Wednesday, June 22, 2011

லோக்பால் மசோதா

அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நாட்டை முன்னேற்றுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று சொல்வது எதிர்மறைவாதம். அதனால் நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பலரும் ஊழலால் பயன் அடைகிறார்கள். ஊழலாக இல்லாவிட்டாலும் அதிகார துஷ்பிரயோகத்தால் தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள இவர்களில் பலர் தயங்குவதில்லை. ஆனாலும் நமக்கு ஆட்சியாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். இருக்கும் சில கட்சிகளுக்குள்ளாக எதையாவது ஒன்றை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாம் தேர்ந்தெடுத்துதான் ஆகவேண்டியுள்ளது.

அதிகாரவர்க்கமே உருவாக்கியுள்ள மாநில லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு போன்றவையெல்லாம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மாநில அளவில், 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரைத்தான் இவர்களால் பொறி வைத்துப் பிடிக்கமுடிந்திருக்கிறது. மத்திய அளவில் அவ்வப்போது கேதன் தேசாய் போன்ற மருத்துவ கவுன்சில் தலைவர் மாட்டியுள்ளார். கடுமையான அரசியல் நெருக்கடி காரணமாக கல்மாடி, இராசா, கனிமொழி போன்றோர் சிக்கியுள்ளனர். ஆனால் பொதுவாக, ஊழல் என்பது இதையெல்லாம் தாண்டி பலமடங்கு நடந்துவருகிறது என்று நம் எல்லோருக்குமே ஓர் எண்ணம் உள்ளது. சாட்சிகளும் நிரூபணமும் தண்டனைகளும்தான் வேண்டிய அளவு நடைபெறுவதில்லை.

இந்நிலையில், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று மக்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மட்டும்தான் ஊழல் புகார்களை முன்னெடுக்கின்றன. தாங்கள் ஆட்சியைப் பிடித்ததும் அதே ஊழலைத்தான் இவர்களும் செய்கிறார்கள். எனவே வலுவான எதிர்ப்பு என்பது சிவில் சொசைட்டி என்ற குடிமைச் சமூக அமைப்புகளிடம் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.

இப்படித்தான் அண்ணா ஹஸாரேயும் பாபா ராம்தேவும் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அவர்களை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களை வாட்டியிருக்கும் ஒரு பிரச்னையை அழகான முறையில் முன்னெடுத்து வைத்துள்ளனர். அதன் விளைவாக முன்வைக்கப்பட்டதே லோக்பால் மசோதாவுக்கான வரைவு.

மத்திய அரசும் ஓரளவுக்கு இறங்கிவந்து அண்ணா ஹஸாரேவையும் அவரது ஆதரவாளர்களையும் சட்ட வரைவை உருவாக்கும் குழுவில் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஹஸாரே அணி, இதற்குப்பின் நடந்துகொண்ட முறை சரியானதாகத் தோன்றவில்லை.

ஒரு சமரசம் ஏற்படவேண்டும் என்றால் இரு தரப்பும் கொஞ்சம் இறங்கிவரவேண்டும். ஹஸாரே அணிக்கு நாடு முழுவதும் முழுமையான ஆதரவு இல்லை. நாட்டில் பலருக்கு அவரும் அவர் பின் நிற்கும் பலரும் யார் என்றே தெரியாது. நாளையே அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ (நாடாளுமன்றம்) எதிர்த்துப் போராடவேண்டுமென்றால் அதற்கான செயல்திட்டம் கிடையாது. போராட்டத்தை நடத்துவதற்கான அமைப்பும் கிடையாது.

முன்னேற்றம் என்பதே எதிர்-இருமை காரணமாக ஏற்படும் முரணியக்கம்தான். அரசு ஒரு தரப்பை முன்வைக்கிறது. அதை மறுத்து ஹஸாரே அணியினர் ஒரு தரப்பை முன்வைக்கிறார்கள். இந்த இரண்டு தரப்புகளும் மோதுகின்றன. முரண் இயக்கம் காரணமாக உந்தப்பட்டு ஏதோ ஓரிடத்தில் சென்று நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலை, எப்படியும் முந்தைய நிலைக்குச் சற்று மேலானதாகத்தான் இருக்கவேண்டும். அதை முதலில் அடைவதுதான் முக்கியம். அதன்பின், அடுத்த போராட்டத்துக்குத் தயாராகவேண்டும்.

