வலைப்பதிவர், மருத்துவர் புருனோ மஸ்கரணாஸ் எழுதிய பன்றிக் காய்ச்சல் பற்றிய அறிமுகப் புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. புருனோ ஏற்கெனவே பன்றிக் காய்ச்சல் பற்றி புருனோ, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பேசியுள்ளார். அந்த பாட்காஸ்ட்டின் ஒலிவடிவம் இங்கே.
பன்றிக் காய்ச்சல் அபாயம் இன்னும் இருக்கிறது. கவனமாக நடந்துகொள்வதால் மட்டுமே இந்த அபாயத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். பீதி அடையவேண்டியதில்லை என்றாலும் கவனக் குறைவாக நடந்துகொள்ளாமலாவது இருக்கவேண்டும்.
இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஜுரம் என்பது தெரியவந்தால், உடனேயே பெற்றோர்களை அழைத்து குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு சொல்லிவிடுகிறார்கள். பெற்றோர்களே கவனமாக, குழந்தைகளுக்கு ஜுரம் இருக்கும்பட்சத்தில் வீட்டிலேயே வைத்திருந்து கவனித்து, ஜுரம் விட்டதும் அனுப்புவது நல்லது.
பொதுவாக, சுகாதார விஷயத்தில் நம் நாட்டில் கவனம் அதிகம் தேவையாக உள்ளது. வெளியே சென்றுவிட்டு வந்தால் கை, கால்களைச் சுத்தமாகக் கழுவுவது; சாப்பிடும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்வது; உணவு சமைக்கும் இடத்தில் சுகாதாரமாக இருப்பது; மூக்கில், தொண்டையில் சளி இருக்கும்போது சளியை சுகாதாரமான முறையில் துப்புவது, துடைப்பது, கைக்குட்டைகளை கவனமாகக் கையாளுவது; தரையில் விழுந்த பொருள்களை குழந்தைகள் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது என்று பலவிதமான விஷயங்களை நாம் சரியாகச் செய்யவேண்டும்.
கண்ட நீரைக் குடிக்காமல், பாதுகாப்பாக வடிகட்டிக் காய்ச்சிய நீரை மட்டுமே குடிப்பது; வடிகட்டிய நீரை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றையும் பின்பற்றவேண்டும்.
பன்றிக் காய்ச்சல் பயத்தை எப்படி நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பதை நாம் இப்போது பார்க்கவேண்டும். குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றிய கல்வியை அழுத்தமாகப் புகட்ட இந்தத் தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
6 hours ago
No comments:
Post a Comment