Saturday, January 02, 2010

அள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்

           

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்னதாகவும் கடைசியாக நான் வேலை செய்யும் புத்தகம் அள்ள அள்ளப் பணம்தான்.

அள்ள அள்ளப் பண்ம் 1 (அப்போது அதற்கு ‘1’ என்ற ஒட்டு இல்லை) ஒரு ரயிலில் போகும்போது நடந்த விவாதத்தில் வந்தது. அதற்கு முன்னமேயே சோம.வள்ளியப்பன் இதைப் பற்றி யோசித்து வைத்திருந்தார். ஆம்பூரின் நாகூர் ரூமி கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடம் எழுத்து, இண்டெர்நெட் ஆகியவற்றை அறிமுக செய்யும் ‘திசைகள்’ நிகழ்ச்சி (2004 மார்ச்: பதிவு 1, 2, 3). ஆம்பூர் செல்லும் ரயிலில்தான் நானும் சோம.வள்ளியப்பனும் இந்த முதல் புத்தகத்தைப் பற்றி பேசினோம்.

ஆனால் இந்த எளிய அறிமுகப் புத்தகம் வருவதற்குள் உயிரை எடுத்துவிட்டது. அப்போது வள்ளியப்பன் மட்டுமல்ல, அனைவருமே கையெழுத்துப் பிரதிகளாக எழுதித் தருவார்கள். அது நேரடியாக பேஜ்மேக்கரில் ஸ்ரீலிபி எழுத்துருவில் அடிக்கப்படும். அதன்பின் அச்சான தாள்களை வைத்துக்கொண்டு எடிட் செய்யவேண்டும். முதலில் எடிடிங்கில் நான் கத்துக்குட்டி. அத்துடன் தாளில் எப்படி வேண்டாததை எடுத்துவிட்டு, புதிதாக எழுதிச் சேர்ப்பது? எனக்கு பேஜ்மேக்கரிலும் நேரடியாக எதையும் (அப்போது) செய்யத் தெரியாது.

அப்போது புழக்கத்தில் இருந்தது டிஸ்கி (TSCII) எழுத்துருக்கள் மட்டுமே. எ-கலப்பை அல்லது முரசு அஞ்சல் கொண்டு டிஸ்கியில் எழுதலாம். அல்லது ஸ்ரீலிபி மென்பொருள் இருந்தால் அந்த ‘என்கோடிங்’கில் எழுதலாம்.

ஏதோ ஒரு வழியில் ஸ்ரீலிபியில் அடிக்கப்பட்டிருந்த மொத்தப் புத்தகத்தையும் எப்படியோ ‘சுமாரான’ டிஸ்கிக்கு மாற்றி (நிறைய தவறுகள் புதிதாக முளைத்திருந்தன), மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குக் கொண்டுபோய், அங்கே டிராக் எடிடிங் போட்டு எடிட் செய்து, பிறகு மீண்டும் ஸ்ரீலிபிக்கு மாற்றி, பேஜ்மேக்கரில் சரி செய்து... இப்படி நிறைய வேலைகளுக்குப் பிறகு ஆகஸ்டில் ஒருமாதிரியாக முடிவடைந்த புத்தகம், கிட்டத்தட்ட அக்டோபர் அல்லது நவம்பரில்தான் அச்சானது.

அந்த சமயத்தில் எங்களுக்கு மாபெரும் விநியோக நெட்வொர்க்கும் கிடையாது. நிறுவனம் ஆரம்பித்து ஓராண்டு கூட முடியவில்லை. ஆனால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்த காலம். இந்த அளவுக்கு எளிமையாக தமிழில் எந்தப் புத்தகமும் இல்லை. (உண்மையில் இன்றுவரை அதே நிலைதான்!) அதனால் மக்கள் கேட்டு வாங்கத் தொடங்கினர். வாய்மொழியாகப் பரவிய அதன் பெருமையால் முதல் ஆயிரம் பிரதிகளில், 200 அல்லது 300 மட்டுமே 2005 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் கையிருப்பாக இருந்தது. அதுவும் முதல் 3 நாள்களில் கண்காட்சியில் விற்றுப்போனது.

