வரலாற்றாளர் எஸ்.முத்தையாவின் magnum opus, சென்னை - மறுகண்டுபிடிப்பு என்ற இந்தப் புத்தகம். ஆங்கிலத்தில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பல பதிப்புகள் கண்டுள்ள புத்தகம் இது. இதன் தமிழாக்கத்தை வரும் ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2009 அன்று கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. 640 பக்கங்கள், ரூபாய் 300 என்ற விலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். இதில் 32 பக்கங்கள், சென்னையின் பல இடங்கள் கறுப்பு-வெள்ளை புகைப்படங்களாக இருக்கும்.
ஆகஸ்ட் 2 அன்று ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு - காந்திக்கு பிறகு: பாகம் 1 என்ற நூலை வெளியிட்டபின், வேறு எந்த வேலைக்குமே நேரம் வைக்காமல் இந்த நூலில் பணியாற்றவேண்டி இருந்தது. சென்ற ஆண்டு சென்னை வாரத்திலேயே இந்தப் புத்தகத்தை வெளியிட நினைத்தோம். இந்த நூலில் மொழிபெயர்ப்பாளர் சி.வி.கார்த்திக் நாராயணன் அப்போதே தமிழாக்க வடிவத்தைக் கொடுத்திருந்தார். ஆனால், மேற்கொண்டு காபி எடிடிங் வேலைகள் இருந்தன. அதற்குள் முத்தையா அவரது புத்தகத்தின் மறு பதிப்பைக் கொண்டுவரும் வேலையில் இருந்தார். அதனால், அதில் வந்திருந்த சில மாற்றங்களையும் மீண்டும் தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்தார் மொழிபெயர்ப்பாளர்.
சென்னை புத்தகக் கண்காட்சியின்போது இந்தப் புத்தகத்தைக் கொண்டுவரலாம் என்று நினைத்ததிலும் வேறு சில இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அதனால், அடுத்த நியாயமான கட்டம், இந்த ஆண்டு சென்னை தின, வாரக் கொண்டாட்டத்தின்போது.
புத்தக வெளியீட்டு விழா, மெட்ராஸ் புக் கிளப்புடன் இணைந்து சென்னை கன்னிமரா ஹோட்டலில் நடைபெறுகிறது. ஞாயிறு காலை மணி 10.30-க்கு. முனைவர் வா.செ.குழந்தைசாமி புத்தகத்தை வெளியிட முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப, பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவருடன், கார்த்திக் நாராயணன், எஸ். முத்தையா ஆகியோரும் சில வார்த்தைகள் பேசுவார்கள்.
இந்த விழாவுக்கு மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்களும், கிழக்கு பதிப்பக சார்பில் அழைப்பிதழ் பெற்றவர்களுமே கலந்துகொள்ளமுடியும். எனவே நண்பர்கள் யாராவது இதற்கு வருகை தர விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களுக்காக அழைப்பிதழ்களை வைத்திருக்கிறேன்.
இந்தப் புத்தகம் பற்றி, சற்றே விரிவாக பின்னர் எழுதவேண்டும்.
[இன்று மாலை, Prodigy Books வரிசையில், Madras - Chennai என்ற சிறு ஆங்கிலப் புத்தகம் (விலை ரூ. 25) வெளியிட்டோம். சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா எழுதிய இந்தப் புத்தகத்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ராமன் பெற்றுக்கொண்டார்.]
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Tamil translation of Madras Rediscovered by S. Muthiah is indeed a valuable addition to your titles. Congratulations.
ReplyDelete