Tuesday, December 07, 2010

புகளூர் கல்வெட்டுகள்

நேற்று கரூர்/புகளூர் செல்லவேண்டியிருந்தது. அலுவலக வேலைகளை முடித்ததும் அங்குதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சில கல்வெட்டுகள் உள்ளன என்ற எண்ணம் மனத்தில் தோன்ற அதைத் தேடிச் சென்றேன்.

புகளூரில் முதலில் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவே இல்லை. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரு சிலர் மலைமீதிருக்கும் முருகன் கோயிலைக் காட்டினர். ஏதோ ஓர் எண்ணத்தில், கோயிலில் நான் தேடும் கல்வெட்டு இருக்காது என்று தெனாவெட்டாக வேறு இடங்களைத் தேடிச் சென்றுவிட்டு, கடைசியில், அங்கிருந்து மீண்டும் சென்னை கிளம்ப நினைத்தபோது, வேலாயுதம்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஏற முற்படும்போது ஒரு தட்டி தென்பட்டது. அதில் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. முருகன் இருக்கும் மலையில்தான்.


ஒரு சிறு மலை. அந்த மலையுச்சியில் முருகனுக்குக் கோயில் ஒன்று உள்ளது. வாசலிலேயே தொல்லியல் துறையின் அறிவிப்பு காணப்படுகிறது.


ஆனால் அருகில் கண்ணுக்குத் தெரிந்த யாருக்கும் அந்தக் கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. சந்நிதியில் இருக்கும் ஐயரிடம் கேட்கச் சொன்னார்கள். உச்சிகால பூஜை முடிந்து கோயில் சார்த்தும் நேரம் என்பதால் அவசர அவசரமாக மேலே செல்லச் சொன்னார்கள். செங்குத்தான 315 படிகள். மூச்சு இரைக்க இரைக்க மேலே சென்று முருகன் சந்நிதியில் இருந்த ஐயரிடம் கேட்டேன். அவருக்குத் தெரிந்திருந்தது. மலைக்கு வெளிப்புறத்தில்தான் அந்தக் குறிப்பிட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் ஓராண்டுக்கு முன், அங்கு செல்லும் வழியை மூடி மறைத்து, வேலி எழுப்பி, பூட்டு பூட்டியுள்ளனர் என்றார். அதற்கான சாவி கீழே கீழே இருக்கும் கோயில் காவலர் சந்திரசேகரன் என்பவரிடம் உள்ளது என்றார். அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் புராதனப் பழைமை வாய்ந்த சமணர் படுகைகளை சீட்டாட, மது குடிக்க, பெண்டிரை அழைத்து வந்து, கிடத்தி (யார் அறிவர்! சமணர் படுகைமீதே கூடக் கிடத்தி?) கொண்டாட என்று பயன்படுத்தினராம். இதனால் தில்லியிலிருந்து வந்து பார்த்த உயரதிகாரிகள், உடனடியாக பூட்டு/சாவி போட்டுவிட்டனராம்.

ஆ! மீண்டும் 315 படிகள் கீழே இறங்கி மேலே ஏறவேண்டுமா என்று தயக்கம். ஆனாலும் இந்த வாய்ப்பை விடமுடியுமா? கீழே இறங்கி வந்தால் சந்திரசேகர் இருந்தார். ஐயப்பன் மலைக்கு மாலை போட்டிருந்தார். காலில் செருப்பு இல்லை. மேலே வந்து கல்வெட்டுகளைக் காட்ட முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். அவ்வப்போது ஆராய்ச்சி மாணவர்கள் வருவதாகவும், அவர்களும் அங்கே உள்ள கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன, அவற்றின் பொருள் என்ன என்று கேட்பதாகவும், அதற்கான தகவல் கையேடுகள் ஏதும் இல்லாததால் அவற்றைக் கொடுக்க முடிவதில்லை என்றும் சொன்னார்.