ஆனால் அதை விடுத்து, நான் என் பிடியிலிருந்து விலகவே மாட்டேன் என்று சொல்வது எதிராளியை அவமதித்து, அவரது நிலையை இறுகச் செய்வதற்கான வழியாகும். அரசுடன் பேரம் பேசுவது என்றாலே ஊழல் செய்யும் பலரும் இருக்கும் ஓர் அமைப்புடன் பேரம் செய்வதற்கு இணையானதுதான். இது அரசியல்வாதிகளுக்கும் தெரியாததா என்ன? அப்படி இருக்கும்போது ஹஸாரே அண்ட் கோ கேட்கும் எல்லாவற்றையும் விட்டுத்தர அவர்கள் விரும்புவார்களா என்ன? எனவே அவர்கள் கொடுப்பதுவரை வாங்கிக்கொண்டு அதைக்கொண்டே அவர்களை நெருக்கும் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்கவேண்டும்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் ஆதரவுடன்தானே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்தது? வலுவான, நடுநிலையான மத்திய தேர்தல் ஆணையம் செயல்பாட்டில் இருக்கிறது? மத்திய கணக்காயர் (Accountant General) என்பவர் நாளுக்கு நாள் அரசின், அமைச்சர்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைப் பட்டியல் இட்டுக்கொண்டுதானே இருக்கிறார்? சிபிஐ என்னதான் அரசின் கைப்பாவையாக இருந்தாலும் ஏதோ சில செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கிறது? அதேபோல சிறு சிறு காலடிகளை எடுத்துவைத்து நாம் முன்னேறிக்கொண்டுதான் போகப்போகிறோம்.

ஆனால் சிலருக்கு, தங்கள் வாழ்நாளுக்குள்ளாகவே மாற்றம் வந்துவிடவேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணை அதிரடிப் போராட்டத்தில் இறக்கியது இந்த விரக்திதான். இந்த விரக்திதான் அண்ணா ஹஸாரே போன்றவர்களை உடனடி மாற்றம் வேண்டும் என்பதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இப்படிப் பிடித்து நெருக்கியதால்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தாகவேண்டும் என்று இந்திரா காந்திக்கு சித்தார்த் சங்கர் ரே போன்ற தீய சக்திகள் ஆலோசனை அளித்தனர். இப்படிப் பிடித்து நெருக்குவதால் நாளை மன்மோகன் சிங்கோ சோனியா காந்தியோ அதே மாதிரியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் செய்ய நினைக்கும் கொஞ்சநஞ்ச சீர்திருத்தங்களையும் செய்யாமல் போகலாம். பாஜக ஒன்றும் ஒழுங்கல்ல. அவர்களும் அண்ணா ஹஸாரே விரும்பியதைச் செயல்படுத்துவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.

எனவே கிடைத்தவரை இப்போதைக்குப் போதும் என்று ஏற்றுக்கொண்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஹஸாரே அண்ட் கோ உழைக்கவேண்டும். அது வந்தவுடனேயே அதனை நடைமுறைப்படுத்துவதில் தங்கள் உழைப்பைச் செலுத்தவேண்டும். அதற்கு அடுத்தகட்டமாக அதனை எப்படி மேலும் மெருகேற்றுவது என்று பாடுபடவேண்டும்.

*

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது. மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவைப் போலவே இதுவும் குப்பைக்கூடைக்குத்தான் போகப்போகிறது என்று தோன்றுகிறது. அப்படியானால் அண்ணா ஹஸாரே தன் வாழ்நாளில் இந்தியா முழுமைக்குமாக சில நன்மைகளைச் செய்வதிலிருந்து பின்தங்கிப்போவார். ஊழலுக்கு எதிரான போராட்டம் குறைந்தது பத்தாண்டுகளாவது பின்தங்கிப்போகும்.

11 comments:

  1. அரசியல்.... தடுக்கமுடியாதவை சில...

