Wednesday, November 09, 2005

இக்பால் (2005, ஹிந்தி)

கிரிக்கெட் பற்றி லகானுக்கு அடுத்து வந்திருக்கும் இந்திய சினிமா. நாகேஷ் குகுனூரின் நெறியாள்கையில் வந்த படம் என்பதால் மோசமாக இருக்காது என்று தோன்றியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னான ரீடிஃப் செவ்வி ஒன்றில் நாகேஷ், "You don't mess with cricket in India" என்று கூடச் சொல்லியிருந்தார்.

ஆனால், பிற இந்தியப் படங்களைப் போலவே இது ஒரு சாதாரண ரொமாண்டிக் படம். உணர்வுகளுக்குத்தான் முக்கியத்துவம். அறிவார்த்தமாக, நிகழ்வுகளும் நிலைமைகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்கத் தேவையில்லை. சினிமாவில் நாயகனின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் நடந்தாக வேண்டும்... நிஜ வாழ்வில் அவை நடப்பது மிகவும் கடினம், நடக்கவே முடியாது என்றாலும் கூட.

இக்பால் (ஷ்ரேயாஸ் தல்படே) காது கேளாத, வாய் பேசாத இளைஞர். இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் போலவே இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்து வருபவன். கிராமத்தில் தானாகவே வேகப்பந்து வீசப் பழகுகிறான். ஆனால் ஒரு பயிற்சியாளர் இல்லாவிட்டால் முன்னேற முடியாது என்ற அளவுக்காவது அவரது தங்கைக்குக் தோன்றுகிறது. தங்கை கதீஜாவும் (ஷ்வேதா பிரசாத்) அம்மாவும் இக்பாலின் கனவுக்கு ஆதரவானவர்கள். ஒரு வில்லன் வேண்டுமே? அப்பா. அவர், இக்பால் தன்னுடன் வயலில் வேலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.

இக்பாலின் வேலை மாடுகளை மேய்ப்பது. எருமைகள் மேயும்போது, குச்சிகளை ஸ்டம்பாக நட்டு எங்கேயோ கிடைத்த கிரிக்கெட் பந்தை வைத்து வேகமாகப் பந்து வீசி குச்சிகளைச் சாய்ப்பான். கதீஜா இது போதாது என்று அருகில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடெமியின் பயிற்சியாளரை சம்மதிக்க வைத்து இக்பாலுக்கு அங்கு இடம் வாங்கித் தருகிறாள். ஆனால் கதீஜாவும் கூட உதவிக்கு இருக்க வேண்டும். பயிற்சியாளர் பேசுவதை இக்பாலால் புரிந்து கொள்ள முடியாது. இக்பாலுக்கும் பேச முடியாது. பயிற்சியில் மற்றுமொரு வில்லன் - கமல். இக்பாலைப் பிடிக்காத ஒரு பணக்கார இளைஞன். பயிற்சியின்போது இக்பாலின் பந்துகளை முதலில் அடித்து விளாசுகிறான். இக்பால் ஸ்ட்ம்பை நோக்கி மட்டுமே பந்து வீசத் தெரிந்தவன். கதீஜாவையும் கேலி செய்கின்றான். கதீஜா சைகை மொழியில் சொன்னதை வைத்து இக்பால் வில்லன் கமல் முகத்தில் பந்தை வீசிக் காயப்படுத்துகிறான்.

ஆனால் கமலின் தந்தைதான் அந்த கிரிக்கெட் ஆகடெமி நடத்துவதற்கான பணத்தைத் தருபவர். அதனால் இக்பால் வெளியேற்றப்படுகிறான். கதீஜா தான் சைகை மொழியில் "pace" என்னும் சொல்லுக்கு பதில் "face" என்னும் சொல்லைப் பயன்படுத்தியதால் இக்பால் தவறாக முகத்தை நோக்கிப் பந்துவீசியதாகச் சொல்லி மன்னிப்பு கேட்டாலும் இக்பாலை இனியும் அங்கு சேர்த்துக்கொள்ள முடியாது என்று கோச் முடிவெடுக்கிறார். அவரது கைகள் திருகப்பட்டிருக்கின்றன.