மீண்டும் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினோம். சந்நிதிக் குருக்கள் பூஜையை முடித்துவிட்டு, உணவுடன் கீழே வந்துகொண்டிருந்தார். எனக்கு இடத்தைக் காண்பித்தபின் பூட்டுமாறு சொல்லிவிட்டுச் சென்றார். இடும்பன் சந்நிதி அருகே கதவு பூட்டியிருந்தது. அங்கே ஒரு யுவதியும் இரு இளைஞர்களும் உட்கார்ந்திருந்தனர். அந்தப் பெண் சற்று சத்தமாகவே ‘நீ என்ன லவ் பண்றியா இல்ல வேற யாரையாவது லவ் பண்றியான்னே தெரியலையேடா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் மேலே வரும்போதே ஓர் இளைஞர் சற்றே ஜகா வாங்கி, ‘சாமி கும்புடப் போறேன்’ என்று சந்திரசேகரனிடம் சொன்னார். ‘கோயில் கதவு மூடியாயிற்று, அதனால் கிளம்பிச் செல்லுங்கள்’ என்று அவர்களைத் துரத்திவிட்டு, கதவைத் திறந்துகொண்டு என்னை அழைத்துக்கொண்டு கல்வெட்டுகளைக் காண்பிக்கச் சென்றார்.

கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இவை. அங்கே சமணப் படுகைகள் சில உள்ளன. படுகைகளை ஒட்டி சில தமிழ் பிரமி எழுத்துகள் உள்ளன. மலை முகப்பில் சில இடங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின்மேல் சாக்கட்டியால் அழுத்தி எழுதியுள்ளனர். பார்த்தவுடன் படிக்கமுடியுமாறு.

இதில் ஒரு கல்வெட்டில்தான், ‘ஆதன் செல் இரும்பொறையின் மகனான பெருங்கடுங்கோனின் மகனான கடுங்கோன் இளங்கடுங்கோ வெட்டுவித்த படுகை, யாற்று செங்காயபன் என்ற சமண முனிவருடையது’ என்ற தகவல் வருகிறது. இதில் குறிப்பிடப்படும் அரசர்கள் எல்லோருமே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சேர மன்னர்கள். இவர்களில் இரும்பொறை (கல்வெட்டில் இரும்புறை என்று எழுதப்பட்டுள்ளது) அடித்த காசுகள் கரூர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.


அருகில், வேறு பல படுகைகளை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் அங்கு படுத்திருந்த சமண முனிவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 


அவற்றைப் பார்த்தபின், மறுபக்கம் சென்று அங்கே சித்தர்கள் வாழ்ந்த இடத்தைக் காண்பிக்கிறேன் என்றார் சந்திரசேகரன். மலையில் பின்புறத்தை நோக்கிச் செல்லும்போது சந்திரசேகரன் திடீரென்று நின்றார். பாறைக்கு அடியில் சரசரவென சத்தம். ‘ஏய், போ, போ, சூ’ என்று விரட்டினார். ‘சாரைப்பாம்புங்க, அதான் சரசரன்னு போகுது. நாகம்னா அப்படியே நிக்கும்’ என்றார். எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. கல்வெட்டைத் தேடி வந்து, பாம்பைச் சீண்டி, வம்பெதற்கு என்று ‘வேண்டாங்க, போதும் கிளம்பிடலாம்’ என்றேன். திரும்பி வரும்போது, ‘இங்க எல்லாமே பாம்புங்க இருக்குங்க’ என்று பீதியைக் கிளப்பினார். வழியில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாகப் பார்த்தபடி, அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.


ஒரே ஒரு கல்வெட்டை (மேலே உள்ளது), தமிழ் பிரமி எழுத்துகளைப் பார்த்துப் பார்த்து நானே எழுதிப் பார்த்தேன். முதல் வரி:

ந லி பி ஊ ர அ பி ட ன கு ற ம ம க ள

என்று வந்தது. ஐராவதம் மகாதேவனின் புத்தகத்தில் ‘பி’ என்பதை (3-ம் எழுத்து) ‘ய’ என்பதாகப் படிக்கவேண்டும் என்று குறிப்பு உள்ளது. நான் ‘அ’ என்று படித்ததை (6-வது எழுத்து) அவர் ‘ஆ’ என்கிறார். நான் ‘ற’ என்று படித்ததை (11-வது எழுத்து) அவர் ‘று’ என்று படிக்கிறார். இரு வரிகளையும் சேர்த்தால், வருவது:

‘நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி’.