    - டெண்டர் பாரம் ஆளுங்கட்சியனருக்கு மட்டும் போவதை...
    - க்ளோபல் டெண்டர் என்றால் ஒரு சில கையூட்டு கொடுக்கும் கம்பெனிகள் காண்ட்ரேக்ட் பெற வழி வகுத்தல் ( ரிலையன்ஸ், விடியோகான் )
    - ஸ்பெக்ட்ரம் ஊழல் போல - பி.ஜே.பி அரசில் ரோடு போடும் திட்டம், நான்கு கம்பெனிகளுக்கு பிரித்து கொடுத்தல்... அவர்கள் மட்டுமே டெண்டர் கோருவார்கள்
    - உயர் நீதிமன்ற நீதிபதிகள், அன்னதீனம் நிலத்தை அபகரிக்க - அதை கண்டுக்காமல் இருத்தல் ( ஏக்கர்ஸ்)
    - பத்திரிக்கை ஆட்கள் கொடுமை ( பார்க்க தட்டை விமர்சித்த ஒருவரிடம் ஆளும் கட்சி உதவி மூலம் - ப்ளாக் போஸ்ட் எடுக்க வைத்து - மன்னிப்பு கேட்க வைப்பது )
    - காரை ஒட்டி நான்கு பேரை கொன்ற கான் நடிகருக்கு ஜாலியாக் இருக்க - வருடக்கனன்க்கில் ஜாமீன்... சாட்சிகள் கழிப்பு ஒழிப்பதை தடுப்பது, போலிஸ் உதவுவது
    - பயங்கர துப்பாக்கிகளை வைத்திருந்த நடிகருக்கு ஆதவராக இருந்த போலீஸ்களை இன்னும் பதவியில் வைத்திருப்பது...
    - மதம் சார்ந்த சாமியார்களை அரசியலுக்க வர வைப்பது...

    நிறைய சொல்லலாம்...

    ReplyDelete
  2. உடன்படுகிறேன். மேலும், முக்கியமாக, அரசுத் தரப்பில் சொல்லப்படும் சில கருத்துக்கள் ஏற்கக்கூடியவையாகவே இருக்கின்றன. இன்றைய எகனாமிக் டைம்ஸின் கருத்துப்பத்தி:

    http://economictimes.indiatimes.com/opinion/a-bill-too-far/articleshow/8945754.cms

    ReplyDelete
  3. இதென்ன கொடுமையான எதிர்பார்ப்பு. ஒரு விசயத்தை முன்னெடுக்கும் போதே அது சரியாக இல்லாத பட்சத்தில் அதை நிறைவேற்றினால் என்ன? இல்லை நீங்க சொல்வது போல குப்பை கூடைக்கு போனால் தான் என்ன? எல்லாமே ஒன்று தான். பெயருக்கென்று ஒரு சட்ட வரைவை உருவாக்கி விட்டு என் வீட்டுக் காரனுக்கு அரண்மனையிலே சேகவகம்ன்னு நாமும் காலம் காலமாக பீற்றிக் கொண்டு திரிய வேண்டியது.

    இவர் தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றால் அதை நிறைவேற்றுவதில் பிரதமருக்கு என்ன பிரச்சனை? அவர் 2ஜி ஊழல் பிரச்சனையில் தன்னோட பெயர் எதுவும் வந்துடக்கூடாதுன்னு கவனமாக இருக்கிறார் அல்லவா? அவர் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க நினைக்கிறார் என்றால் அதை இவர் காலத்தில் இந்த நாட்டுக்கும் கொடுத்து இந்த நாட்டில் உள்ள பிரதமர் மேலும் சாதாரண குடிமகன் கூட சட்டங்கள் முன நிறுத்த முடியும் என்பதற்கு இவர் முன்னூதாரணமாக இருந்து விட்டு போய்த் தொலைய வேண்டியது தானே? அமெரிக்கா ஒப்பந்தங்களுக்கு வீட்டு நாய் மாதிரி சேகவம் புரிந்துவருக்கு இதில் மட்டும் என்ன வலிக்குதாம்?

    ReplyDelete
  4. அரசியல்வாதிகளின் கையில் இருக்கும் ஒரு சைலண்ட் வீடோ இந்த வரைவை வரைவாகவே வைத்திருக்கும் அதிகாரம்; நாடாளுமன்றத்தில் இதனை விவாதத்திற்கும் கொண்டு வருவார்கள் ஆனால் எந்தக் கட்சியிலிருந்தும் இந்த மசோதாவுக்கு அவர்கள் கட்சி எம்பிகள் எப்படி வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவு செய்ய மாட்டார்கள் (whip)ஆனால் மனசாட்சிபடி வாக்களியுங்கள் என சொல்லுவார்கள் யாராவது ஒரு எம்பி இதை சீக்ரெட் பாலெட் வைத்து தான் ஓட்டெடுக்கனும்னு சொல்வார். இந்த மசோதா வீழ்த்தப்படும். சுதந்திரத்துக்கு முன்னாலேர்ந்து இருக்கறதாலே ஐபிசி எல்லாம் தப்பித்து இருக்கு

    ReplyDelete
  5. சார்,
    நல்ல கருத்துக்கள்..
    சில எண்ணங்கள் :
    எனவே கிடைத்தவரை இப்போதைக்குப் போதும் என்று ஏற்றுக்கொண்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஹஸாரே அண்ட் கோ உழைக்கவேண்டும்
    இப்படி செய்வதால், ஒரு மிக பெரிய பாதகம் நேரலாம் - சிபிஐ,விஜிலன்ஸ்,ஷுங்க்லு கமிட்டி போன்று லோக்பாலும் பெயருக்கு ஒன்றாகி போய், ஊழல் வாதிகளுக்கு உதவுமிட மாகி விடும். இவைகளுக்கிடையே தோன்றும் விசாரணை முரண்களை பயன் படுத்தி தப்பி விடுவார்கள்.

    IAC அமைப்புக்கு நான் சொல்ல விழையும் கருத்துக்கள் :
    1.எதிர் கட்சிகளிடம் இந்த மசோதாவை எடுத்து சென்று , தேவை பட்டால் விளக்கி, அவர்களில் ஒருவர் மூலமாக இதை, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்ய சொல்ல லாமே? .இதனை அக்கட்சிகள் ஏற்காவிட்டால், குறைந்த பட்சம் அக்கட்சிகளின் முகதிரையாவது கிழியுமே.)
    2. சோனியா காந்தியை வெளி ப்படியாக அழைத்து, சட்டத்தை விளக்கி, அவரது ஆதரவு கோரலாமே. (நாடு முழுவதும், காங்கிரெஸ் கட்சியினர், அம்மையார் வழியே தம் வழி என ஏற்கனவே தம் கருத்தை , சட்ட வரைவு குழுவிடம் தெரிவித்து விட்டனர் )
    3. அரசின் செய்தி தொடர்பு துறை மூலமாக , இச்சட்டத்தின் IAC வரைவினை எல்லா பதிரிகைகள் மற்றும் தொலை காட்சி களில் விளக்கலாமே.

    இச்சட்டம் தொடர்பாக இதுவரை நடந்த ஒரே உருப்படியான தொலை காட்சி விவாதம், ௨௧ ஆம் தேதி டைம்ஸ் நௌ தொலை காட்சியில் நடந்தது - அதில் அரசின் முகத்திரை கிழிக்க பட்டது.
    சார், இச்சட்டம் குறித்த தங்களின் முந்தைய பதிவில் குறிப்பிட்ட வினாக்கலக்கு, iac யின் வரைவு பதிலலிதிருக்குமென நம்புகிறேன்

    இத்தருணத்தில் தங்களிடம் ஒரு கோரிக்கை:
    சட்ட/பாராளு மன்றங்களில், அறுதி பெரும்பான்மை என்ற பலத்தை துஷ்ப்ரயோகித்து மக்களுக்கு நலன் ஏற்படாது அல்லது நலனுக்கு எதிராக (ஆனால் within constitution ) சட்டமியற்றினால், வாக்காளர்களுக்கான வழிகள் யாவை? for ex, as pointed to in one of your great posts,the parliamentarians had enacted a law (without any debate,in under 10 mins) a pension law that would make any person qualified for pension,even if served for 5 mins only.

    ReplyDelete
  6. 1. நீங்கள் சொல்வது சரி. அன்னா ஹசாரேவை விட்டுவிட்டால் இன்னும் பத்து வருடத்துக்கு யாரும் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அப்படியே யாராவது முன்வந்தாலும் ‘இவர் ஏழாம் வகுப்பில் சக மாணவரை பென்சிலால் குத்தினார், இப்போது இப்படி நல்லவன் நாடகம் போடுகிறார்’ என்று மீடியாக்கள் அலம்பி ஊற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

    2. நீங்கள் சொல்வது போல் அரசாங்கம் ஒன்றும் இறங்கிவந்துவிடவில்லை. பேச்சுவார்த்தைக்கு கபில் சிபெலை அனுப்பிவிட்டு, ஒவ்வொரு செய்தி சானலுக்கு ஒருவராக மனிஷ் திவாரி, அப்புறம் முக்கிய ஆளான திங்விஜய் சிங் மூலம் ஹசாரே குழுவில் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் குறைகளை சொல்ல தொடங்கினார்கள் . இதற்கு பெயர் இறங்கிவருவதில்லை. முதுகில் குத்துவது. இதில் அரசு வேறு கட்சி வேறு, இரண்டின் முடிவுகள் நோக்கங்கள் வேறு வேறு என்று வியாக்கியானம் வேறு. ராம்தேவ் விஷயத்திலும் இதையே தான் செய்தார்கள். கடைசியாக ‘திக்விஜய் சிங் மருத்துவரைப் பார்க்க வேண்டும்’ என்று அன்னா ஹசாரே வாயைப்பிடுங்கினார்கள். இது ஒரு நல்ல ராஜதந்திரம் அதை காங்கிரஸ் நன்றாகவே செய்கிறது.

