Thursday, May 06, 2010

பூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி

தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். பல புராணங்களிலும் (வராக புராணம் முதற்கொண்டு) தென்படும் கதை இது.

பூமியைச் சுருட்டி எங்கோ கடலுக்கு அடியில் பாதாளத்தில் கொண்டுபோய் வைத்துக்கொண்டான் ஹிரண்யாக்ஷன். (இவனும் ஹிரண்யகசிபுவும் சகோதரர்கள்; அசுரர்கள் - அடுத்த நரசிம்ம அவதாரத்தில் இடம் பெறுகிறான் ஹிரண்யகசிபு. தொடர்ந்து, அடுத்த வாமன அவதாரத்தில் இடம்பெறுகிறான் ஹிரண்யகசிபுவின் மகனான பிரகலாதனின் பேரனான மஹாபலி.) ஹிரண்யாக்ஷனை அழித்து, பூமியை மீட்கவேண்டும்.

விஷ்ணு, பன்றி வடிவில் அவதாரம் செய்து மண்ணைக் குடைந்து, கடலுக்கு அடியில் சென்று, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமியை மீட்டு, மீண்டும் மேலே எடுத்துவந்து, இந்த உலகைக் காப்பாற்றுகிறார்.

இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களில் இந்த தீம் - பூமித் தாயுடன் உள்ள வராக மூர்த்தியைப் பார்க்கலாம். பல இடங்களில் வழிபடும் கடவுளாக இந்த பூவராகன் உள்ளார். மாமல்லபுரத்தில் இரு மண்டபங்கள் வராகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று வராக மண்டபம். அதில் ஒரு சுவற்றில் மேலே சொன்ன வராக நிகழ்வு உள்ளது. மற்றொன்று ஆதிவராக மண்டபம் எனப்படும் இன்றும் வழிபாட்டில் இருந்துகொண்டிருக்கும் விஷ்ணுவின் கோவில். அதன் உள்ளே வழிபடும் சிலை - சுதையால் ஆனது - பூமித் தாயை ஏந்தியுள்ள வராகம். இந்த சுதையால் ஆன சிலை சமீபத்திய உருவாக்கம். இந்த ஆதிவராக மண்டப வழிபாட்டுச் சிலையுடன் ஒப்பிட்டால், வராக மண்டபத்தின் பல்லவர் காலச் சிற்பம் எவ்வளவு உயர்ந்த தரம் கொண்டது என்று விளங்கும்.

Varaha Panel, Varaha Mandapam, Mamallapuram

வராக மூர்த்தி நீண்ட நெடிய உருவில், பக்கவாட்டில் பார்த்தபடி நிற்கிறார். இது விசுவரூபம். எப்படிச் சொல்வது? ஒரு கால், நாக அரசன் ஒருவனது தலைமீது அழுத்தியபடி உள்ளது. அவனைச் சுற்றி தாமரை மலர்கள் உள்ளன. சுற்றி அலை அலையாகச் செதுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அது கடல் என்று பொருள்.

இடது மேல் மூலையில் தலையில் வட்டவடிவம் கொண்ட ஓர் உருவைப் பார்க்கலாம். அப்படி என்றால் அது சந்திரன் அல்லது சூரியன். எனவே வராகத்தின் தலை வானுலகம் வரை சென்றுவிட்டது. கால் கடல்மீது உள்ளது. எனவே விசுவரூபம். ஒரு தொடையில் பூமித் தாய் உட்கார்ந்திருக்கிறாள். வராகத்தின் மூக்கு பூமிதேவியின் மார்பை உரசி முகர்கிறது. அவள் முகத்தில் வெட்கம் தெரிகிறது. அவளது வலது பாதம், இடது பாதத்தின்மீது குறுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக, அவளது வலது தொடை, இடது தொடைக்குச் சற்று மேலாகச் செல்கிறது. வராக மூர்த்தி, வலக்கையால் அவளது பின்பக்கத்தை ஏந்தி, இடக்கையால் கணுக்காலைப் பிடித்து, அவள் விழாதவாறு அன்புடன் தாங்கிக்கொண்டிருக்கிறார். அவரது மற்ற இரு கைகளில் சங்கும் சக்கரமும். சக்கரம், பிரயோகச் சக்கரம் என்ற வடிவில் எறியும் விதத்தில் இருக்கிறது. பிற்காலச் சிற்பங்களில் சக்கரம் பட்டையாக இருக்கும்.

மகிஷனுக்கு எப்படி எருது தலை, மனித உடல், உடற்கூறு ரீதியில் அழகாகப் பொருத்தப்பட்டிருந்ததோ, அதேபோல இங்கு பன்றித் தலை மனித உடலில் கழுத்தருகே அழகாக ஒட்டவைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். அழகான கிரீடம். கழுத்தில் எளிமையான மாலை. கையில் மணிக்கட்டிலும் தோள்பட்டையிலும் அணிகள்.

