Monday, November 28, 2005

இலங்கை அழிவை நோக்கி...

எதிர்பார்த்தவை அப்படியே நடக்கின்றன. இன்றைய மாவீரர் தின உரையில் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். (ஆங்கில வடிவம் இங்கே. தமிழ் வடிவம் இங்கே.)

25-11-2005 அன்று மஹிந்தா ராஜபக்ஷே தான் பதவியேற்ற பின்னரான பேச்சில் தன் அரசின் நிலையை விளக்கினார். [இந்தப் பேச்சின் முழு வடிவத்தை இலங்கை அரசின் அதிகாரபூர்வ தளங்களில் தேடி அலைந்ததுதான் மிச்சம். இலங்கை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ தளத்தில் இன்னமும் சந்திரிகா குமரதுங்க சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். (ஞாயிறு 27-11-2005, 22:45 IST)] அந்தப் பேச்சில் ராஜபக்ஷே சொன்ன முக்கியமான சில விஷயங்கள்:

* தமிழர் தாயகம் என்று எதுவும் இல்லை. அதாவது தமிழர் பகுதிகள் என்று பாரம்பரியமாக அறியப்பட்ட இடங்களை மஹிந்தா அரசு ஏற்காது. இலங்கை முழுவதும் இலங்கையின் அனைத்து மக்களுக்குமானது.

* சந்திரிகா அரசால் கொண்டுவரப்பட்ட P-TOMS எனப்படும் கூட்டு சுனாமி நிவாரணக் கட்டமைப்பு கலைக்கப்படுகிறது. (இதன் மூடுவிழா ஏற்கெனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தால் செய்யப்பட்டுவிட்டது.) அதற்குப்பதில் ஜய லங்கா சுனாமி மறுசீரமைப்புத் திட்டம் என்பதை மஹிந்தா முன்வைக்கிறார். அதாவது சுனாமி மறுசீரமைப்புப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எந்த இடமுமில்லை என்பதுதான் இதன் சாரம்.

* விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொல்கிறார் மஹிந்தா. ஆனால் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு ஒருங்கிணைந்த, சமஷ்டி முறை அல்லாத இலங்கைக்குள்ளாக இருக்க வேண்டும்.

இதற்கான பதிலாக பிரபாகரன் மாவீரர் தினத்தன்று கூறியது:

* ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களைச் சாடுகிறார். அவர்கள் மஹாவம்ச கருத்துருவாக்கத்திலிருந்து மீளவில்லை, இலங்கை புத்த பகவான் தமக்களித்த கொடை என்று மஹாவம்சத்தில் சொல்லியிருப்பதை சிங்கள பவுத்தர்கள் நம்புவதாகவும், இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தனி இனமாக ஒரு மக்கள் இருப்பதையும் அவர்களுக்குத் தன்னாட்சி விருப்பங்கள் இருப்பதையும் சிங்களவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார் பிரபாகரன்.

* இந்தியா, பிற சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேசியதாகவும் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதாகவும் சொல்கிறார்.

* ரணில் விக்ரமசிங்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் செலுத்தவில்லை, விடுதலைப் புலிகளை ஏமாற்றி, இயக்கத்தைப் பிளவுபடுத்தி ஆயுதங்களைப் பிடுங்கிக் கொள்ள முயற்சி செய்தது என்கிறார். சந்திரிகாவும் ஏமாற்றுவதையே தொடர்ந்தார் என்கிறார்.

* சுனாமிக்கு சற்றுமுன்னர் "எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம்" என்கிறார். அதாவது போரை மீண்டும் தொடங்க எண்ணிய நேரத்தில் சுனாமி தலைப்பட்டது. தொடர்ந்து சந்திரிகா ஏற்படுத்திய P-TOMS குழப்பத்தில் போய் முடிந்தது.

* சமீபத்தில் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள் என்கிறார். (ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது.)

* சிங்கள புத்த இனவாதிகளின் வாக்குகளால் ஜெயித்த மஹிந்தா "தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ [...] புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது" என்கிறார்.

* கடைசியாக ultimatum.
பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.

ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.

எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.
பிரபாகரனே சொல்வது போல மஹிந்தாவுக்கும் பிரபாகரனுக்குமான இடைவெளி மிகப்பெரிது. இந்த இடைவெளி அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கத்தான் செய்யும். குறையப்போவதில்லை. அதையடுத்து, பிரபாகரன் தீர்மானிக்கும் நேரத்தில், "தன்னாட்சியை நிறுவும் சுதந்திரப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்"; அதாவது சண்டை மீளும்.

அனைத்துமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட முறையில் நினைத்தது போலவே நடக்கிறது. இலங்கை மிக வேகமாக அழிவை நோக்கி முன்னேறுகிறது.

14 comments:

 1. ஆமாங்க எல்லோரும் பயந்தது நடக்கபோகிறது. we all are worried.

  ReplyDelete
 2. "ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது."

  எதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள் பயமுறுத்தல் என்று? 40000 ராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கும் மக்கள் அனைவரையுமே பயமுறுத்த முடியுமா? அவர்கள் சொன்னார்கள் இவர்கள் செய்தார்கள், இதில் எங்கிருக்கு பயமுறுத்தல், வாக்களித்த அனைவரையும் சுட்டு கொண்று விட்டார்களா?

  ReplyDelete
 3. Badri,
  Enaku Basic-a oru vishayam puriavillai. Election-ai purakkanippathu Mahintavukku sadagama amaiyum enbathu thamizhargalukko puligalukko teriyamal irukkathu. Iruppinum, yen purakkanithu thalayil mannai vaari pottu kondargal?
  thayai koornthu vilakkavum.

  regards,
  Nataraj

  ReplyDelete
 4. //சமீபத்தில் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள் என்கிறார். (ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது.)//

  பத்ரி நீங்கள் சில உண்மைகளை தெரியாததால் இப்படி எழுதினீர்களா அல்லது வேண்டுமென்றே எழுதினீர்களா தெரியவில்லை????

  ஒன்று புரிந்துகொள்ள வேண்டும்
  1.யாழ்குடா நாடு இராணுவ கட்டுப்பாட்டில் தால் இருக்குறது அவர்களையும் புலிகள் அச்சுறுத்தினார்கள் என்று சொன்னால் அது வரை இராணுவம் என்ன புளியங்காயா பறித்துக்கொண்டிருந்தது????

  2. கிழக்கு பிரதேசத்தில் தமிழர்களுக்களோடு அரசால் காலம் காலமாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், கிழக்கை வாழிடமாக கொண்ட முஸ்லீம் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகிஸ்கரிக்கவில்லை. அவர்களின் வாக்கு தார்கள். இதுவே உங்களுக்கு புலிகளின் செல்வாக்கு இல்லத இடம் எனவும் புலிகளால் பயமுறுத்த முடியாத இடம் எனவும் சுட்டி தமிழ்ர்கள் வாக்களித்தார்கள் என சொல்கிறீர்கள்.

  யாழ்குடாநட்டின் வாக்காளர் எண்டிக்கை 7லட்சத்துக்குமேல் அதில் ஆக்1500 பேரளவில் தான் வாக்களிக்க போனார்கள். அங்கு முழுக்க முழுக்க இலங்கை இராணுவமே உள்ளது அதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்

  தமிழ்தேசியக்கூட்டமைப்பும், புலிகளும் இத்தேர்தல் முக்கியமற்றது என சொன்னதால் வாக்களிக்க போகவில்லை.

  இது தான் யதார்த்தம்.
  சில தகவல்களை சரியாக தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

  ReplyDelete
 5. //அனைத்துமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட முறையில் நினைத்தது போலவே நடக்கிறது. இலங்கை மிக வேகமாக அழிவை நோக்கி முன்னேறுகிறது//
  இந்தியாவும் 'றோ'வும் எதிர்பார்ப்பதும் அது தான்.

  ReplyDelete
 6. ஈழபாரதி: ராணுவம் ஒரு பாதுகாப்பா? விடுதலைப்புலிகள் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொன்னதே போதாதா? ஆயுதம் ஏந்தாத ஓர் அமைப்பு, கட்சி அல்லது குழு தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்வதற்கும் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் புரிந்ததுதானே?

