Monday, February 13, 2012

பிரம்மகிரி மலையேற்றம்

நண்பர் சந்துருவுடன் நான், பாரம்பரியச் சின்னங்கள் உள்ள சில இடங்களுக்குச் சென்றுள்ளேன். மகேந்திரவர்மன் வழியில், மாமல்லபுரம், சமீபத்தில் புதுக்கோட்டை போன்றவை. அவருக்கு ஊர் சுற்றுவதும் மலை ஏறுவதும் பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அப்படியல்லவே. இந்த ஆண்டு ஜூன் மாதம் இமயமலை செல்கிறோம், வருகிறாயா என்று கேட்டார். மலை ஏறிச் செல்வது என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் ஆசை மட்டும் உண்டு. சரி, அதற்கு முன்னதாக, சின்னதாக, பிரம்மகிரி என்ற இடத்துக்குப் போகலாம் என்றார். வெறும் 1600 மீட்டர் உயரம்தானாம்.

போய்த்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.

ஒரு முழ நீளப் பட்டியலைக் கொடுத்தார். என்ன முதுகுப் பை, என்ன கண்ணாடி, உணவு, உடை, காலணி, அது, இது என்று நீளமான பட்டியல். பின்னொரு பதிவாக அந்தப் பட்டியலையே இடுகிறேன்.

வருவோர் அனைவரும் சந்துருவின் நண்பர்கள். ஆனால் பெரும்பாலானோர் ஒருவரை ஒருவர் இதற்குமுன் பார்த்ததில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரே நபர் சந்துருதான்.

வெள்ளி இரவு பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறினோம். சனி அதிகாலை 4.00 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தோம். அந்த ஊரிலிருந்தே சேர்பவர்கள் சேர்ந்துகொண்டனர். மார்ஸ் அட்வென்ச்சர்ஸ் என்ற கம்பெனிதான்  ஏற்பாடுகளைச் செய்பவர்கள். வேன், உணவு, கூட உதவி, வழிகாட்டுதல் எல்லாம் அவர்கள்தான். காமேஷ்தான் நிறுவன முதலாளி. அவருடன் சுனில், மது என்ற இரு ஊழியர்கள். பயணத்தில் ஈடுபட்டோர் நாங்கள் மொத்தம் 11 பேர். ஆக மொத்தம் 14 பேர் குழுவில் இருந்தோம். உணவுப் பொருள்கள், சமைக்க வேண்டிய அடுப்பு ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்கொண்டு வந்தனர். பிற அனைத்தையும், படுப்பதற்கான படுக்கையையும், குடிநீரையும் நாங்களேதான் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். போர்ட்டர் வசதி கிடையாது. அவரவர் உடல் எடையுடன் குறைந்தது 7-8 கிலோ சேர்ந்துகொண்டது.


பெங்களூருவிலிருந்து கோனிகொப்பல் சென்று அங்கே காலையுணவை முடிக்கும்போது மணி 9.00 இருக்கும். அங்கிருந்து இருப்பு நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தைச் சென்று சேரும்போது மணி 10.30. எங்கள் மலைப் பயணம் அங்கிருந்து ஆரம்பமானது. இது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் கர்நாடக வனத்துறையிடமிருந்து எழுத்துமூலம் அனுமதி பெற்று, ஒரு வனத்துறை ஊழியர் உடன் வரும்போதுதான் செல்லமுடியும். இந்த அனுமதி கிடைக்கவே பல மாதங்கள் தாமதம் ஆனதாம். விலங்குகளுக்கான இனவிருத்திப் பருவம் என்பதால் வனத்துறை அனுமதி தரவில்லை. (தாமதம் ஆனதால்தான் என்னால் இதில் கலந்துகொள்ள முடிந்தது!)

வனத்துறை அலுவருடன் சேர்ந்து 15 பேர் கிளம்பினோம்.

