Friday, January 01, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு இன்று (வெள்ளி 1/1/2010) செல்வதாக உள்ளேன். நாள் முழுவதும் பெரும்பாலும் கண்காட்சியில்தான் இருப்பேன்.

சென்ற ஆண்டுகளைப் போல் அல்லாமல் இம்முறை நான் கண்காட்சியில் அதிக நாள்கள், அதிக நேரம் இருக்கப்போவதில்லை.

விற்பனை, கடைகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள ஹரன்பிரசன்னா இருக்கிறார். மேற்பார்வை பார்க்க, ஆலோசனை வழங்க சத்யா இருக்கிறார். ஓடியாடி உழைக்க, திறம்பட கண்காட்சியை நடத்திட மணிகண்டன் தலைமையில் ஒரு சிறு அணி அற்புதமாக வேலை செய்கிறது.

எடிட்டோரியலைச் சேர்ந்த ராகவன், பார்த்தசாரதி, முகில், மருதன், கண்ணன், முத்துக்குமார், சுஜாதா ஆகியோர் ஏற்கெனவே கண்காட்சி அரங்கில் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அலுவலகத்தில் பாலு சத்யாவும் உமா சம்பத்தும் கடைசி நேரத்தில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துவிடும் போராட்டத்தில் உள்ளனர். அசோகமித்திரன் குறுநாவல்கள் மூன்று தொகுப்புகளாக (அசோகமித்திரன் விருப்பத்துக்கு இணங்க ஒரு பெரும் ஹார்ட் பைண்டிங் புத்தகமாக இல்லாமல், சிறு சிறு புத்தகங்களாக) வெளியாகின்றன. நேற்றுதான் அச்சுக்குப் போனது. திங்கள் முதல் கிடைக்கும்; அல்லது நிச்சயம் செவ்வாயில் கிடைத்துவிடும்.

ஜெயமோகன் புத்தகங்கள் இரண்டையாவது கொண்டுவந்துவிடலாம் என்றால் அவருக்கு அனுப்பியிருந்த ‘ஃபைனல் புரூஃப்’ இன்னும் வந்துசேரவில்லை. வந்துவிட்டால் திங்கள்முதல் வேலை செய்து அடுத்த வார இறுதிக்குள் அவரது நான்கு புத்தகங்களில் இரண்டையாவது கண்காட்சியில் வைத்துவிடுவோம். இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை ஆம்னிபஸ் கொஞ்சம் தாமதமாகிறது. சுமார் 1800 பக்கங்களுக்குமேல் வரும் அவரது மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பில் சில கதைகளைப் பிடிப்பதற்குள் நேரம் அதிகம் ஆகிவிட்டது. தட்டச்சில் நிறையப் பிழைகள் இருப்பதால் பாலு சத்யா அவற்றுடன் போராடிக்கொண்டிருக்கிறார். கண்காட்சியின் கடைசி நாளுக்குள் அவற்றைக் கொண்டுவந்துவிடவேண்டும்; இல்லாவிட்டால் நிச்சயம் பொங்கல் ரிலீஸ்.

சி. சரவணகார்த்திகேயனின் சந்திரயான் புத்தகம் செவ்வாய்க்கிழமைக்குள் வந்துவிடும்.

அலுவலகத்தில் கடைசி நிமிடம் வரை அட்டைகளை வடிவமைப்பதிலும் லே அவுட் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குமரன், கதிரவன், முத்துகணேஷ், ஆனந்த் ஆகியோருக்கு கொஞ்சமாவது விடுமுறை தரவேண்டும். கடந்த 40 நாள்களில் அவ்வளவு வேலை! அவர்களையும் அடுத்த சில நாள்களில் கண்காட்சியில் நீங்கள் சந்திக்கலாம்.

