Thursday, May 21, 2009

காங்கிரஸ் - திமுக

ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி பாராட்டப்படவேண்டியவர்கள்.

இம்முறை அமைச்சரவை உருவாக்குவதில் சென்ற முறை இருந்ததுபோலப் பிரச்னைகள் இருக்காது. சென்றமுறை கருணாநிதி காங்கிரஸ் கழுத்தில் கத்தி வைத்து இடங்களை வாங்கினார். கையெழுத்து போட்டுக் கொடு என்று மிரட்டினார். பிறகு தருவேன் என்று சொன்ன இடங்களைத் தரவில்லை என்று முறைத்தார். பிறகு சண்டை, சமாதானம் எல்லாம் பேசி கேட்ட இடங்கள் எல்லாம் கிடைத்தபின்தான் சந்தோஷம் அடைந்தார்.

இம்முறை அந்தக் கூத்து அத்தனையும் சோனியா, மன்மோகன் சிங் ஞாபகம் வைத்திருப்பார்கள். எனவே அவர்களும் பேரம் பேசுவார்கள். தொலைத்தொடர்பு கிடையாது. இரண்டு கேபினெட் மந்திரிகள்தான். பாலு, ராஜா கூடாது. இஷ்டம் இருந்தால் எடுத்துக்கொள், இல்லாவிட்டால் போ.

பொதுவாக இது பிற கட்சிகளுக்குப் பெரிய பிரச்னை இல்லை. திரிணமுல் காங்கிரஸுக்கு இதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு பெரிய சிக்கல். ஒரு மகன். ஒரு மகள். ஒரு பேரன். பேரன் சண்டை போட்டுக்கொண்டு போனாலும் மீண்டுவந்ததும் தொலைக்காட்சி மூலம் நிறைய ஆதரவு கொடுத்தவர். கட்சி ஜெயிக்க நிறைய பண மற்றும் இத்யாதி உதவிகளையும் செய்திருக்கலாம். காங்கிரஸ் இரண்டு கேபினட் மந்திரிகளைத்தான் கொடுப்போம் என்று சொன்னால் என்ன ஆவது? அழகிரிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவி கொடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மதுரை பற்றி எரியும். தயாநிதிக்குக் கொடுத்தே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் சன் டிவி முறைத்துக்கொள்ளும். பெண் பாவம் இல்லையா?

கடைசியில் பெண்ணுக்கு மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் கிடைக்கலாம். அவரும் போனால் போகிறது என்று அதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும் இந்த காங்கிரஸுக்கு இந்த அளவுக்கு அழிச்சாட்டியம் கூடாதுதான். வேண்டுமென்றால் அவர்கள் ராகுலுக்கு நான்கைந்து மந்திரி பதவிகள் கொடுத்துக்கொள்ளட்டுமே? பிரியங்காவுக்கும் கூட.

***

லாலு பிரசாத் யாதவ் மீதான மரியாதை அதிகரித்துள்ளது. தனது கட்சி தோற்றது தான் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததால்தான் என்று ஒப்புக்கொள்கிறார். தனக்கு அமைச்சரவை கிடைக்காவிட்டால் ஒன்றும் பிரச்னை இல்லை என்கிறார். காங்கிரஸ் கொடுக்காவிட்டால் அதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். மக்களை ‘சோற்றால் அடித்த பிண்டம்’ என்று திட்டவில்லை. காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என்கிறார்.

நான் சோனியாவுக்கு ஒரு விண்ணப்பம் போடப்போகிறேன். லாலுவுக்கு ரயில்வே மினிஸ்ட்ரி இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது பார்த்துப் போட்டுக்கொடுங்களேன். மாட்டுத் தீவன டிபார்ட்மெண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை! எவ்வளவு நல்ல மனிதர். கருணாநிதி போன்று ஜெயித்தாலும் தோற்றாலும் மூக்கால் அழும் கேஸ்களுக்கு முன், லாலு தெய்வம் போன்றவர்.

***

காங்கிரஸ், தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவேண்டும் என்பது என் கருத்து. திமுகவுக்குக் கொடுக்க மனமில்லாவிட்டால், பதிலுக்கு காங்கிரஸ், மத்தியில் திமுகவுக்கு ஒரு அமைச்சரவை இடம் கூடக் கொடுக்கக்கூடாது.

***

2004-ல் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை உருவாவது பற்றி நான் எழுதிய சில பதிவுகள்:

புது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு
புதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்
அமைச்சரவை மாற்றங்கள்

15 comments:

  1. கருணாநிதி மேல் இவ்வளவு கடுப்பு?... ஏன்?... தங்களின் தேர்தல் முடிவு கணிப்பை பொய்யாக்கி விட்டார் என்பதாலா? :)

    ReplyDelete
  2. DMK has zero leverage. Congress can survive without DMK support at the center but can DMK survive without congress support in the state? That is, if DMK gets out of UPA, congress government will survive but if congress withdraws support to dmk at the state, karunanidhi govt will fall.