முதல் ஒரு மணி நேரத்திலேயே எனக்கு உயிர் போய்விட்டது. நகரவாசி, சுகவாசியான எனக்கு முதல் சில நிமிடங்கள் இருந்த பரவசம் போய், காலில் வலி எகிறிவிட்டது. சில நாள்களாக நடைப்பயிற்சி எல்லாம் செய்துவருகிறேன் என்றாலும் திடீர் திடீர் என மேலும் கீழுமாக பூமி மாறி மாறிச் சென்றதில் உடல் மீதான அழுத்தத்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. முகமெல்லாம் ஜிவ்வென்று சூடாக ஆரம்பித்தது. மூச்சு இரைக்க ஆரம்பித்தது. இதே வேகத்தில் போனால் இதயம் வெடித்துவிடும் என்று தோன்றியது.

எதற்காக இந்தப் பயணத்தில் வர ஒப்புக்கொண்டோம் என்று ஆகிவிட்டது. பேசாமல் அப்படியே திரும்பிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. அஜந்தா, எல்லோரா என்றாலாவது ஏறிச் சென்றால் இறுதியில் ஏதேனும் சிற்பங்களை, ஓவியங்களையாவது பார்க்கலாம். இங்கே ஏறி முடித்தபின் என்ன இருக்கும்? ஏறுவதும் இறங்குவதும்தான் நோக்கம் என்றால், இவ்வளவு கஷ்டப்பட்டு அதனைச் செய்துதான் ஆகவேண்டுமா? வழியில் எங்கேயாவது உட்கார்ந்துவிட்டால் பிறருக்கு அதனால் தொல்லைகள் தரவேண்டியிருக்குமே? கேம்ப் சைட் இருக்கும் இடம் வரையிலாவது போய்விட முடியுமா? திரும்பிவிடுவது இன்னும் மேலானது ஆயிற்றே?

பின்னர் பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களும் இதேமாதிரி யோசித்ததாகச் சொன்னார்கள். நாங்கள் நான்கு பேர் முதல்முறை இப்படிப்பட்ட டிரெக்கிங்கில் செல்பவர்கள். அதில் என்னுடைய ஃபிட்னெஸ் லெவெல்தான் படு மோசம் என்பது என் கருத்து.

தர்பூசணியைக் கீறினால் கொட்டும் தண்ணீர் மாதிரி வியர்த்து வழிந்துகொண்டிருந்தேன். தலை லேசாகக் கிறுகிறுக்கத் தொடங்கியது. கையோடு கொண்டுவந்திருக்கும் குளுகோஸ், எலெக்ட்ரால் எல்லாவற்றையும் உட்கொள்ளவேண்டிய நேரம் இதுவோ என்று தோன்றியது. மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டும் என்றால் இன்ஷூரன்ஸ் கார்ட் எடுத்து வந்திருக்கிறேனா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அதே நேரம், கொஞ்சம் கொஞ்சமாகத் தடவித் தடவி நடக்க ஆரம்பித்தேன். பிறரும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் மன தைரியம் ஏற்பட்டது. அதே நேரம் ஒரு நான்கைந்து பேர் சர்வ சாதாரணமாக நடந்து சில கிலோமீட்டர்கள் முன்னால் சென்றுவிட்டனர். அதைப்பற்றிக் கவலைப்படாமல் மெதுவாக நடந்துசெல்லலாம் என்று சந்துருவும் சுரேஷும் சொல்ல, அவர்களுடன் பொறுமையாக ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டு முன்னேறினேன். அவ்வப்போது இனிப்பு மிட்டாயை வாயில் அடக்கிக்கொண்டதில் வேண்டிய சர்க்கரை உடலுக்குக் கிடைத்தது.

முதல் நாள் நோக்கம், சரி பாதி தூரத்தில் இருக்கும் நரிமலை (நரிமலே) ஓய்வகத்துக்குச் செல்வது. பிறகு அன்று வேறு எந்த வேலையும் கிடையாது. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து வெறும் கையுடன் பிரம்மகிரி உச்சிக்குச் சென்றுவிட்டு கீழே இறங்கிவந்து ஓய்வகத்தில் இருக்கும் பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிச் செல்லவேண்டும். வேனில் ஏறி பெங்களூரு ரயில் நிலையத்தை அடையவேண்டும். இரவு ரயிலை விட்டுவிடக் கூடாது.