சத்தமே இல்லாமல் பின்னணியில் உழைப்பவர்கள் இரண்டு குழுவினர். புரொடக்‌ஷன், வேர்ஹவுஸ். இன்னமும் புத்தகங்கள் அச்சில் உள்ளன. பிச்சையும் கிருஷ்ணகுமாரும் எப்படியோ அவற்றை வெளியே கொண்டுவந்துவிடும் வேலையில் இரவு பகல் பாராமல், விடுமுறை நாள் கவலையின்றி வேலை செய்கிறார்கள். தாளுக்குத்தான் திண்டாட்டம். அவ்வளவு ரீம்கள் தேவைப்படுகின்றன. கடைசி நேரத்தில் நிறைய காம்ப்ரமைஸ் செய்துள்ளோம். வெவ்வேறு பேப்பர்கள், வெவ்வேறு மில்களிலிருந்து! தடிமனில் வித்தியாசம். ஷேடில் வித்தியாசம். வருத்தமாக உள்ளது; ஆனால் வேறு வழியில்லை. தமிழகத்தில் கிடைக்கும் பேப்பர் அளவும் தரமும் என்று மாறுமோ அன்றுதான் வாசகர்களுக்கு இன்னமும் தரமான புத்தகங்களை எங்களால் தரமுடியும்.

கிடைத்தால், 70 gsm புக் பிரிண்ட் நேச்சுரல் ஷேட் சேஷசாயி பேப்பரையே எங்களது அனைத்து புத்தகங்களுக்கும் பயன்படுத்த விரும்புவேன். (ப்ராடிஜி, மினிமேக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு 60 gsm.) ஆனால் ஈரோட்டில் இருக்கும் அந்த மில், எங்களுக்குத் தேவையான குவாண்டிடி உற்பத்தி செய்வதில்லை. அதுவும் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே எவ்வளவு வேண்டும் என்று சொன்னால்தான் வேண்டிய அளவு அடுத்த மாதம் கிடைக்கும். எங்கள் தொழிலில் இப்போதைக்கு அப்படி முன்கூட்டியே சொல்லமுடியாது. அந்த அளவு prediction systems இல்லை. மேலும் முன்கூட்டியே வாங்கிவைக்கவும் முடியாது. அதற்கான வொர்க்கிங் கேபிடல் அதிகம்; வைத்துப் பராமரிக்க இடமும் கிடையாது. எங்களது ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்துக்கும் இந்த பேப்பர்தான் பயன்படுத்துகிறோம். புத்தகம் தக்கை போல மிதக்கும்; தாள் கெட்டியாக இருக்கும். அச்சு நச்சென்று விழும்.

ஆனால், ஆனால்... பார்ப்போம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாள் உற்பத்தியாளர்களுடன் ஏதேனும் ஒப்பந்தம் போட்டு சிலவற்றைச் சாதிக்க முடியுமா என்று பார்ப்போம்.

வேர்ஹவுஸில் பிச்சை, சதீஷ் தலைமையில் ஒரு மாபெரும் குழு நாள் ஒன்றுக்கு எத்தனை ஆயிரமோ புத்தகங்களை கட்டி கண்காட்சி நடக்கும் இடத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. தீரத் தீர பைகள், கேடலாக், புத்தகங்கள் என்று மாற்றி மாற்றி. இதற்கிடையில் புதிய புத்தகங்கள் உள்ளே வந்துகொண்டிருக்கும். அவற்றை எண்ணி, தரம் பார்த்து (நிஜமாகவே இந்தக் கட்டத்தில் முடியாத ஒரு காரியம்) சரியான இடத்தில் அடுக்கி, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்து...

புத்தகக் கண்காட்சி நடக்கும் நேரம் எங்களது மற்ற விற்பனை வேலைகள் எந்தவிதத்திலும் குறையாது. 25 விற்பனையாளர்கள் தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு கடைக்கும் புத்தகங்களை தினம் தினம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போடும் ஆர்டர்களையும் வேர்ஹவுஸ் அனுப்பியாகவேண்டும். புதிதாக 100-200 புத்தகங்கள் வந்திருக்கிறது என்றால் அந்த ஆர்டர்களும் பலமாக இருக்கும். அவற்றைக் கட்டி, டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று அனுப்பவேண்டும்.

இதற்கிடையில் பள்ளிக்கூடங்களில் ப்ராடிஜி புக் கிளப் என்ற ஒரு திட்டம் செயலாகிக்கொண்டிருக்கிறது. சுமார் 200 பள்ளிகளில் இருக்கும் குழந்தைகள் தேர்ந்தெடுத்துள்ள புத்தகங்களைக் கட்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி பார்சல் என்றாக்கி, ஒவ்வொரு பள்ளிக்கும் சரியாக அனுப்பவேண்டும். அங்கே தவறு என்றால் சரி செய்வது மிகவும் கடினம்.

