Sunday, February 19, 2012

உத்தரமேரூர் - 1

சென்னைக்கு மிக அருகில் இருந்தாலும் நான் இதுவரையில் உத்தரமேரூர் சென்றதில்லை. அங்கே வைகுண்டநாதப் பெருமாள் கோவில் என்ற பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. அதன் சுற்றுப்புறம் முழுதும்தான் குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. சதுர்வேதி மங்கலம் என்ற பார்ப்பனக் குடியிருப்பில் உள்ள மக்கள் தமக்காக உருவாக்கிக்கொண்ட தேர்தல் வரைமுறைகள்தாம் இவை. யார் தேர்தலில் போட்டியிடலாம், அந்தத் தேர்தலில் யாருக்கு வாக்குரிமை என்பதில் தொடங்கி, எம்மாதிரியான துணைக்குழுக்கள் உள்ளன, அவை எப்படி நிர்வாகம் செய்யும் என்ற பலவும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.வழிபாடு உண்டு. ஆனால் காலையில் சிறிது நேரத்துக்கு மட்டும் என்று ஒரு பட்டர் வந்துவிட்டுப் போவார் போலும்.

நான் சென்றபோது சந்நிதி பூட்டப்பட்டிருந்தது.

தொடக்க காலச் சோழர் கோவில் மாதிரியில் கருவறையும் அர்தமண்டபமும் சேர்ந்த பகுதி. அதன்முன் பிற்காலத்தில் (நாயக்கர்) இணைக்கப்பட்ட மகாமண்டபம் ஒன்று (நேர்த்திக் குறைவானது). இந்தக் கோவில் முழுமையுமே சற்றே உயர்த்தப்பட்ட ஒரு பீடத்தின்மீது கட்டப்பட்டுள்ளது.


சோழர் காலத்தில் சிவன் கோவிலின் சுற்றுப்புறக் கோட்டங்களில் (கோஷ்டங்கள் = பிறைகள்) எந்தெந்த தெய்வம் காணப்படும் என்பது பெருமளவு நிறுவப்பட்டிருந்தது. கருவறை மட்டுமாக இருக்கும் பட்சத்தில் மூன்று கோட்டங்கள் மட்டுமே இருக்கும். கருவறை கிழக்கு பார்த்து இருந்தால் தெற்கு கோட்டத்தில் சிவன், மேற்கு கோட்டத்தில் விஷ்ணு, வடக்கு கோட்டத்தில் பிரம்மா இருப்பார். (எ.கா: திருக்கட்டளை.)

கருவறையும் அர்த மண்டபமும் இணைந்திருக்கும் கோவிலாக இருந்தால், ஐந்து கோட்டங்கள் இருக்கும். தெற்கில் இரண்டு, மேற்கில் ஒன்று, வடக்கில் இரண்டு. இவற்றில் தெற்கில் கணபதியும் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணு (அல்லது பின்னர் லிங்கோத்பவர்), கிழக்கில் பிரம்மா, துர்கை ஆகியோர் இருப்பர். (எண்ணற்ற உதாரணங்கள். இன்று கிட்டத்தட்ட எந்த சிவன் கோவிலுக்குப் போனாலும் இப்படித்தான் இருக்கும்.)

ஆனால் விஷ்ணு கோவில் கோட்டங்களில் எந்தெந்தப் பிரதிமைகள் இருக்கும்? தெரியவில்லை.

உத்தரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலின் கோஷ்டங்களில் எல்லாம் வெறுமையாக இருந்தன. அதேபோல விமானம், கிரீவம் ஆகிய பகுதிகளில் விஷ்ணுவின் அவதாரங்களும் கருடனும் மட்டும்தான். அடிப்பக்கம் கருங்கல்லாலும் மேல் பக்கம் சுதையாலும் கட்டப்பட்ட கோவில் இது.


சிற்பங்கள் அதிகம் பேசும்படி இல்லை என்றாலும் இதன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளுக்காகவே இங்கு ஒருவர் சென்று வரவேண்டும். நாகசாமி இந்தக் கல்வெட்டுகளை முறையாக விளக்கி எழுதிய ஒரு புத்தகம் உள்ளதாம். அதனை நான் இதுவரை பார்த்ததில்லை.

(இன்னும் ஒரு பாகம் உள்ளது)

4 comments:

 1. உத்தரமேரூரில் ஒரு முருகன் கோயில் இருப்பதாகவும் சொல்வார்களே. அது வேறு கோயிலா?

  கண்ணதாசன் ஒரு பாடலில்
  பக்தர்கள் சேரூர்
  பழவினை தீரூர்
  உத்தரமேரூர் அமர்பவனே
  என்று பாடியிருக்கிறார்.

  அந்தக் கல்வெட்டுகளின் எழுத்து வடிவங்களை வைத்துக் காலத்தைக் கணக்கிடலாம் என்று சொல்வார்கள்.

  சென்னையிலிருந்து எந்தப் பக்கம் செல்ல வேண்டும்?

  உத்தரமேரூர் என்றால் இன்னொருவரும் நினைவுக்கு வருவார்.

  அவர்தான் உத்தரமேரூர் நாரதர் நாயுடு :)

  ReplyDelete
 2. நண்பர் சங்கரநாராயணன் அனுப்பிய இரு சுட்டிகள்:

  (1) Kanchi Paramacharya's lecture on Uthiramerur constitution. This was given in 1949.

  http://www.kamakoti.org/tamil/part4kural218.htm

  there are about 30-40 chapters on Uthiramerur

  (2) Nagasamy's articles

  http://tamilartsacademy.com/articles/article01.xml
  http://tamilartsacademy.com/articles/article10.xml

  ReplyDelete
 3. ராகவன்: உத்தரமேரூர் விஷ்ணு கோவிலுக்கு அடுத்தே, முருகன் கோவில் உள்ளது. அங்கேயே பழம்பெருமை வாய்ந்த ஒரு சிவன் கோவிலும் உண்டு. REACH Foundation உடைந்துகிடந்த அந்தக் கோவிலை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. இந்த கல்வெட்டை பார்த்து ரசிக்க தேவையான வண்டி நிறுத்தும் இடமே இல்லை.வயதான அப்பா & அம்மாவை கூட்டிக்கொண்டு போய் வண்டியில் இருந்தே காண்பித்து வரவேண்டியதாகிவிட்டது.

  ReplyDelete