நரிமலை ஓய்வகத்தை அடைய முதல்படி உயிரைக் கையில் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். பல தடுமாறல்களுக்குப் பின், நாங்கள் முதலில் அடைந்தது ஒரு நீரோடையை. உடைகளையெல்லாம் களைந்து, தண்ணீரில் விழுந்து இளைப்பாறிய பின்னர்தான் ஓரளவுக்கு உயிர் மீண்டுவந்தது. கால்கள் சோர்வுற்றுதான் இருந்தன. ஆனாலும் வேண்டிய அளவு நேரம் கையில் இருக்கிறது என்ற தெம்பு இருந்தது. அது வரையில் சுமார் 3 கிலோமீட்டர்கள்தான் ஏறி வந்திருப்போம். இன்னும் 2 கிலோமீட்டர் நடந்தால் நரிமலை. கையோடு கொண்டுவந்திருந்த ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்களை உண்டு பசியாறினோம். கொஞ்சம் கிராண்ட் ஸ்வீட்ஸ் முறுக்குகள், ஸ்வீட்டும் சேர்ந்துகொண்டன.


தொடர்ந்து நடந்தோம். நான் பெரும்பாலும் கடைசியில்தான் இருந்தேன். ஓரளவுக்கு சமதரை, பின் சடார் என் உயரும் பகுதி என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தாண்டி ஓய்வகம் வந்து சேர்ந்தோம்.


வந்தவுடனேயே சோர்வெல்லாம் பறந்துபோயிற்று. மலையேறுதலில் பெரும் பகுதி மனத்தில்தான் இருக்கிறது. மனம் நினைத்தால் உடலை என்னவேண்டுமானாலும் செய்யவைக்கும்.

ஓய்வகம் என்பது வெறும் ஒரு கல் கட்டடம். அங்கே ஏற்கெனவே யாரோ வந்திருந்த தடம் இருந்தது. ஒரு குழு காலையே கிளம்பி அங்கே வந்துவிட்டு, பிரம்மகிரி உச்சியை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். எங்களுடைய பொருள்களையெல்லாம் வைத்துவிட்டு கால்களை நீட்டி உட்கார்ந்தோம். காமேஷ், சுனில், மது ஆகியோர் உடனேயே தேநீருக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நீரஜ், தினேஷ் ஆகியோர் சுள்ளிகள் பொறுக்கிக் கொண்டுவர, நான் காய்கறிகளை நறுக்க முற்பட்டேன். சோறு, சாம்பார், அப்பளம் மெனு. தங்குமிடத்துக்குப் பின்பக்கம் அடுக்களை ஷெட் ஒன்று இருந்தது. அங்கே இரண்டு கோட்டை அடுப்புகள் இருந்தன. அங்கேயே சில பாத்திரங்கள் இருந்தன. அவற்றைச் சுத்தம் செய்வதற்குள் சுரேஷும் ஆதித்யாவும் சென்று இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் நீர் கொண்டுவந்தனர்.

சோறு வடிக்க நீர் கொதிக்க ஆரம்பித்தது. காய்கறிகளும் நறுக்கி முடிக்கப்பட்டபின், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சோறும் சாம்பாரும் ஆகி முடித்தன. இதற்கிடையில் தேநீர் தயாரித்த கேஸ் ஸ்டவ்வில் எண்ணெய் சுடவைத்து அதில் அப்பளம் பொறிக்கப்பட்டது.