பயிற்சியாளர் கிடைத்ததும் வந்த சந்தோஷம் இந்த நிகழ்ச்சியால் முற்றிலுமாக வடிந்து விடுகிறது. கனவுகள் முறிந்ததால் தோல்வியில் துவளும் இக்பால் கோபத்தில் தான் அதுவரையில் சேர்த்துவைத்திருக்கும் கிரிக்கெட் இதழ்களை நெருப்பில் கொளுத்துகிறான். அப்படிக் கொளுத்தும்போது ஓர் இதழில் கண்ணில் படுகிறது ஒரு புகைப்படம். அது மோஹித்தின் புகைப்படம். மோஹித் (நசீருத்தீன் ஷா) அந்த கிராமத்தில் இருக்கும் குடிகாரர். அவர் ஒரு காலத்தில் இதழ்களில் படம் வருமாறு விளையாடிய கிரிக்கெட் வீரரா? இக்பாலுக்கு மீண்டும் நம்பிக்கை.

மோஹி்த்தைத் துரத்தத் துரத்தி, அவரை மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுக்கு, தனக்குப் பயிற்சியளிக்க அழைத்து வருகிறான் இக்பால். மோஹித் இக்பாலுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க, கதீஜா மோஹித்துக்கு சைகை மொழிப் பயிற்சி அளிக்கிறாள். இக்பாலின் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. தன் பையன் கிரிக்கெட் விளையாடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார் அவர். அவனுடைய புது ஷூவை நெருப்பில் போடுகிறார். ஆனாலும் அவருக்குத் தெரியாமல் பயிற்சி தொடருகிறது. ஹைதராபாத் ரஞ்சி அணிக்கான தேர்வுக்கு மோஹித் இக்பாலை அழைத்துக் கொண்டு செல்கிறார். இக்பாலின் தாயும் தங்கையும், தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு தேர்வு நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர்.

மோஹித் கெஞ்சி, காலில் விழுந்து மதிய உணவு இடைவேளையின்போது இக்பால் பந்து விசுவதை அணித்தேர்வாளர்கள் பார்க்குமாறு ஏற்பாடு செய்கிறார். ஹைதராபாத் அணிக்கு கமல் தேர்வு செய்யப்படுகிறார். தேர்வுக்குழுவில் குருஜி (கிரீஷ் கர்னாட்) என்பவர் இருக்கிறார். இவருக்கும் மோஹித்துக்கும் முன்பே பழக்கம். மோஹித்தை அணியில் சேர்க்காமல் பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை அணியில் சேர்த்திருப்பார் குருஜி. இக்பாலுக்கு ஹைதராபாத் அணியில் இடமில்லை என்கிறார் குருஜி. ஆனால் மற்றொரு ரஞ்சி அணியான (ஆனால் சற்றே மோசமான அணியான) ஆந்திராவுக்காக விளையாட விருப்பமா என்று ஆந்திரா செலக்டர் ஒருவர் கேட்கிறார். சந்தோஷம்!

இக்பாலின் தந்தைக்கு விஷயம் தெரிந்து விடுகிறது. அதனால் இக்பால் வீடு திரும்புவதில்லை. மோஹித்துடன் ஆந்திரா ரஞ்சி அணிக்கு விளையாட ஊர் ஊராகச் சுற்றுகிறார். ஹீரோ வில்லன்களைப் புரட்டுப்புரட்டி அடிப்பதைப் போல இக்பால் ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட்டுகளாகப் பெற்றுத் தள்ளுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் இக்பாலின் பெயர்தான். நேராக ரஞ்சி இறுதி ஆட்டத்துக்குப் போய்ச் சேருகிறார்கள். அங்கு யாரைச் சந்திக்கிறார்கள்? ஹைதராபாதை.

