Sunday, November 27, 2005

Political Discourse in Tamil Nadu

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் கூட 'வளர்ச்சி' பற்றி மக்கள் சிந்திக்கும் நேரம் வந்திருக்கும்போது தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக மக்களுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து வெட்டிப்பேச்சு பேசுவதில் சிறந்து விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.

அஇஅதிமுக, திமுக இரண்டும் தமிழ்நாட்டை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வோம் என்று இதுவரையில் நமக்குச் சொல்லவில்லை. தற்போது நடக்கும் எதிர்பாராத இயற்கை அழிவுகளை அரசியலாக்கி வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதில் மட்டுமே திமுக கவனத்தைச் செலுத்துகிறது. அஇஅதிமுகவோ இந்த அழிவுகளே ஒரு வரப்பிரசாதம் போல நடுவண் அரசிடம் 3,000-4,000 கோடி ரூபாய்களை வாங்கி அதைப் பொதுமக்களிடம் கொடுத்து 'நான்தான் உங்கள் காப்பாளன்' என்று காட்டிக்கொள்ள விரும்புகிறது.

இந்த அரசியல் கூடத் தேவலாம் என்பது போலக் கூத்தடிக்கிறார்கள் பாமக, திருமாவளவன் கோஷ்டியினர். ராமதாஸ் கூட அவ்வளவாக திருவாய் மலர்வதில்லை. திருமாவளவன் நிகழ்த்தும் கூத்து தாங்க முடிவதில்லை. தலித்துகளுக்குச் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கும்பட்சத்தில் ஒரு 'சண்டியராக', தமிழ் பண்பாட்டுக் காவலராகத் தாண்டவமாடும் காட்சி சகிக்கவில்லை.

இன்று தமிழகத்தில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவை - கிராமப்புறக் கல்வி, வரும் வருடங்களில் தண்ணீர்ப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது, வரும் வருடங்களில் விவசாயத்தை எப்படிக் கவனிப்பது, ஏழைமையை எப்படி குறைப்பது, தமிழகம் முழுவதுமே - முக்கியமாகத் தென் மாவட்டங்களில் - தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை எப்படி நிறுத்துவது, பெருக்கும் சென்னை ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த சாடிலைட் நகரங்களை உருவாக்குவது, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களை தொழில்கள் உருவாவதற்கு மாற்று நகரங்களாக முன்வைப்பது, குற்றங்களைக் குறைப்பது, அடிப்படைக் கட்டுமானங்களைப் படிப்படியாக அதிகரிப்பது, அண்டை மாநிலங்களோடு சுமுக உறவை வளர்ப்பது - இப்படி எத்தனையோ இருக்க, இது எதைப்பற்றியுமே யாருமே பேசுவதில்லை.

ஒருவிதத்தில் பாமகவாவது பொறியியல்-மருத்துவக் கல்வி பற்றி ஒரு குழுவை அமைத்து விவாதம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிசீலனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். (ஆனால் ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அதில் இந்தப் பரிசீலனைகளை வைத்தால் பொதுமக்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். செய்யவில்லை.) பிற கட்சிகள் இதுபோன்று எதையும் செய்யவில்லை.

தமிழகத்தின் அரசியல் வருங்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது.

14 comments:

 1. I think this is the bane of democracy - politicians and media talking about matters of little relevance to people's welfare. It is true not just in TN but the world over, IMHO. One could always say that the politicians and media in USA is wasting time talking about abortion and gay marriage instead of social security and medicare.

  Politicians talk about and media write about the matters that the people want to talk about and read about - not what people want things to be done about. This congruence and incongruence will be perpetual, I am afraid.

  ReplyDelete
 2. தற்போதைய சூழலில் மக்களுக்கு முக்கியமான பிரச்சனைகளோ, அவற்றின் தீர்வுகளோ ஏந்த கட்சிக்கும் அரசியல் வெற்றியை பெற்றுத்தராது என்பது கசப்பான உண்மை. ஏனெனில் மக்கள் அவற்றை பெரிது படுத்துவதில்லை. படித்தவர்கள் என அறியப் படுபவர்கள் கூட பெரும்பாலும் "குஷ்பு" போன்ற மசாலா அதிகமான பிரச்சனைகளைத்தான் அலசி வருகிறார்கள்.

  முதலில் மக்கள்தான் மாறவேண்டும். அப்புறம் தலைவர்கள் தானே மாறுவார்கள்.

  ReplyDelete
 3. பத்ரி

  நாற்காலியை தக்கவைத்துக் கொள்வது பெரும் வித்தையாய் இருக்கையில் மக்களின் அத்யாவசிய தேவைகள் தவிர்க்க இயலாது பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

  அவர்களைச் சொல்லி பிரயோசனமில்லை.