    ReplyDelete
  3. உங்க டீலிங் எனக்கு ரெம்பவே பிடித்திருக்கு...

    ReplyDelete
  4. வெட்கமாக இல்லையா ! தன் குடும்பம்தான் வாழ வேண்டும், மற்றவர்கள் எல்லாம் எப்படியும் போகட்டும்,
    சோனியாவையும், ராகுலையும் பார்த்தாவது படிக்க வேண்டாமா பெருந்தன்மையை ? இந்த சூழ்நிலையில் அவர்கள் நினைத்து இருந்தால் பிரதமர் பதவியை எளிதாக அடைந்து இருக்கலாம்.
    பதவி, பதவி என்று உயிரை விடும் இந்த குடும்பத்தை சொல்லி பயனில்லை, இதை ஆதரிக்க ஒரு கும்பல் இருக்கிறதே, இவர்களை என்ன சொல்வது? கப்பல்காரனுக்கு கப்பல் மந்திரி, TV -காரனுக்கு TV மந்திரி, இதுவெல்லாம் ஒரு பொழைப்பு?

    ReplyDelete
  5. பத்ரி.. என்ன துறைகளை பெற்றால் தமிழகத்திற்கு புதிய வசதி வாய்ப்புகள் பெருகும் என்று விலாவாரியாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி தாக்கி விட்டீர்களே.?

    ReplyDelete
  6. நிஜமாகவே நல்லத் செய்ய வேண்டும் என்றால் விவசாயத்துறையை கேட்க வேண்டும். தலைவர் அதுக்கா போனார்..??

    நல்ல பணம் புரளும் துறைகளையே எப்போதும் கேட்டு நச்சரிப்பார்.

    அதுவும் ஒரு அமைச்சரவை எப்படி இருக்க வேண்டும் தீர்மானிக்க வேண்டியவர் பிரதமரே.. அவரின் வழிகாட்டுதலில் பெயரில் நாடு நன்றாக இருக்கும் என்று முனைந்தே இந்தியா முழுவதும் பெருமபாலும் காங்கிரஸ் வென்றுள்ளது..


    ஊழல் பேர்வழி என்று பெயரெடுத்த பாலு, ராஜா வேண்டாம் என்று பிரதமரே கூறியும் அடம் பிடிப்பது தான் ஒரு முதல்வருக்கு தமிழின தலைவருக்கு அழகா.. ???????????????????

    எனென்றால் தேர்தலில் திமுக செலவு முழுவதும் செய்தது இவர்கள் இருவர் மட்டுமே.. அறுவடை செய்ததில் சிலவற்றை மீண்டும் விதைத்திருக்கிறார்கள். மீண்டும் அறுவடை செய்ய சந்தர்ப்பம் கொடுக்காமல் இருந்தால் எப்படி..?


    தங்க பாலு, ஈவிகேஸ் போன்ற தலைகள் வெற்றி பெறாமல் இருக்க திமுக செய்த உள்ளடி வேலைகளே காரணம்.

    விஜய்காந்த் கொடுக்க வேண்டியதை கொடுத்து தனியாக நிற்க வைத்ததும் காங்கிரஸே.. ஏற்பாடு சின்ன மூப்பனார்

    சும்மா பூச்சி காட்டி இனியும் மிரட்ட முடியாது..

    நீங்கள் சொல்வது போல தமிழக அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதே பெரிய விஷயம்.

    அம்மா காங்கிரஸிடம் நெருங்க வழி விடுகிறார்கள்.

    நொண்டி குதிரைகளான பாமக, வைகோ கழட்டி விட அம்மாவிற்கு ஒரு கால் பக்க அறிக்கை போதும்..

    விஜயகாந்தை சமாளிக்க அடுத்த முறை காங்கிரஸிடம் மட்டுமே கூட்டு என்ற மன நிலைக்கு ஜெ ஏற்கனவே வந்திருக்க் கூடும்..

    சரிவு திமுக விற்கே..

    பிரதமருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. காங்கிரஸ் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சொன்னபோதெல்லாம் கருணாநிதி அதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொண்டதில்லை. இப்போது அதுவே அவருக்கு நிகழ்கிறது. இதற்காக நிச்சயம் காங்கிரஸையும் சோனியாவையும் பாராட்டவேண்டும்.

    கருணாநிதிக்கு பதவிகள் வேண்டுமென்றால், காங்கிரசுக்கு பதவிகள் தர அவர் ஆயத்தமாகவேண்டும்.

    திமுக மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்ததை மறுத்த கருணாநிதிக்கு, மைனாரிட்டி அரசு என்னும் உண்மை முகத்தில் அறையத் தொடங்கியிருக்கும்.

