Wednesday, May 13, 2009

நான் அளித்தேன் வாக்கு...

காலை 7.00 மணி, வாக்குச்சாவடி தொடங்கும்போது இருக்கவேண்டும் என்று கிளம்பிவிட்டேன். எப்போதும் வழக்கமாக வாக்களிக்கும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூல் இம்முறை வாக்குச் சாவடி கிடையாது. அதற்கு பதில் 76-ம் வார்டைச் சேர்ந்தவர்கள் செல்லவேண்டியது ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் சன்னிதி, 2-ம் தெருவில் உள்ள உதவிப் பொறியாளர் அலுவலகம்.

Central Madras, Ward 76, Polling booth

76-ம் வார்டுக்கான வாக்குப்பதிவு நடக்கும் அறை வாசலுக்கு நான் செல்லும்போது ஏற்கெனவே எனக்கும் முன் 6 பேர் நின்றிருந்தனர். ஆனால் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் போராடிக்கொண்டிருந்தனர். “இத அழுத்துங்க சார்” என்றார் ஒரு பெண் அலுவலர். “அதைத்தாம்மா அழுத்தறேன்” என்றார் ஆண் அலுவலர் ஒருவர். சிறிது நேரம் அவர்கள் எதை எதையோ அழுத்த, வரிசையில் நின்றவர்கள் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தனர். என் முன் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் - சாஃப்ட்வேர் ஆசாமி போல இருந்தார் - கத்த ஆரம்பித்தார்.

“எல்லாம் இவங்களால ஒரே inefficiency. நாடே இவங்களாலதான் வீணாகுது. ஏழு மணிக்கு எல்லாம் ரெடியா இருக்கவேண்டாமா? ரெண்டு மாசமா என்ன டிரெய்னிங் எடுத்தீங்க. எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட்தான்.”

“சார், ஏன் கோபப்படறீங்க? அவங்களே டென்ஷன்ல இருக்காங்க. கொஞ்ச நேரம் பொறுமையா இருங்களேன்?” என்றேன் நான்.

அவர் தனக்கு அவசர வேலைகள் பல இருப்பதாக அலுத்துக்கொண்டார். 7.15 ஆனது. அலுவலர்கள் பதற்றத்துடன் மெஷினை சரி செய்தனர். அவர்களிடமிருந்து பதிலுக்கு, கோபமாக ஒரு வார்த்தை கிடையாது.

இதற்குள் முன்னால் இருந்த கணவன் - மனைவி ஜோடி, திடீரென கிளம்பி வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர். மணி 7.17-தான்! அப்பா! ஜனநாயகக் கடமை ஆற்ற இன்னும் ஐந்து நிமிடங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?

கதர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இருந்த பெரியவர், கையில் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுவரவில்லை. “இங்கதான் என் பேரோட என் போட்டோ இருக்கே” என்றார். “உங்ககிட்ட ஓட்டுனர் லைசன்ஸ் இருக்கா சார்?” என்றேன். “பொம்பளைங்க கிட்ட அதெல்லாம் இருக்காதே” என்றார். எனக்குப் புரியவில்லை. பின், தன் மனைவியிடம் லைசன்ஸ் கிடையாது என்பதைச் சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன். (இன்று பெண்களும் கார், பைக் ஓட்டுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா, என்ன?)

இதற்குள் வாக்கு இயந்திரம் சரியாகிவிட, முதலில் வரிசையில் நின்ற ஒருவர் வாக்களித்தார். இரண்டாவதாக இருந்தவர்தான் அலுவலர்களை வாய்க்கு வந்தபடி திட்டிய மாமனிதர். ஆனால் அவர் முறை வந்தபோது, அலுவலர்கள் இன்முகத்துடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அந்த அளவுக்குப் பெருந்தன்மையைக் காட்டிய அவர்களிடம் கடுகடுவென்றே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் இவர்.

என் முன் இருந்த அடையாள அட்டை இல்லாத பெரியவர், என்னை முன்னால் போகச்சொன்னார். “மனைவிய அனுப்பிருக்கேன், அட்டை கொண்டுவர” என்றார். நான் அவருக்கு முன் நகர ஆரம்பித்தபோது, அவரது மனைவி கையில் இரண்டு அட்டைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்.

இதற்குள் மற்றொரு மிடில் கிளாஸ், அரசு ஊழியராக இருந்து ரிட்டயர் ஆன பெரியவர் அங்கு வந்தார். “எனக்கு இங்க வாக்கு இருக்கான்னு தெரியல” என்றார். நேராக உள்ளே போய் என்னென்னவோ தாள்களைக் காண்பித்தார். தான் சமீபத்தில்தான் லாயிட்ஸ் ரோடுக்கு (அவ்வை சண்முகம் சாலை) வீடு மாற்றல் செய்துகொண்டு வந்ததாகவும், தன் மகனுக்கும் மருமகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துவிட்டதாகவும் தனக்கும் தன் மனைவிக்கு மட்டும் வரவில்லை என்றும் சத்தமாகச் சொன்னார்.

வாக்குச் சாவடி அலுவலர்கள் இவருக்கு எந்த விதத்திலும் உதவ முடியாது. ஆனால் இவரோ அவர்களைப் பார்த்து கன்னாபின்னாவென்று சத்தம் போட ஆரம்பித்தார். அதற்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் அவரை பணிவுடன் இவரை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று உதவ முற்பட்டனர். என்னை முன்னால் அனுப்பிய பெரியவர் இப்போது மீண்டும் பின்னுக்குப் போகச் சொன்னார். அவரது மனைவி முதலில் உள்ளே சென்றார்.

