Saturday, September 23, 2006

கேரளா நீதிமன்றம் கோலா தடையை நீக்கியது

கேரள அரசு CSE அறிக்கைக்குப் பின்னர் கோக கோலா, பெப்சி ஆகியவை மீது விதித்திருந்த தடை செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

1. உணவுப்பொருள்களைத் தடை செய்யும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
2. மஹாராஷ்டிர மாநில சட்டத்தின்படி அவசரகால நிலை காரணமாக உணவுப்பொருள்கள் விநியோகத்தை சில ஊர்களில் தடை செய்யலாம்; ஆனால் அதுபோன்ற சட்டங்கள் இல்லாததால் கேரளத்தில் இந்தத் தடை செல்லுபடியாகாது. மேலும் பொதுமக்களுக்கு பெருத்த ஆபத்து ஏதும் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
3. CSE ஓர் அரசு சாரா நிறுவனம். அதன் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. CSE பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட சாம்பிளில் ஏதேனும் கலப்படங்கள் செய்யப்பட்டிருக்கலாம். எனவே CSE-யின் அறிக்கையை ஏற்றுக்கொண்டாலும் அதன் சாம்பிள் சரியானதுதான் என்று சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் இது இப்படித்தான் ஆகும் என்று எனக்கு அப்பொழுதே தெரிந்துவிட்டது. கேரள அரசு மூளையைச் சரியாக உபயோகிக்கவில்லை. எனது முந்தைய பதிவொன்றில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்:
கேரளா அரசின் தடை நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்லும். கேரளா சரியான முகாந்திரம் இல்லாமல் மாநிலம் முழுதும் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது. தடை செய்ய விரும்பியிருந்தால் தானே சில பாட்டில்களைப் பறிமுதல் செய்து அரசு சோதனைக்கூடங்களில் பரிசோதனை செய்து அந்தத் தகவலின்பேரில் தடை செய்திருக்கலாம். மேலும் அத்துடன் நச்சுப் பொருளை உணவு என்று சொல்லி விற்றதாக பெப்சி, கோக் இருவர்மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாயிலாக வழக்கு தொடுத்திருக்கலாம்.

இப்பொழுது அவசரப்பட்டதனால் நீதிமன்றங்களில் தேவையின்றி காலம் கழிக்க நேரிடும்.
இத்துடன் இந்த விஷயம் பிசுபிசுத்துப் போய்விடும். சிலர் நீதிமன்றங்களால்தான் பிரச்னை என்று சொல்வர். ஆனால் நீதிமன்றங்கள் தம் வேலையை ஒழுங்காகத்தான் செய்கின்றன. அரசுகள்தாம் சரியான சாட்சியங்களைத் தயார் செய்துகொண்டு, நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். யோசித்து, ஓட்டைகள் இல்லாதவாறு சட்டங்களையும் அரசாணைகளையும் இயற்றவேண்டும்.

9 comments:

  1. நேர்த்தியான சட்ட அணுகலை செய்திருக்கவேண்டியது பற்றிய உங்கள் கருத்து நியாயமானதுதான்.
    ஆனால் என்னுடைய கருத்துப்படி அவ்வாறான நேர்த்தியான, உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும்கூட இந்த தடை நீக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

    மத்திய அரசே தடை செய்திருந்தாலும்கூட தடை நீக்கப்பட்டிருக்கும்.

    கடைசியில் பலசாலி வென்றுவிடுகிறார்.

    இந்திய மத்திய அரசைவிட பெப்சி, கோக் கம்பனிகள் பலமானவை. அவை தாம்நினைத்தத்தை இந்தியாவில் செய்யும் ஆற்றல் மிக்கவை.

    மேற்கினால் இந்தியாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இறைமையே வழங்கப்பட்டிருப்பதால் சட்டரீதியாகக்கூட இவ்வாறான காரியங்களை சாதிக்க முடியாது.

    நாம் எம் மக்களின் நலம் பற்றியோசிக்கவேண்டுமானால் இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் கிடைக்கவேண்டும்.

    இடறல் தொனியோடு மட்டும் இதனை நான் எழுதவில்லை பத்ரி..

    ReplyDelete
  2. கேரள அரசு சரியாக மூளையை உபயோகிக்கவில்லை என்று கூறமுடியாது. (சில பேர் சொல்லலாம் அவர்களுக்கு மூளையே இல்லை என்று :-) ) அவங்களுக்கு தெரியும் இத் தடை பிசுபிசுத்து போகும் என்று, இத்தடையே பின்னால் அரசியல் அறுவடை பண்ண உதவும் என்ற நம்பிக்கையில் தான் ;)

    /CSE ஓர் அரசு சாரா நிறுவனம். அதன் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. CSE பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட சாம்பிளில் ஏதேனும் கலப்படங்கள் செய்யப்பட்டிருக்கலாம். எனவே CSE-யின் அறிக்கையை ஏற்றுக்கொண்டாலும் அதன் சாம்பிள் சரியானதுதான் என்று சொல்வதற்கில்லை.
    /
    நீதிமன்றத்தின் இந்த வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்ப அரசு சார்பு அமைப்பு பரிசோதனை செய்தா சரியா? அவர்களின் Sample லில் மட்டும் கலப்படங்கள் செய்யப்பட்டிருக்காதா?

    CSE ஒரு உப்புமா அமைப்பு இல்லை என்பது நீதிமன்றத்துக்கு தெரியாதா?

    ReplyDelete
  3. பத்ரி சார்
    சி.எஸ்.இ அறிக்கையை விட்டுத்தள்ளுங்கள் - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கோக் நல்லதா கெட்டதா - குடிககலாமா - வேண்டாமா?

