Sunday, February 19, 2012

மாகறல்

உத்தரமேரூரிலிருந்து காஞ்சீபுரம் செல்ல 24 கிமீதான் என்பதால் வைகுண்டநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அதனையும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோவிலையும் ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு வளைவில் திரும்பும்போது திடீர் என்று வலப்பக்கம் ஒரு கோவில் தென்பட்டது.

மதிலைத் தாண்டி கருவறையின் பின்பக்கம் தெரிந்தது. கஜபிருஷ்ட வடிவம். மிகச் சில கோவில்களே அப்படிப்பட்டவை என்பதால் அப்படியே வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்றோம். எந்தக் கோவில், எந்த ஊர் என்று எதுவும் தெரியாது. மாகறல் என்று எழுதியிருந்தது. மாகறலீசுவரர் என்பது சிவனுக்கான பெயர்.


மிகச் சிறிய ஊரின் மிக அழகிய கோவில், மிக அழகான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலின் இடப்பக்கம் ஒரு காவல் நிலையம், புதிதாக சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தது. கோவில் வாசலில் சில பையன்கள் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கோவில் குருக்கள் அப்போதுதான் லிங்கத்தின் ஆடையைக் களைந்து, நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து அபிஷேகம் செய்வித்தார். லிங்கம் மிக நூதன வடிவில் இருந்தது. கதையை விளக்கினார் குருக்கள். ராஜேந்திர சோழனுக்கு பொன் உடும்பு வடிவில் காட்சி கொடுத்தாராம் சிவன். உடும்பைத் துரத்திப் பிடிக்கச் சென்றான் சோழன். உடும்பு போக்குக் காட்டி ஓடி ஒளிந்து திடீரென ஒரு புதருக்குள் சென்று மறைந்துகொண்டது. அதன் வால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

அந்த உடும்பு வால் வடிவுதான் லிங்கம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலம்.

புதுக்கோட்டை பயணத்தின்போது இரும்பாநாடு என்ற இடத்தில் (அந்தப் பகுதியிலேயே இருக்கும் ஒரே ஒரு) கஜபிருஷ்ட வடிவிலான கருவறையைப் பார்த்தோம் என்று எழுதியிருந்தேன். அதேபோன்ற, அதேமாதிரியான அழகான அரைவட்ட வடிவம். ஐந்து கோஷ்டங்கள். ஒவ்வொரு கோஷ்டத்திலும் என்ன இருக்கவேண்டும் என்ற திட்டவட்டமான முடிவில் மிகச் சரியாக இருந்தன என்றாலும் தட்சிணாமூர்த்தி நிச்சயம் பின்னர் செய்யப்பட்ட, இந்தக் கோஷ்டத்துக்குள் பொருந்தாத சிறிய ஒரு சிலை. ஒரிஜினல் காணாமல் போயிருக்கவேண்டும்.






ராஜேந்திர சோழன் கட்டினானோ இல்லையோ, குலோத்துங்கன் காலக் கல்வெட்டு இருக்கிறது; எனவே குறைந்தது குலோத்துங்க சோழன் காலத்ததாகவாவது இருக்கவேண்டும். ஒரிஜினல் சோழர் கோவிலைச் சுற்றி, எப்போதும்போல பிற்கால நாயக்க மன்னர்கள் உருவாக்கியிருக்கும் பெரும் மண்டபங்கள், தூண்கள், புதிய சந்நிதிகள் (அம்பாள், நவக்கிரகங்கள், பிற) ஆகியவற்றைக் காணலாம்.



கஜபிருஷ்டக் கருவறை மேல் சுதையால் எழுப்பப்பட்டிருக்கும் விமானத்தில் நவீன சுதை + ஆயில் பெயிண்ட் கொஞ்சம் பார்க்க அசிங்கமாகத்தான் உள்ளன. வேறு வழியில்லை!

வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை காஞ்சீபுரம் செல்லவேண்டும்.

19 comments:

  1. //வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம். //

    மகிழ்ச்சி! தீவிர ஆழ்வார்க்கடியானான உங்களை எம்பெருமான் தான் தனது திருவிளையாடல் மூலம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளான். :-)

    ReplyDelete
  2. //மகிழ்ச்சி! தீவிர ஆழ்வார்க்கடியானான உங்களை எம்பெருமான் தான் தனது திருவிளையாடல் மூலம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளான். :-)//

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. எட்டில் ஐந்தும் ஐந்தில் எட்டும் காணலாம் ;>)

    ReplyDelete
  3. திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஸ்தலம் என்று கூறுகிறீர்கள். அவர் காலம் ராஜராஜனுக்கும் முற்பட்டதன்றோ. அப்படியிருக்க ராஜெந்திரனால் கட்டப் பட்டது என்று சொல்வது எப்படி ?
    ---பணிவரையன்

    ReplyDelete
  4. //
    வழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம்.
    //

