Thursday, November 10, 2005

கே.ஆர்.நாராயணன் பற்றிய நினைவுகள்

இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11 பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர் அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ்காரர்களும் கூட.

இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல் சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள். பின்னால் வந்த சிலர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றவர்கள்.

கே.ஆர்.நாராயணன் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். தொழில்முறை அரசியல்வாதி இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் வெகு காலம் பணியாற்றிய சிவில் சர்வண்ட். பல நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர். வெளியுறவுச் செயலராக இருந்தவர். இவரது மனைவி பர்மிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அப்பொழுதைய பிரதமர் நேருவிடம் விசேஷ அனுமதி பெற்றுத்தான் Ma Trint Trint என்பவரை மணம் செய்து கொண்டார் (அவர் பின்னர் தன் பெயரை உஷா என்று மாற்றிக்கொண்டார்) என்றும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

Indian Foreign Service-இலிருந்து ஓய்வு பெற்றதும் ஜே.என்.யு துணைவேந்தராக இருந்திருக்கிறார். பின் சில காலம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக. அதையடுத்து அரசியலுக்கு வந்து மூன்று முறை கேரளாவின் ஒட்டப்பாளம் என்ற இடத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார்.

எனக்கு நினைவு தெரிந்து நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தது குடியரசு துணைத்தலைவர் பதவிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்பொழுது துணைத்தலைவராக இருப்பவர் அடுத்த பதவிக்காலத்தில் தலைவர் பதவிக்குச் செல்வது வாடிக்கையாக இருந்தது. எனவே இவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று தீர்மானம் செய்திருந்தோம். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்காக நிற்கும்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் டி.என்.சேஷன். சேஷன் 1991-96 தேர்தல் கமிஷனராக இருந்து மிகப் பெரிய பெயர் பெற்றிருந்தார். எனவே இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் சுவாரசியமாக இருந்தது.

ஆனால் கே.ஆர்.நாராயணனுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அவருக்கு இருந்தது. பிற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன. சேஷனுக்கு சிவ சேனா மட்டும்தான் வெளிப்படையான ஆதரவு கொடுத்திருந்தது. அதுவுமில்லாமல் சேஷன் கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தார். நாராயணன் ஒரு non-controversial ஆள் என்பதால் அவரது வெற்றி உறுதியாகியது.

அந்தச் சமயத்தில் ஜனதா தள அரசு ஆட்சியில் இருந்தது. தேவே கவுடா பிரதமர் பதவியிலிருந்து விலகி ஐ.கே.குஜரால் பிரதமராகியிருந்த நேரம் அது. அடுத்த சில வருடங்களுக்கு மைனாரிடி அரசுகள்தான் வாடிக்கை என்று தெரிந்துபோனது. அன்றிலிருந்து இன்றுவரை கூட்டணி அரசுகள்தான் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சேஷன் குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன நடந்திருக்கும்? சர்வாதிகாரம்தான். ஏதாவது செய்து குட்டையைக் குழப்பியிருப்பார். நல்ல வேளை!

நாராயணன் அதே சமயம் ரப்பர் ஸ்டாம்பாக இல்லை. இன்று வெளியான எல்லா அஞ்சலிக் கட்டுரைகளிலுமே நாராயணன், குஜ்ரால் அரசு உத்தர பிரதேச மாநில அரசைக் கலைக்க விரும்பியதையும், வாஜ்பாய் அரசு பிஹார் மாநில அரசைக் கலைக்க விரும்பியதையும் தடுத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளன. அப்துல் கலாம் இதைக் கவனிப்பது நல்லது.

நாராயணன்தான் முதல் முதலில் தேர்தலில் வாக்களித்த இந்தியக் குடியரசுத் தலைவர். அதை அப்துல் கலாமும் தொடர்கிறார். இனி வரும் குடியரசுத் தலைவர்களும் தொடர்வார்கள் என்றே நம்புவோம்.

