சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராஜா சென்னை வந்திருந்தபோது, கிழக்கு பதிப்பகத்தின் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நானும் பா.ராகவனும் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம்.
ஈழப் பிரச்னை பற்றி ஆழப் பேசவில்லை. மேலோட்டமாகத்தான் பேசினோம். இந்தியாவின் ஈடுபாடு இல்லாமல் பிரச்னை தீராது என்ற எண்ணம் கொண்டிருந்தார் புஸ்பராஜா.
புஸ்பராஜாவின் புத்தகத்தை பா.ராகவனிடமிருந்துதான் வாங்கினேன். ஆனால் அதனை என்னால் படிக்க முடியவில்லை. அதிகம் இருபது பக்கங்களைத் தாண்டியிருப்பேன். அதற்குமேல் போரடித்தது. மிக மோசமாக எழுதப்பட்ட, எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது என்பது என் கருத்து. படிப்பவரை உள்ளே இழுக்கும் வண்ணம் எழுதப்படவில்லை. பிறகு படித்துக் கொள்ளலாம் என்றே தள்ளிப்போட்டேன். (இனியும் படிப்பேனா என்று தெரியவில்லை.) ஆனால் ராகவன், ஆர்.வெங்கடேஷ் போன்றவர்கள் அந்தப் புத்தகத்தைப் பெரிதும் சிலாகித்து எழுதியிருந்தனர். (சுட்டிகளைத் தேடவேண்டும்.)
நான் அதிகமாகப் பேசியது புஸ்பராஜா என்னும் ஃபிரான்சில் வாழும் ஈழ அகதியைப் பற்றித்தான். ஈழத்தில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் உறவுக்காரர்களிடமிருந்து எப்பொழுதும் பணத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார். தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை இலங்கையில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்வதில்லை என்றார்.
ஷோபா சக்தியின் கதைகள் பற்றிப் பேசினோம். அவரது கதைகளில் சில நிகழ்வுகளில் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.
தான் இலங்கையில் இருப்பது தெரியவந்தால் தன்னை 'போட்டுத்தள்ள' பலர் தயாராக இருக்கிறார்கள் என்று சொன்னார். புலிகளா என்று கேட்டேன். அவர்கள் மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தா (இந்தப் பெயரைத்தான் சொன்னார் என்று ஞாபகம்) கூடத் தன் உயிருக்குக் குறிவைத்திருப்பதாகச் சொன்னார். ஐரோப்பாவில் இருக்கும்போது புலிகளாலோ, பிற போராளிக்குழுக்களாலோ அவரது உயிருக்கு ஆபத்து வருமா என்று கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. ஈழப்போராட்டம் பற்றி (ex)பெண் போராளிகள் யாருமே ஆவணப்படுத்தவில்லை என்றார். யாரோ கனடாவில் வசிக்கும் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவரை எழுதச் செய்ய, தான் முயற்சி செய்வதாகவும் சொன்னார். தனது புத்தகம்கூட 'தனது சாட்சியம்' மட்டும்தான் என்றும் அதுதான் அப்பட்டமான உண்மை என்று தான் சொல்லவில்லை என்றும், பலரும் தமது கருத்துகளைப் பதிய வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் சொன்னார்.
கடைசியில் அவரது மரணம் இயற்கையாக, உடல் உபாதை காரணமாகத்தான் நிகழ்ந்துள்ளது.
நா.கண்ணனின் அஞ்சலி: இறப்பவர்க்கில்லை துக்கம், அது இருப்பவர்க்கே!
சில சுட்டிகள் (நன்றி ஜெயஸ்ரீ)
புஸ்பராஜா நேர்காணல்
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் புத்தகம் பற்றிய விமரிசனங்கள்: சுந்தரவடிவேல் | பா.ராகவன் | வெங்கட் | டிசே
No comments:
Post a Comment