Monday, December 13, 2010

மாடு வளர்ப்பு

ஒரு பசு மாட்டின் சராசரி வயது எவ்வளவு? 15 ஆண்டுகள்தானாம். அதாவது நம்மூரில் இருக்கும் கலப்பினப் பசுக்கள்.

மாடு வளர்ப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

மாடு கன்றுக்குட்டி ஈனும்போது கூடவே சீம்பால் என்ற ஊட்டச்சத்து மிகுந்த பாலைச் சுரக்கும். இந்தப் பால் முழுவதையும் கன்றுக்குட்டி குடிக்கக் கொடுக்கவேண்டுமாம். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. சிலர் அதைத் தாங்கள் உண்டிட எடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் ஏதோ மூட நம்பிக்கைகளை மனத்தில்கொண்டு குளத்தில் கொட்டிவிடுகின்றனராம். இதன் விளைவாக, அந்தக் கன்றுக்குட்டி ஆரம்பத்திலேயே வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது.

எனவே சீம்பாலை முழுமையாகக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கவேண்டும்.

அடுத்து அதன் தொப்புள்கொடியை வெட்டுவது; மருந்துபோட்டுக் காப்பது. எப்படி மனிதக் குழந்தைகளுக்கு கவனமாக தொப்புள்கொடியை அரிந்துவிட்டு பிளாஸ்திரி போட்டுக் கட்டிவைக்கிறோமோ, அப்படிப் பெரும்பாலும் மாடுகளுக்குச் செய்வதில்லை. கன்று மண்ணில் புரண்டு அங்கு இன்ஃபெக்‌ஷன் வர நேரிடுகிறது.

எட்டு நாள் தாண்டிய உடனேயே கன்று வயிற்றில் (ஜீரண மண்டலத்தில்) பூச்சி வராமல் இருக்க மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டுமாம். அதன்பின் 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை முறையாகச் செய்துவரவேண்டும்.

சுமார் 2.5 ஆண்டுகளில் ஒரு கன்று வயதுக்கு வந்து, சினை பிடிக்கத் தயாராக உள்ளது. உடனடியாகவே அதற்குச் சினையூட்டலாம். கன்றை ஈன்றதும், கவனமாக முன் சொன்னதுபோல, அதன் குட்டிக்கு சீம்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த சுமார் 10 மாதங்களுக்கு மாடு பால் தரும். அதன் பால் வற்றிப்போகும் காலத்தைக் கணித்து அதற்கு ஏற்றவாறு அதனை மறுபடியும் சினையூட்ட வைக்கவேண்டும். அதன் வாழ்நாளில் அதனை 10 முறை சினையூட்டி, கன்றுகளை ஈன வைத்து, அதன் பால் தரும் காலத்தை அதிகப் படுத்தமுடியும்.

மாடுகளுக்கு உணவு அளிப்பதை அக்கறையுடன் செய்யவேண்டும். பசுந்தழை (புல்), காய்ந்த தழை (வைக்கோல் முதலியன) ஆகியவற்றுடன் சரியான அளவு probiotic நுண்ணுயிரிகள் கலந்த கலவையைக் கொடுக்கவேண்டும். (மனிதர்கள் சாப்பிடும் தயிர் probiotic வகையைச் சேர்ந்தது.) அப்போதுதான் மாடுகள் உட்கொள்ளும் உணவை முழுமையாக உள்வாங்கி, செரித்து, அதன் சத்து முழுவதும் பாலாக ஆகும் நிலை ஏற்படும். எந்த மாதிரியான உணவைத் தரவேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அதனைப் பின்பற்றவேண்டும்.

கன்றுகள் பால் சாப்பிடும் காலம் வரையிலும், கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் அளவுக்கு அதற்குப் பால் தரவேண்டும். பலரும் இதனைச் செய்வதில்லை. இதெல்லாம் கன்றின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால் அந்தக் கன்று பின்னர் வளர்ந்ததும் அதன் பால் தரும் அளவு நிச்சயமாக பாதிக்கப்படும்.