  தமிழர் பகுதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்குகள் பதிவாயின, யாருக்குப் பதிவாயின என்று இதுவரையில் கவனிக்காதவர்களுக்காக இங்கே:

  மாவட்டம்: யாழ்ப்பாணம்
  மொத்த வாக்குகள்: 701,938
  பதிவான வாக்குகள்: 8,524
  ரணில்: 5,523
  மஹிந்தா: 1,967

  மாவட்டம்: வன்னி
  மொத்த வாக்குகள்: 250,386
  பதிவான வாக்குகள்: 85,874
  ரணில்: 65,798
  மஹிந்தா: 17,197

  மாவட்டம்: திரிகோணமலை
  மொத்த வாக்குகள்: 238,755
  பதிவான வாக்குகள்: 152,428
  ரணில்: 92,197
  மஹிந்தா: 55,680

  மாவட்டம்: மட்டக்கிளப்பு
  மொத்த வாக்குகள்: 318,728
  பதிவான வாக்குகள்: 154,615
  ரணில்: 121,514
  மஹிந்தா: 28,836

  தமிழர் பகுதிகள் அனைத்திலும் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் பகிஷ்கரிக்கவில்லை - யாழ்ப்பாணத்தைத் தவிர.

  இந்தப் பகுதிகளில் விழுந்த வாக்குகள் அனைத்தும் முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாக்குகள் என்று சொல்வீர்களா?

  நடராஜ்: பிரபாகரன் தன் மாவீரர் தினப் பேச்சில் ரணில், சந்திரிகா இருவருமே தமிழர்களை ஏமாற்றினர் என்பதாகத்தான் சொல்கிறார். மஹிந்தாவுக்கும் தமக்கும் பெருத்த இடைவெளி என்கிறார். ஆக யார் ஜெயித்தாலும் அதனால் தனக்கும் புலிகளுக்கும் உபயோகமில்லை என்பது அவர் கருத்து.

  ஆனால் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கருத்து சற்றே வேறு என்பதாக எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 7. நடராஜ் உங்களுக்கான விளக்கம் இங்கு கிடைக்கும் என நான் நினைக்கிறேன், மகிந்தாவைகாட்டிலும் ரனில் பரவாய் இல்லைதான்,தமிழர்களை வாக்களிக்கசொல்லி இருந்தால் ரணிலுக்குத்தான் வாக்களித்து இருப்பார்கள், ஆனால் ஏன் வாக்களிக்க வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது, பாலசிங்கத்தின் உரையிலும் இது விளக்கப்பட்டிருக்கிறது, நேரே நின்று தாக்கும் எதிரியை விட நட்புகரம் நீட்டி தாக்கும் எதிரி ஆபத்தானவன்.

  பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.

  ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.

  வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.

  குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.

  ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.

  இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.

  வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.

  அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.

  பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.

  கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.

  ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.

  விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.

  ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.

  'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.

  அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.

  தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.

  வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.

  (இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)

  நன்றி: Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy

  தமிழில்: திருமகள் (ரஷ்யா)

  ReplyDelete
 8. பத்ரி: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்தே இந்த இருபது வருடங்களில் எங்கள் வீட்டவர் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்களை, ஏதாவது செய்வார் என்று சொல்லிச்சொல்லி தேர்ந்தெடுத்ததைப் பார்த்திருக்கிறேன். எழுபதுகளில் ஜே.ஆரென்றால், எண்பதுகளிலும் தொண்ணூகளிலும் எதிர்கட்சிகளில் இருப்பவர்களை நம்பி நம்பி மோசம் போனோம். பாலசிங்கத்தின் உரையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே!

  வெளியே சமாதானம் பேசிக்கொண்டும் சர்வதேச நாடுகளுக்கு சினேக முகத்தை நாகரீகக் கனவானாகக் காட்டிக்கொண்டு உள்ளே கழுத்தறுப்பவர்களை நம்ப முடியாது என்பதைக் காலம் கடந்தாவது நம்மவர்கள் உணர்ந்து அதற்கேற்றபடி நடந்துகொண்டிருக்கிறார்கள். சர்வதேசப் பத்திரிகைகளில் பிரபாகரனின் உரையைப்பற்றி

  //But the speech was less hawkish than some had expected, and the rebel leader, Velupillai Prabhakaran, said the rebels would first wait and see how the country's new president would approach the peace process.//

  http://www.nytimes.com/2005/11/28/international/asia/28lanka.html

  இப்படிச் சொல்கிறார்கள்.