ஹைதராபாதை முதல் இன்னிங்ஸில் சின்னாபின்னம் செய்கிறான் இக்பால். ஆனால் குருஜி அவனைச் சந்தித்து இரண்டாவது இன்னிங்ஸில் கமலை நிறைய ரன்கள் பெறவைத்தால் கமல் நிச்சயமாக இந்திய அணிக்குச் செல்வார். ஏனெனில் இப்பொழுது இந்திய அணிக்குத் தேவை பேட்ஸ்மேன்தான் என்கிறார். இப்படி ஆட்டத்தை 'fix' செய்தால் இக்பாலுக்கு ரூ. 25 லட்சம் உண்டு என்கிறார். கடைசி நாள் ஆட்டம், இக்பால் கமலுக்கு லட்டு லட்டாக ஆஃப் சைடில் பந்து வீசுகிறார். பந்தெல்லாம் கவர் திசையில் நான்காகப் பறக்கின்றன. கேப்டன் இக்பாலை மாற்றி வேறு யாரையாவது கொண்டுவர முயன்றாலும் இக்பால் சண்டை போட்டு பந்தைப் பிடுங்கிக்கொண்டு பந்துவீசி மீண்டும் கமலுக்கு ரன்களைத் தருகிறார். உணவு இடைவேளை.

சில நாள்களுக்கு முன்னர் ஒரு Sports Marketing ஆசாமி இக்பாலைச் சந்தித்து தான் அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரையும் தெரியும் என்பதாகவும் சொல்கிறார். அதை நினைவில் வைத்துக்கொண்டு இக்பால் அவரைச் சந்தித்து (இத்தனையும் உணவு இடைவேளைக்குள்!) கபில் தேவை ஆட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வரச்செய்யுமாறும் சொல்கிறான் (என்று நினைக்கிறேன்).

உணவு இடைவேளைக்குப் பிறகு கமலுக்கு கொஞ்சம் ரன்களைக் கொடுத்துவிட்டு மற்றுமொரு பந்தை வீச (எந்த மாதிரியான பந்து என்று கணிக்க முடியவில்லை), அது வானளாவிய கேட்சாகப் போகிறது; பிடிக்கப்படுகிறது; கமல் அவுட். அதைப் பார்வையிட சரியான நேரத்தில் கபில் தேவ் அங்கே. கபில் தேவ்தான் இந்திய அணியில் செலக்டராம். அவர் மோஹித், இக்பாலிடம் வந்து இந்திய அணிக்கு இப்பொழுதைய தேவை ஒரு பந்து வீச்சாளர்தான், இக்பாலுக்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். குருஜி கபில் தேவை வந்து அழைத்து கமலுக்கு வாய்ப்பு கேட்கும்போது, கபில்தேவ் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு செல்கிறார்.

இக்பாலின் அப்பா மனம் திருந்தி கடைசியில் இறுதி ஆட்டத்தைப் பார்க்க நேராக வந்திருக்கிறார்.

இக்பால் இந்திய கிரிக்கெட் சட்டையில் களமிறங்கும்போது வானைப்பிளக்கும் கரகோஷம், சத்தம். இக்பாலால்தான் அந்தச் சத்தத்தைக் கேட்க முடியாது.

ஆனால் உணர முடியும்.

சுபம். அத்துடன் படம் முடிகிறது.

சராசரி இந்தியப் படத்தின் மோசமான கதையைப் போலல்லாமல் இருந்தாலும் அடிப்படையில் அதே உணர்வுகள்தான். மாட்டின் பாலைக் கறந்துகொண்டே வானளாவக் கட்டடம் கட்டும் ரஜினிகாந்தின் அண்ணாமலைதான் குகுனூரின் இக்பாலும்.

இக்பால் ஒரு முழு ஆட்டத்திலும் விளையாடாமல் நேராக ரஞ்சி ஆட்டத்தில் போய் விளையாடுவதாகச் சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இதுதான் நம் அனைவரின் கனவும்கூட. ஆனால் நிஜத்தில்? ஒரு டெண்டுல்கர் எந்த அளவுக்கு எத்தனை ஆயிரம் ஆட்டங்களில் விளையாடிப் பழகியபின் ரஞ்சி ஆட்டம் ஆடச்சென்றார்? இக்பாலுக்கு பந்தை வேகமாக ஸ்டம்பை நோக்கி வீசுவது மட்டும்தான் தெரியும். ஸ்விங், சீம்? ஒருமுறை கூட கோச் மோஹித் இதைப்பற்றியெல்லாம் சொல்லித்தருவதாகத் தெரியவில்லை.

எப்படி இக்பால் கேப்டனிடம் தனக்குத் தேவையான பந்துத் தடுப்பு வியூகத்தை அமைக்கச் சொல்லிக் கேட்பார்? மோஹித் எப்படி அவ்வளவு சீக்கிரமாக சைகைமொழியைக் கற்றார்? சரி, ஆந்திரா அணித்தலைவர் எப்படிக் கற்றார்?

காது கேளாதவரால் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பந்து வீசுவதைத் தவிர பேட்டிங் செய்யும்போது நடுவர் சொல்வது கேட்காது, பந்து தன்னை நெருங்கும் சத்தம் கேட்காது. பந்து மட்டையில் படுவது கேட்காது. மறுபக்கத்தில் இருக்கும் மட்டையாளர் ரன்கள் எடுக்கக் கூப்பிடும் குரல் கேட்காது. ஃபீல்டிங்கில் இருக்கும்போது பந்து தன்னை நோக்கி வருகிறது என்று பிறர் கத்துவது கேட்காது.

கிரிக்கெட் என்றால் ஒரு பந்து வீச்சாளர் வந்து சடசடவென்று பந்துகளை வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது போதும் என்று நினைக்கவைக்கிறது இந்தப் படம். குருஜி இக்பாலுக்கு எப்படி லஞ்சம் கொடுப்பதை விளக்குகிறார் சைகை மொழியில், இக்பால் எப்படி தானாகவே ஓர் ஆட்டோவைப் பிடித்து வெளியே சென்று Sports Marketing ஆசாமியைத் தேடிப்பிடித்து கபில் தேவை அழைத்து வரச்செய்கிறார் என்பது எனக்குப் புரியாத புதிர். வெறும் ரஞ்சி ஆட்டத்தில் விளையாடுபவர்களுக்கு எல்லாம் விளம்பர காண்டிராக்ட்கள் கிடைக்காது. தோனிக்கே இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் இரண்டு சூப்பர் சதங்களுக்குப் பிறகுதான் endorsement வாய்ப்புகள் வருகின்றன.

ரஞ்சி இறுதி ஆட்டம் என்றால் பொதுவாகவே செலக்டர்கள் அங்கு உட்கார்ந்திருப்பார்கள்.

மேட்ச் பிக்சிங் கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது. மறுபக்கம் பந்து வீசுபவர்கள், விக்கெட்டை எடுத்தால் என்ன ஆகும்? பிற ஆட்டங்களில் கூட இக்பால் 20 விக்கெட்டுகளை எடுப்பதில்லையே? சில ஆட்டங்களில் மொத்தமாகவே இக்பால் 3 விக்கெட்டுகள் எடுப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. 25 லட்சம் கொடுத்து ரஞ்சி ஆட்டத்தை பிக்ஸ் செய்வது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இக்பாலின் சொந்த கோச் ரஞ்சி ஆட்டத்தின் போது அணிக்கே (அணிக்கு தனி கோச் இருந்தும் கூட) ஐடியா சொல்லித்தருவது, டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது போன்ற பல எக்ஸ்ட்ரா ஊத்தல்களும் உண்டு.

கதையின் பல்வேறு ஓட்டைகளை - முக்கியமாக கிரிக்கெட் தொடர்பான ஓட்டைகளை - மறந்துவிட்டுப் பார்த்தால், படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. நடிப்பில் அனைவருமே டாப் கிளாஸ். ஷ்ரேயாஸ் நல்ல ஆக்ஷனுடன் பந்து வீசுகிறார். 'கிரிக்கெட் விளையாடத் தெரிந்த, சரியாகப் பந்து வீசத் தெரிந்தவராகப் பார்த்துத்தான் தேர்ந்தெடுத்தேன்' என்கிறார் நாகேஷ் குகுனூர். Casting பொருத்தவரை 100/100. கேமரா சுமார்தான். இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

காட்சிப்படுத்துதலில் கிரிக்கெட் ஆட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

படத்தில் பல காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. ஷ்ரேயாஸ் கிரிக்கெட் இதழ்களை வைத்துக்கொண்டு கனவு காண்பது, கோபத்தில் அதை எரிப்பது, முகத்தில் ஒருவித புரியாமை கலந்த innocence, தன்னைச் சுற்றிப் பிறர் தன்னைப் பற்றிப் பேசும்போது முகத்தில் காண்பிக்கும் ஒருவித பயம் கலந்த ஆர்வம் இவற்றையெல்லாம் நாகேஷ் மிக நன்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மற்றபடி இந்தியர்களின் வெட்டிக்கனவுகளுக்குத் தீனிபோடும் ஒரு படம். அவ்வளவே.

IMDB database
படத்தின் அதிகாரபூர்வ தளம்

14 comments:

  1. //மாட்டின் பாலைக் கறந்துகொண்டே வானளாவக் கட்டடம் கட்டும் ரஜினிகாந்தின் அண்ணாமலைதான் குகுனூரின் இக்பாலும்.

    No ball! :-)

    ReplyDelete
  2. நீங்கள் பத்ரியாகப் படம் பார்த்ததுதான் தவறு. கோயிஞ்சாமியாகப் பார்த்திருந்தால் ஒருவேளை பிடித்திருக்கக்கூடும்.

    ReplyDelete
  3. //மற்றபடி இந்தியர்களின் வெட்டிக்கனவுகளுக்குத் தீனிபோடும் ஒரு படம். அவ்வளவே.//

    :)))))))))))

    ReplyDelete
  4. Is not Badri a member of Koinchmay club and hence a Koinchamy :).
    Should all Koinchamys be Koinchamys always, allow Badri to be Badri atleast once in a while.

    ReplyDelete
  5. The world is full of Goinsaamy; No exceptions!

    Already "No ball" is given, Badri may throw the next ball. Over is not over!

    ReplyDelete
  6. நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே... கற்பனாவாதப் படங்கள் என்றால் நம்மூர் மக்களுக்கு அல்வா மாதிரி. கஜினி, மஜா, அந்நியன், சந்திரமுகி, சிவகாசி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி போன்ற படங்களுக்கு இக்பால் எவ்வளவோ தேவலாம்.

    குறைந்த பட்ஜெட். நல்ல நடிகர்கள். ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கதை. ஓரளவுக்குத் தேவலாம் என்கிற திரைக்கதை.

    ஆனாலும் கிரிக்கெட் பற்றியது என்பதால் சற்றே நீண்ட விமரிசனத்தை எழுதினேன். லகான் போல வரலாற்று புருடாவாக இல்லாமல் சமகாலத்தையது என்ற வகையில் நல்ல தேர்வு.

    செவிடு/ஊமை அற்ற ஒரு இளைஞனாலேயே இந்திய அணிக்கு விளையாடுவது என்பது எளிதான காரியமல்ல. நிறைய உழைக்க வேண்டும். அத்தனை கோள்களும் குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும்! காட்ஃபாதர்கள் வேண்டும். எக்கச்சக்க திறமை வேண்டும். குறைந்தது 4 வருடங்களாவது ஜூனியர் கிரிக்கெட்டில் பெயர் பெற வேண்டும்.

    அடுத்து ஒரு ஆசாமியை வைத்துக்கொண்டு எந்த அணியும் ரஞ்சி இறுதி வரை போகமுடியாது. சுமாரான ஆந்திர அணியில் சேர்ந்து இக்பால் ரஞ்சியை வென்று தருவதாகக் காட்டியிருப்பது தேவையற்றது.