அதாவது,

‘நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’.

‘ல்லி’ என்பதற்கு ‘லி’ மட்டும், ‘ட்ட’ என்பதற்கு ‘ட’ மட்டும், ‘ற்றி’ என்பதற்கு ‘றி’ மட்டும்தான் உள்ளன. மெய் எழுத்துக்கும் அகர உயிர்மெய்க்கும் வித்தியாசம் இல்லை. ஆனாலும்... 1800 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் எழுதியதை நாமே படிக்கமுடியும், ஒரு மாதிரி பொருளும் புரிந்துகொள்ள முடியும் என்பது கிளர்ச்சி தருவதாக உள்ளதல்லவா!

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2010 அன்று, கிழக்கு மொட்டைமாடியில், மாலை 6.30 மணிக்கு, பேரா. சுவாமிநாதன், ஐராவதம் மகாதேவனின் 'Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century AD' என்ற புத்தகத்தின் பொருள் பற்றிப் பேசுகிறார். (இது உலக எழுத்துகள் என்ற தொடரில் பேரா. சுவாமிநாதன் நிகழ்த்திவரும் பேச்சுகளில் இந்த மாதத்துக்கானது...)

***

நீங்கள் இந்தக் கல்வெட்டுகளைக் காண விரும்பினால், (பாம்புகளைக் கண்டு பயப்படாதவர் என்றால்,) செல்லவேண்டிய இடம்: கரூர்/புகளூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையம், மலைமீதுள்ள முருகன் கோயில். கோயில் காவலர் சந்திரசேகரனின் செல்பேசி எண்: 98650-13050. முன்னதாகவே பேசி, கீழிருந்தே அவரைப் பிடித்து மேலே அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். கரூரிலிருந்து நேராக பஸ் ஸ்டாப் கோயில் அருகிலேயே உள்ளது.

25 comments:

  1. நன்றி பத்ரி. மிக அருமையான கட்டுரை. தேவையான தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள். கிழக்கு அலுவலகத்தின் அருகில்தான் என் வீடு உள்ளது. ஆனால் கிழக்கில் நடக்கும் கூட்டங்கள் பற்றித் தகவல் தெரியாமலே இருந்திருக்கிறேன். தயவு செய்து எனக்குத் தகவல் தர முடியுமா? என் ஈ மெயில் முகவரி thi.parameswari@gmail.com.

    ReplyDelete
  2. இனி போகும்போது, நல்ல புகைப்படம் எடுக்க வசதியாக ஒரு நல்ல கேமரா கொண்டு செல்லுங்கள்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு.

    பகிர்ந்தமைக்கு நன்றி
    விஜய்

    http://www.poetryinstone.in

    ReplyDelete
  4. Badri
    Did any one register this inscription anywhere? Kindly find out the same. If this is new discovery, you gave us all a great wealth of sources.

    It is Great to know.

    ReplyDelete
  5. This is not a new discovery, nor am I a scholar in this field capable of making new discoveries! This was found in the 1960s and ASI has since then preserved this place. This has been documented in a few works including that of Iravatham Mahadevan's 'Early Tamil Epigraphy'.

    ReplyDelete
  6. நல்ல பதிவு, பிரமி எழுத்துக்களை தமிழ்ப்படுத்தி எழுதி இருந்தது அருமை, 2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பொருளை புரிந்து கொள்வதில் உள்ள பரவசம் தனிதான். நன்றி

    ReplyDelete
  7. தொல்லியல் ஆர்வம் என்போல் கொண்டோருக்கு இந்த பதிவு ஒரு விருந்து. இது போன்ற நூற்றாண்டுகள் கடந்த இடங்கள் மேலைநாடுகளில் இருந்தால், எப்படியெல்லாம் பாதுகாப்பார்கள்? பெருமூச்சு விட்டபடி நாம் வேதனை படத்தான் முடியும்!