  சந்திரிகாவின் அம்மாவின் காலத்திலிருந்தே உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடப்பது நடந்து வருகிறது. அதற்கு முன்பிருந்தேகூட, ஆனால் சிறிமாவோ காலத்தில் இருந்து என்றுதான் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். சிறீமாவோ, ஜே.ஆர்., பிரேமதாசா, ரணில், சந்திரிகா என்று ஒரு சுழற்சி சுழன்று வந்திருக்கிறோம். மறுபடியும் அதில்போய் சிக்கிக் கொள்ளாமல் வெளிப்படையாக யாரும் வெளிப்பூச்சுப் பூசிமெழுகாமல் என்ன நடக்கிறது என்பதைக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம். பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று சொல்லி அதில் கலந்துகொண்டவர்களுக்கு நடப்பது என்னவென்று தெரியாதா என்ன? எல்லாம் சந்தர்ப்ப வாதம்.

  ஏன் உங்களின் சொந்த அனுபவத்திலேயே ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அவதியுற்ற மக்களுக்கு உதவக்கூட அனுமதிக்கவில்லையே! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி க்ளிண்டனிடம் TRO கொடுத்த கடிதம் பற்றி இங்கே வாசியுங்கள்.

  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16438

  என்னைவிட அழகாக தமிழ்சசி எழுதி விளங்கப்படுத்தி இருக்கிறார்!

  http://thamizhsasi.blogspot.com/2005/11/blog-post.html

  இன்னும் நிறைய எழுதலாம்..

  ஆனால், பல பதிவுகளை ஆழமாகச் சிந்தித்து எழுதியிருக்கும் நீங்கள், ஏதோ ஒன்றுமே புரியாதவர்போல இந்தப் பதிவை எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை. விளங்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

  -மதி

  ReplyDelete
 9. மதி: இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்திருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலையிடல், மிரட்டல் இருந்திருக்காவிட்டால் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்திருப்பார்கள்.

  1. மஹிந்தா கூட்டாட்சி முறையல்லாத ஒற்றையாட்சி முறையின் கீழாக இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு ஒன்று கிட்டும் என்று சொல்கிறார். ஆனால் விடுதலைப் புலிகள் அதனை ஏற்கத் தயாராக இல்லை. சிங்கள வலதுசாரியினரைத் தவிர வேறு யாருமே இதனை ஏற்கத் தயாராக இல்லை. எனவே இந்தத் தீர்வு நிகழப்போவதில்லை.

  2. கூட்டாட்சி முறை (fedaralism) வழியாக ஒரு தீர்வு கிடைக்க வழி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் இதனை நம்புகிறார்களோ இல்லையோ, சில பேச்சுவார்த்தைகளில் இது சம்பந்தமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு இதனை ஏற்றிருப்பவர் ரணில் விக்ரமசிங்கா.

  ஆனால் மாவீரர் தினப் பேச்சில் ரணில் மீது நம்பிக்கையில்லை என்கிறார் பிரபாகரன். அது அவர் கருத்தாக இருக்கலாம்.

  3. விடுதலைப் புலிகள் தமது பகுதிகளை சுயாட்சி அந்தஸ்துள்ள தமிழீழம் எனும் தனி நாடாக அறிவிக்கலாம். இது நிச்சயமாக போர் மீளுவதற்கான வழி. ஒருவேளை இதுவே கடைசித் தீர்வாக இருக்கலாம். ஆனால் கூட்டாட்சி முறையிலான தீர்வுக்கு மற்றுமொரு வாய்ப்பைத் தராமல் போரை நோக்கிச் செல்வது, இதனால் பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு நியாயமாக இல்லை.

  ரணில் பிரதமராக இருந்தபோது பல விஷயங்களைச் செய்யமுடியாத நிலையில் இருந்தார். ஜனாதிபதி ஆகியிருந்தால் ஒருவேளை பல விஷயங்களைச் செய்திருக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

  அது எனக்கு வருத்தமே.