மாலை சுமார் 5.30 மணி அளவில் சாப்பிட ஆரம்பித்தோம். அதுபோன்றதொரு சுவையான உணவை வாழ்நாளில் உண்டிருக்கமாட்டோம் என்று தோன்றியது. இருள் கவிவதற்குள் சுள்ளிகள், மரக்கட்டைகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து தீயை ஆரம்பித்தனர். அதைச் சுற்றி நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு கால் நீட்டி அமர்ந்து வெறும் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.

மேலும் ஒருமுறை பால் இல்லாத் தேநீர், வறுகடலை, பொட்டுக்கடலை என்று சாப்பிட ஏதேனும் செய்துகொண்டே இருந்தனர். மற்றொரு முறை பால் இல்லாத் தேநீர்.

அவரவர் தூக்கம் வர வர அறைக்குள் சென்று படுத்துக்கொண்டனர். பிரம்மகிரிக்குச் சென்ற ஐவர் அடங்கிய குழுவும் அவர்களுடன் சென்றிருந்த வனத்துறை அலுவலரும் திரும்பிவந்தனர். இரவு நாங்கள் தூங்கச் சென்றபின்னும் வாசலில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலை அங்கிருந்து கீழே இறங்கிச் செல்வார்கள். நாங்கள் அதிகாலையிலேயே எழுந்திருந்து மலை உச்சிக்குப் போகவேண்டும்.

எனக்குத் தூக்கம் அவ்வளவு எளிதாக வரவில்லை. வெளியே பேச்சுச் சத்தம் தொல்லைப்படுத்தியது. பின்னர் ஓசை அடங்கியதும், என் சோர்வும் அயற்சியும் சேர்ந்து என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தின.

மறுநாள் அதிகாலை வெளியே ஒதுங்கப்போன ஒரு நண்பர், தொலைந்துபோய், பயத்தில் ‘உதவி’ என்று கத்த, சடசடவென ஏழெட்டுப் பேர் எழுந்திருந்து டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினர். வெளிச்சம் தெரியவே அவர் வந்து சேர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட அனைவருமே எழுந்துவிட்டனர். பல் தேய்த்து, அவரவர் இயற்கைக்கு ஒதுங்கி, தயார்ப்படுத்திக்கொள்வதற்குள் (பால் இல்லாத்) தேநீர் தயாரானது.

இப்போது கிட்டத்தட்ட அனைவருமே மிகத் தயாரான நிலையில் இருந்தோம். முதுகில் இருந்த சுமார் 7-8 கிலோவை மேலே தூக்கிக்கொண்டு செல்லவேண்டியதில்லை. எங்கள் 11 பேரில் ஒருவர் மட்டும் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு காரணமாக மேலே வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். 10+3+1 = 14 பேர் மட்டும் மேல் நோக்கிக் கிளம்பினோம். அப்போது மணி 7.30 இருக்கும்.

கொஞ்சம் மேலே போய், கொஞ்சம் கீழே வந்து என்றாலும் பெரும்பாலும் சமதளம். எனவே வேகமாகவே நடந்தோம். முதல் நாள் சுமார் 5 கிலோமீட்டர் மட்டும்தான் நடந்திருந்தோம். ஆனால் இன்று உச்சியை அடைய 6 கிலோமீட்டர் நடக்கவேண்டும். பின் 11 கிலோமீட்டர் கீழ்நோக்கிச் செல்லவேண்டும். பிரம்மகிரி உச்சி என்பது கடைசி ஒரு கிலோமீட்டர் மட்டும் சடார் என மேல் நோக்கிச் செல்வது. அதுவரையில் கஷ்டம் இல்லாமல் சென்றவர்கள், இப்போது நிஜமாகவே திண்டாடிவிட்டோம். ஒருவர் மேலே வரமுடியாமல் அமர்ந்துவிட்டார். அவருடன் இன்னொருவரும் வனத்துறை ஊழியரும் கீழேயே இருந்துவிட்டனர். 11 பேர் மட்டும் மேலே சென்றோம். அதில் மூவர் இதில் மிகுந்த பயிற்சி உடையவர்கள். மிச்சம் எட்டு பேரில் சிலர் பலமுறை மலை ஏறியவர்கள். என்னையும் சேர்த்து மூவர் மிகவும் கஷ்டப்பட்டோம்.

புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே, வழுக்கிவிடாமல், கால் தடுக்கிவிடாமல், அடி அடியாக முன்னேறினோம். கடைசியாக மலை உச்சியை அடைந்தபோது சப்பென்று இருந்தது. அங்கே ஒன்றுமே இல்லை! சிறு திட்டு. சுற்றி பனி போர்த்திருந்தது. The journey is the reward என்பார்களே. அதேதான். மலை உச்சியை அடைந்தால் அங்கே யாரும் காத்துகொண்டு இருக்கப்போவதில்லை. யாரும் பதக்கம் தரப்போவதில்லை. அந்த மலை உச்சியை, தரையிலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருப்பதை அடைவதும் அதை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியும் மட்டுமே பரிசு. அடைந்தபின், அதேபோல இன்னொரு உச்சியை நோக்கிச் செல்லவேண்டும்.

ஏறி, அங்கே உட்கார்ந்து, ஆப்பிள், ஆரஞ்சு, மிட்டாய்கள் என்று கொஞ்சம் சக்தியை வரவழைத்துக்கொண்டோம்.


இறங்குவது எளிதல்ல என்பது அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக, அந்த சடார் இறங்குமுகம் பகுதியில். பாதை அவ்வளவு நன்றாக இல்லை. எனவே செடிகளை மிதித்துக்கொண்டு கீழே இறங்கினோம். இங்கும் சிலர் பயமே இல்லாமல் சடசடவென இறங்க, நான் வழக்கம்போலக் கடைசியாக, மெதுவாக இறங்கினேன். என் ஷூவில் நல்ல க்ரிப் இருந்தது. ஆனால் மனத்தில் இருந்த பயம் அதைவிட அதிகமாக இருந்தது. சில இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து இறங்கவேண்டி இருந்தது.

அந்தச் சரிவிலிருந்து இறங்கியபிறகு பிரச்னை ஏதும் இல்லை. அங்கிருந்து நரிமலை ஓய்வகத்துக்கு மிக விரைவாகச் சென்றுவிட்டோம்.

மேலே ஏறும்போது ஓரிடத்தில் புலியின் கழிவைப் பார்த்தோம். ஒரு நாள்தான் ஆகியிருக்கும். அதேபோல யானைகள் இருந்த தடயம் எங்கும் இருந்தது. கீழிருந்து மேல்வரை எங்கு பார்த்தாலும் யானை லத்திகள். நீரும் சேறுமாக இருந்த சில இடங்களில் யானை, காட்டெருமைகளின் கால் அல்லது குளம்புத் தடங்கள் இருந்தன. ஆனால் எந்த மிருகமும் கடைசிவரை கண்ணில் படவில்லை. புலியோ, யானையோ கண்ணில் படாமல் இருந்ததே நலம். அவை நம்மைத் துரத்துக்கொண்டு வந்தால், தப்பிக்க வாய்ப்பே இல்லை. வேறு குரங்கு வகைகள், மான் வகைகள், பறவைகள், தவளைகள் என்று அவையும் கண்ணில் படவில்லை. ஆங்காங்கே பறவைகள் சத்தம் கேட்டது. சில குருவிகள் சட்டென்று பறப்பதைக் காண முடிந்தது. அவ்வளவுதான்.


மலை உச்சியிலிருந்து காட்டைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. பச்சை என்பது ஒரு வண்ணம் அல்ல. ஏசியன் பெயிண்ட்ஸின் கலர் கார்டில் இருக்கும் அத்தனை பச்சைகள், அதற்கும் மேல் எங்கும் விரவியிருப்பதைக் காணலாம். எந்த கேமராவாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. பூக்கள் பூக்க ஆரம்பிக்கவில்லை. எனவே ஆங்காங்கே கொஞ்சம் பழுப்பு, கொஞ்சம் வெள்ளை தவிர பிற வண்ணங்களை அதிகமாகக் காண முடியவில்லை. தரையில் நாம் செல்லும் பாதையைத் தவிர எங்கு பார்த்தாலும் உயிர் ததும்பிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விதவிதமான செடி வகைகள், மரங்கள், கொடிகள், ஃபெர்ன்கள், காளான்கள், எறும்புகள், பிற பூச்சிகள், நீர்ப்பூச்சிகள், அவற்றின் ரீங்காரங்கள்.

