Sunday, January 03, 2010

மீன் தொட்டி

வெகு நாள்களாக என் மகளுக்கு ஒரு மீன் தொட்டியும் நிறைய மீன்களும் வாங்க ஆசை. ஆனால் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால் எனக்கு அதில் விருப்பமில்லை.

சென்ற வாரம் ஓர் இரவு நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது ஒரு சிறு கண்ணாடி ஜாடியைப் பார்த்தேன். முகத்தில் மலர்ச்சி பொங்க என் மகள் அந்த ஜாடியில் இருக்கும் இரண்டு மீன்களையும் ஒரு நத்தையையும் காட்டினாள்.


அன்று காலை 'fresh water ecosystem' என்பது பற்றியான ஒரு அறிவியல் ‘வகுப்பு’க்குச் சென்றிருந்தாள். அவர்கள் வெறும் பாடத்தோடு விடக்கூடாதோ? கையோடு ஒரு ஜாடியில் சில கூழாங்கற்கள், கொஞ்சம் புல், இரண்டு குட்டி மீன்கள், ஒரு நத்தை என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள். குறுகிய வாய் உள்ள அந்த ஜாடியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்றவேண்டும். அதற்குமுன் அந்த மீன்களையும் நத்தையையும் பத்திரமாகப் பிடித்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவேண்டும். அந்தத் தண்ணீரும் நேராக மெட்ரோ வாட்டர் நீராக இருக்கக்கூடாதாம் (ஆம், பிறகென்ன, நேராக மெட்ரோ வாட்டர் நீர் என்றால் பரலோகம்தான்!). எனவே நீரைப் பிடித்து இரண்டு நாள்கள் தெளியவைத்து, பிறகுதான் அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமாம்.

தினம் தினம் அவற்றுக்குச் சோறு போடவேண்டும்! அதுவும் எப்படி? அதற்கென பிரத்யேகமான உணவு, கடுகு அளவுக்கு குட்டி குட்டி பெல்லட் வடிவில் உள்ளது. அதைச் ஒவ்வொரு நாள் மாலையும் சரியாக நான்கு மணிக்குப் போடவேண்டுமாம். அதுவும் எண்ணி சரியாக நான்கு தூள் - ஒரு மீனுக்கு இரண்டு. அப்படியானால் நத்தை எதைச் சாப்பிடும்? சரி, அது கொஞ்சம் குண்டாக இருப்பதால் நாலு உருண்டை அதற்கும் போடுவது என்று முடிவானது.

அந்தக் கண்ணாடி ஜாடி, நவீன நோவா கப்பலாக ஆகமுடியாமல், நத்தைக்கு ஒரு ஜோடி இல்லாமல் போனதில் எனக்கு வருத்தம்.

நத்தைக்கும் மீனுக்கும் குணத்தளவில் சிறிதுகூடத் தொடர்பு இல்லை. மீன்கள் துடிப்பானவை. ஓர் இடத்தில் நிற்பதே இல்லை. வேகமாக, விரைப்பாக விஷ்ஷென்று போய், கண்ணாடி ஜாடியின் சுவர்களை நெருங்கும்போது அநாயாசமாக திசையைச் சட்டென்று திருப்பி, அதே விஷ்க் வேகத்தில் சட் சட்டென்று திசைமாறிச் செல்லும் லாகவம் கொண்டவை. நத்தை ஓரிடத்தில் ஆடாமல் அசங்காமல் உடலை உள்ளே இழுத்துக்கொண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கிடக்கிறது.

சரி, இதெல்லாம் எனக்கு எதற்கு என்றுதான் நான் விட்டேத்தியாக இருந்தேன். ஆனால் கடந்த மூன்று நாள்களாக அம்மாவும் பெண்ணும் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டனர். வீட்டில் உள்ள மீன்களைப் பார்த்துக்கொள்வது நான்தான்! முந்தைய தினம் புத்தகக் கண்காட்சி போகவேண்டும் என்றதால் காலையிலேயே 8 உணவு கடுகுகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன். இரவு வீடு திரும்பியபோது அவை காணாமல் போயிருந்தன. யார் எதைச் சாப்பிட்டார்கள் என்று தெரியாது. நேற்று சரியாக நான்கு மணிக்கு சில துண்டுகளைப் போட்டேன். வேகமாகப் பாய்ந்து வந்த மீன்கள் தங்களுக்கெனச் சொல்லிவைத்த இரண்டு கடுகுகளை மட்டும் தின்றுவிட்டுச் சென்றுவிட்டன. நத்தை மெதுவாக எப்போதாவது வந்து தின்னும் போல. வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தால் நத்தை அதற்குள் தின்று முடித்துவிட்டது.

