Sunday, February 19, 2012

உத்தரமேரூர் - 2

பராந்தக சோழன் காலக் கோவிலுக்கு முற்காலத்திய விஷ்ணு கோவில் அதே தெருவில் சற்றுத் தொலைவில் உள்ளது. அதுதான் மக்கள் கூட்டமாகச் செல்லும் கோவில். சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில். மிக விசேஷமான கோவில். காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலின் மாதிரியில் அமைக்கப்பட்டது. இங்கே மொத்தமாக ஒன்பது கருவறைகள் விஷ்ணுவுக்கென்று உள்ளன.


இந்தக் கோவில் தண்டிவர்மப் பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் நண்பர் கோபு.

கோவில் கருவறையே மூன்று அடுக்குகளால் ஆனது. தரைத் தளத்தில் நான்கு கருவறைகள். அதில் கிழக்கு பார்த்திருக்கும் முதன்மைக் கருவறைக்குத்தான் அர்த மண்டபம். அங்கே விஷ்ணு, திருமகள், நிலமகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார் (படம் எடுக்கவில்லை.) சுற்றி பிற மூன்று திசைகளையும் பார்த்தபடியான மூன்று கருவறைகளில் இரண்டில் நின்ற திருக்கோலம், ஒன்றில் அமர்ந்த திருக்கோலம்; அதன்மீது தலை விரித்த நாகம். அனைத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி உண்டு.




இரண்டாம் நிலையில் இதேபோல நாற்திசைகளையும் பார்த்தபடியான நான்கு கருவறைகள். அதற்குச் செல்ல கீழிருந்து மாடிப்படிகள் உள்ளன. இங்கே கிழக்கு பார்த்த முதன்மைக் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி. சுற்றுப்புறக் கருவறைகளில் தெற்கில் கிருஷ்ணனும் அருகில் அருச்சுனனும், மேற்கில் யோக நரசிம்மர், வடக்கில் பூவராகர். (இந்த நிலையில் எதையும் படமெடுக்கவில்லை.) இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்ல குறுகிய படிகள். சற்றே ஆகிருதியானவர்கள் மேலே ஏறிச் செல்வது கடினம்.

மூன்றாம் நிலையில் ஒரேயொரு கருவறை. இதில் கிடந்த திருக்கோலத்தில் அநந்தசயனப் பெருமாள். நாபியிலிருந்து பிரமன். காலடியில் கையில் வாள் ஏந்திய மது, கைடபர்கள். தரையில் மார்க்கண்டேய மகரிஷி. அவருடைய தலைமீது விஷ்ணுவின் கை படுகிறது. காலடியில் பூதேவி. தெற்குச் சுவரை ஒட்டி பிரமன் நிற்கிறார். வடக்குச் சுவரை ஒட்டி கையில் மழுவும் மானும் ஏந்திய சிவன். (வைஷ்ணவ வெறிக்கு ஏற்ப சிவன் நெற்றியில் நாமத்தைப் பரக்கச் சாத்தியிருக்கிறார்கள். சைவக் கோவில்களில் விஷ்ணுவுக்கு நெற்றியில் பட்டை போடுவதில்லை!)



இம்மாதிரியான அமைப்புக்கு ஏற்றாற்போல கோவில் விமானம் மிகவும் புதியதொரு மாதிரியில் நட்சத்திர அமைப்பில் உள்ளது. இதற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர் என்று சென்ற மாத தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்ரீதரன் கூறினார்.


இக்கோவிலில் தரைத் தளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று விஷ்ணு சந்நிதிகளுக்கும் மேலே படியில் ஏறிச் செல்லவேண்டும். அந்தப் படிகளின் கீழ்ப்புறம் மூன்று புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் ஆச்சரியமான, என்னவென்று கண்டுபிடிக்க முடியாத இரண்டு சிற்பங்களைப் பார்த்தேன்.

முதலில், கண்டுபிடிக்க எளிதான சிற்பம். கஜலக்ஷ்மி சிற்பம். அகலம் குறைவாக உள்ள இடத்திலும் இரண்டு யானைகள் ஒன்று குட நீரை தாமரைமேல் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிமேல் சேர்க்க, மற்றொரு யானை குடத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது. இதன் லேண்ட்ஸ்கேப் வடிவத்தை மாமல்லபுரம் வராக மண்டபத்திலும் ஆதிவராக மண்டபத்திலும் மிக அழகாகக் காணலாம். கீழே இரு பக்தர்கள். ஒருவர் கைகூப்பி நிற்க, மற்றவர் கையில் இரு கையிலும் இரு மலர்களுடன் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்துக்கு மேலாக உள்ள மகர தோரண வேலைப்பாடு மிக அருமையாக உள்ளது. இது தெற்குப் பக்கம் உள்ளது.



மேற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருவர். இவர்கள் கடவுளர்கள் அல்லர். எனவே ஒருவேளை இந்தக் கோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


வடக்குப் பக்கத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருக்கிறார். மேலே உள்ள மகர தோரணத்தின் இடையிலும் மினியேச்சராக உட்கார்ந்து தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அவருக்கு அருகில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் இரு முனிவர்களும் காணப்படுகிறார்கள். (காண்க: விஜயின் பதிவு.)



விஜய் தன் பதிவில், இந்த முனிவர் பிருகு என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு குடை மேலே இருப்பதால் சமண உறவுடைய காட்சியோ என்றும் சந்தேகம் வருகிறது. சமண ஐகனோகிராபியில் தீர்த்தங்கரர்கள் தலைமீது முக்குடையும் ஆசிரியர்கள் தலைமீது ஒரு குடையும் இருக்கும். ஆனால் இந்தக் கோவில் மிகத் தெளிவாக ஒரு விஷ்ணு கோவில்தான். வேறு எங்கும் சமணத்துடனான தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் கோவிலில் பல்லவ கிரந்தத்திலும் தமிழிலும் சுற்றுச் சுவரில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சொல்லும் கதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

***

இங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கே வைகுண்டப்பெருமாள் கோவிலை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கிளம்பினேன். ஆனால் வழியில் ஓர் உடும்பு பிடித்துக்கொண்டது.

(அடுத்த பதிவில்...)

2 comments:

  1. கஜலட்சுமியை க்ளோசப்பில்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அழகான சிற்பங்கள்.

    நாகப்படத்தோடு பரந்தாமன் தேவியரோடு இருக்கும் சிற்பம் மிக அழகு.

    சைவமோ வைணவமோ நாகம் இல்லாமல் இல்லை போலும்!

    அந்த முனிவரின் தவக்கோலத்தைப் பார்த்ததும் எனக்கும் சமணச் சந்தேகம் வந்தது உண்மைதான்.

    ReplyDelete
  2. கோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக
    அந்த காலத்திலேயே ஆண்/பெண் உயரங்களை பாருங்கள், அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள்.
    சிற்பக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த மாதிரி இடங்கள் செம விருந்து தான்.

    ReplyDelete