சிக்கல் ஏதும் இன்றி மீண்டும் நரிமலையை அடைந்தோம். வந்த உடனேயே சமையலை ஆரம்பித்தோம். நூடுல்ஸ், எலுமிச்சை சாதம், மாம்பழ ஃப்ளேவர் டாங்.


 உடனேயே கீழ்நோக்கி இறங்கவேண்டும் என்பதால் அதிகம் சாப்பிடவில்லை. நாங்கள் கிளம்பத் தயாராகும்போது ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து சுமார் 20 இளம் பெண்கள் அங்கே வந்து சேர்ந்தனர். (படம் எடுக்கவில்லை!)

இப்போது முதுகில் சுமையுடன் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடுவில் ஒரு பாறையில் நின்றுகொண்டு குழுவாகப் படம் எடுத்துக்கொண்டோம்.


முதல் நாள் குளித்த ஓடைக்கு வந்தபோது அங்கே நிற்காமல் கீழ்நோக்கிச் செல்ல முடிவெடுத்தோம். கீழே இருப்பு நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொள்ளலாம் என்பது திட்டம். ஆனால் அங்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும் என்பதை அப்போது எதிர்பார்க்கவில்லை.

வழியில் எங்குமே நிற்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இப்போது ஓரளவுக்குப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதாலும், வீட்டுக்குத் திரும்பச் செல்கிறோம் என்ற நினைப்பாலும், வேகமாக நடக்க முடிந்தது.

மேலே ஏறும்போது தொடையிலும் கீழ்க்காலிலும் அடிக்காலிலும் அழுத்தம் அதிகம். கீழே இறங்கும்போது முட்டிக்காலில் கடும் அழுத்தம் தரவேண்டியிருக்கிறது. சரியான ஃபிட்னெஸ் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது மிக மிகக் கடினம். அடுத்த டிரெக்கிங் போவதற்குமுன் உடலின் எடையையும் குறைக்கவேண்டும், தொடை, கால் தசைகளுக்கு நிறையப் பயிற்சியும் கொடுக்கவேண்டும்.


பச்சைப் பாம்பு ஒன்றைப் பார்த்ததுதான் ஒரே புதுமை. எந்த அசம்பாவிதமும் இன்றி இருப்பு நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தோம். கால்கள் இரும்புபோலக் கனத்தன. ஓரடி கூட இனி நடக்கமுடியாது என்ற நிலையில் நீர்வீழ்ச்சியில் குளிக்க இடம் தேடினோம். மேலே ஏகப்பட்ட ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். எனவே கீழே தேங்கியிருந்த நீர்ப் பகுதியில் அமிழ்ந்துகொண்டோம். அப்போது மணி மதியம் 2.00. ஒரு மணி நேரம் இளைப்பாறுதலுக்குப்பின், வேனை நோக்கி நகர்ந்தோம்.

சரியாக 3.00 மணிக்குக் கிளம்பி, இடையில் ஓரிடத்தில் தேநீருக்காக நிறுத்தினோம். நாகர்ஹோல் காடுகள் வழியாக வண்டியில் செல்லும்போது சாலை ஓரத்தில் பல மான்கள், தந்தம் உள்ள ஆண் யானை ஒன்று ஆகியவற்றைப் பார்த்தோம். படங்கள் எடுக்கவில்லை. ராம்நகர் என்ற இடத்தில் காமத் உணவகத்தில் வட கன்னட இரவுச் சாப்பாடு சாப்பிட்டோம். பெங்களூரு ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30!