    Chinna (ppa Doss)

    ReplyDelete
  4. மயூரன்: உங்களுடைய கருத்துகளிலிருந்து நான் வேறுபடுகிறேன். பெப்சி, கோக் ஆகியவற்றால் நீதிமன்றங்களை அநியாயமான முறையில் மிரட்டல் அல்லது லஞ்சம் மூலம் அடிபணிய வைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அரசுகள் செய்யும் தவறுகளால் மட்டுமே பெரும் நிறுவனங்கள் தப்பிவிடுகிறார்கள்.

    குறும்பன்: CSE 'உப்புமா' அமைப்பு இல்லை. ஆனால் கோலாக்களில் உள்ள நஞ்சின் அளவு என்ன என்பதைத் தீர்மானிக்கும் அமைப்பும் இல்லை. மத்திய அரசின் உணவுத்துறை அமைச்சரகத்தால்தான் இன்த வேலை செய்யப்பட்டிருக்கவேண்டும். CSE தன் வேலையைச் சரியாகவே செய்தது. ஆனால் அதைமட்டுமே வைத்து கேரள அரசு செயல்பட்டிருக்கக்கூடாது.

    கேரள அரசு என்ன செய்திருக்கலாம்?

    1. உடனடியாக காவல்துறை முன்னிலையில் மாநில உணவுத்துறை அமைச்சு சில சாம்பிள்களைப் பெற்றிருக்க வேண்டும்.

    2. அந்த சாம்பிள்களை நான்கைந்து மத்திய சோதனைச் சாலைகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

    3. சோதனையில் நச்சுப்பொருள்களின் அளவு அதிகமாக இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கவேண்டும்.

    4. பதிலைப் பொருத்து, அந்த நிறுவனப் பொருள்களை தாற்காலிகமாகத் தடை செய்திருக்கவேண்டும். எந்நிலையில் மீண்டும் சந்தையில் அவை விற்க அனுமதிக்கப்படும் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கவேண்டும்.

    கேரள அரசு இதனைச் செய்யவில்லை. அதனால்தான் இன்று நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தைத் தானும் பெறவேண்டும் என்றால் அதற்கு ஏற்ப மத்திய/மாநில சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சி செய்திருக்க வேண்டும்.

    உதாரணமாக உணவுப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நீதிமன்றங்கள் தற்போதைய சட்டங்களை முன்வைத்துக் கூறுகின்றன. இது ஏற்கமுடியாத கருத்து. எனவே மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவர வேண்டும். உணவின் மீதான கட்டுப்பாடு மாநில அரசின் கையில்தான் இருக்க வேண்டும். அல்லது குறைந்தது concurrent list-ல் இருக்க வேண்டும்.

    சின்னா: நான் எந்த (இந்திய/பன்னாட்டு) aerated பானத்தையும் குடிப்பதில்லை. பழரசம் அல்லது வெறும் தண்ணீர் மட்டும்தான். அதையே பிறரும் செய்யவேண்டும் என்று முடிந்தவரை சொல்கிறேன்.

    ReplyDelete
  5. //மேற்கினால் இந்தியாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இறைமையே வழங்கப்பட்டிருப்பதால் சட்டரீதியாகக்கூட இவ்வாறான காரியங்களை சாதிக்க முடியாது.

    நாம் எம் மக்களின் நலம் பற்றியோசிக்கவேண்டுமானால் இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் கிடைக்கவேண்டும்.
    //

    மயூரன், தங்களின் இக்கூற்றை விளக்கமுடியுமா?

    ReplyDelete
  6. //அரசுகள் செய்யும் தவறுகளால் மட்டுமே பெரும் நிறுவனங்கள் தப்பிவிடுகிறார்கள்.//

    "நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம். நீ அழுகிற மாதிரி அழுகனுமாம்"

    //மொத்தத்தில் இது இப்படித்தான் ஆகும் என்று எனக்கு அப்பொழுதே தெரிந்துவிட்டது.//

    இப்படித்தான் ஆகும் என்று தெரிந்த பிற உதாரணங்கள்

    1. Only Tamil Medium Rule by DMK during last regime
    2. No Entrance Govt Order by ADMK in 2005

    ReplyDelete
  7. //மயூரன், தங்களின் இக்கூற்றை விளக்கமுடியுமா?//
    கோக் பெப்சி செய்த அநியாயங்கள் பற்றி பெரிய பட்டியலே போடலாம். தாமிரவருணி பகுதிகளில் கொலைகளையே செய்திருக்கின்றன இந்த கம்பனிகள். ஆனால் அது விஷயத்தை கோக் பெப்சி என்ற மட்டத்துக்குள் சுருக்கிவிடும். அதனால்,

    இந்த தொடுப்பை பார்க்கவும்

    ReplyDelete
  8. போபால் விழயத்தில் அரசின் பிழை என்ன? அங்கு ஏன் ஒரு பன்னாட்டுக் கம்பனியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவில்லை?
    (உங்கள் கருதோடும் உடன் படுகிறேன், அரசுகள் ஒழுங்கான சட்டம் இயற்றல் வேண்டும் அதற்கெற்ப ஒழுங்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் போபாலில் நடந்துகொன்டதைப் போல் நடக்க வாபுண்டு )

    ReplyDelete
  9. //கோக் பெப்சி செய்த அநியாயங்கள் பற்றி பெரிய பட்டியலே போடலாம்.//
    முக்கியமாக இங்குள்ள கம்பெனிகளின் பாட்டில்களை மொத்தமாக உடைத்தது

    ReplyDelete