அவசர அவசரமாக சென்னை மைக்ரோபிரிண்டில் 2,000 பிரதிகள் அச்சடித்தோம். கடைசி வார இறுதிக்குள் சில பிரதிகள் கைக்குக் கிடைக்க, மேலும் நல்ல விற்பனை. பங்குச்சந்தையின் நுட்பங்களை மிக எளிமையாகச் சொல்லித்தரும் இந்தப் புத்தகம் அதன்பின் 1 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. இரண்டு முறை மேற்கொண்டு எடிட் செய்யப்பட்டு, மூன்று முறை அட்டை மாறி, இன்றும் விற்கிறது. சென்ற ஆண்டுதான் மிகக் குறைந்த விற்பனை. (மார்க்கெட் அதலபாதாளம் சென்றதல்லவா?)

2006 சென்னை கண்காட்சிக்கு புதிதாக ஏதும் வரவில்லை. ஆனால் 2006 முதல் சோம.வள்ளியப்பன் இதே டாபிக்கில் தொடர் புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். அள்ள அள்ளப் பணம் 2, 2007 ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வெளியானது. 2008-ல் மூன்றாவது; 2009-ல் நான்காவது; 2010-ல் ஐந்தாவதும் கடைசியும். இனி அள்ள அள்ளப் பணம் என்ற பெயரில் புதிதாக வேறு எந்தப் புத்தகத்தையும் கொண்டுவரப்போவதில்லை. நேற்றுகூட சோம.வள்ளியப்பனிடம் ஸ்டாக் மார்க்கெட் பற்றிய சில புது ஐடியாக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவை வேறு பெயர்களில்தான் வரும்.

கடைசியாக வந்துள்ளது ‘டிரேடிங்’ பற்றி. தினசரி வர்த்தகம். காலையில் வாங்கி, மாலைக்குள் விற்று, அல்லது காலையில் விற்று மாலைக்குள் வாங்கி நேர் செய்து, தினசரி லாபம் அல்லது நஷ்டம் பார்ப்பது. டெக்னிக்கல் சார்ட் பற்றி ஏற்கெனவே அள்ள அள்ளப் பணம் 2-ல் ஓரளவுக்கு சொல்லியிருந்தோம். இப்போது சற்று விஸ்தாரமாக.

ஆனாலும் இந்தத் தொடரில் உள்ள அனைத்துப் புத்தகங்களுமே அறிமுகப் புத்தகங்கள் மட்டுமே. இதைப் படித்து யாரும் நிபுணர்கள் ஆகிவிட முடியாது. அதற்கு அனுபவமும் மேலும் பல புத்தகங்களைப் படிப்பதும் தேவைப்படும். ஆனால் இந்தப் புத்தகங்களைப் படித்தே பலர் முதல்முறையாக பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்துவைத்துள்ளனர். படித்து பலன் பெற்ற பல ஆயிரம் பேர் அனுப்பும் மின்னஞ்சல்களைப் படித்தாலே இது தெரிய வரும். பலர் இந்தப் புத்தகங்களைப் படித்ததால்தான் தவறுகளைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்த்திருக்கிறார்கள்.

அடுத்து இந்தப் புத்தகங்கள் அனைத்தும் ஆங்கில வடிவத்தில் வரத் தொடங்கும். என் கையில் அள்ள அள்ளப் பணம் 1-ன் ஆங்கில மேனுஸ்கிரிப்ட் உள்ளது. எடிடிங் செய்துவருகிறேன்.

1 comment:

  1. பத்ரி,
    கிழக்கின் பல டைட்டில்களைப் படித்து வருகிறேன்.
    அஅப.உள்பட பல புத்தகங்கள் ரொம்பவும் நுனிப்புல் மேய்வது மாதிரியான உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

    சரியாக சொல்லப்போனால் அவை வலைப்பதிவின் சீரிய எழுத்துகளின் தொகுப்புகள் போல்தான் பல சமயம் தோன்றுகிறது.
    வரம்,தவம் மாதிரி,கிழக்கு ஜீனியஸ் என்ற வரிசையில் மேலும் தரமான,அடர்ந்த உள்ளடக்கத்துடன் புத்தகங்கள் கொண்டு வரலாமே..
    டாடா மேக்ரோ போல்,ஜான் வைலி போல்..

    just think of moving to next level.

    உங்களுக்கு பிரேக் ஈவன் குறித்தான அச்சங்கள்/அவஸ்தைகள் இப்போது இருக்க முடியும் என்று தோன்றவில்லை !

    :)

    ReplyDelete