12 மார்ச் 1993, வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. விளைவாக 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமுற்றனர்.
இது நியூ யார்க், பாலி, மாட்ரிட், லண்டன், சமீபத்திய தில்லி தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முற்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களில் நடந்த தாக்குதல்/குண்டுவெடிப்புகளின் பின்னணியிலிருந்து வெகுவாக வித்தியாசமானதும் கூட.
தொடர் குண்டுவெடிப்புகள் உயிருக்கும் உடைமைக்கும் பெருத்த நாசத்தை ஏற்படுத்தவேண்டுமானால் அதற்கு எக்கச்சக்க திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் தேவை. உலகில் சில தீவிரவாத இயக்கங்களிடம்தான் இதற்கான திறமை உள்ளது. அதே நேரம் போரில் ஈடுபடாத அமைதியான ஒரு நகரில் இதையெல்லாம் செய்யவேண்டுமென்றால் உள்ளூர் தொடர்புகள் வேண்டும். வெளிநாட்டு (எதிரி நாட்டு) ஆதரவும் வேண்டும்.
டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் சங் பரிவார் குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுதும் பல இடங்களில் கலவரங்கள். மும்பையில் டிசம்பர் 1992, ஜனவரி 1993 என இரண்டு மாதங்களில் சிவ சேனை ஆதரவில் கலவரங்கள். காவல் துறையினர் பலரும் மறுபக்கம் பார்த்திருக்க கொலைவெறி தாண்டவமாடியது. கோத்ரா அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லையென்றாலும் அரசு இயந்திரம் முன்னேற்பாடுடன் செயல்படவில்லை. விளைவு: 250 ஹிந்துக்களும், 500க்கு மேற்பட்ட முஸ்லிம்களும் மும்பையில் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல முஸ்லிம்களின் உடைமைகள் சூரையாடப்பட்டன. தொழில்கள் நசிந்தன.
அப்படி நசிந்த தொழில்களில் சில மும்பை நிழலுலக தாதாக்களான டைகர் மேமோன், தாவூத் இப்ராஹிம், அபு சாலேம் போன்றவர்களுடையதும்தான்.
அந்த நேரத்தில் தாவூத் இப்ராஹிம் துபாயில் வசித்து வந்தார். அதுவரையில் கடத்தல்காரனாகவும் தாதாவாகவும் மட்டுமே தன்னைப் பார்த்து வந்த தாவூதுக்கு இப்பொழுது தன்னை ஒரு முஸ்லிமாகப் பார்க்கத் தோன்றியது. கடத்தல் மன்னர்கள் பலரும் முஸ்லிம்கள்தான். தாவூதின் வலது கையான சோட்டா ராஜன், இப்பொழுது அரசியலில் குதித்திருக்கும் அருண் காவ்லி போன்ற சிலரே அந்த நேரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்துக்கள்.
முஸ்லிம் தாதாக்களுக்கு தூபம் போட்டது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பிப்ரவரி 1993-ல் துபாயில் நடைபெற்ற தாதாக்கள் கூட்டத்தில் மும்பை இந்துக்களைப் பழிவாங்கவும் இந்திய அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமக்கு என்ன ஆகும், தம் சகோதர முஸ்லிம்களுக்கு என்ன ஆகும் போன்ற விஷயங்களைப் பற்றி அந்த தாதாக்கள் அப்போது கவலைப்படவில்லை.
ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து, திரி, இன்னபிற வெடிகுண்டுகள் செய்யத் தேவையான பொருள்கள், ஜெலாடின் குச்சிகள், கிரெனேடுகள், எ.கே.56 ரக துப்பாக்கிகள் என்று பலவற்றையும் ஐ.எஸ்.ஐ தயாரித்து மும்பைக்கு அனுப்பியது. அதனைப் பத்திரமாகத் தரையிறக்கிப் பாதுகாப்பது டைகர் மேமோனின் வேலை. மும்பை சுங்கத்துறையில் ஏகப்பட்ட ஆள்களைத் தன் கையில் வைத்திருந்த மேமோனுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமில்லை.
அடுத்து பல இடங்களிலும் குண்டு வைக்கவும் கலவரங்களை ஏற்படுத்தவும் ஆள்கள் தேவை. மேமோனின் ஆள்கள்தான் பெரும்பாலானவர்கள். பிற தாதாக்கள் சிலரைக் கொடுத்துள்ளனர். 12 மார்ச் 1993 அன்று முஸ்லிம்கள் அல்லாத பகுதிகளாகப் பார்த்து ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளை உருவாக்கி வைத்தனர், மேமோனின் ஆள்கள். இதற்குத் தேவையான பயிற்சியை எடுத்துக்கொள்ள ஓர் அணி முன்னமேயே துபாய் வழியாக பாகிஸ்தான் சென்று அங்கு காடுகளில் ஐ.எஸ்.ஐ கமாண்டோக்களிடம் பயிற்சி பெற்றது.
