Wednesday, June 08, 2011

Right to Education சட்டத் திருத்தம் - 4

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டுமாம். எப்படி? பள்ளி நிர்வாகத்தை அடக்கி, லாபம் பெறாமல் ஒடுக்கி, தரமான கல்வி தரக்கூடியவர்களை பயமுறுத்தி கல்வியின் பக்கமே வராமல் செய்து, தனியார் பள்ளிகளின் காம்போசிஷனை அதிரடியாக மாற்றி, அதற்கான கட்டணத்தைக் குறைத்து, அவர்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்து, கல்விச் சுமையையும் அதிகரித்து, தன் கையை நன்றாகக் கழுவிக்கொண்டு, எதைச் சாதிக்க முனைகிறது இந்த அரசு?

மாறாக என்ன செய்யலாம்?

நோக்கம் சரியானது. அதை மாற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.

1. முதலில் கல்வியை யார் வேண்டுமானாலும் தரலாம், அதிலிருந்து லாபம் பெறலாம் என்று மாற்றவேண்டும். ஆனால் வெளிப்படையாக, கருப்புப் பணம் இன்றி, வரி கட்டக்கூடிய முறையில் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் பல நியாயமான அமைப்புகள் கல்வி வழங்குதலில் இறங்கும். பங்குச்சந்தை வழியாக முதலீடுகளைத் திரட்ட முடியும். இதன்மூலம் நாடு முழுவதும் எண்ணற்ற கல்வி நிலையங்களை அமைக்கமுடியும்.

2. அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தனை புதிய பள்ளிக்கூடங்களை - இலவசக் கல்வி தரும் அமைப்புகளை - ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறி அதைச் செயல்படுத்தவேண்டும்.

3. அரசுப் பள்ளிகளை லீஸ் முறையில் தனியார் வசம் ஒப்படைத்து நடத்தவேண்டும். இப்போது மையப்படுத்தப்பட்ட நடைமுறையில் அரசுப் பள்ளிகளில் மோசமான கல்விதான் தரப்படுகிறது. இப்போது அரசு நடத்தும் கல்விக்கூடம் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு என்ன செலவாகிறதோ அதனை தனியார் அமைப்புகளுக்குக் கொடுத்து, இப்போது தரப்படும் கல்வியின் தரத்தைவிடச் சிறப்பான கல்வியைத் தருமாறு அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். (குப்பை அள்ளும் காண்டிராக்ட் போல, ரோடு போடும் காண்டிராக்ட் போல.)

4. தனியார் பள்ளிகளில் என்ன கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்க அரசு உரிமை தரவேண்டும். இதனால் கல்விக் கட்டணம் மிக அதிகமாகப் போக சாத்தியங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் எவ்வளவு பணம் தரமுடியும் என்பதை யூகித்துதான் பள்ளிகள் கட்டணங்களை நிர்ணயிக்கும். இதுபோன்ற பள்ளிகளில் கட்டணம் கட்டிப் படிக்க முடியாவிட்டால் அவர்களது சக்திக்கு உட்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளுக்குப் போய்ப் படிக்கவேண்டும். இந்தப் பள்ளிகளில் 25% மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து வரும்போது அரசு முழுமையான கட்டணத்தை வழங்கவேண்டும். மாறாக தானாக ஒரு கணக்கை வைத்துக்கொண்டு அதைத்தான் தருவேன் என்று சொல்லக்கூடாது.

5. அல்லது இந்த மாதிரிச் செய்யலாம்... ஒரு மாணவனுக்கு இத்தனை ரூபாய் தருவேன் என்று அரசு அறிவித்தால், அதைக் கொண்டு அந்தக் கட்டணத்துக்கு உள்ளாக இருக்கும் கல்வி நிலையம் சென்று படித்துக்கொண்டு, மிச்சப்படுத்தும் பணத்தில் அந்த மாணவன் ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளலாம் அல்லது புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். அல்லது மேற்கொண்டு கையிலிருந்து கொஞ்சம் பணம் போட்டு அதிகக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம்.

6. எந்தெந்தத் தனியார் பள்ளிகளில் எல்லாம் அரசு 25% இட ஒதுக்கீடு கேட்கிறதோ, அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 75%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

7. அதேபோல அந்தப் பள்ளிகளில் ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படிக்க ஆகும் செலவில் 50% முதல் 75% வரை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவர்களுக்கு அஞ்சல் வழியில் படிக்க இடங்களைப் பெற்றுத்தரவேண்டும். இதனை ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்திவிட்டு, புதிதாகச் சேர்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சொல்லலாம்.

(மேலே பி.எட் என்று போட்டிருக்கும் இடத்தில், பி.எட் அல்லது, கீழ் வகுப்புகளுக்கு டீச்சர் டிரெய்னிங் சான்றிதழ் என்று எடுத்துக்கொள்ளவும்.)

8. கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை நாங்கள் உயர்த்துகிறோம், அதே அளவுக்கு தனியார் பள்ளிகளின் தரத்தை நீங்கள் உயர்த்துங்கள் என்று சில norms-ஐ அரசு கொண்டுவரட்டும். என் முதுகின் அழுக்கை நான் நீக்கமாட்டேன், நீ நான்கு முறை குளி என்று அரசு சொல்வது அபத்தமாக இருக்கிறது.

9. தமிழகத்துக்கு மட்டும் சாபக்கேடான அரசியல் காழ்ப்பு காரணமாக சமச்சீர் கல்வி அறிமுகம், சமச்சீர் கல்வி ரத்து போன்ற flip-flop இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளவும் மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் இடம் தரவேண்டும்.

10. அடிப்படையான இடதுசாரி மனநிலையிலிருந்து வெளியேறவேண்டும். லாபம் என்றாலே பாவம், எல்லாவற்றையும் அரசு செய்யவேண்டும், அல்லது தனியார் என்று ஒருவர் இருந்தால் அவரைத் தண்டிக்கும் அளவுக்குக் கொடுமைப்படுத்தவேண்டும் என்ற இந்த மனநிலை மிக மோசமானது. இன்று தனியார் அளிக்கும் உணவை உண்டு, தனியார் நெய்யும் சட்டையை அணிந்துகொண்டு, தனியார் நிறுவனத்தில் கல்வி கற்று, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கையில் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும் நாம் இப்படி தனியாரையும் லாபத்தையும் ஏன் கரித்துக்கொட்டுகிறோம்? தனியாரால்தான் நம் சமூகம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. தனி நபர்களின் தொழில்முனையும் திறன்தான் நம் அனைவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

தனியார்தான் கல்வித்துறையையும் வாழவைக்கப்போகிறார்கள். அரசு அனுமதித்தால். நியாயமாகக் கட்டுப்படுத்தினால்.

(முற்றும்)

10 comments:

  1. Excellent Post Badri.

    Your idea to outsource government institutions to private players (point #3) is very good.

    Point #6 Is it fair to ask 75% from the govt when the reservation is at 25% (assuming your previous suggestions are implemented)?

    I would like to add one more to your list:

    Govt to audit all the schools every year and make sure to share the results (non-conformances, observations and recommendations) to all the parents either thru their website or deliver it thru post.

    ReplyDelete
  2. Forgot to add:

    When the govt is implementing the PPP model in all the growth related areas it makes perfect sense to implement it (conceptually) in education too.

    ReplyDelete
  3. Sir,
    Please provide your view on this :
    1.Should govt run free schools without other options like vouchers or xx% reservation for bpl students in private schools? or
    2. shud they only(without running govt schools at all - considering the adage of "its not the biz of govt to run a biz") follow voucher system+ % reservation in private schools for bpl students(with govt paying full fees) or
    3.shud govt follow both 1 and 2 and the students will make the choice(based on quality of the govt school)?

    ReplyDelete
  4. அன்பின் பத்ரி

    அருமையான தகவல் செறிந்த இடுகை (அல்லது தொடர்)
    JMRChennai க்கு இருக்கும் அதே சந்தேகம்தான் எனக்கும்:

    //எந்தெந்தத் தனியார் பள்ளிகளில் எல்லாம் அரசு 25% இட ஒதுக்கீடு கேட்கிறதோ, அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 75%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.//

    //அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 25%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்//. என்றுதானே இருக்க வேண்டும்?

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  5. இல்லை. 25% இட ஒதுக்கீடு வேண்டுமென்றால், கட்டுமானத்தை மேம்படுத்த 75% காசு தா என்றுதான் சொல்கிறேன். ஏனெனில் தான் செய்யவேண்டியதை அடுத்தவர்மீது திணிக்க முற்படுகிறது அரசு. அதற்கேற்ற விலையைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? புதிதாக ஒரு பள்ளியை அரசு கட்டவேண்டும் என்றால் 100% கட்டுமானச் செலவையும் அரசுதானே தரவேண்டும்?

    முதலில் 100% என்று போட்டுவிட்டு, பின் போகட்டும் என்று 75% என்று குறைத்தேன்! :-)

    ReplyDelete
  6. அரசு சில பள்ளிகளையாவது நடத்தவேண்டும். அதையும் ppp முறையில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. அதைப் பலர் ஏற்க மறுக்கலாம். முழுவதுமாக அரசே நடத்தவேண்டுமா அல்லது தனியாருடன் இணைந்து நடத்தவேண்டுமா அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கலாமா என்பதெல்லாம் பரிசோதனை முயற்சிகளே.

