இந்தியா எதிர்பார்த்தது போலவே 6-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இலங்கை இந்த ஆட்டத்துக்கு வரும்போதே துவண்டுபோன நிலையில்தான் வந்தது. முரளிதரன் காயங்கள் காரணமாக விளையாடவில்லை. ஜெயசூர்யாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வந்ததால் அவரையும் அணியில் சேர்க்கவில்லை. இனி நடக்கப்போகும் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அணியின் பந்துவீச்சில் நம்பிக்கையானவர்கள் என்று யாருமே இல்லை. வயதாகும் சமிந்தா வாஸ் சில விக்கெட்டுகளை எடுத்தாலும் நிறைய ரன்கள் தருகிறார். பெர்னாண்டோ, மஹரூஃப், சோய்ஸா ஆகிய யாரிடமும் இந்தியர்களுக்குப் பயமில்லை. சந்தனா, தின்ல்ஷன் போன்ற சுழல்பந்து வீச்சாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
அதே நேரம் இலங்கை பேட்டிங்கிலும் நிறைய பலவீனங்கள். சங்கக்காரவைத் தவிர அனைவரும் ஒரு மாற்று குறைவாகவே விளையாடுகின்றனர். அட்டபட்டு, ஜெயவர்தனே - இரண்டு பெரும் தூண்கள் - இருவருமே மோசமாக விளையாடி வருகின்றனர். தில்ஷன், ஆர்னால்ட் இருவரும் நன்றாக விளையாடினாலும் தனித்து இந்தியாவைத் தோற்கடிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் இல்லை.
இந்திய அணியைப் பார்த்தால் அனைத்து மட்டையாளர்களும் ஒரு முறையாவது ரன்களைக் குவித்துள்ளனர். ஒருவர் தோற்றாலும் பின்னால் விளையாட வரும் யாராவது ரன்னைப் பெறுவார் என்ற நம்பிக்கை அதிகம். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து கூட (பதான்) ரன்கள் வருகின்றன. பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அனைவருமே மிக நன்றாக வீசுகின்றனர். கார்த்திக் நிறைய ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுக்கிறார். ஹர்பஜன் சிங் இந்தத் தொடரிலேயே மிகக் குறைவாக ரன்களைக் கொடுக்கிறார். ஆர்.பி.சிங் போன்ற புதுமுகங்கள் அசத்துகிறார்கள்.
பந்துத் தடுப்புக்குப் பெயர்போன இலங்கை இப்பொழுது படுமோசம். வானளாவ அடிக்கப்படும் கேட்ச்களைப் பிடிப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு ரன் அவுட்டையாவது நேராக ஸ்டம்பை அடித்து வீழ்த்துவதன்மூலம் பெறுவார்களா என்பதும் சந்தேகமே. மாற்றாக, இந்தியா கேட்ச்களைப் பிடிப்பதிலும், ரன் அவுட்களை நிகழ்த்துவதிலும், பந்துகளைத் தடுத்து ரன்களைக் குறைப்பதிலும் நிறைய முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளார்கள்.
அதற்கு மேல் அணித்தலைமை. திராவிட் காண்பிக்கும் தன்னம்பிக்கை அட்டப்பட்டுவிடம் இல்லை. பவர்பிளேயை எப்படிப் பயன்படுத்துவது என்று அட்டபட்டுவுக்குப் புரியவில்லை. திராவிடுக்கோ தொட்டதனைத்தும் பொன்.
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா ஏழாவது ஆட்டத்தையும் ஜெயிக்கும் என்று எதிர்பார்ப்பதில் ஐயமில்லை.
டாஸில் வென்ற அட்டபட்டு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா டாஸில் ஜெயித்தால் முதலில் பந்துவீசும் என்று திராவிட் சொன்னார். அட்டபட்டு டாஸில் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். திராவிடுக்கு வருத்தம் இல்லை.
இம்முறை பதான், அகர்கர் இருவரும் மிக நன்றாகப் பந்து வீசினார்கள். ரன்கள் கொடுக்கவில்லை. ஆளுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பந்து வீச வந்த - அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ள - ஆர்.பி.சிங் பிரமாதமாகப் பந்து வீசினார். தன் ஸ்பெல்லில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். இலங்கையின் முதல் ஐந்து விக்கெட்டுகள் மற்றொரு முறை எளிதாக வீழ்ந்தன. அட்டப்பட்டுவும் ஆர்னால்டும் நன்றாக விளையாடி கடைசியில் நிறைய ரன்கள் சேர்த்தனர். ஆனால் பதான் மீண்டும் வந்து கடைசியில் இருவரையும் அவுட்டாக்கினார். 244 போதாது. 280 கூடப் போதாது.
