22 நவம்பர் 2005
அன்புள்ள நிதீஷ் குமார்,
பீஹாரின் அடுத்த முதல்வராகப் போகிறீர்கள். வாழ்த்துகள்.
உங்களது மாநிலம்தான் இந்தியாவிலேயே படு மோசமானது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதற்கு யார் காரணம் என்று இப்பொழுது தோண்டுவது முக்கியமல்ல.
உங்கள் மாநிலத்தில் படிப்பறிவு (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) வெறும் 47% தான்! இந்தியாவிலேயே உங்கள் மாநிலத்தில்தான் படிப்பறிவு இவ்வளவு கீழாக உள்ளது. இன்னமும் மோசமாக, ஏழு மாவட்டங்களில் படிப்பறிவு 35% அளவே உள்ளது! மாவட்டம் மாவட்டமாக பள்ளிக்கூடங்களைக் கட்டி இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்யுங்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் நடப்பது போல இலவச பாடப் புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதனால் நாளைக்கு உங்களுக்கு ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பீஹார் கொஞ்சமாவது உருப்படியாகலாம்.
உங்கள் மாநிலத்தில் மொத்தமாக 83 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 881.3 பேர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் உங்கள் மாநிலத்தை விட மக்கள் தொகை அதிகம் (166.2 மில்லியன்). ஆனால் அங்கும் கூட இடவசதிகளும் அதிகம். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 689.6 பேர்கள் மட்டும்தான். மேற்கு வங்கம் ஓரிடத்தில்தான் உங்கள் மாநிலத்தைவிட மக்கள் தொகை நெருக்கம் அதிகம் (சதுர கிலோமீட்டருக்கு 903.5 பேர்கள்). எனவே குடிநீர் வசதி, அடிப்படைச் சுகாதார வசதி ஆகிய அனைத்தையும் வழங்க மிகவும் சிரமப்படுவீர்கள். ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும். கடந்த 30 வருடங்களாக எந்த வளர்ச்சியையுமே காணாத மாநிலம் உங்களுடையது.
கடந்த பத்தாண்டுகளில் எந்த வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறீர்கள்! சில குட்டி வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் ஆகியவை தவிர்த்துப் பார்த்தால் 1991-2001 சமயத்தில் உங்கள் மாநிலத்தின் தொகை 28.4% அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 11.2%; கேரளாவின் மக்கள் தொகை வளர்ச்சி 9.4%. இதைக் கட்டுப்படுத்தினால்தான் உங்களால் ஓரளவுக்காவது அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும். குடும்பத்துக்கு ஒரு குழந்தை, தவறினால் இரண்டு (கிராமப்புறங்களில்) என்று கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள். இதற்கு பெண்களுக்கு அடிப்படைக் கல்வி அவசியம். எனவே முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் மணமான பெண்களுக்குக் கல்வி புகட்டுங்கள்.
உங்கள் மாநிலத்தில் சாலை வசதிகள் வெகு குறைவு. முக்கியமான சில ஊர்களைத் தவிர பிற இடங்களில் சரியான மருத்துவமனை வசதி இல்லை. NHAI சாலைகள் அமைக்கும் பணி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சரியாக நடந்தாலும் உங்கள் மாநிலத்தில் மட்டும்தான் படு மோசமாக உள்ளது. இதில் நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடித்த சத்யேந்திர துபேயை மாஃபியாவினர் கொன்றுவிட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் அனைத்தும் அவசியம். அதற்கென மாநில அளவில் நிதி ஒதுக்கி, முடிந்த அளவு ஊழலைக் குறைத்து, சாலைகளைப் போடுங்கள்.
