Friday, March 17, 2006

பிரிட்டனில் ஷரியா - சரியா?

மார்ச் 14 தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹசன் சுரூர் எழுதிய கட்டுரை இங்கே: Rooting for Sharia laws in Bradford

அதைப் படித்தபின் தேடியபோது அகப்பட்ட டெய்லி டெலிகிராஃப் சுட்டிகள் இங்கே:
Poll reveals 40pc of Muslims want sharia law in UK
Survey's finding of growing anger in the Islamic community are described as 'alarming' by leading Muslim Labour MP
What is sharia law?

சென்ற மாதம் பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை டென்மார்க் கார்ட்டூன் பிரச்னையை ஒட்டி பிரிட்டனின் முஸ்லிம் பகுதிகளில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. அந்தக் கருத்துக் கணிப்பின்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுள் ஒன்று பிரிட்டனின் முஸ்லிம் பகுதிகளில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமா என்பது. அதற்கு 40% மக்கள் "ஆம்" என்றும், 41% மக்கள் "கூடாது" என்றும் சொல்லியிருந்தனர். 19% மக்கள் கருத்து ஏதும் சொல்லவில்லை போல.

அதையொட்டி பிரிட்டனில் கடுமையான விவாதங்கள் நடந்துவருகின்றன. பிரிட்டன் ஒரு செகுலர் நாடு என்றாலும்கூட அடிப்படை உணர்வில் ஒரு கிறித்துவ நாடு. சில முஸ்லிம்கள் பிரிட்டனில் ஷரியா சட்டம் வேண்டும் என்று சொல்வதற்கே கடுமையான எதிர்ப்பு இருக்கும். ஷரியா என்பது சிவில், கிரிமினல் சட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையில்லாத எந்த நாடும் ஷரியாவின் கிரிமினல் சட்டங்களைப் பயன்படுத்த அனுமதி தராது. கையை வெட்டுவதும் கண்ணைத் தோண்டுவதும் கல்லால் அடித்துக் கொல்வதும் இன்று பாகிஸ்தான், மலேசியாவில்கூடக் கிடையாது. சவுதி அரேபியா மட்டும் விதிவிலக்கு.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்களுக்கு ஷரியா முறையில் சிவில் சட்டங்கள் செல்லுபடியாகின்றன. இந்தியாவில் சிவில் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களுக்கு வேறு வேறாக உள்ளன. இந்துச் சட்டம் வேறு (இதில் ஜைன, புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களும் உண்டு), முஸ்லிம் தனிச்சட்டம் வேறு, பிற மதங்களுக்கான சிவில் சட்டங்கள் வேறு. முக்கியமாக திருமணச் சட்டம், விவாகரத்துச் சட்டம், தத்தெடுப்பது தொடர்பான சட்டம், வாரிசுகளுக்கான சொத்துரிமைச் சட்டம் - இந்த நான்கும்தாம் தினம்தினமும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நான்கிலும் பொதுவாக ஹிந்து அல்லது பிற மதங்களுக்கான சட்டங்களை நாடாளுமன்றமோ குறிப்பிட்ட சட்டமன்றங்களோ அவ்வப்போது, தேவைக்கேற்றமாதிரி மாற்றுகின்றன. ஆனால் முஸ்லிம் ஷரியா சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர இந்திய நாடாளுமன்றமோ சட்டசபைகளோ முயற்சி செய்வதில்லை. The All India Muslim Law Personal Board என்று ஒன்று உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏதும் முஸ்லிம் சட்டங்களில் கைவைக்காமல் இருக்கப் போராடுவதுதான் இவர்களது வேலை.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கான தனிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டது 1937-ல், பிரிட்டிஷ் ஆட்சியின்போது. (The Muslim Personal Law (Shariat) Application Act, 1937) பின் இந்திய விடுதலைக்குப் பிறகு இவை தொடர்ந்து வந்துள்ளன. ஷா பானு என்பவரின் விவாகரத்து/ஜீவனாம்சம் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அடுத்து ராஜீவ் காந்தி அரசு கொண்டுவந்த Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 என்னும் சட்டத்தைத் தவிர அதிகமாக முஸ்லிம் தனிச்சட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. முஸ்லிம் பெண்களின் சொத்துரிமை சரியாக இல்லை என்பதால் தேசிய பெண்கள் கமிஷன் ஷரியா சட்டத்தில் சில மாறுதல்களை வேண்டியுள்ளது.

ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. எந்த மதக்குழுவும் தனக்கென தனியான சிவில் சட்டங்களை எதிர்பார்ப்பதும் அதற்காகப் போராடுவதும் சரியாகத் தோன்றவில்லை. பிரிட்டனில் எப்படியும் ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதே அபத்தமாக உள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற தனிச்சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும். நாடு முழுவதற்கும், மக்கள் அனைவருக்குமான பொதுச்சட்டங்கள் தேவை. அது எல்லாத் தனிச்சட்டங்களிலும் உள்ள குறைகளைக் களைந்து பெண்களின் உரிமைகளை நிலைநாட்டக்கூடிய சட்டமாக இருக்கவேண்டும்.

4 comments:

 1. When you are going to bring a common law for all religions, each religion will loose some advantages and gain some.

  The problem is that no one will be willing to loose.

  In the present political scenario, such an ideal VERY GOOD law is a far fetched dream.

  May be it will happen after 10 years

  ReplyDelete
 2. //இந்தியாவிலும் இதுபோன்ற தனிச்சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும். நாடு முழுவதற்கும், மக்கள் அனைவருக்குமான பொதுச்சட்டங்கள் தேவை//

  இக்கருத்தை நானும் ஆதரிக்கிறேன். இதைத்தான் UNIFORM CIVIL CODE என்று நம் நாடாளுமன்றத்தில் BJP எடுத்துரைத்தது.

  ReplyDelete
 3. ஜெயஸ்ரீ: மரத்தடி சுட்டிக்கு நன்றி. பிரபு எனக்கு மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டார்.

  பிரபு ராஜதுரை: விளக்கமான உங்கள் கட்டுரைக்கு எனது பதிலை ஓரிரு தினங்களில் அளிக்கிறேன்.

  ReplyDelete
 4. //ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை.//
  Mr. பத்ரி. "ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை" என கூறவோ அல்லது இன்னோரு மத்தை குறை கூறவோ உங்களுக்கு அனுமதியில்லை. சுதந்தரம் என்ற பெயரில் வேற்று மதத்தினை தயவுசெய்து அவமதிக்காதீர்கள். உங்களின் கருத்துக்கள் அணைத்தும் சிறந்தவை வரவேற்க தக்கவை. ஆனால் ஷரியா சட்டத்தை பற்றி குறை கூறாதீர்கள். நீங்கள் உங்கள் மதத்திற்கு எந்த அளவு மதிப்பளிக்கின்றீகளோ அதே அளவு மற்றய மதத்திற்கும் மதிப்பளியுங்கள்.

  //கையை வெட்டுவதும் கண்ணைத் தோண்டுவதும்.. //

  இது என்ன "கண்ணைத் தோண்டுவது" இப்படியொரு தண்டனை இஸ்லாத்தில் இல்லை தயவு செய் உங்களுக்கு வாக்கியங்கள் அழகுர அமைய வேண்டும் என்பதற்காக பெய் கருத்தையோ அல்லது அறியாதவர்கள் கருத்தையோ தயவு செய்து ஆதாரங்கள் இல்லாமல் இடவேண்டாம். என்னுடைய தாழ்மையான கருத்து தயவு செய்த இந்த Blogகை அழித்து விடவும்.

  தயவு செய்த இந்த பக்கத்தை மீண்டும் ஒரு முறை வாசித்தீர்கள் என்ரால் உங்களுக்கு இஸ்லாமிய சட்டம் புரியும். http://www.maraththadi.com/article.asp?id=2885

  நன்றி பிரபு நீங்கள் அனைத்து மத்தினைப் பற்றிய ந்ன்றாக அறிந்திருக்க கூடும் என என்னுகின்றேன்.

  ReplyDelete