வேனில் வரும்போது ராஜபாட்டை படம், ஷங்கர் நாக் எடுத்த இரண்டு கன்னடப் படங்கள் (சங்கிலியானா) ஆகியவற்றைப் பார்த்தபடி வந்தோம். (அதற்குள் ராஜபாட்டை டிவிடியில் வந்துவிட்டதா?)

இரவு சுமார் 12.00 மணிக்கு மைசூரிலிருந்து வரும் ரயிலில் ஏறி, இன்று திங்கள் காலை சுமார் 7.30 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேர்ந்தோம்.

மார்ஸ் அட்வென்ச்சர்ஸின் காமேஷ் (98866-64666), மிகச் சிறப்பாக இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு தனிப்பட்ட நன்றி. பயணத்தின்போது கிடைத்த பல புதிய நண்பர்களுக்கும், பயணத்தை இனிமையாக ஆக்கியதற்காக நன்றி.

அடுத்து இமயமலையில் உள்ள பிரம்மதள் (3400 மீட்டர்) செல்வேனா? பொறுத்திருந்து பார்க்க!

நான் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் காண

19 comments:

  1. படிக்கும் போது இவ்வளவு டயர்ட் ஆகுமா என்று யோசித்தாலும், எனக்கு இதுபோன்ற பயணங்களில் மிகவும் விருப்பம் இருப்பதால், ஒருமுறையேனும் இந்த இடத்திற்கு சென்றுவிடமாட்டேனா என்றுதான் ஏங்குகிறேன். குற்றாலம் தேனருவிக்கு சென்றிருக்கிறீர்களா? அதுவும் ஒரு அற்புதமான பயணமாகத்தான் இருக்கும்...

    ReplyDelete
  2. Wow... Badri, for a first timer, looks like you did very well... Suresh managed to sing while trekking???

    ReplyDelete
  3. அந்த இடத்துல இப்படி ஒரு சாப்பாடா! நிஜமாகவே நீர் கொடுத்து வைத்தவர் தான். அந்த உணவு சாப்பிடும் நேரம் எல்லாம் உங்கள் கவனம் வேறு எந்த பக்கமும் திரும்பி இருக்காது என்று அடித்து சொல்ல முடியும். அந்த சுவையிலேயே திளைத்து இருந்து இருப்பீர்கள். இதை தான் ஜென் தத்துவமும் சொல்கின்றதோ. எல்லாம் முடிந்து அக்கடா என்று இளைப்பாறும் போதும் இதே அனுபவம் இல்லையா.

    ReplyDelete
  4. thanks. Please include the google map of the route as well.

    http://twitter.com/alex_pandian

    ReplyDelete
  5. பயணக் கட்டுரை அருமை..
    உணவுகளை பேப்பர் தட்டில் வைத்து அருந்தியது படங்களில் தெரிகிறது.அடுத்த முறை சுற்றுச்சூழலை பாதிக்காத, மக்கக்கூடிய பாக்கு மட்டையால் ஆன தட்டுகள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பேப்பரும் மக்கக்கூடியதுதான். மேலும் ஒரு குப்பைகூட விடாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு கீழே வந்து அதற்குரிய இடத்தில்தான் போட்டோம். உண்மையில் தூக்கி எறியும் எதுவுமே சுற்றுப்புறத்துக்கு நல்லதல்ல. ஆனால் கையில் எடுத்துச் செல்லும் எடையைக் குறைக்கவேண்டுமே? இல்லாவிட்டால் கையோடு பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் தட்டு, தம்ளரையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்.