    வைணவத்தில் ஃபத்துவா உண்டா ?
    இருந்தால் நீங்கள் செய்த காரியத்துக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ReplyDelete
  5. Paadal Petra sthalam. Vingu vilai kazhani migu kadaisiyargal ...endru thodangum. Nice work

    ReplyDelete
  6. பணிவரையன்: உண்மைதான். இதுபோன்ற பல இடங்கள் உண்டு. சமயக் குரவர்கள் பாடிச் செல்லும்போது மிகச் சிறு கோவில் ஒன்றே இருந்திருக்கும். பின்னர் பேரரசன் ஒருவன் அங்கே பெரும் கோவில் ஒன்றை எழுப்புவான். இது சைவ, வைணவக் கோவில்கள் பலவற்றுக்கும் பொருந்தும். பின்னர் இக்கோவில்களில் தலபுராணங்கள் ஏற்படுத்தப்படும். பிற்காலத்தில் இதே கோவில்கள் மேலும் பெரிதாக விரிவாக்கப்படும்.

    மாகறலில் இப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  7. மாகறல் பெயர்க்காரணம் தெரிந்ததா?

    ReplyDelete
  8. கறல் என்றால் ‘வறண்டது’, ‘காய்ந்தது’, ‘விறகு’ என்ற பொருள் என்பதாக தமிழ் லெக்சிகன் சொல்கிறது. கறல் அல்லது மாகறல் என்பதே உடும்பின் ஒரு வகையாக, ஒரு பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. "மாகறம்" என்பது வடமொழியில் உடும்பு!
    அது மாகறலேஸ்வரர்-ன்னு ஆகி விட்டது!

    விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை ஆடல்அரவம்
    மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் "மாகறலுள்ளான்"

    கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்கள்-அணி செஞ் சடையினான்
    செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்-உடனே!
    - இதுவே சம்பந்தர் தேவாரம், இத்தலத்தினுக்கு!

    சம்பந்தர் காலத்திலேயே உடும்பு உண்டு! மாகறல் என்றே குறிப்பிடுகிறார்!
    இராசேந்திர சோழன்-உடும்பு கதை பின்னாளைய புனைவாக இருக்கலாம்!

    சோழன் இக்கோயில் பணியாளர்களைத் தண்டித்து, ஊரை விட்டு வேற்றூருக்கு அனுப்பிய தகவல் மட்டுமே வரலாறு!
    ---

    இங்கே முருகன், யானை மேலேறி ஸ்டைலா உக்காந்து இருப்பான்!:) பார்த்தீயளா?:)

    ReplyDelete
  10. கஜபிருஷ்ட விமானம் = தூங்கானை மாடம் (என்பதே எழிலான தமிழ்ப் பெயர்)
    தூங்கானை மாடம் தொழுமின்களே-ன்னு தேவாரப் பாடல்களில் வரும்!

    கஜபிருஷ்டம் என்பது சிற்பக் கலை அமைப்புகளில் ஒன்று!
    தொண்டை/நடு நாட்டில் தான் இவ்வகை அமைப்புகள் அதிகம்!

    யானையின் பின் பக்கம் போல இருக்கும் இந்த விமானம், உண்மையில் ஒரு உருளை வடிவக் கருவறை(Cylindrical)!

    செவ்வகம் (rectangle) நாலு சுவர் போல் அடைக்காது, உருளை அமைப்பில் செய்வது ஒரு சிறப்பு! கருவறை மூலவர், உருளையின் குவிமையமாக அமைவார்! உள்வட்டத்தில் எங்கிருந்து அளந்தாலும் அதே தொலைவிலேயே அமைவார்!

    ReplyDelete
  11. மாடம்பாக்கம் (தாம்பரம், சேலையூர் அருகே) உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலிலும் இதே போன்ற கருவறை அமைப்பு உள்ளது. ASI போர்டில் 10-ம் நூற்றாண்டில் சோழ அரசின் பிரதம மந்திரி அநிருத்தர் கட்டியதாகத் தகவல் உள்ளது

    ReplyDelete
  12. காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள சுரகரேஸ்வரர் திருகோவிலில் கஜப்ருஷ்ட வடிவிலான கருவறை உள்ளது.
    மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் கோவில் உள்ளது

    http://www.flickr.com/photos/sureshvenkat/4904644384/in/photostream
    http://www.flickr.com/photos/sureshvenkat/4904054141/in/photostream

    ReplyDelete
  13. Thirumizhasai and Pozhichalur temples also கஜப்ருஷ்ட கோவில்

    ReplyDelete
  14. http://temple.dinamalar.com/New.php?id=73

    ReplyDelete
  15. Hello RaviShankar,
    Can you please send the full lyrics of”Vingu Vilai Kazhani” song in Tamil. I am having mp3 the songs with me but I need the wordings. So please send the lyrics.
    Regards,
    Sowmya

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. I need thirumaagaral songs in mp3 or mp4

    ReplyDelete