Tuesday, December 21, 2010

சாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஒரு வாரம் முன்புதான் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.

நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது.

அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?)

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும்.

நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds

நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சூடிய பூ சூடற்க - சாகித்ய அகாதெமி 2010 விருது பெற்ற நாஞ்சில் நாடன் புத்தகத்தை வாங்க

நாஞ்சில் நாடனின் பிற புத்தகங்களை வாங்க

பா.ராகவனின் பதிவு
தி ஹிந்து செய்தி
தினமணி செய்தி

1 comment:

  1. சாகித்திய அகாடெமி ஃபார்மாட்டே ஒரு ஆண்டில் வெளியான சிறந்த படைப்புக்கான விருது ஃபார்மாட். அதை படைப்புக்கான விருதிலிருந்து படைப்பாளிக்கான விருதாக மாற்றிவிட்டது தான் குழப்பமே. (கொடுக்கறவங்களும், அவருக்கு கொடுக்கல இவருக்கு கொடுக்கலன்னு திட்டறவங்களும் சேந்து பண்ணது தான்). அதோட இது புனைவுப் படைப்புகளுக்கு கொடுக்கப்படற விருது மட்டுமல்ல, இலக்கிய விமர்சனம், கட்டுரை போன்ற அபுனைவு படைப்புகளுக்கும் தான் கொடுக்கப் படுகின்றன. அதனால் கதை எழுதறவங்க எல்லாத்துக்கும் கிடைக்கறதுக்கு சான்ஸ் கம்மி.

    ReplyDelete