      Delete
    2. //மேலும் ஒரு குப்பைகூட விடாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு கீழே வந்து அதற்குரிய இடத்தில்தான் போட்டோம்.//
      மகிழ்ச்சி....
      //இல்லாவிட்டால் கையோடு பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் தட்டு, தம்ளரையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்.//
      :):)

      Delete
  6. அருமையான கட்டுரை ,நான் மலையேறி அனுபவிப்பது போல் இருந்தது ,

    “மலையேறுதலில் பெரும் பகுதி மனத்தில்தான் இருக்கிறது. மனம் நினைத்தால் உடலை என்னவேண்டுமானாலும் செய்யவைக்கும்.”

    உண்மை இதை இந்த முறை சதுரகிரி சென்ற போதுதான் , உணர்ந்தேன் ,

    ஒரு முறை இயன்றால் சதுரகிரி சென்று வாருங்கள்,

    ReplyDelete
  7. நான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பீஹாரில் நளந்தா அருகே ஒரு மலையில் இருக்கும் ஜப்பானியர் கட்டிய புத்தர் ஆலயத்தைக் காண மரண ஆபத்து மிகுந்த ரோப் காரில் தனியே தன்னந்தனியே சென்றது நினைவுக்கு வந்தது.(அப்போது எனக்கு வயது 53.)வயது ஏற ஏற மனம் இளமையாகிக் கொண்டே போகிறது. உடலும் இளமையாக இருந்தபோது செய்திருக்கவேண்டியதை எல்லாம் இப்போது செய்யத் துடிக்கிறது. உடலையும் மனதையும் ஒரு புள்ளிக்குக் கொண்டு வந்தால்தான் இத்தகைய சாகசங்களை செய்ய முடியும். பத்ரி. இட் ஈஸ் நாட் டூ லேட் ஃபார் யூ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஞாநி! முதல் வேலை உடம்பைக் குறைப்பது; அடுத்து உடல்பயிற்சியை அதிகப்படுத்துவது. செய்யாமல் விடப்போவதில்லை!

      Delete
  8. Hey Badri..its Neeraj
    wonderful account of whatever google translated tamil i could understand :)
    I so much want to fully understand it with context, google is not doing a good job!!!
    Thanks anyways.

    ReplyDelete
  9. மற்ற விஷயங்களில் இளிச்சவாயனாய் இருந்தாலும், இமயமலை சந்துரு அவர்கள் அழைத்தும் நான் போகாமல் உஷாராய் நழுவியதால், இந்த விஷயத்தில் பத்ரியை விட யான் அறிவாளி என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஆனால் ஒன்று. இவ்வளவு நீள வலைப்பதிவு எழுதுவது மலை ஏறுவதை விட கடினமாக தோன்றுகிறதே!!

    ReplyDelete
  10. you can try vellingiri hills (near coimbatore)once

    ReplyDelete
  11. பயணம் செய்ய தூண்டும் கட்டுரை.நல்ல அனுபவம்.ஆனால் போர்ட்டர் இல்லை எனபது தான் இடிக்கிறது.
    பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் மலையேறுதல்,மலைப்பாதை பயணம் போன்றவற்றில் கூட போர்ட்டர்களின் பங்கு மிக அதிகம்.பல கடினமான சூழல்களில் அந்த பகுதியை பற்றி நன்கு தெரிந்த,மற்றொருவரை தூக்கி கொண்டு செல்லும் வலிமையுடைய போர்ட்டர்கள் மிகவும் அத்தியாவசியம்
    போர்ட்டர்கள் இருந்திருந்தால் பயணம் இன்னும் இனிப்பாக கடினமில்லாமல் இருந்திருக்கும்

    ReplyDelete
  12. நேராக போனீர்கள், வந்தீர்கள் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் வித்தியாசமாக நடக்கலை போலிருக்கே? இந்த பயணத்தைவிட நீங்கள் எழுத கையாண்டிருக்கும் மொழி சுவாரஸ்யம் :-)

    ReplyDelete
  13. why this kolaveri old man?

    ReplyDelete
  14. //போர்ட்டர்கள் இருந்திருந்தால் பயணம் இன்னும் இனிப்பாக கடினமில்லாமல் இருந்திருக்கும்//

    I hope he's just joking!

    ReplyDelete