உங்கள் மாநிலத்தில் மூன்று ஆயுதம் தாங்கிய கும்பல்கள் உள்ளன. அவை அமைதியைக் குலைக்கின்றன. பெருநிலக்காரர்களின் சொந்தக் கூலிப்படையான ரன்வீர் சேனா, நக்சலைட்டுகளான CPI (ML), இது தவிர பல்வேறு விதமான லோக்கல் மாஃபியாக்கள். சென்ற வாரத்தில்தான் CPI (ML) தீவிரவாதிகள் ஜெயிலில் புகுந்து தம் தோழர்களை விடுவித்ததோடு மட்டுமல்லாமல் தம் எதிரிகளான ரன்வீர் சேனா ஆசாமிகளைக் கடத்திக்கொண்டு போனார்கள். இரு கோஷ்டிகளும் பழிக்குப் பழி என்று குதிக்கிறார்கள். இவர்களை எப்படி அடக்கப்போகிறீர்கள்? இதில் முதலில் அடக்கவேண்டியது ரன்வீர் சேனாவைத்தான் என்று நான் நினைக்கிறேன். அதனால் நக்சலைட்டுகளை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களது கோபத்துக்கு அடிப்படைக் காரணங்கள் உண்டு. சிறிதாவது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அவர்களுக்கு ஆதரவு குறையும்.
மாஃபியாக்களை ஒழிப்பது சுலபமல்ல. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தக் கும்பலைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளைக் கடத்திப் பணம் பறிக்கும் கோஷ்டிகளைக் கண்ட இடத்திலே சுட உத்தரவு கொடுங்கள்.
இந்தியாவிலே உள்ள பெரிய மாநிலங்களில் உங்கள் மாநிலத்தில்தான் பொறியியல் கல்லூரிகள் மிகக்குறைவு. மொத்தமாகவே 11 பொறியியல் கல்லூரிகள்தான் உள்ளன! அதில் ஐந்து பாட்னாவில் மட்டும். 11-ல் ஒன்று பால்வளத்துறை பற்றியது. 83 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உங்கள் மாநிலத்துக்கு இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க உங்கள் மாநில அரசுக்கு நிதி கையிருப்பு போதாது. எனவே தனியார் கல்லூரிகளை ஊக்குவியுங்கள். அத்துடன் அடுத்த ஐந்து வருடங்களில் வெளி மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்கள்.
உங்கள் மாநிலத்தில் மாட்டுத்தீவனத்தில் ஊழல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிற மாநிலங்களில் கணினி, இணையம் என்று என்னென்னவோ நடந்துவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு சிற்றூரிலும்கூட இன்று இணைய வசதி உள்ளது. மொபைல் தொலைபேசி கேட்போருக்கெல்லாம் கிடைக்கிறது. உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆனால் இதையெல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.
உங்கள் மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மிகக்குறைவான தனிநபர் வருமானம் உள்ளது. இந்தியாவின் சராசரி வருமானத்தில் பாதிக்குக் குறைவாகவே பீஹாரில் உள்ள மக்களுக்குக் கிடைக்கிறது. இதனை ஒரு வருடத்திலோ, ஐந்து வருடத்திலோ சரிக்கட்ட முடியாது. இருபது வருடங்களாவது பிடிக்கும். உங்கள் மாநிலத்தில் நிறைய தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் அதில் வேலை செய்ய ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். தனியார் யாரும் வந்து தொழிற்சாலைகளை நிறுவ மாட்டார்கள். எனவே கல்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்றும் சொந்தக்காரர்களுக்கு என்று சொத்து சேர்ப்பதில் ஈடுபடாதவர் என்றும் இன்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். உங்களது பெற்றோர்கள், சகோதரர்கள் சாதாரண வீட்டில் வசிப்பதைக் காட்டினார்கள். நீங்கள் நடுவண் அரசில் ரயில்வே மந்திரியாக இருந்திருக்கிறீர்கள். அப்பொழுதே ஊழல் வழியில் சொத்து சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். செய்யவில்லை போல. உங்களது மந்திரி சபையில் இருக்கப்போகும் பிற மந்திரிகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஊழலை முடிந்தவரை குறைத்து பொதுமக்களுக்கு வசதிகள் கிடைக்குமாறு செய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் என் வாழ்த்துகள்.
இப்படிக்கு,
பத்ரி சேஷாத்ரி
மடல் மிக நன்று.
ReplyDeleteபுதிய அரசு மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. பீகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட், தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காட்டும் போது, கனிமங்களும், மற்ற இயற்கை வளங்களும் இருக்கிற பீகாரும் அதே போல முன்னேற்றம் காட்டலாம்.
offtrack.. since the comments are under moderation, please disable the word verification option, if u can do so....
பீகார் ல 'கூட' இப்படி ஒரு முடிவா?
