வருட முதல் நாள் புத்தகக் காட்சிக்குச் சென்றபின், இன்றுதான் மீண்டும் சென்றேன். சனிக்கிழமை (நேற்று) கடுமையான கூட்டம் என்றார்கள். இன்றும் கிட்டத்தட்ட அதே அளவு கூட்டம்தான்.
ஒருவிதத்தில் இந்தக் கூட்டத்தைப் பார்க்க மலைப்பாக இருக்கிறது. அந்த அளவு கூட்டம் அரங்குக்குள் நுழையும்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு மூச்சு விட சிரமமாகத்தான் இருந்திருக்கும். வெண்டிலேஷன் போதாது. ஒரியண்ட் பிளாக்ஸ்வானில் நானும் சத்யாவும் சில புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு இளம்பெண் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டார். மூளைக்குச் செல்லவேண்டிய ஆக்சிஜன் போதாமையால் என்று நினைக்கிறேன். அப்படியே கைத்தாங்கலாக அவரை வெளியே அழைத்துச் சென்றனர் அவருடன் கூடவந்தவர்கள்.
சின்னஞ்சிறு குழந்தைகள் பலருடன் கூட வந்தவர்கள் மிகவும் திண்டாடிப்போய்விட்டனர். மேலே உள்ள ஃபேன்கள் அளிக்கும் காற்று போதாது. கடைசி வரிசையில் சில ராட்சச பெடஸ்டல் ஃபேன்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அருகே பலர் உட்கார்ந்திருந்தனர். அதுதான் அவர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் அளித்தது.
கட்டுமானத்தின்போதே வெண்டிலேஷனை அடுத்தமுறை கவனமாகக் கையாளவேண்டும். பல இடங்களில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை வைத்து உள்ளிருந்து காற்றை வெளியேற்றி, சுத்தமான காற்றை உள்ளே கொண்டுவருமாறு செய்யவேண்டும். சில இடங்களில் கடைகளில் எப்படி கடைக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர் என்றே ஆச்சரியமாக இருந்தது. சுற்றிச் சுற்றி வரும்போதே சில இடங்களில் வெக்கை தாங்க முடியவில்லை. இந்தக் குளிரடிக்கும் மார்கழி மாதத்தில்கூட அவ்வளவு கஷ்டம். டிசைனில் நிச்சயம் முன்னேற்றம் தேவை.
பெங்களூரு புத்தகக் காட்சியை நிச்சயம் சென்னைக்காரர்கள் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அங்கே இந்த அளவு கூட்டம் இல்லை, எனவே கூட்டம் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்; அந்த இடம் தாங்கியிருக்குமா என்ற கேள்வி எழலாம். இருந்தாலும் இங்கே சில முன்னேற்றங்களைக் கட்டாயம் செய்யவேண்டும்.
1. பெங்களூரு தரத்தில் தரையில் சீரான கார்ப்பெட். இங்கு தரையில் பல வண்ணங்களில் (பாராவின் பாஷையில் குடுகுடுப்பைக்காரன் உடையைப் போல!) பச்சை, நீலம், சிகப்பு என்று தராதரம் இல்லாமல் பேட்ச் போடப்பட்டிருந்தது. பெங்களூருவில் தரையில் கார்ப்பெட் பிய்ந்து, சுருண்டு, போவோர் வருவோரையெல்லாம் தடுக்கியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். ஆனால் சென்னையில் பல இடங்களில் மக்கள் தடுக்கியபடி சென்றுகொண்டிருந்தனர். யாரும் விழுந்துவிடக்கூடாதே என்று பயமாகவே இருந்தது.
2. எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்கள்; நல்ல காற்றை உள்ளே நாலா பக்கங்களிலும் அனுப்பும்வகையில் டிசைன்.
3. டாய்லெட். இது வருடாவருடம் வாசகர்களின் எதிர்பார்ப்பு. இன்றுவரையில் விரும்பிய முன்னேற்றம் இல்லை. முக்கியமாக அரங்குக்கு வரும் பெண்கள் நிலை கஷ்டமே.
4. கேண்டீனில் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வசதிகள் படு மோசம். அடிப்படையில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் நீர் வசதி, கழிவுகளை வெளியேற்றும் வசதி மிக மிக முக்கியம். இல்லாவிட்டால் நோய்கள் பரவ வழி செய்யும்.
