Saturday, January 02, 2010

புத்தகக் கண்காட்சியில் நேற்று

காலை 11.45 சமயத்தில் கண்காட்சி சென்று சேர்ந்தேன். கடை வரிசைகளுக்கு இடையே நல்ல விசாலமான இடம். ஆனால் மற்றபடி அதே ஓரம் சுருண்டுகொள்ளும் கார்ப்பெட். ஆனால் சென்ற முறைகள் போல் இல்லாமல் பலர் சுறுசுறுப்பாக ஆணி அடித்து சுருண்டுகிடந்த விரிப்புகள் தடுக்கிவிடாமல் சரிசெய்துகொண்டிருந்தனர்.

நேராக P1 கிழக்கு ஸ்டால் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். இம்முறை ஆப்டிகல் ஸ்கேனர் கொண்டு பில்லிங் செய்கிறோம். லேண்ட்மார்க் போன்ற கடைகளில் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதுபோல. எத்தனை புத்தகங்கள் என்றாலும் சட் சட்டென்று ஸ்கேன் செய்துவிடலாம். மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம். ஸ்டாக் மேனேஜ்மெண்ட் தெளிவாக இருக்கும். எந்தப் புத்தகம் தீர்ந்துவிட்டது, எதை வேர்ஹவுஸிலிருந்து உடனடியாகக் கொண்டுவரவேண்டும் என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்கலாம். ரசீதுகளை அச்சிட மினி தெர்மல் பிரிண்டர். சட் சட்டென்று பிரிண்ட் செய்துகொடுக்கிறது. ஸ்டால்களில் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வைத்து அதன்மூலம் எல்லா பில்லிங் சிஸ்டம்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ப்ராடிஜி, மினிமேக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் P32 ஸ்டாலில், ‘சுரண்டும் அட்டை’ முறையில் ஒரு புரோமோஷன்! இந்தக் கடையில் சமையல் புத்தகங்கள் கிடைப்பதால் பெண்கள் கூட்டம் நன்கு வருகிறது. எல்லாப் புத்தகங்களுமே 20, 25 ரூபாய் என்று இருப்பதால் (இங்கே அமர் சித்ர கதா புத்தகங்களும் கிடைக்கும். அவை 35) படுவேகமாக விற்பனை ஆகிறது. ஆறு புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள்! குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.

நேற்றுதான் முதல் ‘விடுமுறை நாள்’. காலை 11 மணிக்கே ஆரம்பமானது கண்காட்சி. கூட்டம் குறைவுதான் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் கண்ணும் கருத்துமாக வந்த பலர் தாங்கள் குறித்துவைத்திருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்றனர். இன்று சனியும் நாளை ஞாயிறும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். சில கடைக்காரர்களுடன் பேசினேன். மதியம் பா.ராகவன், சோம.வள்ளியப்பனுடன் (வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்ட) எலுமிச்சை சாதம், தயிர் சாதம் சாப்பிட்டேன். கேண்டீனில் உணவு சரியில்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். மாலையில் லைட்டாக ஒரு பாவ் பாஜி சாப்பிட்டபோது தகவல் ஓரளவு உண்மைதான் என்று புலனானது. ஹரன் பிரசன்னாவுக்கு மட்டும் சூப் விற்பவர் ஒரே சூப் டோக்கனில், மேலும் மேலும் நிரப்பிக்கொண்டே இருக்கிறார். அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

சுற்றிக்கொண்டே இருந்தால் கால் வலிக்கிறது. ஆனால் அப்படியே தரையில் பல இடங்களிலும் உட்கார முடிகிறது. அந்த அளவுக்கு அகன்ற பாதைகள். இம்முறை உள்ளே ஜூஸ், தண்ணீர், காபி, டீ மட்டும்தான். பஜ்ஜி எல்லாம் இல்லை. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்.

மாலை கேண்டீனில் நின்றுகொண்டிருந்தபோது புதிய தலைமுறை அரங்கில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்து குரலில் ஏற்ற இறக்கங்களைக் கேட்கும்போது கிறிஸ்தவப் பிரசங்கம் போல இருந்தது. யார் பேசுகிறார்கள் என்று பார்க்கச் சென்றேன். வைகோ! இடிமுழக்கத்தில் ‘தம்பி அருணகிரி’ என்று தன் உதவியாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அருணகிரி எழுதிய புத்தகங்களை வெளியிட்டு ஆற்றும் உரைவீச்சு. ‘எனக்கு ஐ.நா சபையிலிருந்து அழைப்பு வந்தபோது தம்பி அருணகிரியை அழைத்துச்சென்றேன். அவனுக்கு உலக நாடுகளைப் பார்க்க ஆசை...’ இப்படி எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.