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteநல்ல கடிதம். அப்படியே வெறும் "-" ஆக சொல்லாமல் அவர்கள் மாநிலத்தில் உள்ள IIT பயிற்சிக்கூடம் பற்றிச் சொல்லி அது போன்ற செயல்களை ஊக்குவிக்கச் சொல்லலாம்.
//எனவே கல்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.//
//திட்டத்தின் மூலம் மணமான பெண்களுக்குக் கல்வி புகட்டுங்கள்.//
நல்ல யோசனைகள்.
//மாவட்டம் மாவட்டமாக பள்ளிக்கூடங்களைக் கட்டி இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்யுங்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் நடப்பது போல இலவச பாடப் புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.//
இது போன்ற திட்டங்கள் பீகாரில் இல்லையா? ஆச்சர்யம்.
தமிழகத்தில் கல்வி மற்றும் மதிய உணவு வழங்கிய காமராஜர் நினைவுக்கு வருகிறார்.
சத்துணவில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அது ஒரு நல்ல திட்டம். பீகாருக்குத் தேவையான திட்டம்.
பலரின் உள்ளக்கிடக்கையை கடிதமாக வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள்; வாழ்த்துகள்.
ReplyDeleteஎம்.கே.
//மொத்தமாகவே 11 பொறியியல் கல்லூரிகள்தான் உள்ளன!//
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் இவ்வளவு மோசமாக இருக்குமென்று நினைக்கவில்லை!
நீங்க நிதிஷ் குமாருக்கு எழுதுனது அவருக்கு பயன் படுமோ என்னவோ ,எங்களுக்கு பீகாரின் நிலைமையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி!
ReplyDeleteநன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. கடிதத்தில் உங்களின் உள்ளார்ந்த அக்கறை தெரிகிறது.. எப்படியோ பீகாருக்கு விடிவுகாலம் பிறந்தால் சரிதான்..
ReplyDeleteபிரகாஷ்: word verification - எனக்கு spam வராமல் இருக்க:-) மாடரேஷனைக் கொண்டுவந்தவுடனேயே word verificationஐ எடுத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் மூன்று spam. அதனால் இன்னமும் சில நாள்களுக்காவது அதையும் வைத்திருக்கப் போகிறேன்.
ReplyDeleteகல்வெட்டு: இந்த IIT பயிற்சிக்கூடங்களின் பயன்கள் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. கல்வி பரவலாக இருக்க வேண்டும், அவ்வளவே. நுழைவுத் தேர்வுகளை 'உடைக்க' சொல்லிக்கொடுக்கும் பயிற்சிக்கூடங்களில் அதிகமாக நூறு பேர், இருநூறு பேர்தான் வருடத்துக்குப் பயன்பெற முடியும்.
சன்னாசி: ஆம்... பீஹார் படு மோசம். தில்லி, சென்னை, பெங்களூர், மும்பை - ஒவ்வொரு நகரிலும் பீஹார் மாநிலத்தில் உள்ளதை விட அதிகமான பொறியியல் இடங்கள் உள்ளன.
பத்ரி, முதலில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல், அரசோ, தனியாரோ கல்வி நிறுவனங்களைக் கொண்டு வரமுடியாது. போக்குவரத்தும், சாலைகளும் மிக மோசம். லல்லு/ராப்ரி தேவி ஆட்சியில் 2000 ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களுக்குப் போகாமலேயே சம்பளம் பெற்று வந்திருக்கிறார்கள் [ஆதாரம்: தெஹல்கா]அதில் ராப்ரிதேவிக்கும் "பங்கு" போயிருக்கிறது. முக்கியமான காரணம் அடிப்படை வசதிகள் இல்லை.
ReplyDeleteகம்யுனிஸ்ட்களின் பேட்டையான கொல்கத்தாவிலேயே புத்ததேவ் பட்டாச்சார்ய்யா அன்னிய மூதலீட்டினைக் கொண்டு வந்திருக்கிறார். அப்படியிருக்கையில் அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டு வந்து, கமிஷன் வாங்காமல் இருந்தால், கொஞ்சம் சாத்தியங்கள் இருக்கின்றன. கனிம வளங்கள் நிறைந்திருக்கும் மாநிலமானதால், கண்டிப்பாக மித்தலோ, போஸ்கோவோ முதலீடு செய்யும் வாய்ப்புகளதிகம்.
நாராயண்: ஆரம்பக் கல்வி, அடிப்படைச் சுகாதாரம் போன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது முதல் வேலை. இலவசப் புத்தகங்கள், மதிய உணவு போன்றவையும் இதில் அடங்கும்.
ReplyDeleteஅதற்கடுத்தது அடிப்படைக் கட்டுமானங்களான சாலைகள், தொலைபேசி, இணைய வசதிகளைச் செய்து கொடுப்பது.
அதன்பிறகு ஊழலை முடிந்தவரையில் குறைப்பது.
அதன்பின் சில தொழிற்சாலைகள் வரும்.
கனிமங்கள் தொடர்பாக இதுநாள் வரையில் ஜார்க்கண்டில் இருந்த வேலைகளைச் செய்வதற்கு வெளி மாநிலத்தவரே பெருவாரியாக வந்துள்ளனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிறு தொழில்கள்தான் பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்குகின்றன. ஒருசில பெருந்தொழில்களால் வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு அதிகமாகும் என்று தெரியவில்லை. அதுவும் வேல்யூ அடிஷன் இல்லாத கனிமச் சுரங்கங்கள் மட்டும் இருப்பதால்...
கனிமச் சுரங்கம் -> இரும்பு/எஃகு -> அவை சார்ந்த உற்பத்தித் தொழிற்சாலைகள் என்று மேலேற வேண்டும். இல்லாவிட்டால் பிரயோசனம் குறைவுதான்.
கல்வெட்டு: நீங்கள் காமராஜ் பற்றிச் சொன்னது முக்கியமானது. அவர் காலத்தில்தான் தமிழகத்தில் பல ஊர்களிலும் அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. மதிய உனவுத் திட்டத்துக்கென பணத்தை ஏற்படுத்தினார்.
ReplyDeleteஅதைப்போலவே எம்.ஜி.ஆர் செய்த இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று மதிய உணவுத் திட்டத்தை வெகுவாக விரிவாக்கியது. அடுத்தது தமிழகத்தில் ஒவ்வொரு சிறு நகரத்துக்கும் இடையேயான சாலைகளைப் போட்டது.
தொடர்ந்து கருணாநிதி அரசு காலத்தில்தான் தமிழகமெங்கும் தனியார் பஸ் உரிமங்கள் அதிகமாக வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
இப்படி அடுத்தடுத்து வந்த முதல்வர்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டாலும், அங்கும் இங்குமாக இமாலய ஊழல்கள் இருந்தாலும் பல நல்ல விஷயங்களைச் செய்து வந்துள்ளனர். இன்று தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மிகக் குறைந்த விலையில் பொதிகளை அனுப்ப தனியார் கூரியர் சேவைகள் பல அற்புதமாக இயங்குகின்றன. புத்தக விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் எனக்கு இதன் அருமை நன்கு புரியும்.
இந்த அளவுக்குத் தரமான சேவை இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் கிடையாது என்று அறிகிறேன். முக்கியமாக கர்நாடகா, ஆந்திராவிலேயே கிடையாது என்றால்... மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பீஹார் இங்கெல்லாம் ஒன்றுமே இல்லை!
இந்தியாவில் சாலை இணைப்பில் தமிழகம்தான் நிச்சயமாக முதலிடத்தில் உள்ளது. (ஆனால் இன்னமும் சிறப்பாக வேண்டும்.)
முதலில் இந்த ஆட்சி மாற்றமே நல்லதொரு விசயம். எல்லாவற்றையுமே இவரிடமிருந்து எதிர்ப்பார்பது என்பது கொஞ்சம் அதிகம் போல தோன்றுகிறது. ஊழலை ஒழிப்பதில் வெற்றி பெறுவார் என்பது ஏற்க்கூடியதாக இருந்தாலும், கட்டமைப்புகளை ஒரே ஆட்சிக்காலத்துக்குள்
ReplyDelete(போதுமான அளவுக்கு)செய்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.
1, ஊழல் நிறுத்தம்/ஒழுப்பு
2. முதலீடுகள்
3. மூதலீட்டுக்கான கட்டமைப்பு வசதிகள்
4. பொது மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள்
இப்படித்தான் போக வேண்டும்.
பத்ரி
ReplyDeleteவணக்கம். நல்ல தரமான யோசனைகள்.
இதனை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழி பெயர்த்து அவருக்கு
அனுப்ப வாய்ப்பு இருக்கிறதா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
//கல்வெட்டு: இந்த IIT பயிற்சிக்கூடங்களின் பயன்கள் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. கல்வி பரவலாக இருக்க வேண்டும், அவ்வளவே. நுழைவுத் தேர்வுகளை 'உடைக்க' சொல்லிக்கொடுக்கும் பயிற்சிக்கூடங்களில் அதிகமாக நூறு பேர், இருநூறு பேர்தான் வருடத்துக்குப் பயன்பெற முடியும்.//
ReplyDeleteதுல்லியமாகச் சொல்லிவிட்டீர்கள். இது பீகாரிகளின் ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.டி. வெற்றிவிகிதத்தைப் பார்த்து சிலாகிக்கும் மாயைதெளிய உதவும். என் பார்வையில் 'கல்விப் பரவலாக்கம், சட்டம் ஒழுங்கு நிலைமை' இரண்டையும் முதனமைப்படுத்துவேன்.
வணக்கம்.
ReplyDeleteவழக்கம்போல ஒரு அருமையானா பல தகவலகள் கொண்ட நல்லதொரு பதிவு நன்றி.
பாதி படித்துக்க்கொண்டிருக்கும்போது... பத்ரி ஏன் இவ்ளோ மெனுக்க்கட்டு எழுதியிருக்கிறார், இதனால் என்ன பயான் என்ற சந்தேகம் வ்வந்தம் உண்மை. ஆனால் அதை இறுதிய்யில் வந்த இந்தா வரிகள் தீர்த்தது:
நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்றும் சொந்தக்காரர்களுக்கு என்று சொத்து சேர்ப்பதில் ஈடுபடாதவர் என்றும் இன்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். உங்களது பெற்றோர்கள், சகோதரர்கள் சாதாரண வீட்டில் வசிப்பதைக் காட்டினார்கள். நீங்கள் நடுவண் அரசில் ரயில்வே மந்திரியாக இருந்திருக்கிறீர்கள். அப்பொழுதே ஊழல் வழியில் சொத்து சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். செய்யவில்லை போல. உங்களது மந்திரி சபையில் இருக்கப்போகும் பிற மந்திரிகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஊழலை முடிந்தவரை குறைத்து பொதுமக்களுக்கு வசதிகள் கிடைக்குமாறு செய்யுங்கள்.
அதனால் நானும், "நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
இதுபோல் ஒரு பதிவு தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கு ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று நினைத்தேன். தமிழ்நாட்டுக்கு சிலவற்றை பின்னூட்டத்தில் எழுதியிருக்கின்றீர்கள் நன்றி. நேரம்கிடைக்கும்போது விரிவாக எழுதுங்கள்.
மேலும், சிவா சொல்லியிருப்பது நல்ல யோசனை, கண்டிப்பாக செய்யுங்கள்.
The first hero in the Bihar elections is Mr.K.J. Rao, who ensured that a fair election took place. Please read about him also:
ReplyDeletehttp://iecolumnists.expressindia.com/full_column.php?content_id=82285
ரம்யா: கே.ஜே.ராவை பீஹார் மக்கள் தெரிந்து கொள்ளுமுன் எங்களுக்கு அதிகமாகவே தெரிந்தது. காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலின்களின் போது ராவ்தான் கண்காணிப்பாளராக இருந்தார். கட்சிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.
ReplyDeleteஎங்கெல்லாம் ஒரு கட்சி பிரச்னை செய்கிறது என்று புகார் வருகிறதோ உடனே அங்கு சென்று அந்தப் பிரச்னையை நிவர்த்தி செய்வார். விதிகளுக்குப் புறம்பான தட்டிகள், கொடிகள், சின்னங்கள் அனைத்தையும் பிய்த்து எறிந்தார்.
காசு லஞ்சம் கொடுக்கப்படுவதாகப் புகார் வரும் இடங்களுக்குக் காவல்துறையுடன் விரைந்து சென்று தவறு செய்பவர்களைத் துரத்தினார். (அவர்கள் மீண்டும் வந்து லஞ்சம் கொடுத்திருக்கலாம்... ஆனால் அவர்கள் செயலைக் கடினமாக்கினார்.)
கடுமையான உத்தரவுகளைப் போட்டார். அமைச்சர்கள், கட்சி சார்பான வெளியார்கள் யாரும் இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நாளுக்கு முதல் நாளிலிருந்தே இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். மீறிய பாமகவின் மூர்த்தியும் அதிமுகவின் பாலகங்காவும் கைது செய்யப்பட்டனர். கள்ள ஓட்டுக்களைத் தடுக்க வெளியார் யாரும் கல்யாண மண்டபங்கள், விடுதிகள் ஆகியவற்றில் தங்கக் கூடாது என்ற தடாலடி உத்தரவையும் விதித்தார்.
ஆக, அப்பொழுதே இவர்தான் பீஹார் தேர்தலி நடத்த சரியான ஆள் என்று எங்களுக்குத் தெரிந்துபோனது!
தமிழகம் கொஞ்சம் வளர்ந்த கதை, சுருக்கமாக:
ReplyDelete50 கள்: கல்வி (காங்கிரஸ்)
60கள்: கல்வி, நீர்ப்பாசன திட்டங்கள், மகளிர் நலன் - (காங்கிரஸ்)
70 கள்: போக்குவரத்து அரசுடமை (அப்போது தேவையாக இருந்தது - உலக வங்கி உதவியுடன் கிராமங்களுக்கு பஸ் விட்டு சாலை போட்டார்கள்), மகளிர் சுகாதாரம், உயர்பள்ளிவரை இலவசக்கல்வி,
குடும்ப கட்டுப்பாடு பரப்புரை தொழிற் பேட்டைகள், இட ஒதுக்கீடு - தி.மு.க
80 கள்: மதிய உணவு பரவலாக்கல்,தனியார் கல்லூரிகள்,போக்குவரத்து தனியார்மயமாக்கல், தொழில் ஊக்கம், இட ஒதுக்கீடு - அதிமுக, திமுக
90 கள்: தொழிற்கல்வி பரவலாக்கம், தொழில்துறை ஊக்குவிப்பு - அதிமுக, திமுக
முழு நாட்டுக்கும் இதேதான் வழி. பல வட மாநிலங்களுக்கு தம் இயற்கை வளங்களால் இதெல்லாம் எளிதும் கூட.
அருள்
அருள்: அருமையான தமிழக வரலாற்றுச் சுருக்கம். இந்த நாற்பது ஆண்டு கால வளர்ச்சியை பீஹார் போன்ற மாநிலங்கள் அடுத்த இருபதுக்குள் சுருக்க வேண்டியிருக்கும்.
ReplyDelete//குடும்ப கட்டுப்பாடு பரப்புரை தொழிற் பேட்டைகள், இட ஒதுக்கீடு - தி.மு.க //
ReplyDeleteபரப்புரை = campaign?
அருமை
இந்தியாவிலேயே உங்கள் மாநிலத்தில்தான் படிப்பறிவு இவ்வளவு கீழாக உள்ளது. //
ReplyDeleteஅதனாலதான பத்ரி லல்லுவும், அவருக்குப் பிறகு ராப்ரியும் தொடர்ந்து பதினஞ்சி வருஷமா அலங்கோல ஆட்சி செய்ய முடிஞ்சது.
அதே மாதிரி ஒரு மாற்றம் நம் தமிழ்நாட்டில் வந்தால் எப்படியிருக்கும்?
ப.சி. யை முதல்வரா கற்பனை பண்ணி பாருங்க?
அருமையான கருத்துகள். ஆனால், முதல் சில பத்திகளில் ஒரு விஜயகாந்த பட வாசனை.. :-))
ReplyDelete--------
ReplyDeleteகம்யுனிஸ்ட்களின் பேட்டையான கொல்கத்தாவிலேயே புத்ததேவ் பட்டாச்சார்ய்யா அன்னிய மூதலீட்டினைக் கொண்டு வந்திருக்கிறார்.
--------
அவருக்கும் அது அவ்வளவு சுலபமாக இல்லைதான். உள்ளே வருபவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன் என்று மம்தா பானர்ஜி குதிக்க, அம்மையார் கண்ணில் மண்ணைத் தூவித்தான் முதலீட்டாளர்களை உள்ளே வர விட வேண்டியிருக்கிறது. அவங்களும் இப்படியாச்சும் இங்கே வரணுமான்னு நினைக்காமல் இருந்தால் சரி.