மாடுகள் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பது, மாடுகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வது, அவற்றின் உடலில் ஈக்கள், உண்ணிகள், பிற மொய்க்காமல், தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது, இவை அனைத்தும் முக்கியம். அவற்றுக்கும் நோய்கள் வரும்போது உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பதும் முக்கியம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் மனிதனுக்கு எந்த அளவுக்கு தொந்தரவோ, அதே அளவுக்கு மாட்டுக்கும் தொந்தரவுதான். வருமானமும் பாதிக்கப்படும் என்பது முக்கியம்.

இந்தியாவைப் பொருத்தவரை வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பது சரியல்ல. கலப்பினப் பசுக்கள், அதில் சுமார் 62-63% வெளிநாட்டு (ஜெர்ஸி?) பசுவின் மரபணு இருந்தால் போதும்.

***

சென்ற வாரம் சென்னையிலிருந்து காரில் ஊர் சுற்றும் பயணத்தின்போது மாறி மாறி எஃப்.எம் வானொலிகளைக் கேட்டு, பின் கவரேஜ் இல்லாத இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டபோது கிடைத்த தகவல்கள் இவை. இந்த அதிமுக்கியமான விஷயத்தை உடனடியாகப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் தில்லி செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. பிறகு மறக்கவும் ஆரம்பித்துவிட்டது. எனவே ஞாபகம் இருக்கும்வரை இங்கே!

இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்.

13 comments:

 1. //இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்.
  //
  சூப்பர்!
  இது போல நான் டிடி மலையாளம்,தெலுகு ஒரிஸ்ஸா கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன் - சுவரஸ்யமாக இருக்கிறது (சன்,விஜய் & கலைஞர் தெரியாததும் ஒரு விதத்தில் நன்மையே) :)

  ReplyDelete
 2. விரைவில் ஏ.எம் அலைவரிசைகளை நிறுத்த போவதாக செய்தி படித்தேன். கோவை வானொலி நிறுத்தப்பட்டது.

  பசு வளர்ப்பு போலவே ரேடியோ ஏ.எம் கேட்பதும் அரிதாகுமோ?

  கணநேரம் பசு சிந்தனை ஊட்டிய உங்களின் பதிவுக்கு என வந்தனங்கள்.

  ReplyDelete
 3. ஆல் இந்தியா ரேடியோ ஏ.எம் நிறுத்தப்பட்டால் அது வருத்தம் தரக்கூடியது.

  மற்றொன்று: மேற்குறிப்பிட்ட செய்தியில் பசுவை எப்படி உறிஞ்சி அதிலிருந்து முழு லாபத்தைப் பெறுவது என்பதுதான் அடிப்படைச் செய்தி. அந்த மாட்டின் அந்திம காலம் வரும்போது என்ன செய்வார்கள்; குட்டி ஆணாக ஆனால் என்ன செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் அதில் செய்தியில்லை.

  ReplyDelete
 4. //இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்// பத்ரி ஒருவர் கேட்டால் அதனால் பலர் பயன் பெறுவார்கள் அவர்களில் நானும் ஒருவன். மாட்டை பற்றி தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 5. //பசு வளர்ப்பு போலவே ரேடியோ ஏ.எம் கேட்பதும் அரிதாகுமோ?
  //

  ஆழமான கேள்வி சாமி

  ReplyDelete
 6. இந்தியாவில் இப்படி என்றால், அமெரிக்காவில் இதற்கு மேல். மாடுகள் மூன்றடி கழிவிலேயே வாழ்நாள் முழுக்க நிற்பதும், தொற்று நோய்களும், அவற்றை கையாளும் முறையும் கண்ணீரை வரவழைக்கும். மனிதன் எங்கிருந்தாலும் மனித்தத்தை கொள்வதில்லை. :(

  ReplyDelete
 7. அன்று பன்றி வளர்ப்பு, இன்று மாடு வளர்ப்பு. நீங்கள் இன்னும் ஈமு கோழி வளர்ப்பு குறித்து எழுதவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  இவண்,
  இவன்.

  ReplyDelete
 8. //விரைவில் ஏ.எம் அலைவரிசைகளை நிறுத்த போவதாக செய்தி படித்தேன். கோவை வானொலி நிறுத்தப்பட்டது.// ????

  ReplyDelete
 9. இது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் மதியம் / சாய்ங்கால வேளைகளில் பார்க்கலாம்.இதில் கிடைக்கும் நுட்பமான விஷயங்களை அவரவர் தொழிலிலும் மாற்றி உபயோகிக்கலாம்.

  ReplyDelete
 10. ஊரெல்லாம் சிபிஐ ரெய்டு, ராசா, ராடியா, கருணாநிதி குடும்ப ஊழல் என்று மீடியா அலறும்போது, இப்படிப்பட்ட de-stressing news bits அவசியமே!

  நீங்களும் “எனக்குத் தெரிந்த அளவில் Scam நடக்கவே இல்லை. ராசா நிரபராதிதான்” என்று எதையாவது சொல்லிவைத்து, சும்மா நெட்டில் மேய்கிற எல்லோரிடமும் தர்ம அடி வாங்குவதற்குப் பதில், இப்படிப்பட்ட உருப்படியான பதிவுகள் அவசியம்!

  நப, நப!

  ReplyDelete
 11. //விரைவில் ஏ.எம் அலைவரிசைகளை நிறுத்த போவதாக செய்தி படித்தேன். கோவை வானொலி நிறுத்தப்பட்டது.//

  அன்பின் பத்ரி!
  இப்படியேதும் தெரியவில்லை.
  கோவை நியூஸ் மற்றும் சென்னை விஷன்:

  பிரசார் பாரதி சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவி நடந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, கோவை அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் நேற்று காலை நடந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு, நிலைய இயக்குனர் கமலநாதன் தலைமை வகித்தார். என்.எப்.ஏ.டி.இ., சங்கத்தலைவர் ராமலிங்கம்,செயலர் தாமரை சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், இணை செயலர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முன்நிலை வகித்தனர்.

  போராட்டம் குறித்து அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
  தற்போது நடைபெறும் குளிர் கால கூட்டத்தொடரில், 'பிரசார் பாரதி சட்ட முன்வரைவு' தாக்கல் செய்யப்படவுள்ளது. இது நிறைவேற்றப்படும் பட்சத்தில், அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால், பிரசார் பாரதி ஊழியாராகவே அவர் கருத்தப்படுவர். இதனால், அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் ஓய்வுதியம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
  இதனை கண்டித்து நாடு தழுவிய அளவில், அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து நிலையங்களிலும் ஒலி, ஒளி சேவை 22.11.2010 காலை 9.00 முதல் எதிர் வரும் 25.11.2010 அன்று காலை 9.00 மணி வரை 48 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
  இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, கோவையில் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் நேற்றிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  ReplyDelete
 12. //நீங்களும் “எனக்குத் தெரிந்த அளவில் Scam நடக்கவே இல்லை.//

  ஊழல் நடக்கவில்லை என்று சொல்லவில்லை. அப்படி நடந்தால் அது 2000 கோடி அளவில்தான். அப்பகூட where is the Evidence? Pls show me the account where money is deposited? இப்படியெல்லாம் சொன்னா இது நிச்சயம் பிஸ்ஸா ஹண்ட் தான். அதாங்க சாண்ட்விச் ஹண்ட் இருக்கும்போது pizza இருக்க கூடாதா?

  ReplyDelete
 13. இப்போது மாடு வளர்ப்பில் ஆர்வமில்லாமல் போய்விட்டது, இந்தியாவில் உழவு மாடுகளின் இழப்பால் இந்த பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி வரும் ஆண்டுகளில் வரும் என்று முன்பு படித்த நினைவு, வீடுதோறும் மாடுகள் இருந்து மாட்டுப்பொங்கல் கொண்டாடிய காலம் எல்லாம் போய்விட்டது கிராமத்தில் கூட ஒரிரண்டு மாடுகளே உள்ளன. அப்போதெல்லாம், மாடும் வண்டியும்தான் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை வெளிப்படுத்தின, இன்று லோடு ஆட்டோக்கள் அந்த வேலைகளை செய்கின்றன.

  ReplyDelete