    3. அடுத்தது அன்னா ஹசாரே தன் வாழ்நாளுக்குள் இதை செய்து பார்க்க அவசரப்படுகிறார் என்பது. நாம் எல்லோருமே அப்படித்தானே. தன் வாழ்நாளுக்குள் அனைத்தையும் செய்து முடிக்கத்தானே ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அவர் வயதைப்பற்றி ஏன் பேச வேண்டும்? முன்னால் அவர் உண்ணாவிரதம் இருந்த போது ஒரு பத்திரிக்கையாளர் எழுதியிருந்தார் ‘சம்மணமிட்டு அதிக நேரம் உட்கார முடிந்தால் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்’ என்று.

    ReplyDelete
  7. இந்த மாதிரி காம்ப்ரமைஸ் பண்ணி பண்ணியே இந்த அளவு உருப்படாத சட்டங்கள் இருக்கிறது. ஹன்னா செய்வது சரியே. வந்தால் ஒழுங்கான சட்டம் வரவேண்டும். அரை குறை சட்டங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை!

    ReplyDelete
  8. உடன்படுகிறேன்.

    ஆட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிரிகளாக முற்றிலும் ஒழுக்கமற்றவர்களாக லாயக்கற்றவர்களாக சித்தரித்து அவர்களைக் கொண்டே ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்து விட முடியும் என்று நினைப்பது முயற்சிப்பது வீண்.
    இப்போது ஒரு மசோதாவை இயற்றி அதில் ஒரு காலவறைவு வைத்து அடுத்த கட்ட வரைவுக்கு ஒரு வழி வைத்து அதை அரசோடு ஒத்துழைத்து மேற்கொண்டு அதை அமுல்படுத்த முயற்சி செய்வது தான் நடக்கக் கூடியது.

    ReplyDelete
  9. அதிகாரப் பகிர்வு, decentralization of power பற்றி அடிக்கடி பேசும் நீங்களே லோக்பால் போன்ற அதிகாரக் குவிப்பு செய்யும் சட்டவரைவுக்கு ஆதரவாகப் பேசுவது விந்தையாக இருக்கிறது. லஞ்சத்தை ஒழிப்பதற்கு அதிகாரப் பகிர்வும், அக்கவுண்டபிலிடியும் தான் வழி.

    செய்யப்படவேண்டிய அரசியல், நீதித்துறை, பொருளாதார சீர்திருத்தங்களை (political, judicial, economic reforms) சீக்கிரம் செய்யாமல் இப்படி சட்டத்தின் மேல் சட்டம் ஏற்றுவது, யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு unelected அமைப்பை உருவாக்கவேண்டியது அதன் கையில் அதிகாரத்தை வழங்குவது போன்ற காரியத்தினால் லஞ்சம் ஒழியப்போவதில்லை.

    ReplyDelete
  10. வஜ்ரா: அதிகாரக் குவிப்புக்கு நான் ஆதரவாக இல்லை. லோக்பால் பற்றி நான் ஏற்கெனவே எழுதியதில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதிகாரப் பரவலாக்கம்தான் ஊழலைக் குறைக்க ஒரே வழி என்றுதான் நானும் நம்புகிறேன்.

    எனவேதான் என் முந்தைய பதிவில், அண்ணா ஹஸாரே முறையில் உள்ள குறைகளை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

    ReplyDelete
  11. Sir,
    An indefinite fast is being organised in madras from Aug-16 at Srendra Developers,No.153,L.B.Road,Thiruvanmiyur,Chennai-41.
    Mr.Kalyanam,Private secretary to Mahatma Gandhi & Mr.Lakshmikanthan Bharathi,freedom fighter & participant in Quit India moement are sitting on indefinite fast.
    Many volunteers are siting on relay fast as well.

    Demand :
    The govt must withr\draw their version of Lokpal bill from parliament & introduce an effective lokpal bill.

    Reqyest you to please provide your solidarity for this cause and spread info to your friends.

    Thanks,
    Venkat

    ReplyDelete