    முதல் சீசனில் விளையாடுபவர்கள் என்று பார்த்தாலே இப்பொழுது ஆர்.பி.சிங், வி.ஆர்.வி.சிங் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட வருகிறார்கள். ஆனால் இவர்களது டீம்கள் - உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இதற்காக ரஞ்சி இறுதி ஆட்டம் வரை செல்லவில்லை.

    அதன்பிறகு கிரிக்கெட் கோச்சிங் பற்றி. இந்தப் படம் முழுவதுமே கோச்சிங் பற்றி என்றால் அதைப்பற்றி உருப்படியாக ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் எதுவும் கிடையாது. ஸ்டம்பைக் குறிவைத்து ஓடிவந்து வேகமாகப் போடுவதால் மட்டும் பந்துவீச்சில் முன்னேறி விட முடியாது. அது கிரிக்கெட்டை மிகவும் எளிமைப்படுத்திவிடுகிறது. லைன், லென்த், பந்தை எழும்ப வைப்பது, யார்க்கர், ஸ்விங், சீம் என்று பல விஷயங்கள். பந்துத் தடுப்பு வியூகத்தின் முக்கியத்துவம். எதிராளி எப்படியெல்லாம் பந்துகளை அடிக்க முடியும் என்ற ஞானம். இது எதுவுமே இக்பாலுக்குத் தெரிந்தது மாதிரி தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது எதுவும் தெரியாத காரணத்தால் எல்லாம் ஒகே! படம் ஹவுஸ்ஃபுல்.

    ரஜினி படங்களைப் போல.

    ReplyDelete
  7. அதெல்லாம் பொயட்டிக் லைசன்ஸ் என்ற வகையில் வரும். சினிமாவுக்கான விதிகள் வேறு. இது, ' கிரிக்கெட்டில் செவிட்டு ஊமைகள் விளையாடுவது எப்படி? ' என்கிற ஒரு ஆவணப்படமாக இருந்தால், உங்கள் கேள்விகளில் நியாயம் உண்டு. திரைப்படங்கள் premise என்கிற ஒரு விஷயத்தைச் சுற்றித்தான் எடுக்கப் படுகின்றன. அங்கே what if என்ற கேள்வி ரொம்ப முக்கியம்.

    ஒரு பணக்கார வீட்டுப் பெண், தெருமுனை மெக்கானிக்கை இழுத்துக் கொண்டு ஓடினால் என்ன ஆகும் என்றால் ' காதல் திரைப்படமாகும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருத்தன், தன் வாழ்க்கையில் சந்தித்த அனைவரையும், கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கிறேன் என்கிற சாக்கில் மீண்டும் சந்திக்கப் போனால் அது ஆட்டோகிரா·ப். கணவனை குணப்படுத்த, முன்னாள் காதலனிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்தால் என்ன என்று பார்த்தால் அது நெஞ்சில் ஓர் ஆலயம். பெற்றோர்களுக்காக, தங்களுடைய காதலைத் துறக்க இருவர் முடிவு செய்தால் அது காதலுக்கு மரியாதை. செவிட்டூமையாக இருக்கும் ஒரு சின்னப் பையன், தன் திறமை ஆர்வத்தால், இந்திய அணிக்குள் சேர முயற்சி செய்தால் எப்படி இருக்கும்? இக்பால் படம் மாதிரி இருக்கும்.

    வழக்கமான க்ளிஷேக்களில் இருந்து முற்றிலுமாக விலகி, இது வரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை, தொட்டதற்காக, அதை, யதார்த்ததுக்கு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்பும்படியாக எடுத்ததற்காவும், அற்புதமான casting க்காகவும், நாகேஷ் குக்கூனூர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

    நீங்கள் குறைகளாகச் சொல்லி இருக்கும் கிரிக்கெட் பற்றிய விஷயங்கள் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அக் குற்றங்களை மீறியும், இந்தப் படத்தை அண்மையில் நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த படம் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  8. பத்ரி,

    நாகேஷின் ஹைதராபாத் ப்ளூஸ் இரண்டாம் பாகம் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு பார்த்தேன் - ஏமாற்றம்.