மீன்களை இடம் மாற்ற வாங்கிய வலை ஜாடிக்குள் போக மறுக்கிறது. கடைசியாக வீட்டில் இருந்த சின்ன டீ வடிகட்டுவானை இதற்கெனப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவாகியுள்ளது. மீனை இதன்மூலம் பிடிக்கும் என் பெண், கையாலேயே நத்தையை எடுத்துவிடுகிறாள். அதனால் நத்தைக்கு ஏதேனும் infection வந்துவிடலாம் என்று எச்சரித்தேன்! நத்தையை டீ வடிகட்டியில் பிடிப்பது முடிவதில்லை.

எனக்கென்னவோ, அடுத்து வீட்டில் சீக்கிரமே ஒரு பெரிய மீன் தொட்டி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எங்கே வைக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.

அடுத்த பிரச்னை அடுத்த நாள் தாவரங்களைப் பற்றிய வகுப்பு முடிந்ததும் கையில் ஒரு மண் சட்டியில் கொஞ்சம் மண்ணைப் போட்டு, அதில் பிரண்டையை நட்டு, கூடவே சின்னச் சின்னதாக சில செடிகளையும் நட்டுக் கொடுத்துவிட்டார்கள். இப்போது மீன் தொட்டிக்குப் பக்கத்தில் பிரண்டையும் சேர்ந்துள்ளது.

நல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை.

16 comments:

  1. //நல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை.// LOL :)))

    பட் நல்ல விசயம்தான்! சிறுவர்களுக்கு சும்மா ரெண்டு மணி நேரம் உக்கார வைச்சு அட்வைஸ் செய்வதை விட பிராக்டிகலுக்கு அனுப்பிவிடலாம்!

    மரம் வளர்ப்பு விசயங்களில் இந்த முறையினை செயல்படுத்தினால்....! ஆஹா!

    ReplyDelete
  2. நல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை//

    நம்மைவிட அதுங்க ரொம்ப சாது சார் ...:)

    ReplyDelete
  3. மகிழ்ச்சியாக இருக்கிறது பத்ரி. குழந்தைகளுக்கு வெறும் படிப்பு, வீட்டுப்பாடம், தேர்வு என்றில்லாமல் இது போன்ற செய்முறை வகுப்புகள் நிறைய விஷயங்களைக் கற்றுத் தரும். அவள் மகிழ்ச்சியுடன் கற்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பத்ரி , ப்ளீஸ். நான் சின்ன வயதில் மீன் வளர்க்க கொள்ளை ஆசை பட்டேன். அப்பா விடவில்லை , அம்மா இரண்டு மாசம் பணம் சேர்த்து நூறு ருபாய் கொடுத்தாள். அதற்க்கு மிக சிறிய தொட்டி தான் கிடைத்தது.ஜாடியில் வளர்க்கும் எனது மீன்கள் ( ஹாரிக்க்ஸ் பாட்டில் ) ராவோடு ராவாட செத்து கிடந்தன , பூனை திங்கும் என்றார்கள் தெரியவில்லை. தொட்டி வாங்கினால் மோட்டார் வாங்க வேண்டும் என்றார்கள் , அதற்க்கு பணம் சேர்க்க மீண்டும் மூன்று மாதம். அப்பொழுது தொட்டியை நூறு ரூபாய்க்கு தர முடியாது என்று கடைக்காரர் அடம் பிடித்தார். வெறுத்து போனேன் , கடைசிவரை மீன் வளர்க்க முடியவில்லை.

    மீன் வளர்ப்பது என்பது அந்த வயதில் வரும் ஓர் ஆசை , பரமாரிப்பு மிகவும் எளிதானது.பைடர் வகை மீன்களை மட்டும் வாங்க கூடாது இல்லை வாங்கியவற்றை மற்ற மீன்களுடன் ஒரே தொட்டியில் போட கூடாது அவ்வளவே.வாங்கி தான் கொடுங்களேன்

    ReplyDelete
  5. எனக்கும் கிட்டத்தட்ட இதேமாதிரி ஓர் அனுபவம் உண்டு. ஆனால் அது பள்ளி ஆசிரியர்கள் திணித்தது அல்ல, பக்கத்து வீட்டுக்காரர் செய்த சதி --> http://nchokkan.wordpress.com/2009/06/03/fish

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  6. இப்படி என்னால் நிறைய மீன்கள் இறந்து போய் விட்டன. பாவம். என்றாலும் என் அரக்க குணம், இன்னும் சிலதை வாங்கி வந்து தொட்டியில் வைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் தொட்டியை கழுவ வேண்டும் என்று நினைத்தாலே அலுப்பாக இருந்தாலும் வீட்டில் கூடுதல் உறுப்பினர்கள் இருப்பது சந்தோஷமளிக்கும் விஷயம் தான். தொட்டியில் இருந்து நம்மை அவை பார்த்து கொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய சண்டைகள், குணாதிசயங்கள் எல்லாமே அதற்கு நன்றாக தெரியும். நான் தொட்டிக்கு அருகில் போனாலே சாப்பாட்டு நேரம் நெருங்கி விட்டது என்று உணர்ந்து அனைத்தும் மேல் எழுந்து வரும்.