வலப்பக்கம் பிரம்மா நிற்கிறார். அவரது தலை கொஞ்சம் சிதைந்துபோயுள்ளது. அவருக்கு நான்கு கைகள். பொதுவாக வழிபாட்டுக்குரிய சிலையாக இருக்கும்பட்சத்தில் முக்கியக் கடவுளுக்கு மட்டும்தான் நான்கு கரங்கள் இருக்கும். அருகில் உள்ள மற்ற கடவுள்களுக்கு இரண்டு கரங்கள்தான் இருக்கும். சோமாஸ்கந்தர் என்றால் சிவனுக்கு மட்டும்தான் நான்கு கரங்கள். உமைக்கு இரு கரங்கள். அருகில் எப்போதும் நிற்கும் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும், குழந்தை சுப்ரமணியருக்கும் இரு கரங்கள்தான். ஆனால் இது கருவறையில் இல்லாமல், சுவற்றில் காணப்படும் சிற்பம் என்பதால் இங்கே பிரம்மாவுக்கு நான்கு கரங்கள் உள்ளன. பிரம்மாவின் ஒரு கையில் கரண்டி உள்ளது. யாகம் வளர்க்கும்போது நெய்யை எடுத்து நெருப்பில் போட உதவும் கரண்டி இது. பிரம்மாவுக்கு அருகில் ஒரு முனிவர் நிற்கிறார்.

மறுபக்கம், ஒரு பெண்ணும் ஒரு முனிவரும் கூப்பிய கைகளுடன் நிற்கின்றனர். நாக அரசனும் கரங்களைக் கூப்பியபடி நிற்கிறான். வராகம் கடலைப் பிளந்துகொண்டு செல்லும்போது கடல் அரசனான இந்த நாக அரசன் உதவவில்லை என்பதால் அவன் தலைமீது அழுத்திக்கொண்டு நிற்கிறார் வராக மூர்த்தி. கைகூப்பியபடி நிற்கும் அந்தப் பெண், நாக அரசனின் மனைவியாக இருக்கலாம். அவனைக் காப்பாற்றவேண்டி அப்படி அவள் இறைஞ்சலாம். அல்லது அவள், அருகில் நிற்கும் முனிவரின் மனைவியாக இருக்கலாம்.

***

சில்ப சாஸ்திரத்தின்படி, வராகம் பூமிதேவியின் உடலின் எந்தப் பகுதியை முகர்கிறதோ அதற்கு ஏற்றாற்போல அந்த நாட்டு அரசனுக்கு சில நன்மைகள் ஏற்படுமாம். எனவே அரசர்கள் தங்கள் தேவையைச் சொல்ல, அதற்கு ஏற்றாற்போல சிற்பிகள் வராக மூர்த்தியை வடிப்பார்களாம். நாங்கள் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்றபோது, கூட வந்தனர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்தபதிகளான உமாபதியும் வேழிநாதனும். நான் பலமுறை கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தாலும், மார்பை முகரும் வராகம் அரசனுக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் என்பதை அவர்கள் சொல்லவில்லை. அது அவர்களது பரம்பரை ரகசியம்.

(தொடரும்)

4 comments:

  1. 1. மூக்கு மார்பை உரசும்படியாக இருந்தால் என்ன பலன் கிட்டும் என்பதில் ரகசியமென்ன இருக்கிறது?
    2. புவியை மீட்ட பூவராகன் எனத் தலைப்பிட்டிருக்கலாம். தலைப்பில் வலிந்து நாத்திக மனப்பான்மையின் வெளிப்பாட்டைத் திணிக்க விரும்பியிருப்பது தெரிகிறது.
    3. மற்றபடி நல்ல பதிவு நன்றி பத்ரி

    ReplyDelete
  2. "ஸ்தபதிகளான உமாபதியும் வேழிநாதனும்"

    அவுங்க அலை பேசி கொடுங்க... கேட்டு தெரிஞ்சுக்றேன்

    " நாத்திக மனப்பான்மையின் வெளிப்பாட்டைத் திணிக்க விரும்பியிருப்பது தெரிகிறது "

    நீங்க ஆன்மிக நோக்கில் எழுதுனீங்களா., நாத்திக நோக்கில் எழுதுநீங்கலானு தெரியல... ஆனால், புதிய விஷயங்கள் நிறைய தெரிஞ்சுக்க முடிந்தது

    ReplyDelete
  3. ராமதுரை எழுதியது
    வராகம் என்பது சம்ஸ்கிருத சொல். அதைப் பன்றி என்று தமிழ்ப்படுத்தியதால் நாத்திக வாடை நுழைந்து விடாது.
    மாமல்லபுர சிற்பங்கள் பற்றி விரிவாக விளக்கி எழுதுவதற்காக திரு பத்ரி அவர்கள் புராண்ங்கள் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளதைப் பாராட்ட வேண்டும். தவிர, சிற்பங்களின் நுணுக்கம் பற்றி அவர் எழுதும் விதம் அச் சிற்பங்களை மறுபடி நேரில் சென்று பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.திரு பத்ரி அவர்களின் வருணனைகள் மிக அற்புதமாக உள்ளன்.
    “ அதில் ஒரு சுவற்றில் ..” என்ற வாக்கியம் வருகிற்து. சுவற்றில் என்பது இலக்கணப்படி சரியா?
    ராமதுரை

    ReplyDelete
  4. ”பாசி தூர்த்துக் (போர்த்துக்?) கிடந்த பார்மகளுக்குப் பண்டொரு நாள்
    மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
    தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
    பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே”
    ஆண்டாள் தன் பூமிதேவியான பிறவியை நினைவுகொண்டு வராகப்பெருமாளை நச்சென்று திட்டுவது நினைவுக்கு வருகிறது. (பாசுரம் சரியா எழுதியிருக்கிறேனா என்று தெரியலை.)

    ReplyDelete