நாராயணன் குடியரசு துணைத்தலைவராக இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது. தொடர்ந்து நாடெங்கும் கலவரங்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புகள். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் தொடர்ந்து குஜராத் கலவரங்களும் நிகழ்ந்தன. அப்பொழுது நாராயணன் பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதி ராணுவத்தை உடனே வரவழைக்கச் சொன்னதாகவும் அதற்கு மத்திய அரசு உடனடியாக பதில் எதுவும் சொல்லவில்லை என்றும் பின்னர் நாராயணன் தெரிவித்தார். அந்தக் கடிதத்தை வெளியிட மத்திய அரசும், ராஷ்டிரபதி பவனும் மறுத்துள்ளன. இப்பொழுது நாராயணன் இறந்துவிட்டார். அந்தக் கடிதம் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படலாம். அதை இனியாவது வெளியிட வாய்ப்புகள் உண்டா என்று பார்க்கவேண்டும்.

நாராயணன் தலித் பின்னணியில் வந்தவர், என்றாலும் அதனை அழுத்திக்கூற விரும்பவில்லை. தலித் என்பதால்தான் அவருக்கு முக்கியமான பதவிகள் கிடைத்தன என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்பதால். அம்பேத்காருக்குப் பிறகு அரசியல் அளவிலும் அறிவுத்தளத்திலும் மிக அதிக சாதனைகளைச் செய்தவர் இவர்.

இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரக் கல்வி பயின்றவர். 1954இல் டில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பாடம் நடத்தியிருக்கிறார். ஆனால் பொருளாதாரம் பற்றி இவர் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.

இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முக்கியமானது. தி ஹிந்து, விக்கிபீடியா இரண்டிலிருந்து ஒட்டவைத்துச் சொல்கிறேன். இவர் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலத்தின் முதலாவதாக வந்திருக்கிறார். அப்படி வரும் மாணவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை உடனடியாக வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் திருவாங்கூர் திவான் சர். சி.பி.ராமசாமி அய்யரை ஒருமுறை இவர் பார்க்கப்போனபோது கதர் ஜிப்பாவும் கையில் ஒரு பளபளா கடிகாரமும் அணிந்து சென்றிருக்கிறார். ஒரு தலித் சில்க் ஜிப்பாவும் (கதரை சில்க் என்று நினைத்து) தங்கக் கடிகாரமும் அணிவதா என்ற கடுப்பில் திவான் நாராயணனுக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டாராம்! இதனால், தனது எம்.ஏ சான்றிதழைக் கூட வாங்கப்போவதில்லை என்று கோபத்துடன் நாராயணன் சென்னை வந்து தி ஹிந்து நாளிதழில் இதழாளராகச் சேர்ந்திருக்கிறார். அதன்பின் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சில காலம் வேலை செய்து, பிறகு ஜே.ஆர்.டி டாடா ஸ்காலர்ஷிப்பில் லண்டன் சென்று பொருளாதாரம் படித்திருக்கிறார்.

இவர் குடியரசுத் தலைவரான பிறகு திருவாங்கூர் பல்கலைக்கழகம் இவரது சான்றிதழை இவருக்குக் கொடுக்க விரும்பியதும், அப்பொழுதுதான் அதைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

ஏழைமை, சாதியம் ஆகியவற்றைத் தாண்டி இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த நாராயணனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

விக்கிபீடியா
தி ஹிந்து அஞ்சலி

12 comments:

  1. //இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முக்கியமானது. தி ஹிந்து, விக்கிபீடியா இரண்டிலிருந்து ஒட்டவைத்துச் சொல்கிறேன். இவர் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலத்தின் முதலாவதாக வந்திருக்கிறார். அப்படி வரும் மாணவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை உடனடியாக வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் திருவாங்கூர் திவான் சர். சி.பி.ராமசாமி அய்யரை ஒருமுறை இவர் பார்க்கப்போனபோது கதர் ஜிப்பாவும் கையில் ஒரு பளபளா கடிகாரமும் அணிந்து சென்றிருக்கிறார். ஒரு தலித் சில்க் ஜிப்பாவும் (கதரை சில்க் என்று நினைத்து) தங்கக் கடிகாரமும் அணிவதா என்ற கடுப்பில் திவான் நாராயணனுக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டாராம்! இதனால், தனது எம்.ஏ சான்றிதழைக் கூட வாங்கப்போவதில்லை என்று கோபத்துடன் நாராயணன் சென்னை வந்து தி ஹிந்து நாளிதழில் இதழாளராகச் சேர்ந்திருக்கிறார். அதன்பின் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சில காலம் வேலை செய்து, பிறகு ஜே.ஆர்.டி டாடா ஸ்காலர்ஷிப்பில் லண்டன் சென்று பொருளாதாரம் படித்திருக்கிறார்.//

    முன்னர் கேள்விப்பட்டிராத தகவல் இது பத்ரி. நன்றி.

    ReplyDelete
  2. It's also credit to India that a person from the lowest level of society was able to become a first citizen, within 50 years of freedom. Is there any other country in the world that has allowed a person from the lowest level to become the first citizen within 50 years of its existence? Even, America, the greatest country on earth has yet to appoint a black person as President even after 200 years.

    ReplyDelete
  3. அனானி: இதென்ன "Is there any other country in the world that has allowed a person from the lowest level to become the first citizen within 50 years of its existence?"

    அவர் தன் திறமையால் முன்னுக்கு வந்தார். இதில் என்ன இந்தியாவுக்கு கிரெடிட் வேண்டியுள்ளது? கிரெடிடி அத்தனையும் அவருக்குத்தான்! இப்படி மோசமான ஒரு சாதியம் இந்த நாட்டில் இருக்கிறதே என்று வருத்தப்படத்தான் வேண்டும்.

    ReplyDelete
  4. //It's also credit to India that a person from the lowest level of society was able to become a first citizen, within 50 years of freedom. Is there any other country in the world that has allowed a person from the lowest level to become the first citizen within 50 years of its existence? Even, America, the greatest country on earth has yet to appoint a black person as President even after 200 years.//

    அப்படிப்போடு!!

    (....ஜனநாயகமற்ற, நவீனமற்ற அவமானகரமான ஒரு வாழ்க்கையை வாழவே இந்நாட்டின் தலித்துகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நிலாவுக்கு ‘ராக்கெட்' அனுப்பும் திட்டத்திற்கு ஆகும் செலவில், பத்தில் ஒரு பகுதியை இதற்குச் செலவழித்தாலே ரயில் நிலையங்களில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ...
    http://www.keetru.com/dalithmurasu/oct05/editorial.html)

    பதிவுக்கு நன்றி பத்ரி!

    ReplyDelete
  5. மற்றொரு விஷயம்! அதிகாரபூர்வமாக நாராயணன் இறந்த நேரம் மாலை 5.45. ஆனால் மதியம் 2.00 மணி அளவிலேயே சன் டிவி முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன் மரணம் என்று Flash News போட்டுவிட்டார்கள்! அவ்வப்போது கிரிக்கெட் பார்க்கும்போது சன் நியூஸ் சானலைத் திருப்பிப் பார்த்தபோது இந்த விஷயம் கண்ணில் பட்டது.

    இந்த "வதந்தி"யை யார் முதலில் பரப்பியது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    ஹிந்து தலையங்கமும் பார்த்தேன்.

    ReplyDelete
  7. 1.இதுவரை பத்வி வகித்த குடியரசுத் தலைவர்களிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நாராயணன்.அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரது கட்சியான காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இல்லை.இருந்தும் மிக அதிக வாக்கு வித்தியாசம்.

