Sunday, December 26, 2004

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை

கவிஞராக அறியப்படும் சல்மா எழுதிய "இரண்டாம் ஜாமங்களின் கதை" எனும் நாவல் ஜனவரி 10, 2005 வெளியாகிறது. காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி.

வரும் புத்தகக் கண்காட்சி 2005 (ஜனவரி 7 -16, 2005) நேரத்தில் வாங்கிப் படிக்கவேண்டிய இரண்டாவது புத்தகம். முதலாவது ஜெயகாந்தனின் "ஹர ஹர சங்கர", கவிதா பதிப்பகம் வெளியீடு.

மேற்குறிப்பிட்ட செய்தியில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு விஷயங்கள்.

1. சித்தி ஜுனைதா பேகம் தான் தமிழ் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வந்து கதை எழுதிய முதல் பெண்மணி என்று அறியப்படுபவர். இவர் எழுதிய "காதலா, கடமையா" நாவல் 1938இல் பதிப்பாகியது. இந்த நாவல் இப்போது அச்சில் இல்லை. ஆனால் இது மின்புத்தக வடிவில் முதுசொம் காப்பகம் (Tamil Heritage Foundation) நா.கண்ணனால் ஸ்கேன் செய்யப்பட்டது. இணையத்தில் எங்கு இருக்கிறது என்று இப்பொழுது ஞாபகம் இல்லை.

[கண்ணன் தகவல்: ஜுனைதா பேகத்தின் காதலா?, கடமையா? யூனிகோடில். நன்றி நா.கண்ணன், முதுசொம் காப்பகம்]

மேற்கண்ட செய்தியில், இந்த நாவல், அந்தோணி ஹோப் எழுதிய "தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா" (The Prisoner of Zenda) எனும் நாவலைத் தழுவியதாக இருக்கலாம் என்று சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். இந்த செய்தியின் ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா, 1894இல் வெளியான புத்தகம். இப்பொழுது இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது (தளம் 1, தளம் 2).

ஜுனைதா பேகம், எழுத்தாளர் நாகூர் ரூமியின் பாட்டி. ரூமியிடமிருந்த பிரதியைத்தான் கண்ணன் வருடி மின்புத்தகமாக மாற்றியிருந்தார். ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.

நாகூர் ரூமி/நா.கண்ணன் வழியாக முதலில் "காதலா, கடமையா" நாவலைப் படிக்கிறேன். "தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா"வையும் படித்துவிட்டுப் பின்னர் இதுபற்றி எழுதுகிறேன்.

2. முஸ்லிம் சமூகத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி. ஆ.இரா.வெங்கடாசலபதி முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களாகச் சொல்வது மூன்று பேர்களை மட்டும்தான்! தோப்பில் முகமது மீரான், H.G.ரசூல், சல்மா! அதிலும் தோப்பில் ஒருவர்தான் புதினம் எழுதுபவர் (மற்ற இருவரும் கவிஞர்களாக மட்டுமே அறியப்படுபவர்கள் என்பதால்) என்கிறார்!

எனக்குத் தெரிந்து மனுஷ்யபுத்திரன் (ஹமீது), களந்தை பீர் முகமது, நாகூர் ரூமி, ஆபிதீன் (சரி, இவர் இப்பொழுது ஒன்றும் எழுதுவதில்லை!) என சிறுபத்திரிகைகளில் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் இருக்கிறார்கள். அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா, அப்துல் காதர் போன்ற பல கவிஞர்கள் இருக்கிறார்கள். மீரான் மைதீன், மும்தாஜ் யாசீன் (ஆண், பெண் பெயரில் எழுதுபவர்), மு.சாயபு மரைக்காயர் போன்ற பிற சிலரும் கதைகள் எழுதுபவர்கள்.

என் படிப்பு குறைவு. நிச்சயம் நண்பர்கள் இன்னமும் பல பேர்களை நினைவுகூரலாம்.

4 comments:

  1. சல்மாவின் நாவல் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய நிகழ்வாக தெரிகிறது. வெங்கடாசலபதி கவனகுறைவாய் லூஸ் டாக் விட்டுருப்பதாகவே தெரிகிறது.

    ReplyDelete
  2. காதலா? கடமையா?

    சித்தி ஜூனைதா பேகம்

    =
    முஸ்லிம் ஸ்திரிகளும் எழுத முன்வருவதை வரவேற்கின்றோம்.நடை நெரடாக இருக்கிறது; தளர்த்துவது அவசியம்.கதை ஆண்டனி ஹோப் எழுதிய'கெண்டாக் கதி','ஹெண்ட்ஜா ரூப்பட்' என்பவர்களின் சுருக்கமான தழுவல் என்பதை ஒப்புக்கொண்டிருக்கலாம்.

    தினமணி,2.5.1938

    புதுமைப்பித்தன்

    [ புதுமைப்பித்தன் கட்டுரைகள் நூல்]
    =

    By: vassan

    ReplyDelete
  3. வாசன்: தகவலுக்கு நன்றி. இப்பொழுது இரண்டு கதைகளுக்கும் இணையச் சுட்டி உள்ளது. படித்தவுடன் புதுமைப்பித்தன் சொன்னதில் உண்மையுள்ளதா என்பதை நாமே கண்டறியலாம்.

    ReplyDelete