  நம்மிடையே தெளிந்த சிந்தனை இல்லை.
  அறியாமையிலிருந்து வெளிவருவதே நமக்கு பெரும் பாடாய் இருக்கிறது.
  மக்களுக்கு இந்த பயம் அவசியம்தான்.

  எதற்கும் நீங்கள் தேர்தலுக்கு முன்பு கூட ஜாக்கிரதையாய் இருங்கள்.
  ஆட்டோ,அடியாள்,அருவா கலாச்சாரம் இன்னும் ஒடுக்கப்படவில்லை:-)

  ReplyDelete
 4. அடுத்து கலைஞர் புண்ணியம் கட்டிக் கொண்டார்.

  ReplyDelete
 5. பத்ரி,
  அரசியலும் பத்திரிக்கைகளும் மக்களை உணர்வுபூர்வமாக அணுகுவதிலேயே இருக்கிறார்கள்.அதுவே அவர்கள் உள்ள தொழிலில் சாணக்யத்தனமாகவும் , சமார்த்தியமானதாகவும் கருதப்படுகிறது. பத்ரிக்கைகளுக்கு விற்பனைமூலம் வரும் பணமும் , அரசியல்வாதிகளுக்கு பதவிமூலம் வரும் செல்வாக்கும் , பணமும் முக்கியம்.

  மக்களும் இவர்கள் மகுடிக்கு மயங்கிய பாம்பாகவே இருக்கிறார்கள்.

  பணம் பதவியில் ஆசை இல்லதா அதே சமயம் மக்களைக் கவரும் ஆக்கபூர்வமான தலைவன் தேவை. கழகங்களும், காந்த்களும், கட்சிகளும் வெகுதூரத்தில் பதவிக்கணக்குப் போட்டுக்கொண்டிருக்கின்றன.

  உங்களைப்போன்று பலகோடிப்பேர் இவ்வாறு சிந்திக்கிறோம். யார்கண்டது ஒரு நாள் நம்மில் இருந்தே ஒரு நல்ல தலைவன் உருவாகலாம். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. சிரிக்காதீர்கள்.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. //யார்கண்டது ஒரு நாள் நம்மில் இருந்தே ஒரு நல்ல தலைவன் உருவாகலாம். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. சிரிக்காதீர்கள்.// கல்வெட்டு., அப்பிடியே., என் பேர ஒரு தடவ படிங்க... அதுதான் நான் சொல்ல வற்ரது.

  ReplyDelete
 8. ஜேகே: மக்கள் மீது தவறு என்று நான் சொல்லமாட்டேன். பொதுமக்கள் விவாதங்களில் ஈடுபடும் விதமாக மேடைகள் ஏதும் இல்லை. பொதுஜன ஊடகங்கள் பொதுமக்களுக்கு என்று பக்கங்களை ஒதுக்குவதில்லை.

  வலைப்பதிவுகள் பிற நாடுகளில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைப் போல தமிழகத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் இல்லாத வெகுஜன அமைப்புகள் - சிவில் சொசைட்டி அமைப்புகள் - பல தோன்றவேண்டும். அவை ஆட்சியாளர்களையும் ஆட்சிக்கு ஆசைப்படுபவர்களையும் கேள்விகள் கேட்டுத் துளைக்க வேண்டும்.

  வெட்டிக்கதை பேசுபவர்கள் அப்பொழுதாவது மாறலாம்.

  ReplyDelete
 9. ஸ்ரீகாந்த்: பொதுமக்கள் எதைப் பேச விரும்புகிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

  பொதுமக்கள் ஆணித்தரமாக தாங்கள் இதைப்பற்றிய ஒரு விவாதத்தைக் கேட்கிறோம் என்று சொல்வதற்கான மேடைகள் இதுநாள்வரை இல்லை. அதனால் அரசியல்வாதிகள் தம்மிஷ்டப்படி எதையோ பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதற்கும் பொதுமக்கள் விருப்பத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

  ஆனால் பொதுமக்கள் - பல்வேறு கிராமப்புற, நகர்ப்புற அமைப்புகள் மூலமாக தாங்கள் எதைப்பற்றிப் பேச விரும்புகிறோம், ஏன் என்பதை முன்வைக்கும்போது நிலைமை மாறித்தான் ஆகவேண்டும்.

  அமெரிக்காவில்கூட இதே நிலைதான் வெகு சீக்கிரம் ஏற்படும்.