    //காது கேளாதவரால் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பந்து வீசுவதைத் தவிர பேட்டிங் செய்யும்போது நடுவர் சொல்வது கேட்காது, பந்து தன்னை நெருங்கும் சத்தம் கேட்காது. பந்து மட்டையில் படுவது கேட்காது. மறுபக்கத்தில் இருக்கும் மட்டையாளர் ரன்கள் எடுக்கக் கூப்பிடும் குரல் கேட்காது. ஃபீல்டிங்கில் இருக்கும்போது பந்து தன்னை நோக்கி வருகிறது என்று பிறர் கத்துவது கேட்காது.//

    பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாடுவதை ஏதோ ஒரு சானலில் பார்த்தேன். ஒரு புலனில் குறைபாடுகள் உடையவர்களுக்கு மற்ற புலன்களில் அபரிமிதமான திறமை / சக்தி இருந்து அது ஓரளவு ஈடுகட்டப்படுகிறது. போலியோவால் தாக்கப்பட்ட எனது நண்பன் மிகப் பலம் வாய்ந்த கைகளால் அனைத்தையும் செய்வான். கேட்கும் தன்மையற்றவர்கள் பார்வையின் மூலமும் மற்ற புலன்களின் சக்தி மூலமும் அதை ஓரளவு ஈடுகட்டுகிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உதட்டசைவைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் சக்தியும் இருக்கிறது. அசுரப் பயிற்சியின் மூலம் விளையாடுவது சாத்தியம்தான் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  9. சூப்பர் ஸ்டார் உவமையெல்லாம் ஓக்கே தான் அண்ணாத்தே. ஆனாலும் அந்தப் பையனின் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டும் வகையில், "பாறாங்கற்களை உடைத்துக் கொண்டே வானளாவக் கட்டடம் கட்டும் ரஜினிகாந்தின் படையப்பா தான் குகுனூரின் இக்பாலும்" என்று சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். ;-))

    ReplyDelete
  10. சுந்தர்: பார்வையற்றோர் கிரிக்கெட் பற்றி எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. நான் சென்னையில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் நடத்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியை நடத்திய குழுவில் முக்கிய அங்கம் வகித்தவன்.

    இந்த விளையாட்டுக்கு என வித்தியாசமான பந்து உண்டு. அந்தப் பந்தினுள்ளே சில உலோக உருண்டைகள் இருக்கும், பந்து வரும் சத்தத்தைத் தெரிவிக்க. பந்தை பவுல் செய்யக்கூடாது, தரையோடு உருட்டி விட வேண்டும். பார்வையற்றோர் அணியில் முழுக் குருடு, அரைக் குருடு, கொஞ்சம் பார்க்ககூடியவர்கள் என்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இவர்களை மருத்துவப் பரிசோதனை செய்தபின்னரே விளையாட அனுமதிப்பார்கள்.

    காது கேளாதவருக்காக என்று தனியாக கிரிக்கெட் உண்டு. ஏன், இந்த மாதம் 16-27 நவம்பர் 2005ல் லக்னோவில் காது கேளாதோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க் உள்ளது. அதைப் பார்த்து காது கேளாதோர் விளையாடும் கிரிக்கெட் எப்படி இருக்கும் என்று கவனிக்கலாம்.

    ReplyDelete
  11. //"பாறாங்கற்களை உடைத்துக் கொண்டே வானளாவக் கட்டடம் கட்டும் ரஜினிகாந்தின் படையப்பா தான் குகுனூரின் இக்பாலும்

    adra sakkai...adra sakkai... no..no..aadra sakkai...aadra sakkai! :-)

    ReplyDelete
  12. நேற்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்.
    பிரகாஷ் சொல்வது போலத்தான் எனக்கும் தோன்றியது.