வைகோவின் உடல்மொழி அபாரமானது. தோளில் கறுப்புத் துண்டு. அவர் அந்தத் துண்டை அவ்வப்போது சரி செய்துகொண்டே, கையை ஆட்டி ஆட்டி மைக் முன் பேசுவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும். அப்படியே வாய் பிளந்து அவரைப் பார்த்துக்கொண்டே லேசாகப் பின்னோக்கி நகர்ந்ததில், அரங்கின் முன், இடது பக்கம் இருந்த மரத்தின் தடித்த வேர் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். அருகில் இருந்த விகடன் பிரசுரத்தின் அப்பாஸும் பொன்.சீயும் பிடித்துத் தூக்கிவிட்டனர். காலில் சுளுக்கியிருக்குமோ என்று பயந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்ததில் பெரிய பிரச்னை இல்லை. இன்று காலை தேவலாம். இன்னும் லேசாக வலிக்கிறது; ஆனால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும்.

இன்று கண்காட்சிக்குச் செல்லமாட்டேன். இன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம். இன்று பேரா. சுவாமிநாதன் அஜந்தா குகை ஓவியங்கள் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தருகிறார். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (பிப்ரவரி 6) பூஷாவளி என்பவரும் சுவாமிநாதனும் சேர்ந்து அஜந்தா ஓவியங்களில் எந்தவிதமான துணி டிசைன்கள், பேட்டர்ன்கள் காணப்படுகின்றன, நவீன துணி மோஸ்தர்களுக்கு பண்டைய துணி டிசைன்களுக்கும் என்ன ஒற்றுமை என்பது பற்றிப் பேச உள்ளனர்.

மீண்டும் நாளை கண்காட்சி செல்வேன். (காலையில் மட்டும்.)

10 comments:

  1. அங்கே அருகில் இருந்து பார்ப்பது போல ஒரு எண்ணம். அருமையான பதிவு பத்ரி சார்.
    அங்கே இருந்திருந்தால், எனது புத்தக அலமாரியை நிறைத்து இருக்கலாம்.

    ReplyDelete
  2. {மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம்.}

    கிழக்கி'ல் மட்டும் இந்த மென்பொருள் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?
    ஆம் எனில்,பொருட்படுத்த மாட்டீர்களெனில் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ளலாமா?இதைப் போன்ற வசதிகளோடு குறைந்த/மீடியம் எண்டர்ப்ரைஸ் ஒன்றுக்கு மென்பொருள் தேடிக் கொண்டிருக்கிறேன்..பொதுவில் இல்லையாயினும் enmadal@yahoo வில் மடலிட வேண்டுகிறேன்..

    {புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள்! குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.
    }

    Good business acumen & win win formula !
    Keep going !

    ReplyDelete
  3. அறிவன்: அனைவருமே தெரிந்துகொள்ளட்டுமே! gofrugal.com என்ற சேவை வழங்குனர்கள்தான். திங்கள்கிழமை அலுவலகம் சென்றதும் அவர்களது தொடர்பு எண்ணை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். [என் ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல் மேட், சீனியர் அட்வெண்ட்நெட் வேம்பு ஸ்ரீதரின் சகோதரர் நடத்தும் நிறுவனம் இது. சென்னையில் உள்ளது.]

    ReplyDelete
  4. தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம்.
    எங்கு நடக்கிறது? எந்த நாட்களில்? கொஞ்சம் விபரம் தெரிவித்தால் நல்லது.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  5. இன்று 12 மணி முதல் மாலை நான்கு மணிவரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். “கர்நாடக சங்கீதம்” பற்றிய கிழக்குப் பதிப்பக நூல் ஸ்டாலில் “இல்லை. இன்னும் வரவில்லை” என்று கை விரித்து விட்டார்கள். ஏன்?
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  6. வைகோ, முற்றிலும் உண்மை. அவரிடமிருந்து மீண்டு வருவதற்கு எட்டு வருடங்கள் ஆனது.

    ReplyDelete
  7. Nandri ARivan for the query raised and Badir for input... as I was looking for one as well will contacted goFrugal, will get it.

    Badri Happy New YEar and Best Wishes for you and team for the great 2010 again.

    ReplyDelete
  8. வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?

    ReplyDelete
  9. //வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.?//
    Aravindan! Yes (Formerly AdventNet Inc) ZohoCorp is the company behind Zoho.com

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  10. Dear Aravindan, thanks for your interest in GoFrugal.


    http://www.gofrugal.com/contact-sales.html

    Please feel free to cal me.sivakumaran-9360297050

    ReplyDelete