பலவித வசதிக் குறைவுகளுக்கு இடையிலும் கூட்டம் கூட்டமாக வந்து கொத்து கொத்தாகப் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மக்களுக்கு ஒரு மாபெரும் பூச்செண்டு! கடந்த சில ஆண்டுகளில் படிப்புப் பழக்கம் சென்னையில் மாபெரும் அளவு அதிகரித்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.
இந்த வார இறுதிக் கூட்டத்தைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. நிச்சயம் சென்னையில் ஓர் ஆண்டில் இரண்டு புத்தகக் காட்சிகளை நடத்தலாம். ஜனவரியில் புனித ஜார்ஜ் பள்ளியில் பெரிய அளவில். ஜூன் மாதத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தலாமா? நிச்சயம் பெரிய அளவு வரவேற்பு இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. (ஜூலையில் நெய்வேலி, ஆகஸ்டில் ஈரோடு. இம்முறை ஜூன் இறுதியில் கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்ந்து கோவை புத்தகக் கண்காட்சியை நடத்தலாம் என்ற ஒரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அறிகிறேன். அப்படியென்றால் சென்னையில் இந்த ஆண்டு மே கடைசியிலும் அடுத்த ஆண்டுமுதல் ஜூன் முதல் 15 நாள்களுக்குள்ளும் இருக்குமாறு செய்யலாம்.)
இந்த யோசனையை நான் பபாசிக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்போகிறேன்.
(தொடரும்)
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
வருடத்திற்கு இரண்டு புத்தக காட்சி என்பது மிக நல்ல யோசனை, ஜூனுக்கு பதில் மே என்றால் இன்னும் நலம் (ஆண்டிறுதி பள்ளி விடுமுறை)
ReplyDeleteநானும் இந்த அவஸ்த்தையை இன்று அனுபவித்தேன் என் குழந்தையை கூட்டிக்கொண்டு 10 நிமிடம் கூட இருக்க முடியாமல் உடனே வெளியேறினேன் அவ்வளவு வெக்கை.. மிக மோசமான கட்டுமானம். கூரையின் உயரத்தில் நல்ல அளவு இடைவெளி விட்டிருந்தாலே சூடான காற்று வெளியேறி இருக்கும். ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துவதும் நல்ல யோசனைதான்.. தொடருங்கள்.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஆண்டுக்கு இரண்டு முறை கண்காட்சி என்பது சிறந்த ஒரு ஐடியா. ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது ஏப்ரல் - மே - ஜூன் போன்ற பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் இது நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால், ஜனவரியில் இந்த கண்காட்சி நடந்த மூன்று - நான்கு மாதங்களில் மறுபடியும் நடத்த கன்சர்வேடிவ் பபாசி முன்வருவார்களா?
நான் கல்லூரியில் படிக்கும்போதே என்னுடய கல்லூரி ஸ்தாபகர் கூறுவார் "எந்த ஒரு நிறுவனத்திற்கு நான் போனாலும் அவர்களின் ஸ்டாண்டர் ஆப் வர்க்கிங் பற்றி அறிய அவர்களின் கேண்டீன் மற்றும் கிச்சன் பகுதிக்கு விசிட் செய்வேன்".இரண்டிலும் ஒன்று சரி இல்லை என்றாலும்கூட நிர்வாகம் சரி இல்லை என்று அர்த்தம்.
ReplyDeleteசரிதானே பத்ரி?
ஆபீசில் வேலை செய்யும்போது அடிக்கடி ப்ரேக் எடுத்துக்கொள்வேன். ஒவ்வொரு மணி நேரத்திற்கொருமுறை காஃபீ, டீ குடிப்பது, டீ.வீ. பார்ப்பது, இந்த மாதிரி. இன்று புத்தகக்கண்காட்சியிலும் இதேவழியில்தான் கடைகளுக்குச் சென்றுவந்தேன். நிறைய ப்ரேக். ஆப்பிள் ஜூஸ், காஃபீ, டீ (சூப் எல்லாம் வைத்திருந்தால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம்) எல்லாம் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டுதான் தொடரமுடிந்தது.
