Friday, January 01, 2010

சுஜாதா புத்தகங்கள் கிழக்கில்

           

சுஜாதாவை நான் படிக்க ஆரம்பித்தது என் 7-வது வயதில். இரண்டாம் வகுப்பில் படிக்கும்போதே நான் தமிழின் அனைத்து வார இதழ்களையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். குங்குமம் இதழில் சற்று ரசாபாசமான கதையைப் படிக்கும்போது அம்மாவிடம் மாட்டிக்கொண்டு (இதழில் சுஜாதா கதை ஒன்றில் ஜெயராஜ் போட்டிருந்த ஓவியங்கள்தான் காரணம்!) அடி வாங்கியது ஞாபகம் இருக்கிறது.

சுஜாதாவின் புத்தகங்களை நாகப்பட்டினத்தில் இருந்த ஒரு பதிப்பாளர்தான் ஆரம்பத்தில் பதிப்பித்து வந்தார் (இமயம், குமரி). சுஜாதா ஒரு முறை நாகப்பட்டினம் வந்திருந்தார். டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தை நடத்துவதற்கு. என் பள்ளிக்கூடத்துக்கு எதிரில் இருந்த குமரன் திருமண மண்டபத்தில்தான் நாடகம் நடைபெற்றது. எனக்கு அந்த நாடகம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை.

1997-ல் நான் சுஜாதாவை நேரில் சந்தித்தேன். அப்போது கனகஸ்ரீ நகரில் நடத்தப்பட்ட சைபர் கஃபே ஒன்றில் தொழில்நுட்ப ஆலோசகராக நான் இருந்தேன். அந்த சைபர் கஃபேயில் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளோம். அப்போதெல்லாம் நான் அவருடன் கிரிக்கெட் பற்றி மட்டும்தான் பேசுவேன். ‘சார், உங்க கதைகள் எல்லாம் படிப்பேன், நானும் உங்க விசிறிதான்!’ என்று அவரிடம் நான் வழிந்ததில்லை. பின்னர் அதே ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாட்டில் சந்தித்தோம். தொடர்ந்து இங்கும் அங்கும் சந்திப்புகள் (ழ கணினி, டிஷ்நெட் அலுவலகத்தில்). அப்போது அரட்டைக்கு, கிரிக்கெட்டுடன் இணையத்தில் தமிழ் என்பதும் சேர்ந்துகொண்டது.

பின்னர் பதிப்பகம் ஆரம்பித்ததும் எங்களது ஃபோகஸ் நான்-ஃபிக்ஷன் என்பதாக மட்டுமே இருந்தது. சில அசோகமித்திரன் கதைகள், இந்திரா பார்த்தசாரதி கதைகள் பதிப்பித்திருந்தாலும், சுஜாதாவிடம் அவருடைய நூல்களைப் பதிப்பிப்பது பற்றிப் பேசியதே இல்லை.

இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தாருடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் வழியாக அவரது ஐந்து நாவல்களைப் பதிப்பிக்கிறோம். இவை அனைத்தும் முன்னர் திருமகள் நிலையம் (அல்லது விசா) வழியாகப் பதிப்பானவை. அதற்குமுன் இமயம்/குமரி வழியாகப் பதிப்பாகி இருக்கலாம். முழுமையான பதிப்பு வரலாறு எனக்குத் தெரியாது. ஆனந்த விகடன், இந்தியா டுடே, சாவி ஆகிய இதழ்களில் தொடர்கதையாக வந்தவையே இவை.

மிகவும் கடைசி நேரத்தில் ஏற்படுத்திய ஒப்பந்தம் என்பதால், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவதில் சிறு தாமதம். ஆனாலும் நாளை சனிக்கிழமைக்குள் புத்தகம் வந்துவிடும் என்கிறார்கள் ‘உற்பத்தித் துறை’யினர். இன்றே (1-1-2010) அன்றேகூட வந்துவிடலாம்.

முந்தைய பதிப்பிலிருந்து நிறைய அச்சுப் பிழைகள் களையப்பட்டிருக்கின்றன. மேலும் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும். அவற்றையும் அடுத்த அச்சுகளில் களைந்துவிடுகிறோம்.

நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். கிடைக்குமாறு செய்துவிடுகிறேன்.

ஆஸ்டின் இல்லம்: ரூ. 50
நில்லுங்கள் ராஜாவே: ரூ. 70
நிறமற்ற வானவில்: ரூ. 100
தீண்டும் இன்பம்: ரூ. 100
மீண்டும் ஜீனோ: ரூ. 150

6 comments:

  1. திருநெல்வேலி மேம்பாலம் அடியில் பழைய புத்தகக் கடையில் நான்கு ரூபாய்க்கு வாங்கிப் படித்தது நில்லுங்கள் ராஜாவே. சுஜாதாவின் புத்தகங்களில் இன்று வரை நினைவிருப்பவைகளில் ஒன்று. வெகு சுவாரஸ்யமான கதை. பைண்டிங் செக்‌ஷனில் ‘தசைப்பிடிப்பைப் போக்குவது எப்படி’ என்ற புத்தக அட்டையை இதற்கு மாட்டிக் குளறுபடி செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    -சன்னாசி

    ReplyDelete
  2. என் இனிய இயந்திரா இல்லாமல் மீண்டும் ஜீனோ வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை, என் இனிய இயந்திரா எப்போது?

    ReplyDelete
  3. குமரி பதிப்பகம்..புத்தகபித்தன் என்பவர் வெளியிட்டிருப்பார்.. அத்துனை நூல்களும் இன்றைக்கு என் நூலகத்தில்.. பத்ரி சார்.

    ReplyDelete
  4. விசா பதிப்பகத்தைவிட விலை குறைவா? விலையைப் பார்த்தாலே பல சமயம் புத்தகம் வாங்கும் ஆர்வம் போய்விடுகிறது.

    ReplyDelete
  5. இங்கே நான் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை சார். ;)

    ReplyDelete
  6. கிழக்கு புத்தகம் அனைத்தும் (மட்டும்)கடைகளை தமிழகமெங்கும் திறந்தாலென்ன?
    கோவையில் ஓட்டல்களில் வாங்குவது சௌகரியமாக இருந்த்தது. அவை இப்பொது அனேகமாக எடுக்கப்பட்டுவிட்டன.

    ReplyDelete