அவர்களுடன் கூடவே ஒரு சிறு குழந்தை (பேத்தி) வந்திருந்தது. வாக்குச் சாவடி அலுவலர்கள் குழந்தை வாக்களிக்கும் இடத்துக்குப் போகக்கூடாது என்றனர். ஏதாவது பட்டனை அது தவறாக அழுத்தினால் பிரச்னை என்றனர். பாட்டியும் தாத்தாவும் வாக்களிக்க, குழந்தை மட்டும் வெளியே அனுப்பப்பட்டது.

அடுத்து என் முறை. என் வரிசை எண்ணை ஒரு பெண் அலுவலர் படிக்க, தள்ளி உட்கார்ந்துகொண்டிருந்த ஓர் ஆண் அலுவலர் அதைச் சரிபார்த்து பெயரை உரக்கச் சொல்ல, அடுத்து ஒரு பெண் அலுவலர் என் முகம் ஒட்டிய பக்கத்தில் என் முகத்தையும் பெயரையும் சரிபார்க்க, அடுத்து ஓர் ஆண் அலுவலர், என் அடையாள அட்டை எண்ணை ஒரு ரெஜிஸ்டரில் எழுதி, என்னைக் கையெழுத்திடச் சொல்லி, என் இடதுகை ஆள்காட்டி விரலில் மை இட்டார். நான் வாக்கு இயந்திரத்தை நெருங்கும் முன், மற்றொரு பெண் அலுவலர் தன்னிடமிருந்த கண்ட்ரோல் பட்டனை அழுத்த, நான் வாக்களிக்கும் பட்டனை அழுத்த... பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

முடிந்தது.

அலுவலர்களுக்கு நன்றி கூறி, வெளியே வந்தேன்.

12 comments:

 1. ஹிஹி சுஜாதா கதை மாதிரி எழுதிருக்கீங்களே பாஸு..

  அதும் பீப்ப்ப்ப் சுஜாதா டச்சு..

  (அப்ப சென்னை முழுக்க மெய்யாலுமே வோட்டிங் மிஷின் கோளாறுனு சொல்றது நிஜம்தானா?

  ReplyDelete
 2. வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏதும் இல்லை. எப்போதோ ஒருமுறை மட்டும் இந்த இயந்திரங்களை இயக்கும் அலுவலர்களுக்கு என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியவில்லை. அவ்வளவுதான். 7.00 மணிக்கு ஆரம்பிக்கவேண்டியது 7.17-க்கு ஆரம்பித்தது. இதைப் பெரிதாகக் குற்றம் சொல்லவேண்டியதில்லை.

  ஆனால் காலை நேரம் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது, மதியம் வெய்யிலை நினைக்கும்போது, நிச்சயம் 50% வாக்குப் பதிவு நடந்தாலே நான் ஆச்சரியப்படுவேன்.

  ஒரு வாக்குச் சாவடியில் பெரும் சண்டை ஒன்று நடந்தது. அது மற்றொரு பதிவாக வரும்.

  ReplyDelete
 3. நீங்கள் சொல்லிய சாஃப்ட் வேர் இஞ்சினியர் போன்ற தனிமனித அரைவேக்காடுகளும் மக்கள் என்ற ஒற்றைச் சொல் முக்காட்டுக்குள் உலகம் முழுக்க ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்,பத்ரி.

  ReplyDelete
 4. அனுபவிச்சு ஓட்டு போட்ருக்கிங்க.

  உண்மைய சொல்லுங்க எந்த கட்சிக்கு ஓட்டு போட்டிங்க?

  ReplyDelete
 5. ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றிய பத்ரி.. வாழ்க.. வாழ்க..

  ReplyDelete
 6. ப்த்ரி ஒரு விசயம் சொல்ல மறந்த்துட்டேன்.

  Jaya TV-ல மாலனோடு பேசும்போது சொன்னிங்கலே,
  அந்த SMS feature. ந்ல்ல Idea.

  இப்படிக்கு
  ரமேஷ், நாமக்கல்.

  ReplyDelete
 7. உதயசூரியனுக்கு வாக்களித்ததற்கு நன்றி!

  ReplyDelete
 8. Program in Jaya TV with Malan - is it available in any site as upload??

  ReplyDelete
 9. >என் முன் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் - சாஃப்ட்வேர் ஆசாமி போல இருந்தார் - கத்த ஆரம்பித்தார்.<

  இளைஞன் என்பதோடு விட்டிருக்க்லாம். சாப்ட்வேர் மேல் உமக்கும் என்னய்யா காண்டு?

  ReplyDelete
 10. 'ஆசாமி போல இருந்தார் '
  perhaps he had laptop bag on his shoulders :)

  ReplyDelete
 11. ஒவ்வொரு நாளும் வெளியே தெரு வீதியில் போயிட்டு வந்தாலே நிறைய கதைகள் கிடைக்கும் என்று நண்பர்களிடம் சொல்லி வந்தேன். நிரூபிச்சுட்டீங்க! :-)

  - விகடகவி

  ReplyDelete
 12. நீங்கள் அழுத்திய பட்டனில் தானே விளக்கு எரிந்தது? ஜெயலலிதா வேறு ஏதோ சொல்லியிருக்காரே?

  ReplyDelete