ReplyDeleteஒருசில நாட்களுக்கு முன்பு வந்திருந்தபோது இவ்வளவு வெக்கையாக இல்லை. எனக்குத்தான் நாளொன்று போனதால் வயதொன்று கூடித் தளர்ந்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். அப்போ தெனமுமே இப்படிதான் இருந்துதா...?
மேலே உள்ள ஃபேன்களில் காற்று வந்ததா என்ன? ராட்சத fanகளெல்லாம் அவ்வப்பொழுது தோன்றும் டெம்பொரரி மாஃபியாக்களால் கைப்பற்றப்பட்டுவிடுகின்றன. நிறைய இடங்களில் சுழற்சியை நிறுத்திவிட்டு அராஜகமோ அராஜகம்!!!
அப்புறம் நீங்கள் சொன்னமாதிரி கார்ப்பெட் அநியாயம். ஒருமுறை தடுக்கி, சுதாரித்து மறுமுறை சுதாரிக்காமல் தடுக்கி எதிர்ப்பக்கம் வந்தவர்களை அப்படியே பயமுறுத்து விலகச்செய்து சாதனைகள் பல புரிந்தேன். ஆனால் மக்கள் நல்ல மக்கள். யாராவது கீழே விழப்போகிறார்கள் என்றால் அப்படியே நகர்ந்துவிடுகிறார்கள்.
ரொம்பநாட்கள் கழித்து என் வாரிசுடன் வெளியில் வந்து என்ஜாய் பண்ண இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. நடுநடுவே ஓடிப்பிடித்து விளையாடினேன் (அதாவது என் வாரிசு ஓடி, நான் பக்கத்தில் போய் பிடித்து... ஹி ஹி ஹி).
புத்தக கண்காட்சிகள் இரண்டு நல்ல ஐடியா... தமிழ்நாட்டில் நீங்கள் குறிப்பிட்ட நகரங்களை தவிர வேறு நகரங்களே இல்லையா (வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் இன்னும் மற்ற பிற நகரங்கள்) அது சரி இவ்வளவு குறைகளை சுட்டி காட்டுகின்றீர்களே இதை ஏன் நீங்கள் முதலிலேயே பபாசி க்கு சொல்லி இருக்கலாமே !
ReplyDeleteஇது போன்ற சின்ன சின்ன விழயங்களை கூடவா மறந்து விடுவார்கள் புதிய பொறுப்பாளர்கள்? எது எப்படியோ சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகமானால் போதும். வாங்க வரும் மக்களை பற்றி உங்களை போல கவலை பட நேரம் எங்கே இருக்கு அவர்களுக்கு.
விற்பனை மட்டும் சரியாக இல்லை என்றல் கடை விரித்தேன் கொள்வாரில்லை என சொல்ல வேண்டியதுதான்.. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நன்மையாக இருக்கட்டும்.
நட்புடன்
சரவணன்
சரவணன்: பபாஸியைக் குறை சொல்வதற்காக இவற்றை மாய்ந்து மாய்ந்து எழுதவில்லை. வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை முன்வைக்கவே எழுதுகிறேன். மற்றபடி பொறுப்பாளர்கள் பல காரியங்களைச் செய்யும்போது சிலவற்றில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அடுத்த ஆண்டு ‘டாய்லெட்’ வசதிகள் குழுவுக்கு என்னைப் பொறுப்பாளர்களாக நியமித்தால் நிச்சயம் மக்கள் மனம் விரும்பும் மாதிரி கழிப்பறை வசதிகளைச் செய்து தருவேன் என்று உறுதி கூறுகிறேன்:-)
ReplyDeleteதமிழகத்தில் சென்னை தவிர பிற நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தினால் எதிர்பார்க்கும் வருமானம் வருவது கஷ்டம். சென்னையில் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து கண்காட்சி நடத்திவரும் காரணத்தால்தான் வாசகர்கள் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால் கோவையில் சரியாக ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இதுவரையில் நடத்தாதனால் அங்குள்ள மக்களுக்கு புத்தகக் காட்சி என்ற பிரக்ஞை இன்னும் வரவில்லை.
மதுரை தேவலாம். தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும் மக்கள் பங்கேற்பு போதாது. திருச்சியில் பபாஸி எதையும் செய்யவில்லை. திருச்சியில் இருக்கும் சிலர் நடத்தும் காட்சிகள் எல்லாம் பொருட்படுத்தத்தக்க அளவிலானவை அல்ல.