  ReplyDelete
 10. மதுமிதா: நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள மக்களது தேவைகளை முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் எனும்போது வேறுவழியின்று அரசியல்வாதிகளும் மக்களது தேவைகளைப் பற்றிப் பேசவேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் புத்திசாலிகள்.

  கல்வெட்டு: பதவியில் ஆசை வைப்பவர்கள் மேல் தவறில்லை. அதற்கான காரணங்கள் வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது.

  நாம் இனி தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பொதுமக்களையும் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க வைக்க வேண்டும்.

  ReplyDelete
 11. Dear Badri,

  I think we get what we deserve.

  நம் தமிழக மக்கள் கடந்த இருபதாண்டு காலத்தில் என்றைக்காவது சாதித்தவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்களா? அல்லது அவர்களிடமிருந்து இது வேண்டும், அது வேண்டும் என்ற கோரிக்கையாவது எழுந்திருக்கிறதா? அடிப்படையில் பார்க்கப்போனால் படிப்பறிவின்மைதான் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  ReplyDelete
 12. Hi Badri,

  Thats a very valid point. Creation of forums or institutions for public discussion on issues of importance is a very important thing for any functioning democracy. I would say that forums like public meetings of political parties do serve this purpose a little bit. But inherently it has its own limitations.


  I also feel that issues like current Kushbu episode and reaction of the caste based parties like Dalit panthers or PMK cannot be viewed in isolation(ofcourse this particularly issue is too murky in the sense it looks more like a recation to the earlier episode of Thankarbachan and one doesnt really understand who is settling scores with him). But what am trying to say is that the understandable concern of such caste based parties against film personalities(in general personality based politics) who try to hijack the politics based on representation(which forms the core of their existence) with their popularity(so it may not be the isue per se but could be a larger picture of the things)

  I am not even remotely supporting it all that am trying to say is one has to keep that perspective in mind before ridiculing their actions which at the surface level might look insane.

  Best regards,
  Magesh

  ReplyDelete
 13. அப்படிப்போடு,
  :-))))


  பத்ரி,
  //நாம் இனி தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பொதுமக்களையும் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க வைக்க வேண்டும். //

  ஆக்கபூர்வமான பொதுமக்களின் சந்திப்பு,கருத்தாடல் போன்றவை கிராம பஞ்சாயத்து, வார்டு அளவில் மாதம் ஒருமுறை நடக்க வேண்டும். இதை அப்பகுதி இளைஞர்கள் கட்சி சார்பில்லாமல் நடத்த வேண்டும்.

  டி.பி.ஆர். ஜோசஃப்,

  //I think we get what we deserve. //
  உண்மைதான்.

  //நம் தமிழக மக்கள் கடந்த இருபதாண்டு காலத்தில் என்றைக்காவது சாதித்தவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்களா? //

  காமராஜர் தோற்றது தமிழன் வெட்கப்படவேண்டிய செயல். கழகம் கண்னை மறைத்து இருந்தது என்றே எண்ணுகிறேன்.

  //அல்லது அவர்களிடமிருந்து இது வேண்டும், அது வேண்டும் என்ற கோரிக்கையாவது எழுந்திருக்கிறதா?//

  ஆக்கபூர்வமாக இல்லை.

  //அடிப்படையில் பார்க்கப்போனால் படிப்பறிவின்மைதான் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது. //

  இதில் நான் உங்களிடம் 1000000000...மடங்கு வேறுபடுகிறேன். படிப்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.சோம்பேறித்தனமும் சுயநலமும் எது எப்படிப்போனால் என்ன, எனது வீட்டுக் குப்பையை தெருவில் போட்டாகிவிட்டது. எனது வீடு நன்றாக இருக்கிறது. என்ற மனப்பான்மை மாறவேண்டும்.

  ReplyDelete
 14. அடிப்படையில் பார்க்கப்போனால் படிப்பறிவின்மைதான் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது. //

  தமிழ்நாட்டைப்பொறுத்தவரை இது உண்மையில்லை .. அது ஏன் என்பதும் புரியாத புதிர்தான் . படிப்பு சதவீதம் குறைந்து இருந்தபோது காமராஜ் போன்றோரை தேர்ந்தெடுத்த தமிழகம் படிப்பறிவு கூடக்கூட கருணாநிதி, எம்.ஜ்.ஆர்.. என ஜெ. வரைக்கும் படிப்படியாக இறங்கியது ஏன் ? படிப்பறிவு கூடிக்கொண்டேயிருந்தும், இன்னும் வருங்காலத்தை ரஜினியிலும் விஜயகாந்திலும் தேடுவது ஏன்?

  ReplyDelete