  ===

  மற்றபடி நான் எப்பொழுதும் எழுதுவதைத்தான் எழுதுகிறேன். பிரருக்குப் பிடித்திருந்தால் கொண்டாடுவார்கள், பிடிக்காவிட்டால் திட்டுவார்கள். அவ்வளவே.

  ReplyDelete
 10. From the economist article quoted in Tamil Sasi's blog:

  ---
  Third, there was, in effect, a Tiger boycott, although the group said people were free to vote if they wanted. Such is the Tigers’ record of brutality and vengeance that even a hint of disapproval may carry a chilling threat.
  ---

  This is the reality. To argue otherwise is disingenuous.

  ReplyDelete
 11. பத்ரி, இலங்கை தேர்தல் தொடர்பான உங்கள் பார்வை மிகமிக போதாமை நிறைந்ததாக உணர்கிறேன்.

  பேரா. சி. சிவசேகரத்தின் இந்த கட்டுரையை உங்க பார்வைக்கு தருகிறேன்.

  http://padippathivuhal.blogspot.com/2005/12/blog-post.html

  ReplyDelete
 12. எழுத்துத் துறையில் உள்ளவர்களின் ஆக்கங்கள் அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும். தெரியாததை தெரிந்து எழுத வேண்டும். இல்லையெனில் தெரிந்தவர்கள் எழுதுவதை ஆய்வுசெய்யும் மனப்பக்குவம் வேண்டும். சந்தியில் நின்று சாத்திரம் சொல்வது போன்று எதை வைத்து ஐயா ஆருடம் சொல்கிறீர்? பட்டது நாங்கள். வேதனை எங்களுக்கு. உமக்கு என்ன தெரியும் எமது நிலைப் பற்றி?

  உமக்கிருக்கும் தகுதியின் அடிப்படையில் நீர் சந்தியில் நின்று கிளி ஜோசியம் பார்ப்பீரானால் முன்னுக்கு வரும் வாய்ப்புள்ளது.

  ReplyDelete
 13. இலங்கை நிலவரம் என்ன தெரியும் உமக்கு? சிங்களவனால் எத்தனை இந்திய தமிழர்களின் சங்கு அருக்கப்பட்டது என்றாவது தெரியுமா உமக்கு கொழும்பில்? தற்போதும் கொழும்பில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுப் பாரும் ஓரளவேணும் அறிந்துக்கொள்ளலாம்.

  ஆயிரமாயிரம் தமிழர்கள் புலத்தில் முழங்குவது மிறட்டலினாலா?

  கழுத்தில் சைனட் கட்டியவன் சாவுக்கு பயந்தவன் அல்ல. நாம் மானம் உள்ள தமிழர்கள்.

  எதைவைத்து சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர் என்று புரியவில்லை. உமது தாய் ஏதும் ராஜபக்சே வீட்டுபக்கம் போனாளா? என்று கேட்டுப்பாரும்.

  இரத்த உறவுகளின் கோளாறாகவும் இருக்கலாம்.

  ReplyDelete
 14. தலைக் கால் புரியாமல் 'தலைவா' என்று தீக்குளிக்கும் பித்தர்கள் வாழும் தேசமல்ல தமிழீழம்.

  எம் நிலையை நாமாகவே நன்குணர்ந்து, எமது தலமையின் வழிநடத்தலை மிக நுட்பமாக ஆய்வு செய்து, எமக்கான ஒரே வழிகாட்டலாகவே நாம் எமது தலமையை ஏற்றுள்ளோம். புலத்தில் வாழும் நாங்கள் அச்சுறுத்தலினால் பேசவில்லை.

  அஞ்சிவாழ்பவன் ஈழத்தமிழனும் அல்ல.
  "தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்
  உயிர் வாழாமையும் மானமெனப்படும்."

  தன்மானம் காக்கவே களமிறங்கி வீரர்கள் வீழ்கின்றனர். மானமிழந்து வாழ்வதற்கல்ல.

  எமது தலமையின் சாதாரன மனித மூலைகளால் உணரமுடியாது.

  காலம் கணியும் போது அதன் செயல்பாடுகள் உணர்த்தும்.

  ReplyDelete