    ReplyDelete
  8. ”படுகைகளை வெட்டுவித்தவர்க”

    படுகை என்றால் என்ன?

    பிரமி என்பதும் கிரந்த எழுத்தும் ஒன்றா?

    ReplyDelete
  9. பத்ரி சார்...

    இதையும் வாசியுங்கள்...

    http://www.tamilartsacademy.com/books/tavam/chapter26.xml

    http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=117&cid=4&aid=6596

    - நம்பி

    ReplyDelete
  10. அருமையான முயற்சி

    நன்றிகளும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  11. >>‘நீ என்ன லவ் பண்றியா இல்ல வேற யாரையாவது லவ் பண்றியான்னே தெரியலையேடா’

    - இதுக்கு என்ன பதில் கிடைத்தது அந்த பெண்ணுக்கு?! கல்வெட்டு பற்றி எல்லாம் அப்புறம் பேசுவோம் :)

    ReplyDelete
  12. படுகை = படுக்கை. மேலே அப்படிப்பட்ட கல் படுக்கையின் படம் ஒன்றைக் கொடுத்துள்ளேன். பிரமி வேறு, கிரந்தம் வேறு. பிரமியிலிருந்துதான் இந்தியாவின் அனைத்து மொழி எழுத்துகளும் கிளைத்தன. அப்படிக் கிளைத்த ஒன்றுதான் கிரந்தம். அப்படிக் கிளைத்த மற்றொன்றுதான் தமிழ் எழுத்துகளும், தேவநாகரி எழுத்துகளும்கூட. பிரமி வழியாக, கிரந்தம் வழியாகவே தென் கிழக்கு ஆசியாவின் பல்வேறு மொழிகளின் (தாய், க்மெர், வியட்நாமிய...) எழுத்துகளும் உருவாகின.

    இந்தியாவுக்கு அந்நியமான, பிரமி வழியாகத் தோன்றாத, ஆனால் இப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் எழுத்து உருது மட்டுமே. பிற அனைத்துமே பிரமி வழியாக உருவானவை.

    ReplyDelete
  13. ராஜ்: பூஜை வேளையில் கரடிபோல நாங்கள் போய் அவர்களைத் துரத்திவிட்டோமே.

    ReplyDelete
  14. who is the creature who asked u whether u made a new find? ur followrs r evn more hilarious than u - hahahaha

    ReplyDelete
  15. பதிலுக்கு நன்றி..

    புதிய தகவல்கள் எனக்கு...

    நானும் ஒரு ஐராவதம் மகாதேவன் புத்தகத்துடன் அங்கு செல்லும் ஆசையை தூண்டியது பதிவு,,,

    ReplyDelete
  16. படிக்கையில் பிரமி என்றால் என்னவென்று தோன்றியது,கீழே உங்கள் எளிமையான விளக்கம்,புரிய உதவியது, நன்றி :)

    ReplyDelete
  17. இதையும் கொஞ்சம் படிக்கலாமே


    பள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்!