ஆனால் புத்ததேவ் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.
நிர்மலா.
ஜோசப்: படிப்பறிவு குறைவு என்பதால் மட்டுமல்ல; வேறு சில காரணங்களுக்காகவும்தான் லாலு பிரசாத் பதவிக்கு வந்தார். காங்கிரஸ் வலுவிழந்தது ஒரு முக்கிய காரணம். பிற்படுத்தப்பட்டோர் தமக்கென ஒரு குரல் வேண்டும் என்று விரும்பியதும் ஒரு காரணம்.
ReplyDeleteஆனால் லாலு மாநில வளர்ச்சியில் கொஞ்சம் கூடக் கவனம் செலுத்தவில்லை. "சமூக நீதி" என்று வாய்ப்பேச்சு பேசியே காலத்தைத் தள்ளிவிட்டார்!
தமிழகத்தைப் பொருத்தவரை ப.சிதம்பரம் போன்றவர்கள் இப்பொழுதைக்கு ஆட்சிக்கு வரமுடியாது. மக்களிடம் செல்வாக்கு பெறாதவர்கள் - எத்தனை புத்திசாலிகளாக இருந்தாலும் - ஆட்சியில் இருக்கமுடியாது. அதுதான் ஜனநாயகத்தின் நிலைமை. அதில் தவறொன்றும் இல்லை.
புத்தியுடையவர்கள் அடுத்து எப்படி மக்களிடம் பெரும் செல்வாக்கு பெறுவது என்பதை யோசிக்கத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள அரசியல்வாதிகள்தான் தொடர்வார்கள்.
நிர்மலா: உங்கள் மாநிலத்திலும் கொல்கொத்தாவைத் தவிர வெளியே மோசமான சாலைகள்தானே உள்ளன? மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றும் பெரியதாக இல்லையே?
ReplyDeleteகல்வி ஒகே... ஆனால் பிற குறியீடுகளில் மோசம்தானே? அதற்கெல்லாம் அந்நிய முதலீடு என்று எதுவும் தேவையில்லை. இத்தனை நாள்கள் இருந்த கம்யூனிஸ்டுகள் இதையெல்லாம் ஏன் சரி செய்யவில்லை என்று கேள்விகள் எழுவதில்லையா?
பத்ரி
ReplyDeleteநல்லா போட்டிருக்கீங்க.
பசியோடு இருக்கிற பெரியவங்களையும் கவனிச்சு
உணவு கொடுக்கச்சொல்லுங்க.
ஜோக்ஸ்-ன்னு சொன்னாலே பீஹார்,லல்லுன்னு இருக்கறது மாறட்டும்.
நிதீஷ் குமாருக்கு இத படிக்க எப்படி கொண்டுபோய் சேக்கப்போறீங்க?
It's the people -- not Chidambaram-- who have to find out a way to ensure that decent people are elected. After all, who is at a loss when we don't have decent people that rule us?
ReplyDeleteபத்ரி, அது பாசு கைங்கர்யம். விவசாயத்தை முன்னிருத்தி தொழிற்சாலைகளை கைவிட்டு விட்டார். செங்கொடிக்கும் கோஷங்களும் ஆதரவு தந்ததில் உள்ளவர்களும் ஓடிவிட மற்றவர்களை வரணுமான்னு யோசிக்க வைத்திருக்கிறார்.
ReplyDeleteஆனால் புத்ததேவ், IT க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். கடைசி பந்தின் போது கூட இனிமேல் IT Industry க்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். வேலை செய்தால் தான் சம்பளம், கோஷம் எல்லாம் நடக்காது என்று உணர வைத்திருக்கிறார்.
'கொல்கத்தா பணத்தை ருசிக்க ஆரம்பித்துவிட்டது' இது ஒரு பிஸினஸ் புள்ளி சொல்லக் (நான்) கேட்டது.
தகவல் உதவி: திரு. ஆச்சார்யா. (மனுஷர் இரண்டு பக்கத்துக்கு எழுதிக் கொடுத்ததை சுருக்கியது!)
பிரமாதம் பத்ரி. நிதிஷ் படிச்சிருப்பாருனு நம்புவோம்.
ReplyDelete