இன்று காலை எங்கள் தொகுதிக்கு (ஆயிரம் விளக்கு) வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது தொடங்கியது. செவ்வாய் வரை செல்லும்.
ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் என்று நிர்ணயித்துள்ளார்கள். முதல் நாளே அடையாள அட்டை இல்லாத, ஆனால் பட்டியலில் பெயர் இருக்கும் வாக்காளர்களுக்கெல்லாம் ஏற்கெனவே நிரப்பிய ஒரு விண்ணப்பப் படிவத்தை வீடுவந்து கொடுக்கிறார்கள். அதில் கையெழுத்து இடுவது மட்டும்தான் நம் வேலை.
ஞாயிறு என்றதால் நல்ல கூட்டம். வரிசையில் நின்று நம் முறை வந்ததும் கையெழுத்திட்ட விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அத்துடன் ஏதாவது ஒரு புகைப்படம் உள்ள (அல்லது அல்லாத) அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என்று ஏதும் இல்லாவிட்டால் வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கேட்கிறார்கள். இதுவும் இல்லாவிட்டால்? தெரியவில்லை. ஆனால் பொதுவாக மிகக் குறைவானவர்களே ரேஷன் கார்டு இல்லாமல் வரிசையில் நின்றனர். அவர்களும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தனர். மிக மிகச் சிலரே எந்த அடையாளமும் இல்லாமல் அலுவலர்களுடன் சண்டைபோட்டனர்.
நம் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்ததும், அந்தத் தகவல் ஒரு பதிவேட்டில் எழுதப்படுகிறது. நாம் கையெழுத்திடுகிறோம். நமக்கு ஒரு டோக்கன் கொடுக்கிறார்கள். அடுத்து ஒரு டிஜிட்டல் கேமராவால் நமது முகம் பிடிக்கப்படுகிறது. நமது தகவல்கள் (பெயர், முகவரி) ஏற்கெனவே கணினியில் உள்ளன. அதிகபட்சமாக ஆங்கில ஸ்பெல்லிங்கைச் சரி செய்யலாம். வேறெந்தத் தகவலையும் மாற்ற முடியாது.
புகைப்படங்கள் கணினியில் உள்ளிடப்பட்டதும், நான்கு நான்காக வாக்காளர் தகவல்கள், படத்துடன் லேசர் பிரிண்டர் மூலம் ஒரு தாளில் அச்சிடப்படுகிறது (கறுப்பு/வெள்ளைதான்). ஒவ்வொரு படத்தின்மேலும் பாதி இருக்குமாறு ஒருவர் தமிழக அரசின் கோபுர சீல் ஹாலோகிராமை ஒட்டுகிறார். அதிகாரி ஒருவரின் கையெழுத்து fascimile அச்சிடப்படுகிறது. துண்டு துண்டாக வெட்டப்பட்டவுடன், லாமினேட் செய்யப்படுகிறது. நான்கு அடையாள அட்டைகள் தயார்.
நமது டோக்கனைக் கொடுத்து நமது அடையாள அட்டையைச் சரிபார்த்து, அதைப் பெறுகிறோம். அதை நமக்குக் கொடுக்கும் முன்பாக நமது வாக்காளர் அடையாள எண்ணை பதிவேட்டில் நமது பெயருக்கு நேராகக் குறித்துக் கொள்கிறார் அலுவலர்.
அவ்வளவுதான்.
நம் எதிர்பார்ப்பைவிடச் சிறிது மெதுவாகவே வேலை நடக்கிறது என்றாலும் அதிகமாகக் குறை சொல்ல முடியாது.
அரசு அலுவலர்கள் தொழில்நுட்பத்தை நல்லபடியாக ஏற்றுக்கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.
Pac-Man வீடியோ கேம்
4 hours ago
"""அரசு அலுவலர்கள் தொழில்நுட்பத்தை நல்லபடியாக ஏற்றுக்கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது."""
ReplyDeleteஉண்மைதான் பத்ரி, ஆனால் வயதைத்தான் கட்டம் கட்டி காட்டிவிட்டீர்கள்!!