இன்னும் பலரது பெயர்களைச் சொல்லவில்லை. சொல்ல இடம் இல்லை. இவர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நியூ ஹொரைசன் மீடியாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இந்த நூறு பேருக்கும் என் நன்றிகள்.

[பிகு: வரும் ஞாயிறு, மருதன், முகில் இருவரும் சித்ராவுடன் ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில், 12 மணிக்கு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப்போர் பற்றிப் பேசுவார்கள். முகில் தயாரித்து அளிக்கும் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.]

13 comments:

 1. அன்புள்ள பத்ரி,

  உங்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  நேற்று புத்தகத்திருவிழாவுக்குப் போயிருந்தேன். உங்க கடையில்தான் கூட்டம் அம்முது. எனக்குத் தேவையான அடியாளை வாங்கிட்டேன்:-)

  கண்காட்சிக்குப் பின்னால் இருக்கும், பதிப்பாளர்களின் உழைப்பு பிரமிக்க வைக்குது.

  அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.

  ReplyDelete
 2. Wishes to All Badri & Team...

  Speed of the Boss is the Speed of the Team..

  We pray all ur dreams come true soon...

  Natpudan
  Saravanan

  ReplyDelete
 3. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸார்..!

  ReplyDelete
 4. பிரமிக்க வைக்கும் உழைப்பு. வாழ்த்துகள்.

  கிழக்கு நண்பர்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சென்ற ஆண்டுகளைப் போல் (அல்லாமல்) இம்முறை நான் கண்காட்சியில் அதிக நாள்கள், அதிக நேரம் இருக்கப்போவதில்லை.

  எனக்கு குழப்புகிறது

  ReplyDelete
 6. நியூ ஹொரைசன் மீடியாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இந்த நூறு பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 7. கிழக்கின் உழைப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
  FSC (Forest Stewardship Council) தரச்சான்று பெற்ற தாள்களை நம்மூர் காகித ஆலைகள் உற்பத்தி செய்கின்றனவா என்று தெரியவில்லை. அத்தாள்களில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் கிழக்கிலிருந்து வந்தால் மகிழ்வேன்.

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள் டு கிழக்கு டீம் :)

  ReplyDelete
 9. அருமையான பதிவு...! பதிப்பகங்களில் உழைக்கும் மனிதர்களைப் பற்றியும் அவர்களின் வேலை, சந்திக்கும் சவால்கள் பற்றியும் பெரும்பாலும் எங்களைப் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் போதெல்லாம் எப்படி இவ்வளவு ஏற்பாடு செய்கிறார்கள் என பிரமிப்பாகவே இருக்கிறது. எவ்வளவு பெரிய கூட்டு முயற்சி என வியப்பாகவே இருக்கும் !

  உங்களுக்கும் கிழக்கின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. Best wishes for your team!! Wish you reach more milestones in 2010!!

  ReplyDelete
 11. பத்ரி,
  பேப்பர் இப்போது மில்களில் இருந்து நேரடியாக வாங்குகிறீர்களா அல்லது முதல் நிலை முகவர்களிடம் இருந்தா?

  எனக்கு மில்களுடன் தொடர்புடைய சில முதல் நிலை முகவர்களுடனான தொடர்பு இருக்கிறது.

  உங்களுக்கு உதவுமெனில் அறியத்தரவும்..பேப்பர் கோவையில் இருந்து தருவிக்கும் படி இருக்கலாம்...

  ReplyDelete
 12. அறிவன்: சேஷசாயி மில்லிலிருந்து நேரடியாக வாங்குகிறோம். அதைத்தவிர பல்வேறு முகவர்களிடமிருந்து வேறு என்ன தாள் கிடைத்தாளும் தேவைக்கேற்று வாங்குகிறோம். இருந்தாலும் உங்களிடம் உள்ள தகவல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: badri@nhm.in

  நன்றி.

  ReplyDelete
 13. Badri..Any reason why you have stopped Kizhakku Podcast???

  ReplyDelete