம் நூற்றாண்டு) யாரோ ஒருவர் பாடிய பாடல் தமிழ் எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)
எங்க புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வாங்க. இதுபோல் நிறைய இடம் இருக்கின்றது.
ReplyDeleteஇப்பதாங்க இதோட அருமையெல்லாம் தெரியுது. நிறையா எழுதுங்க.
ReplyDeleteஅப்படியே திருவானைக் காவல் போனிங்கன்னா நிறைய சிலைகல் கிடைக்கும். எனக்கு கிடைத்தது புலிக் கால் முனிவர் சிலை.