நான் பேசவருவது 'Art of Negotiations' பற்றி. இதை, பேரம் பேசுதல் என்று தமிழில் சொன்னால் நீர்த்துப்போகிறதோ என்று சந்தேகம்.
தொழில்முறை நெகோஷியேஷனில் பல ஆட்களைப் பார்த்திருக்கிறேன். சிலர் திகில் ஏற்றும் ஆசாமிகள். இந்தாள் மூஞ்சியில் மறுபடி முழிக்கவே கூடாது என்று தோன்றும். ஆனால் அதே ஆசாமியே, கருணையே வடிவாக, அன்பொழுக மீண்டும் நம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். பத்து நாள் முன்தான் நம்முடன் ஒரு டீல் போட்டிருப்பார். அதில் நம் துண்டு, கோமணம் என்று அனைத்தையும் உருவிக்கொண்டு போயிருப்பார். எப்படி, இந்த ஆளுக்கு மீண்டும் நம்மிடம் பேசும் தைரியம் வருகிறது என்று தோன்றும். ஆனால் அவர்களுக்கு இந்த எண்ணமே இருக்காது.
டெக்லான் மர்ஃபி என்ற ஒரு ஐரிஷ்காரர். கிரிக்கின்ஃபோவின் ஆரம்ப காலத்தில் கிரிக்கின்ஃபோவில் முதலீடு செய்திருந்த மைக்கல் வாட் என்பவரின் வலதுகரமாக இருந்தவர். தலையெல்லாம் செக்கச் செவேலென்று முடி இருக்கும். ஐரிஷ்காரர்களுக்கே உரித்தான முன்கோபம். சட்டென்று கொதித்துப் போவார். ஆனால் உண்மையில் இவர்தான் எதிராளி கோபம் கொள்ளுமாறு நடந்துகொள்வார். பேரம் பேசும்போது, எதிராளிக்கும் சற்றேனும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றியதே கிடையாது. ஆனால் தொழிலுக்கு அப்பாற்பட்டு நல்ல மனிதர். யாருடனாவது பேரம் பேசச் செல்லும்போது இவர் நம் பக்கம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றவைப்பவர்.
ஆனால் இவரால் எல்லாக் கட்டங்களிலும் உபயோகம் இல்லை. இரண்டு பேருக்குள் ஒரு டீல் நடக்கவேண்டும். இருவரும் டீல் நடக்காமல் எழுந்துபோகமுடியாது என்ற நிலை இருக்கும்போதுதான் இவருக்குப் பலன் இருக்கும். இல்லாவிட்டால் இவர் நடந்துகொள்ளும் விதத்தில் எதிராளி இவருடன் பேசவேண்டும் என்ற அவசியமே பல இடங்களில் இல்லாமல் போய்விடும்.
அந்த மாதிரி இடங்களில் வேறு சில ஸ்மூத் ஆபரேட்டர்கள் தேவை. இவர்கள் வழுக்கிச் செல்லும் வெண்ணெய்க் கட்டிகள் மாதிரி. பண விஷயத்தில் கெட்டியாக இருப்பார்கள். ஆனால் அதே நேரம் நீக்கு போக்காக நடந்துகொள்ளவும் தவறமாட்டார்கள். டீல் நடந்தாகவேண்டும். பேரம் படிந்தாகவேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் கவலை இல்லை. இங்கு ஒரு பைசா படியாது என்ற இடத்திலும்கூட தலையை நுழைத்து எதையாவது செய்துவிடுவார்கள். அப்படி இரண்டு பேரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் சென்னையில் இருக்கிறார். ஒருவர் டெல்லியில். ஆனால் இவர்களும் டேஞ்சரஸ் ஆசாமிகள்.
டீல் நடந்தாகவேண்டும் என்பதற்காக பொய் சொல்லத் தயங்காதவர்கள். அவர்கள் சொல்வதை ‘பொய்’ என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. உண்மையை மிகவும் எலாஸ்டிக்காக இழுத்து அதில் உண்மையின் சுவடே இல்லாமல் செய்துவிடுவது. இவர்களின் பலமே இவர்களது டெலிஃபோன் டைரக்டரி. எல்லாருடனும் எப்போதும் தொடர்பில் இருந்தபடியே இருப்பார்கள். உங்களை எந்த பார்ட்டியிலாவது பார்த்தால் போதும். உங்களால் எப்போதாவது ஏதாவது நன்மை கிடைக்கும் என்று அவர்களுக்குத் தோன்றினால், வலிய வந்து, பேசி, நட்பைப் பெருக்கிக்கொள்வார்கள்.
இவர்கள் செய்யும் நெகோஷியேஷனும் சுவாரசியமாக இருக்கும். எதிராளி முறைத்தால் இவர்கள் பணிவார்கள். எதிராளி சும்மா இருந்தால், இவர்கள் ஏறுவார்கள். ஆனால் கடைசியில் டீலை எப்படியாவது முடித்துவிடுவார்கள். டீல் முடிந்தால் சந்தோஷம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. எந்த ஒரு டீலிலும் அடுத்து செய்யவேண்டிய வேலைகள் என்று பல உள்ளன. அந்த வேலைகளைச் செய்யவேண்டியவர்களுக்குத்தான் தர்ம சங்கடம். அவர்கள் சார்பில், நம் நெகோஷியேட்டர்கள் அந்த அளவுக்கு சத்தியங்களை வாரி இறைத்திருப்பார்கள்.
நான் பார்த்த வெகு சிலர்தான் தொழில் நெகோஷியேஷனில் நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். வேறு சிலர் பரிதாபகரமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு சிரித்துப் பேசவும் தெரியாது. ஸ்மூத்தாக வேலையை முடிக்கவும் தெரியாது. ஆனால் அவர்கள் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் பார்த்த வெகு சிலர்தான் தொழில் நெகோஷியேஷனில் நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.//
ReplyDeleteநெகோஷியேஷன் என்று வந்த பிறகு நியாயம் எப்படி இருக்க முடியும்?
You are talking about Absolutes with Realative terms.