    ReplyDelete
  8. //காங்கிரஸ், தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவேண்டும் என்பது என் கருத்து. திமுகவுக்குக் கொடுக்க மனமில்லாவிட்டால், பதிலுக்கு காங்கிரஸ், மத்தியில் திமுகவுக்கு ஒரு அமைச்சரவை இடம் கூடக் கொடுக்கக்கூடாது.//

    கொடூரமான எண்ணம். தனிக்கட்சி ஆட்சி என்று கூறிதான் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டன.

    நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி என்று சொல்லிதான் ஓட்டுக் கேட்டன.

    எல்லாம் தெரிந்த பத்ரிக்கு, இது மறந்தது ஏனோ? :-(

    ReplyDelete
  9. அப்புறம், கேட்க மறந்துட்டேன்.

    திமுக கூட்டணிக்கு நான்கைந்து இடங்கள் கூட தமிழ்நாட்டில் தேறாது என்று சாபம் விட்டிருந்தீர்கள். பணநாயகம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.

    ReplyDelete
  10. திமுக கூட்டணிக்கு 4-5 என்று சாபம் விடவில்லை. 15 இடங்கள் கிடைக்கும் என்றுதான் சொல்லியிருந்தேன். 25-15 என்று அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.

    நிச்சயம் பணநாயகம் + கள்ள வாக்கு நாயகம்தான் நடந்துள்ளது. இல்லை என்று உங்கள் திமுக நண்பர்களிடம் கேட்டு உறுதியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்?

    தேர்தல் முடிந்துவிட்டது. இதில் தமிழகத்தில் நான் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை என்பது உண்மையே. ஆனால் அடுத்த கட்டமாக, போனமுறை கூத்தாடு மிரட்டியதுமாதிரி கருணாநிதி நடந்துகொண்டால் இந்த முறை அவருக்கு அல்வாதான் என்று அனைவருக்குமே தெரியும். அவருக்கு மட்டும் பாவம், தெரியவில்லை.

    நெகோஷியேஷன் - பேரம் பேசுதல் - என்பது நல்ல கலைதான். ஆனால் அதிலும் ஒரு ஸ்மூத்னெஸ் வேண்டும். எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவேண்டும். திமுகவுக்கு - முக்கியமாக கருணாநிதிக்கு - அது தெரியவில்லை. அதன் பலன் கிடைக்கப்போகிறது.

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று யார் எந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்? கூட்டணி ஆட்சி வந்தால் சந்தோஷப்படுவேன். கொள்ளை அடிப்பது குறையும். அல்லது பிற கட்சிகளுக்கும் கொள்ளைப் பணத்தில் பங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு பத்ரி.

    எப்படியோ இரண்டு ஊழல் பெருச்சாளிகளுக்கு மந்திரி பதவி கிடைக்காமல் போய் விட்டது. பாவம் காங்கிரஸ்காரர்களும் கொஞ்சம் சம்பாரிக்கட்டும் இந்த தடவை. நாட்டின் எல்லாப் பணத்தையும் திமுககாரர்களே சுரண்டினால் எப்படி?

    ReplyDelete
  12. மைய ஆட்சியில் தாம் கேட்ட அளவு பதவிகள் கொடுக்கவில்லை என்று சேராமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல். ஆனால், அதை grace உடன் செய்யக் கூடாதா? புன்னகையுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரக் கூடாதா ?

    ReplyDelete
  13. ///பெயரில்லா சொன்னது…
    DMK has zero leverage. Congress can survive without DMK support at the center but can DMK survive without congress support in the state? That is, if DMK gets out of UPA, congress government will survive but if congress withdraws support to dmk at the state, karunanidhi govt will fall.////

    You are wrong Mr.
    ‘Kalnger is The Kalanger’

    If TN congress withdraw support, nothing they will GET, means congress can’t form the govt. But if DMK withdraw support, Congress has to get SP or BSP’s support. Congress knew the danger behind ‘Support from SP or BSP’ and stability in? Mark

    Again, Kalnger is The Kalanger accept if you have Neutral heart or ignore and read Thukluck twice a day.

    tamil priyan

    ReplyDelete
  14. ஆட்டோ எல்லாம் வராதா ? :))

    ReplyDelete
  15. பாலுவை கழுத்தைப் பிடித்து தள்ளியாகிவிட்டது. மகனுக்கும் பேரனுக்கும் கொடுத்துவிட்டு ராசாவை கழட்டிவிட்டால் தலித் சமுதாய எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்பதால் கெஞ்சிக் கூத்தாடி அவருக்கும் பதிவி வாங்கிவிட்டார். தேவை இல்லாத?! விமர்சனங்கள் வரும் என்று சொல்லி கனிமொழி, தானே முன்வந்து மந்திரிப் பதவி வேண்டாம் என்று சொன்னதாகத் தகவல். கருணாநிதி குடும்பத்தில் இப்படி ஒரு ஜீவனா?. எவ்வளவு தூரம் உன்மையோ?

    ReplyDelete