இந்தியா கடந்த சில ஆட்டங்களில் விளையாடியது போலவே இந்த ஆட்டத்திலும் விளையாடியது. சேவாக் கிடைத்த பந்துகளில் அடித்து நொறுக்கினார். 24 பந்துகளில் 35. அவர் அவுட்டானதும் பதான் தன் சொந்த ஊரில் விளையாட (முதல் மேட்சைப் போலவே மூன்றாவது இடத்தில்) வந்தார். வந்தது முதற்கொண்டே தன் ஊர்க்காரர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே வந்தார். தன் விக்கெட்டை இழக்க பயப்படவேயில்லை. 23 பந்துகளில் 35. பதான் அவுட்டானதும், அதுவரையில் அமைதியாக இருந்த டெண்டுல்கர் அடித்து விளையாடினார். 48 பந்துகளில் 39. தோனியும் காயிஃபும் விளையாட அணி சேர்ந்த போது இந்தியாவுக்குத் தேவை 130 ரன்கள். ஆனால் எக்கச்சக்க ஓவர்கள் பாக்கி (35 ஓவர்கள்). தேவை ஓவருக்கு 3.7 ரன்கள்தான். இருவரும் மிகவும் அமைதியாக, எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரன்கள் பெற்றனர்.
தோனி இதுபோல விளையாடுவது இது இரண்டாவது முறை. காயிஃப் அவுட்டாகும்போது இந்தியாவுக்குத் தேவை 100 ரன்களுக்கும் குறைவு. இன்னமும் 28 ஓவர்கள் இருந்தன. அடுத்து திராவிட் வந்தார். அவர் யுவராஜ் சிங்கை அனுப்பியிருக்கக் கூடும். ஆனால் ஒருவேளை சிறிய பயம் இருந்திருக்கலாம்.
திராவிடும் தோனியும் எளிதாக, வேண்டிய ரன்களை வேகமாகவே எடுத்தனர். தோனி 40 ரன்களைத் தாண்டியவுடன் இரண்டு கியர்கள் மேலே சென்று ஆறு, நான்கு என்று கொண்டாடினார். சீக்கிரமே அரை சதத்தைத் தாண்டினார். 73 பந்துகளில் 80 ரன்கள். இந்தியா 240ஐத் தொட்டுவிட்டது. ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிக்க நினைத்தவர் எல்லைக்கோட்டுக்கருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். உள்ளே வந்த யுவராஜ் சிங்குக்கு ஒரு பந்தைக்குடச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. திராவிட் நான்கு ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்தியாவின் வெற்றி 40வது ஓவரிலேயே வந்துவிட்டது.
இலங்கை அவ்வளவு மோசமான அணியில்லை. ஆனால் இந்தியாவின் விளையாட்டு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்த நிலையை கடந்த ஏழு ஆட்டங்களிலுமே எட்டியிருந்தது.
இது உண்மையா இல்லையா என்பது அடுத்த வாரம் முதல் தொடங்க இருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளின்போது தெரிய வரும்.
ஸ்கோர்கார்ட்
வீடியோ ஸ்கோர்கார்ட்
நியூஜெர்ஸி சந்திப்பு
43 minutes ago
Badri,
ReplyDeleteDid u watch Tendulkar's innings? Surprisingly he had problems with short balls bowled by fernando. One of the bouncer almost hit his face.
This may be an odd -insignificant observation. But i feel SA will test saching with shortballs.
Anbudan
Rajkumar
டெண்டுல்கர் இன்னமும் தனது முழு டச்சுக்கு வரவில்லை. Slower பந்துகளையும் சரியாகக் கணிப்பதில்லை. பவுன்சர் - அவ்வளவு பிரச்னையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள்தான் வீசமுடியும். அதுவும் கொஞ்சம் உயரம் அதிகமானால் நோபால்.
ReplyDeleteடெண்டுல்கர் மட்டுமல்ல. சேவாக், காயிஃப், யுவராஜ் என்று பலருமே அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பேட்டிங்கில் திராவிட், தோனி இருவர் மட்டும்தான் assured for success!