    தவிரவும், பத்ரி சொல்லியுள்ள/ அல்லது அவர் புரிந்து கொண்டதிலும் நிறைய தவறுகள். என்னைபோல ஆணியடித்தாற் போல இந்தப்படத்தை அவர் பார்க்கவில்லை என்று புரிகிறது.

    - (பத்ரிக்கு உள்ள கிரிக்கெட் அறிவோடு படம் பார்க்காததால் படம் பிடித்துப் போன இன்னோரு) கோயிஞ்சமி :-)

    ReplyDelete
  13. சுந்தர்: எந்த இடங்களில் நான் தவறாகப் புரிந்துகொண்டேன் என்று ஒரு சின்ன கோடையாவது காட்டியிருக்கலாமே? மறுபடி இன்னொருமுறை படத்தைப் பார்த்திருப்பேன்...

    ReplyDelete
  14. முதலிலேயே விரிவாக எழுதாமைக்கு மன்னிக்கவும்.

    //இக்பாலுக்கு ஹைதராபாத் அணியில் இடமில்லை என்கிறார் குருஜி.//

    இதை குருஜி சொல்லவில்லை. சொல்லப்போனால் இந்த செலக்ஷனில் குருஜியின் "கை" இருப்பதாக எங்கும் காண்பிக்கப்படவில்லை.

    //கேப்டன் இக்பாலை மாற்றி வேறு யாரையாவது கொண்டுவர முயன்றாலும் இக்பால் சண்டை போட்டு பந்தைப் பிடுங்கிக்கொண்டு பந்துவீசி மீண்டும் கமலுக்கு ரன்களைத் தருகிறார்//

    இது நடப்பது உணவு இடைவேளைக்குப் பிறகு. அதாவது அப்பாவின் பனத்தேவைக்கு மார்க்கெட்டிங் ஆசாமியின் பணத்தை உபயோகிக்கலாம். குருஜி தரும் 25 லட்சம் தேவை இல்லை என்று இக்பால் தீர்மானித்த பிறகு. பிடுங்கி வாங்குவது கூட, இவன் நினைக்கும் திசைக்கு மூன்று பால்கள் பந்தை அடிக்க வைத்து, பிறகு சைகையில் கேப்டனிடம் "சக்கர் வியூகM' என்று காட்டும்போது, அதுவரை பெவிலியனில் எரிச்சலாக உட்கார்ந்திருந்த மோஹித் தன்னை மறந்து ஜீனியஸ் என்கிறார். படத்தில் இந்த இடம் முக்கியம். அதை விட்டுவிட்டீர்களே.!!!

    //அதை நினைவில் வைத்துக்கொண்டு இக்பால் அவரைச் சந்தித்து (இத்தனையும் உணவு இடைவேளைக்குள்!) கபில் தேவை ஆட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வரச்செய்யுமாறும் சொல்கிறான் (என்று நினைக்கிறேன்).//

    தவறு. மார்க்கெட்ங் ஆசாமி கபில்தேவை அழைத்து வரவில்லை.
    கபில்தேவ் அங்கு செலக்டராக வருகிறார். அவ்வளவே.

    //உணவு இடைவேளைக்குப் பிறகு கமலுக்கு கொஞ்சம் ரன்களைக் கொடுத்துவிட்டு மற்றுமொரு பந்தை வீச (எந்த மாதிரியான பந்து என்று கணிக்க முடியவில்லை), அது வானளாவிய கேட்சாகப் போகிறது; பிடிக்கப்படுகிறது; கமல் அவுட். அதைப் பார்வையிட சரியான நேரத்தில் கபில் தேவ் அங்கே. //

    இது இக்பாலின் ச்க்கரவியூக திட்டம்.
    ஏனெனில் கேட்ச் பிடிக்கபடும் பாலை டெலிவர் செய்யும் முன்பு அவர் நடக்கும்போது ஒரு மர்மப்புன்னகை பூக்கிறார். கூடவே கேப்டனுக்கு சைகையால் "சக்கர வியூக்ல சிம்பல்."

    ஸ்..ஸப்பா..கண்ணக் கட்டுதே...!!!
    :-)

    ReplyDelete