நெய்வேலி நன்கு நடத்தப்படும் காட்சி. பத்தாண்டுகள் தாண்டிவிட்டது. ஆனால் மிகச் சிறிய நகரம். காசுப் புழக்கம் குறைவே.
சமீப ஆண்டுகளில் சென்னைக்கு அடுத்த நிஜமான புத்தகக் காட்சி என்றால் அது ஈரோடு மட்டுமே. ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து அதனை ஒரு மாபெரும் கண்காட்சியாக, விற்பனை அதிகமாக நடக்கும் இடமாக ஆக்கியுள்ளனர் - ஸ்டாலின் குணசேகரனும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து.
அந்த அளவுக்கு முனைப்பு உள்ள ஆளும் அமைப்பும் சேர்ந்தால்தான் திருச்சியோ மதுரையோ கோவையோகூட முன்னேற முடியும். பிற நகரங்கள் இந்த உயரத்துக்கு வர மேலும் பத்தாண்டுகள் ஆகும்.
ஆனால் சென்னையில் ஆண்டுக்கு 3 புத்தகக் காட்சிகள்கூட நடத்தி நல்ல வருமானத்தை பதிப்பாளர்கள் பெறலாம். அந்த அளவுக்கு சென்னையில் மக்கள் கூட்டம், புத்தகம் படிக்க விரும்பும் வாசகர்கள், பணத்தைச் செலவு செய்ய விரும்பும் வாசகர்கள் உள்ளனர்.
அதை நல்லபடிப் பயன்படுத்துவது பதிப்பாளர்களின் கடமை. பபாஸியின் கடமை. இதனால் சென்னை வாசகர்களுக்கும் நல்ல பலன் இருக்கும்.
கிங் விஸ்வா: மூன்று மாதம் கழித்து நடத்துங்கள் என்று சொல்லவில்லை. ஆறு மாதம் கழித்து நடத்தச் சொல்கிறேன். இந்த ஆண்டு மட்டும் கோவை செம்மொழி மாநாடு தொல்லை தரலாம். ஜூலைக்கு பதில் ஜூன் ஏன் என்றால் புது பள்ளியாண்டு தொடங்கும் நேரம்.
ReplyDeleteகல்வியியல் பதிப்பாளர்கள் ஸ்பெஷலாகச் சில காரியங்களைச் செய்யலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜூன் மாதத்தில்தான் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏவில் அப்படிப்பட்ட ஒரு புத்தகக் காட்சி நடந்தது. கிழக்கு பதிப்பகத்துக்கு அப்படி ஒன்று நடைபெறுவதே தெரிய வரவில்லை. அதனால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. சுமார் 40-50 பதிப்பாலர்கள் கடைவிரித்திருந்தனர். ஓரளவுக்கு கூட்டம் வந்தது. பபாஸி உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான மாத்தியூ இதனை அமைத்திருந்தார். ஆனால் தொடர்ந்து நடத்த முடியவில்லை போலும்.
நிச்சயம் இந்த ஆண்டு ஜூன் மாதம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏவில் மாணவர்களைப் பொதுவாகக் குறிவைத்தும், பிறரை நோக்கியும் ஒரு காட்சியை நடத்தலாம். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நிச்சயம் 100 சதுர-அடி அரங்குகள் 300-ஐ அமைக்க இடம் உள்ளது. கார்களை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் நிறுத்திக்கொள்ளலாம்.
தொலைவில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளிக்குச் செல்லமுடியாத தென் சென்னை மக்கள் இங்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது.
அசௌகரியங்கள் அனைத்தும் கட்டாயம் சரி செய்யப்பட் வேண்டியவை. நாற்புறம் வாயில் உள்ள அரங்குகளாவது பரவாயில்லை. சிறு அரங்குகளில் உள்ள விற்பனையாளர்கள் நிலை படுமோசம். வெக்கையை எல்லா தினமும் அனுபவித்தது பெரும் கொடுமைதான்.