    ReplyDelete
  7. //6. எந்தெந்தத் தனியார் பள்ளிகளில் எல்லாம் அரசு 25% இட ஒதுக்கீடு கேட்கிறதோ, அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 75%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.//

    இது புது ஊழலுக்கான வழி. நோக்கம் நல்லதாய் இருந்தாலும், நடைமுறை படுத்துவதில் ஊழல் தான் மிஞ்சும். 25% இடத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்தினால் போதுமல்லவா?

    ReplyDelete
  8. அனைத்துத் தரப்பு நியாயங்களையும் சிந்தித்து எழுதியுள்ள ஒரு நல்ல தொடர்பதிவு.

    1. அரசு இதை எப்போது கொண்டுவர உத்தேசித்துள்ளது?
    2. 25% மாணவர்களுக்கு முழுக்கட்டணத்தை அரசே செலுத்திவிட்டால் எதற்காக கட்டமைப்புச் செலவுகளை ஏற்க வேண்டும்? மற்ற மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தில் உள்கட்டமைப்பை பள்ளிகளே ஏற்படுத்திக்கொள்வதைப் போன்றதுதானே இது? மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் ஏகப்பட்ட அநீதியான கெடிபிடிகளை தனியார்கள் வைத்துள்ளார்கள். அரசே கட்டணத்தை செலுத்தும்போது, இம்மாணவர்களை நீ கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு சொல்கிறது. இது தனியார்களிடம் moral responsibility இல்லாததால் வலிந்து திணிக்க வேண்டியிருக்கிறது.
    3. பெற்றோர் டிகிரி வாங்கியிருக்க வேண்டும். டிகிரி வாங்கியிருந்து பெற்றோரில் யாரோ ஒருவர் வீட்டிலிருக்க வேண்டும் என்றெல்லாம் பள்ளிகள் கண்டிசன் போடுகின்றனவே... அதைப் பற்றி சட்டங்கள் வேண்டாமா?
    4. பள்ளியின் கல்விக் கட்டணம் மட்டுமின்றி, புத்தகங்கள், நோட்டுகள், வொர்க் புக்குகள், ஷுக்கள், டைகள், லேப் ஃபீஸ், எக்ஸாம் பீஸ் மற்றும் இன்ன பிற லொட்டு லொசுக்குகளையும் அரசே கட்டாவிட்டால் ஏழை மாணவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது.
    5. லேட்டாக வந்தால் அபராதம், லீவ் எடுத்தால் அபராதம், தமிழில் பேசினால் அபராதம் இவை குறித்தெல்லாம் சட்டம் வேண்டாமா?
    6. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் குறித்த சட்டம் வேண்டும். லேபர்களுக்கு இருக்கும் இந்த பாதுகாப்பு கூட ஆசிரியர்களுக்கு இல்லை....

    ReplyDelete
  9. முழுக்க வலது சாரிப் பொருளாதாரம் செறிந்த சிந்தனை..

    நீங்கள் இலவசங்கள் பற்றிய நீயா நானா வில் பேசிய போது இலவசங்கள் வேண்டாம்,அரடு லீன்-சிறிய அரசாக இருக்க வேண்டும்,எல்லாவற்றிற்கும் மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் பேசினீர்கள்..
    வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள் என்றாலும் இலசவங்கள் கூடாது என்றும் பேசியதாக நினைவு..

    இப்போது அடாவடிக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவிதத்தை அரசு குறிப்பிடம் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வருவதைப் பற்றிப் பேசும் போது அதற்கான செலவை 100 சதம்,சரி போனால் போகிறது 75 சதம் அரசு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்?இப்போது மட்டும் அரசு லீன் அரசாக இருக்க வேண்டாமா?

    பேராசிரியர் இராமசாமி உங்களுக்கு அளித்த பதிலை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?

    இம்மாதிரி அரசு சட்டத்தின் மூலம் பயமுறுத்தாத வரையில் ஒன்றுமில்லா கிராமப் புற ஏழை கட்டடத் தொழிலாளியின் ஆனால் நன்கு படிக்கும் புத்திக் கூர்மையுள்ள மாணவர்கள்,டான் பாஸ்கோ போன்ற பள்ளிகளின் வாசல்களையாவது மிதிக்க முடியுமா?

    என்ன சட்ட வரைமறை வழிகாட்டு வரைமுறை கொண்டு வந்தாலும் கட்டண விகித்ததில் தனியார் பள்ளிகள் தான் நினைத்த வற்றை செயல்படுத்தி மக்களிடம் இருந்து நினைத்த அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன..

    கோவிந்தராசன் கமிட்டி ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய முடிந்ததா?

    அரசின் கொள்கை சமூகத்தின் பார்வை.உங்கள் பார்வை நீங்கள் தனியார் பள்ளியின் முதலாளியாய் இருப்பது போன்ற பார்வை...

    ReplyDelete