    2.அவர் ஒட்டப்பாலம் (பாளம் அல்ல) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகத்தான் போட்டியிட்டார். எனவே அவர் அரசியல்வாதி அல்ல என்ற கருத்துச் சரியானது அல்ல.முழுநேர அரசியல்வாதி அல்ல என்பதுதான் வாதம் என்றால் இவரைப் போலவே முழுநேர அரசியல்வாதியாக அல்லாத ஜாகீர் ஹுசைன் குடியர்சுத் தலைவராக இருந்திருக்கிறார்.

    பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முன்னரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. நேரு-ராதாகிருஷ்ணன், ராஜீவ்- ஜெயில்சிங் மோதல்கள் பிரசித்தம்,

    நாராயணனின் தனிச் சிறப்புகள் இவை அல்ல. அவை வேறு பல.

    சிலவற்றை நான் என் பதிவில் எழுதியிருக்கிறேன், http://360.yahoo.com/maalan_narayanan

    ReplyDelete
  8. மாலன்: நீங்கள் எழுதியதைப் படித்தேன். நான் எங்குமே "இவைதான் இவரது தனிச்சிறப்புகள்" என்று எதையுமே சொல்லவில்லை. எனக்குத் தோன்றியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவ்வளவே.

    "தொழில்முறை அரசியல்வாதி" இல்லை, சாதாரண அலுவலக வாழ்க்கை முடித்து, பணி ஓய்வு பெற்ற பிறகு அரசியல்வாதி ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளேன்.

    நாராயணன் 'ரப்பர் ஸ்டாம்ப் இல்லை' என்றுதான் குறிப்பிட்டேனே தவிர, நாராயணனைத் தவிர பிற எல்லோரும் ரப்பர் ஸ்டாம்புகள் என்று குறிப்பிடவில்லை.

    நன்றி.

    ReplyDelete
  9. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு எளிமையானவர். சில முறை சந்தித்து பேசிய போது குறைகளை கவனமாக கேட்டு கொண்டு, ஆவன செய்த போதும் அவர் கேட்ட ஒரு கேள்வி அவருடைய பதவிக்கோ தனித்தன்மைக்கோ ஒத்துவராததாக இருந்தது.
    தெரியாத சில அருமையான தகவல்களை கொண்ட பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  10. "Even, America, the greatest country on earth has yet to appoint a black person as President even after 200 years. "

    I thought Abraham lincoln was Black !!!!

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி.. பத்ரி அவர்களே..

    சன் டீவி செய்திகளில் கூட அவரை தலித் என்றே குறிப்பிட்டார்கள்..அவரது திறமையினால் தான் முன்னேறினார் என்பதை விட அவரது ஜாதி(தீ)ய குறீயீடே ஊடகங்களில் அதிகம் அடிபடுகிறது என்பது வேதனைக்குரியது.

    நம் நாட்டில் மதத்தை விட ஜாதி(தீ)யின் ஆளுமை அதிகம் என்பதற்க்கு மற்றெரு சான்று.

    அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்
    மாயக்கூத்தன் கிருஷ்ணன்

    ReplyDelete
  12. Badri,

    I am not disputing that Narayanan was qualified and achieved a lot. Person and system factors are equally important for achievement in public sphere. For instance, Indians are not able to get olympic gold medal because of the absence of supporting system factors. We are always ready to blame India for the lack of gold medals. I am saying that the Indian system did ultimately allow a person of the lowest caste to become the president, while many countries including the usa have not been able to achieve this. Why is that there has been no black president in the usa? Do you believe that there have been no black Narayanans in America in the past 200 years? If you think there were qualified black people, why is that they could not become president?

    Obviously, the american system has a much thicker glass ceiling that cannot be broken even by blacks who were as qualified (if not more) as our Narayanan. I agree with you that these barriers are terrible but it's to the India's credit that it allowed a person from the lowest ranks to become the president when even the greatest country america could not achieve this.

    bruno,

    Lincoln, contrary to the tamil song (karuppenna veluppenna onrae enrar), did not think blacks and white are equal. He had some nasty things to say about blacks. He said something like a black can never be an equal to a white.

    ReplyDelete