    செல்லப்பிராணிகளை இந்த காங்கிரீட் வனத்தில் வளர்க்க முடியாது என்பதால் பலருக்கு மீன்கள் மட்டும் தான் ஒரே ஆறுதல்.

    ReplyDelete
  7. இரண்டு மீனுக்கே இந்தக் கஷ்டம் என்றால்,கடலும்,காடும்,ஒவ்வொரு தாய் வயிறும் எவ்வளவு பொறுப்பானவை என்று நினைத்தால் மலைத்துப் போகிறது.

    ReplyDelete
  8. மீன் வளர்ப்பது சுலபம் என்றுதானே நான் நினைத்துக்கொண்டிருந்தேன் :-) இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?
    //காட்டு விலங்குகள்//
    :-)))))))

    ReplyDelete
  9. ஷன்முகப்ரியன் சார்..எனக்கும் இதே கருத்து சற்று வேறுபட்ட விதத்தில்.
    நம் குழந்தைக்கு பிடிக்கறதோ அல்லது நமக்கு stress relief கெடைக்கிறது என்பதற்காகவோ, இயற்கையின் ecosystem ஐ நாம் ஏன் போர்ஸ் செய்து ஒரு 15cm விட்ட ஜாடிக்குள் artificial ஆக recreate செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி. இதற்கும் துபாயில் snow themepark உருவாக்குவதற்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு இல்லை.
    That said , ஒரு மகளில் ஆசைக்கு முன் எதுவும் பெரிதல்ல.
    இப்படிக்கு,
    பத்ரி சார் போலவே செல்ல அலுப்போடு மகளின் ஆசையை நிறைவேற்றும் ஒரு தகப்பன்

    ReplyDelete
  10. Size of the fish tank seems too small.
    thyagarajan

    ReplyDelete
  11. என் மகள் ஒரு நாய் குட்டி கேட்டுக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு நிகழ்ந்தது ஒரு நாள் எங்கள் வீட்டிலும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  12. நல்ல பதிவு. அனுபவங்களே வாழ்க்கையின் சாட்சியாகின்றன. அவை நமக்கு உணர்த்துவது அதிகம்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  13. பத்ரி, மீன் வளர்ப்பது ஒரு அழகான அனுபவம். தொடக்கத்தில் சிறிது சிரமமாகத் தெரியலாம், பின்னர் அது பழகிவிடும்.

    பெரிய தொட்டி வாங்கி அதில் நல்ல ஃபில்டர், வாட்டர் ரொட்டேட்டர் எல்லாம் பொறுத்திவிட்டால் பின்னர் 6 மாதம் வரையில் தண்ணீரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. என் வீட்டுத் தொட்டியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான் நீரை மாற்றுகிறேன். தண்ணீரையும் 2 நாள்கள் தெளிய வைக்க வேண்டாம், க்ளோரின் சுத்திகரிக்கவென ஒரு திரவம் உண்டு, அதனைப் பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் தண்ணீரைச் சுத்திகரித்துவிடலாம். மீனுக்கு அந்த உருண்டைகளைப் போடவேண்டாம், அது நீரை அழுக்காக்கும். அதற்கு பதிலாக ப்ளேக்ஸுகளாகக் கிடைக்கும் உணவைப் போடவும்.

    ReplyDelete
  14. டாங்க் க்ளீனர் வகை மீன் ஒன்றையும் போட்டுவிட்டால் அதுவே தொட்டியைச் சுத்தம் செய்துவிடும். ஒரு சில வகை மீன்கள் பிற சாது மீன்களைக் கடித்துவிடும். அப்படியானவற்றை வாங்காமல் இருப்பது உசிதம். வாங்கினால் தனித்தொட்டியில் வளர்க்க வேண்டும்.

    ப்ரகாஷ் மாதிரி நானும் சிறுவயதில் வளர்க்க ஆசைப்பட்டு அம்மாவிடம் அடி வாங்கி, 31வது பிறந்தநாளில் வீட்டுக்காரம்மணி கொடுத்த பரிசால் ஆசை நிறைவேறியது.

    ReplyDelete