தொடர் குண்டுவெடிப்புகள் பல இடங்களில் நாசம் விளைவிக்க டைகர் தன் குடும்பத்துடன் முதல் நாளே துபாய்க்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார். மும்பை காவல்துறை கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த்து குண்டுகளை வைத்த ஒவ்வொருவராகப் பிடிக்கிறது.
டைகர் மேமோன் ஈடுபட்டுள்ளார் என்று இரண்டு நாள்களுக்குள்ளேயே தெரிந்து விடுகிறது. குண்டுகள் வைத்து வெடிக்காமல் போன ஸ்கூட்டர், வெடித்து நாசமாகிப் போன கார் ஆகியவை மேமோனின் உறவினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள். மிகுந்த வேட்டைக்குப் பிறகு டைகர் மேமோனின் தம்பி யாகூப் மேமோன் நேபாளில் மாட்டுகிறார். பின் மேமோன் குடும்பத்தவர் அனைவரும் - டைகர் தவிர - சரணடைகிறார்கள். தாவூதுக்கு வலை வீசுகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் டைகர் மேமோனையும் தாவூத் இப்ராஹிமையும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். கேட்டால் அப்படி யாருமே பாகிஸ்தானில் இல்லை என்று பதில் வேறு.
இதற்கிடையில் அபு சாலேம் போர்ச்சுகல் போகிறார். கடந்த வாரம் அவரையும் போராடி அங்கிருந்து இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.
இடையில் யார் யாரோ பெரிய ஆசாமிகளெல்ல்லாம் மாட்டினார்கள். சஞ்சய் தத் எனும் சினிமா நடிகர். (சமீபத்தில் மரணமடைந்த காங்கிரஸ் எம்.பி சுனில் தத்தின் மகன்; சுனில் தத்தின் இடத்தில் இப்பொழுது தேர்தலில் ஜெயித்திருக்கும் பிரியா தத்தின் சகோதரர்.) ஹனீஃப் காடாவாலா, சமீர் ஹிங்கோரா எனும் சினிமா தயாரிப்பாளர்கள்.
ஜெயிலிலிருந்து பெயிலில் வெளியே வந்த சிலரை திடீரென தேசபக்தரான இந்து தாதா சோட்டா ராஜன் போட்டுத்தள்ளினார். இதனால் வெகுண்ட தாவூதின் மற்றொரு கையான சோட்டா ஷகீல் ராஜனை தாய்லாந்தில் கொலை செய்ய முயற்சி செய்தார். அதில் மூன்று புல்லெட்டுகள் துளைத்தும் தப்பித்த ராஜன் தாய்லாந்து ஆஸ்பத்திரியில் இருந்து காவல்துறை கண்ணுக்கு மண்ணைத் தூவி, இப்பொழுது ஐரோப்பாவில் எங்கோ இருப்பதாகக் கேள்வி. தனக்கு மட்டும் இந்திய அரசு உதவி செய்தால் தாவூத் இப்ராஹிமைத் தன்னால் ஒழித்துக்கட்டமுடியும் என்று ராஜன் அவ்வப்போது ஊடகங்களுக்குப் பேட்டி தந்த வண்ணம் இருக்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. தீவிரவாதிகள் சிலருடன் அவர்களது சொந்தக்காரர்கள், ஒரு பாவமும் செய்யாத சில அப்பாவிகள் என்று பலரும் சேர்ந்தே மாட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் எப்பொழுது கிடைக்குமோ தெரியாது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அருமையான ஓர் ஆவணத்தை எழுதியுள்ளார் மிட் டே பத்திரிக்கையாளரான ஹுசைன் ஸைதி (Hussain Zaidi).
Black Friday: The True Story of the Bombay Bomb Blasts, S. Hussain Zaidi, 2002, Penguin, 304 pages, Rs. 325 (Fabmall)
ஒரு தீவிரவாதச் செயல் எப்படித் திட்டமிடப்பட்டது, யார் யாரெல்லாம் பங்கெடுத்தார்கள், யார் யாரெல்லாம் துணைபுரிந்தார்கள், துப்பு துலக்கியது யார், எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், 2002-ல் புத்தகம் அச்சாகும்போது அந்த வழக்கின் நிலை என்ன என்ற பலவும் மிக எளிமையான, புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சினிமாவும் எடுக்கப்பட்டது. ஆனால் தடா வழக்கில் சிறையில் இருக்கும் பலரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்தப் படம் திரையிடப்படக்கூடாது என்றும் திரையிட்டால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும் வாதாடினார்கள். விளைவாக படம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
அழகாகவும் நடுநிலைமையுடனும் மீள்நினைவு கொடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteமும்பை வெடிகுண்டுக்குக் காரணமான முழுகதையும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் பத்திரி
ReplyDeleteநன்றி ஐயா..
ReplyDeleteGreat summary, thanks Badri!
ReplyDeleteWow... the way you narrated was like reading a fiction story! (That was a compliment)
ReplyDeleteWasn't the (hindi)movie 'Company' based on these happenings?
.:dYNo:.
//Wasn't the (hindi)movie 'Company' based on these happenings?//
ReplyDelete.:dYNo:.- ராம்கோபால் வர்மாவோட எந்த படம் இல்லை? :-)