    http://maattru.blogspot.com/2010/12/blog-post_08.html#more

    ReplyDelete
  18. பத்ரி

    புகளூர் என்றில்லை கிட்டத்தட்ட ஆள் நடமாட்டமில்லாத எல்லா சமணர் படுகைகளுமே காதலர் படுக்கைகளாகவே பயன் படுகின்றன. சமணர் பள்ளிகளில் இருந்துதான் “பள்ளிக்கூடம்” என்பதே வந்தது என்பார்கள். நன்கு வழு வழுவென்று குளுமையாக க்ரானைட் குகைகளாகத் தேடித் தேடி வெட்டி வைத்திருக்கிறார்கள் எதிர்கால காதல் ஜோடிகளின் படுக்கை வசதிக்காக. நாங்கள் சித்தன்னவாசல் சென்றிருந்த பொழுது கிட்டத்தட்ட ஒரு ஜோடி மீது தடுக்கி விழ இருந்தோம். அவசரமாகத் துணிகளைத் தேடிப் பிடித்து ஓடினார்கள். தெரியாத்தனமா மத்தியான வெயிலில் சமணர் குகையைப் பார்க்கப் போகிறோம் பேர்வழி என்று கிளம்பிப் போய் ஜோடிகளின் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டோம். அங்கு பிராமி எழுத்துக்களுக்குப் போட்டியாக நம்ம காதலர்கள் வேறு அதே கல்வெட்டில் தங்களது அழியாக் காதலையும் பொறித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் கண்டு ரசியுங்கள். என் ஆல்பத்தில் பாருங்கள். அங்கேயும் காவலர் பூட்டி வைத்துத்தான் பார்க்கிறார் இருந்தாலும் ஒரு சில குன்றுக் குகைகளுக்கு வேலிகள் கிடையாது. ஏகாந்தமான இடம். தொல்பொருள் துறை பூட்டி வைக்காமல் என்ன செய்யும்? தமிழ் நாட்டில் “ஒதுங்குவதற்கு” ஏற்ற இடம் சமணர் படுகைகளே என்ற விஷயம் ஓட்டெடுப்பு நடத்தினால் தெரிய வரும். இந்தத் தொல்லை தாங்காமலேயே பெரும்பாலான தொல்பொருள் இடங்களை இப்படி ரகசியமாகப் பூட்டியே வைத்திருக்கிறார்கள். முன்னாலேயே சொல்லி விட்டுப் போனால்தான் பார்க்க முடியும். மதுரைப் பக்கம் போவதாக இருந்தால் சொல்லுங்கள் வீட்டுப் பக்கம் சில இடங்கள் உள்ளன. சுவாமிநாதன் சாரைக் கேட்டதாகச் சொல்லவும்.

    அன்புடன்
    ச.திருமலை

    மதுரை சமணர் மலையில் உள்ள பிரமி கல்வெட்டு எழுத்துக்கள் (
    இதையும் கொஞ்சம் மொழி பெயர்த்துப் போடுங்கள்) இங்கே:

    http://picasaweb.google.com/strajan123/SAMANARHILLS#

    சித்தன்னவாசல் இங்கே:
    நவீன ஓவியர்களின் i love you ladyes ஐத் தவற விடாதீர்கள் :))

    http://picasaweb.google.com/strajan123/SITHANNNA#

    நார்த்தா மலை இங்கே:

    http://picasaweb.google.com/strajan123/NORTHAMALAI#

    ReplyDelete
  19. nice one sir.. i reside nearby karur but after reading this post 1ly i got to know about this...

    http://scrazyidiot.blogspot.com/

    ReplyDelete
  20. Hi Badri,
    Have you published the life history of important people of Tamilnadu (for kids). If not why don't you think about it. If you have already published G T Naidu's life history?

    Nagaraj K

    ReplyDelete
  21. Badhri Sir,
    Sowkkiyama...? Somehow stumbled across your blog!!! And am more than glad to find a post on Pugazhiyur!!! :)
    Would have tried to meet you when you came here if at all I had known you're here. Btw HERE is the post of my trip to Arnattan Malai aka Pugazhimalai!!! :)
    And ya, am not sure if you'll remember me. Lemme try to remind you. Rememeber Bhushavali who gave the presentation on the Textiles of Ajanta along with Prof. Swaminathan. That Bhushavali is me!!! Hope you remember now.
    Do drop by my blog sometime!!! :)
    My Travelogues
    Fashion Panache

    ReplyDelete
  22. கிரந்த எழுத்து அக்கப்போர் ஒன்று வெகுஜன மக்களுக்கு புரியாத அரசியலுடன் நடந்து கொண்டுருக்கிறதே?

    அதைப்பற்றி சற்று விபரமாக எழுதுங்களேன்.

    ReplyDelete
  23. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  24. அன்றைய பழைய தலைமுறையின் வாழ்வியல் ஆதாரங்களைத் தேடித் தேடிக் காண்பதனால்தான்,இன்றைய புதிய தலைமுறையிலும் உங்கள் கொடி பறக்கிறது ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete