Friday, November 18, 2005

பெங்களூர் புத்தகக் கண்காட்சி

கடந்த இரு தினங்களும் பெங்களூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.

சென்னையை விட நல்ல அரங்கு வடிவமைப்பு. பேலஸ் மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது. கரடுமுரடான தரைக்கு அரையடிக்கு மேலாக சமதளமான மேடை. அந்த மேடைக்கு மேலாக உலோகத் தகடுகளாலான மேற்கூரை. அதற்குக் கீழாக துணிகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. நல்ல இரும்புக் குழாய்களாலான தாங்கு தூண்கள். 10'x10' அளவிலான ஸ்டால்கள். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் இடையே ப்ளைவுட்டால் ஆன தடுப்பு. அமைப்பாளர்களே ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் புத்தகத் தட்டுகள். தரையெங்கும் கார்ப்பெட். புழுதி வெளியிலிருந்து வராது.

கண்காட்சி அரங்குக்கு வெளியே உணவு வசதிகள், கழிப்பறை வசதி. தண்ணீர் பிரச்னை இல்லை.

பல மொழிகளிலும் புத்தகம் வெளியிடுபவர்கள் வந்திருந்தனர். ஆனால் ஆங்கிலம்தான் அதிகமாகக் கண்ணுக்குப் பட்டது. கிட்டத்தட்ட 70% ஆங்கிலப் புத்தகங்களை விற்பவர்கள் என்று அனுமானிக்கிறேன். கன்னடப் புத்தக விற்பனையாளர்களை விடத் தமிழ்ப் புத்தக விற்பனையாளர்கள் அதிகமாகக் காட்சியளித்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. மலையாளத்தில் டிசி புக்ஸ் மட்டும்தான் கண்ணில் பட்டார்கள். தெலுகு புத்தக விற்பனையாளர்கள் நான்கைந்து பேர்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். சில ஹிந்தி புத்தக விற்பனையாளர்கள் உண்டு.

தமிழ்ப் புத்தகங்கள் கன்னடப் புத்தகங்களை விட அதிகமாக விற்பனையாவதாகக் கேள்விப்பட்டேன். கன்னடப் பதிப்பாளர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும். கன்னடப் பதிப்பாளர்களுக்கு ஸ்டால் வாடகையில் நிறைய சலுகைகளைத் தரலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்களுக்கு பிறமொழி விற்பனையாளர்களின் ஸ்டால் கட்டணத்தில் பாதிதான் கட்டணம் என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி ஏதும் பெங்களூர் கண்காட்சியில் இருப்பதாகத் தெரியவில்லை. உறுப்பினர், அல்லாதோர் என்று எல்லொருக்கும் 10x10 ஸ்டாலுக்கு ரூ. 9,000 கட்டணம் என்று நினைக்கிறேன்.

எது எப்படி இருந்தாலும், கூட்டம் வருவது வெகு குறைவுதான். என் கணிப்பின்படி சென்னையில் வரும் கூட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட பெங்களூர் கண்காட்சிக்கு வருவதில்லை. இது எல்லா விற்பனையாளர்களுக்குமே பிரச்னைதான். சரியான விளம்பரங்கள் செய்யப்படவில்லையோ என்னவோ.

-*-

அடுத்த மாதம் ஹைதராபாதில் (1-10 டிசம்பர்) இதைப்போன்றே ஒரு கண்காட்சி நடக்க உள்ளது. அங்கு ஸ்டால் போடாவிட்டாலும் சென்று பார்த்துவிட்டாவடு வருவேன்.

-*-

இம்முறை காந்தி பற்றி சில புத்தகங்கள் வாங்கினேன். (தேர்ந்தெடுத்த எழுத்துகள் - ஆங்கிலத்தில்). இந்திய விடுதலை வரலாறு பற்றி. சுபாஷ் சந்திர போஸ் பற்றி. புத்தகங்களுக்கு உள்ளே என்ன உள்ளது என்று எழுதாவிட்டாலும் பதிப்பாளர், விலை விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்.

உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை பல புத்தகங்களை வெளியிடுகின்றன. இவை ஒரு ஸ்டாலில் கிடைக்கின்றன. அங்கு கிடைத்த ஓர் உபயோகமான புத்தகம் பற்றி எழுத ஆசை.

பழைய புத்தகங்கள் சில - வாங்க விரும்பி வாங்காமல் இருந்தவை (பில் கேட்ஸ், லீ அயகோக்கா சுயசரிதைகள்) - குறைந்த விலைக்குக் கிடைத்தன. நல்ல தாளில் (அமிலமில்லாத் தாள்), கெட்டி அட்டையுடன். அவற்றையும் வாங்கினேன்.

-*-

(கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் 188-ல் உள்ளது.)

4 comments:

 1. பத்ரி, ஒவ்வொரு வருடமும் நான் சென்று புத்தகங்கள் வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு வேலைப்பளுவால் போக முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு நடக்கிறது?

