மூன்று நாள்களுக்கு முன்னர் எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பொருள்கள் நாசமாயின; சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த நாளே சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கும் கல்லுரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சில குண்டர்கள் மாணவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
என்ன பிரச்னை?
தமிழகத்தில் ஐந்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை:
1. எஸ்.ஆர்.எம் (சென்னை)
2. சத்தியபாமா (சென்னை)
3. விநாயகா மிஷன் (சேலம்)
4. சண்முகா (தஞ்சாவூர்)
5. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (வேலூர்)
2003-ல் AICTE நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தம்மிஷ்டத்துக்கு தம்முடைய பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்கிறார்கள் என்றும் அதற்கான அடிப்படை வசதிகள் இந்தக் கல்லூரிகளில் இல்லை என்றும் அறிந்து இந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் உடனடியாக இந்தக் கல்லூரிகள் சில நீதிமன்றம் சென்று இந்த நோட்டீஸுக்குத் தடையுத்தரவு வாங்கியுள்ளன. இந்தத் தடையுத்தரவு அக்டோபர் 2005 சமயத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. உடனே AICTE மறுபடியும் இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து விநாயகா மிஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தடையுத்தரவு வாங்கியிருக்கிறது. இந்தத் தடையுத்தரவின்படி தமிழகத்தில் உள்ள ஐந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் தடை இருக்கும்வரையில் AICTE எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.
இதை எதிர்த்து AICTE சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகிறது.
இதற்கிடையில் இந்த ஐந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தமது மாணவர்களிடம் திறந்த மனத்துடன் இந்தப் பிரச்னைகளைப் பற்றிப் பேசவில்லை. மீடியாக்களும் இந்தப் பிரச்னையைப் பற்றி எழுதக்கூடச் செய்யவில்லை. ஆனால் காற்றில் வதந்திகள் பரவியுள்ளன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் AICTE அனுமதியின்றி புதுப் பாடங்களை ஆரம்பிக்கலாம் என்பது இவர்களின் வாதம். AICTE இந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறது. ஆனால் புதுப் பாடங்களைத் தொடங்கினாலும் பொறியியல் பாடங்கள் என்றால் அவை AICTE விதிமுறைகளுக்கு உட்படுகிறதா என்று கண்காணிப்பது தங்கள் கடமை என்கிறது AICTE. இல்லை; AICTE எங்களைக் கட்டுப்படுத்தாது; நாங்கள் UGC கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வருபவர்கள் என்கின்றன இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்.
இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றங்கள்தான் முடிவுகட்டவேண்டும். ஆனால் இதற்கிடையில் மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை வருகிறது. இந்தத் தனியார் கல்லூரிகள் லட்ச லட்சமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர்களைச் சேர்க்கிறார்கள். இதில் நியாயமான, அரசு நிர்ணயித்த கட்டணமும் உண்டு; ரசீது கொடுக்காமல் வாங்கும் திருட்டுப் பணமும் உண்டு.
இப்படிக் கொட்டிக் கொடுத்துப் படிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலம் பற்றிய கவலை தாக்கும்போது வெகுண்டெழுவது சகஜம்தான். அதுதான் எஸ்.ஆர்.எம்மில் நடந்துள்ளது; சத்தியபாமாவிலும் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலம் பரவிய வதந்திகளில் B.Tech என்ற பட்டத்துக்குப் பதில் B.Sc என்ற பட்டம்தான் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றதும் மாணவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.
ஆனால் மாணவர்கள் நேரடியாகவோ, பிறரைத் தூண்டிவிட்டோ வன்முறையில் ஈடுபட்டது தவறு. ஆனால் உடனடியாக இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். போராட்டத்தின்மூலமாக மட்டுமே இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் செய்யும் அட்டூழியங்கள் வெளியே தெரிய வரும்.
தி ஹிந்து: New programmes by deemed varsities do not need AICTE nod
தி ஹிந்து: Withdraw deemed university status to five institutions, demands SFI
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்றால் என்ன என்பது பற்றி சத்யாவின் வலைப்பதிவு
பிற்சேர்க்கை: தினமணியில் வெளியான இரு செய்திகள்:
1. காஞ்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பிரச்னை. (இதுவும் நிகர்நிலை என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தில் ஐந்துதான் உள்ளன என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!)
2. நிகர்நிலைப் பல்கலைகளை நெறிப்படுத்த புது விதிமுறைகள்
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
6 hours ago
தெளிவான தகவலுக்கு நன்றி!
ReplyDeleteகோயம்புத்தூர் 'அவினாசிலிங்கம் ஹோம் சயன்ஸ் அண்ட் ஹையர் ஸ்டடிஸ் ஃபார் வுமன்ஸ்' ம் நிகர்நிலை பல்கலைகழகம்.
ReplyDeleteI understand that there are more than 10 deemed universities in TN including Gandhigram Rural Institute,Avinashilingam College in Coimbatore.Karunya is a deemed university.UGC and AICTE should have worked together on grant of the deemed university status and on manintaining quality in them.Now there is so much confusion on them because of the
ReplyDeletefailure by these authorities, and the central and state govts. The
governments should have played a
proactive role in regulating higher
education.
இந்த விரிவான, தெளிவான பதிவிற்கு நன்றி, பத்ரி.
ReplyDelete1. நிகர்நிலை பல்கலைகழகங்கள் மேலும் சில இருக்கக் கூடும் என்று படுகிறது.
2. "இதில் நியாயமான, அரசு நிர்ணயித்த கட்டணமும் உண்டு; ரசீது கொடுக்காமல் வாங்கும் திருட்டுப் பணமும் உண்டு."
எனக்குத் தெரிந்த வரை, இப்பல்கலை கழகங்களுக்கு அரசு, கட்டணம் எதுவும் நிர்ணயிப்பதில்லை. எல்லாமே அவற்றின் நிர்வாகங்களால் நிர்ணயித்து வசூலிக்கப் படுவதுதான். ரசீது கொடுப்பதும் கூட அவர்கள் கையிலேதான்!
3. இந்த சண்டையில், நான் AICTE பக்கமே!
தமிழக அரசு நிர்ணயத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 32,500. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் இதே நிலைதான். இது பற்றிய தி ஹிந்து செய்தி.
ReplyDelete