ReplyDelete- பொன்.வாசுதேவன்
கண்காட்சி இனிதே போனது. ஆனால், ஜார்ஜ் பள்ளி வளாகம் சரியான லொக்கேஷனாகப் படவில்லை. காயிதே மில்லத் பரவாயில்லை. நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் சரியாக வருமா?? தெரியவில்லை. நான் பரவலாக விசாரித்தபோது, சராசரி பில்லிங் 1000 ரூபாய் என்று தெரிந்தது. மார்கழியிலும் வெக்கையாக்க முடியும் என்று செய்து காட்டியது பபாசியின் சாதனை. இந்த வெக்கையினால் சீக்கிரம் வெளியே போனவர்கள் மற்றும் அதனால் பதிப்பளருக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு என்று தெரியவில்லை. புவிவெப்பமயமாதல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய முயன்றார்கள் போலும். இந்த வெக்கையிலும் ஒரு குளுமையான விசயம், ஜீன்ஸ் அணிந்த சில மாடர்ன் எம்.பி.ஏ. மாணவ மாணவிகள் கள் புத்தகம் படித்தல், அதுவும் தமிழ்ப்புத்தகம் படித்தல் ஆய்வு குறித்து தமிழிலேயே (!! ஆகா) கேள்வித்தாளுடன் வளைய வந்தனர். நல்ல விஷயம். எம்பிஏ கல்லூரிகளுக்கும் தமிழார்வம் இருப்பது ஆச்சரியமே. இம்முறை, வெளியே சாலையோர கடைகளும் அதிகம். பத்ரி, துவக்க விழாவில் முத்தையாவின் சென்னை புத்தகம் பற்றி முதல்வர் உதிர்த்த முத்தைப்பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே???!!!
ReplyDeleteநானும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த நரக வேதனையை அனுபவித்திருக்கிறேன்! (இந்த வருடம் வர இயலவில்லை). குண்டும் குழியுமான தரை, தடுக்கி விடும் கிழிந்த கார்பெட், வெண்டிலேஷனே இல்லாத வெக்கை அவஸ்தை, கொஞ்சம் கூட முன் யோசனை இல்லாத கட்டமைப்பாடு, எமர்ஜென்சி எக்சிட்டுகளே கண்ணில் படாத அமைப்பு ....இந்தக் கொடுமையெல்லாம் ஏன் இன்னும் மாறவே இல்லை, பத்ரி ?!
ReplyDeleteஎதையாவது சொன்னால் “உங்களுக்கென்னப்பா அமெரிக்காவிலே ....” என்று பிலாக்கணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
தூங்கிக்கொண்டிருக்கும் ஆசிய வல்லரசுப் புலி, எழுந்திருக்கப் போகும் மத யானை என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிராமல் நிஜமாகவே இதிலெல்லாம் நாம் முன்னேற்றம் காணப்போவது எப்போது?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
நந்தம்பாக்கம் இப்போதைக்கு ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அங்கு செல்ல மெட்ரோ எல்லாம் வந்தவுடன் வேண்டுமானால் பயனாகலாம். சராசரி பில்லிங் நிச்சயம் ரூ. 1000 எல்லாம் இருக்கமுடியாது! ஆனால் சென்ற ஆண்டைவிட இந்த நாடு சராசரி அதிகமாகியுள்ளது.
ReplyDeleteசென்னை பிசினஸ் ஸ்கூலின் (CBS) மாணவர்கள்தான் சர்வே எடுத்தனர். அதன் முடிவுகள் என்ன என்று கேட்டுச் சொல்கிறேன்.
முத்தையா விஷயம்: ராமச்சந்திர குஹா புத்தகம் விற்றதைவிட ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகம் அதிகமாக விற்றுள்ளது. அதற்கு முழுப் பொறுப்பும் முதல்வரே. அவருக்கு நன்றிகள்.
//
ReplyDeleteமுத்தையா விஷயம்: ராமச்சந்திர குஹா புத்தகம் விற்றதைவிட ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகம் அதிகமாக விற்றுள்ளது. அதற்கு முழுப் பொறுப்பும் முதல்வரே. அவருக்கு நன்றிகள்.
//
என்னமோ போங்கள், வாழும் தமிழ் தாத்தாவான தன் பெயர் புத்தகத்தில் இல்லை, அதற்கு தான் பிறந்த சாதி தான் காரணம் என்றெல்லாம் சொல்லி "நெகடிவ்" பப்ளிசிட்டு கொடுத்து, புத்தகத்தை விற்க வைத்துவிட்டார்.
திராவிட மாயையில் மக்கள் இல்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.