  // சென்னையை விட நல்ல அரங்கு வடிவமைப்பு. //
  உண்மை. ஒத்துக் கொள்கிறேன். சென்னையில் அரங்கமைப்பு அவ்வளவு நன்றாக இல்லை. பெங்களூரில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  // கன்னடப் புத்தக விற்பனையாளர்களை விடத் தமிழ்ப் புத்தக விற்பனையாளர்கள் அதிகமாகக் காட்சியளித்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. //
  ஒவ்வொரு ஆண்டும் அதுதான் நடக்கிறது. எப்பொழுதுமே கன்னடத்தை விட தமிழ்ப் புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அதே போல நிறையவும் விற்கும். பெரும்பாலும் ஆங்கிலம் இருக்கும். மலையாளம், தெலுங்கு, இந்தி, பங்களா எல்லாம் ஆங்காங்க்கு இருக்கும்.

  அதே போல வழக்கம் போல பெரிய அப்பளக் கடையிலும் மிளகாய் பஜ்ஜி கடையில் கூட்டம் நெருக்கித் தள்ளும். வெளியே இருக்கும் கரும்புச்சாறு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டும் அது இருக்கிறதா?

  ReplyDelete
 2. பத்ரி, பதிவிற்கு நன்றி !
  >>எது எப்படி இருந்தாலும், கூட்டம் வருவது வெகு குறைவுதான். என் கணிப்பின்படி சென்னையில் வரும் கூட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட பெங்களூர் கண்காட்சிக்கு வருவதில்லை.
  இது வேதனைக்குரிய விஷயம். வார இறுதிகளில் சற்று கூட்டம் உள்ளது. ஆனால் அதுவும் கூட சென்னையில் வரும் கூட்டத்தை விட மிகமிகக் குறைவு. இதற்குக் காரணம் கண்காட்சியில் ஆங்கிலப் புத்தக ஸ்டால்கள் நிறைய இருப்பது தானா எனத் தெரியவில்லை.

  >>தமிழ்ப் புத்தகங்கள் கன்னடப் புத்தகங்களை விட அதிகமாக விற்பனையாவதாகக் கேள்விப்பட்டேன்.
  சென்ற வருடத்தைவிட இந்த வருடம் தமிழ்ப் பதிப்பாளர்களின் ஸ்டால்கள் குறைவு என எண்ணம். இருப்பினும் புத்தக விற்பனை அதிகமாக இருப்பது நல்ல விஷயம்.

  >>உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை பல புத்தகங்களை வெளியிடுகின்றன. அங்கு கிடைத்த ஓர் உபயோகமான புத்தகம் பற்றி எழுத ஆசை.
  புத்தகத்தின் பெயரைத் தெரிவித்தால் நாளைக்கு நான் செல்லும் போது வாங்க முயற்சிக்கலாம்.

  ReplyDelete
 3. பத்ரி,

  தகவல்களுக்கு நன்றி. கன்னட புத்தகங்களை விட தமிழ்ப் புத்தகங்களின் ஸ்டால்கள் அதிகம் இருப்பதும் தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக கன்னடர்கள் தங்கள் மொழி குறித்த உணர்வுகளை தமிழர்களின் மீது எதிர்ப்பை காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்களா? போராட்டங்கள் தவிர அவர்கள் தங்கள் மொழி மீது எவ்வாறான ஆக்கப்பூர்வமான பற்று வைத்திருக்கிறார்கள், அங்கு புத்தக வாசிப்பு எந்தளவில் இருக்கிறது என்றெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறது. இதுபற்றி பெங்களூரில் வசிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் மேலதிக விவரங்களை அறியத் தருமாறு வேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. சுரேஷ் கண்ணன். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனென்றால் எது நிறைய விற்கிறதோ அது நிறைய விற்கப்படும். கன்னடப் படங்களை விட தமிழ்ப்படங்கள் நன்றாக ஓடுகின்றன அல்லவா. தமிழ்ப் படங்களை கன்னடர்கள் பார்ப்பார்கள். ஆனால் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பார்களா என்றால் இல்லை. பெரும்பாலான தமிழர்களே படிக்காத பொழுது, இவர்கள் ஏன் படிக்க வேண்டும். இங்கிருக்கும் தமிழர்கள் நிறைய வாங்குவதால் அப்படி. படிக்கும் ஆர்வம் கன்னடிகர்களை விட தமிழர்களுக்கு நிறைய என்றுதான் நான் கருதுகிறேன். இந்தக் கருத்துகளும் நான் சந்தித்த எனக்குத் தெரிந்த கன்னடர்களை வைத்தே.

  ஆங்கிலப் புத்தகப் பழக்கமும் நன்றே. அதுவும் இங்கு நிறைய விற்பனை ஆகும். ஹிந்தியில் அப்படியொன்றும் விற்பனை இருக்காது.

  ReplyDelete