Saturday, August 14, 2010

மேகங்களின் மேலாகப் பயணம்

அப்படியே வைரங்களைக் கொட்டி இறைத்தாற்போல் இருக்கும். கரிய இருள். அதில் பல்வேறு பேட்டர்ன்களில் மினுக் மினுக் வெளிச்சப் புள்ளிகள். விமானத்திலிருந்து பார்க்கும்போது எல்லா நகரங்களும் அழகாகவே தெரிகின்றன. இருபுறமும் விளக்குகள் அமைந்த சாலைகள், அவற்றில் ஊர்ந்து செல்லும் ஒளித் துகள்கள். சென்னை போன்ற கடல் நகரங்களில் விமானம் கீழிறங்கும்போது கடலில் ஆங்காங்கே நிற்கும் கப்பல் வடிவ ஒளிப்புள்ளிகளையும் காணலாம்.

சென்னைக்கு வரும் விமானங்கள் ஏனோ வித்தியாசமாக ஒரு லூப் அடித்தே தரை இறங்குகின்றன. நேராக வடக்கு தெற்காக இறங்காமல், முதலில் தெற்கில் சற்றே தாண்டிப்போய், அப்படியே கடலுக்கு மேலாக நுழைந்து, ஒரு சுற்று சுற்றி, தென் மேற்குத் திசையில் மைலாப்பூர், கிண்டி என்று பறந்து கத்திப்பரா சந்திப்பின் ராட்சச இதய வடிவத்தையும் ஜோதி தியேட்டரின் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸ் பேனரையும் தாண்டி, ரன்வேயை நோக்கி சற்றே நேர்ப்படுத்தி அப்படியே தரை இறங்குகின்றன இந்த விமானங்கள்.

இப்போது சூல் கொண்ட மேகங்கள் இருக்கும் மழைக்காலம். மேலே ஏறும்போது மேகங்களைக் கிழித்துக்கொண்டு மேகங்களுக்கு மேலாகப் போகவேண்டும். கீழே இறங்கும்போதும் மேகங்களைக் கிழித்துக்கொண்டு இறங்கவேண்டும். மேகங்கள் ஊடாகப் பறக்கும்போது விமானம் தடதடவென்று ஆடிக்கொண்டே இருக்கும். டர்புலன்ஸ் என்பார் விமானி. டர்போ ப்ராப் விமானங்கள் ரொம்பவே ஆடும். பலருக்கு வயிற்றைப் பிசையும். சற்றே பெரிய ஜெட் விமானங்கள் என்றால் அந்த அளவுக்குத் தொல்லை இல்லை. ஆனாலும் விமானத்தில் பறப்பவர்கள் முகத்தில் கலவரம் தெரிவதைக் காணலாம்.

மேகங்களுக்கு மேலே செல்லும்போது ஆச்சரியமான வடிவங்களைப் பார்க்கமுடியும். உங்கள் மனத்தில் எந்த வடிவத்தை நினைத்துக்கொண்டாலும் அதேபோல இருக்கும் அந்த மேகங்கள். பழையகாலப் புராணப் படங்களில் அடாஸாக மேகங்கள் செய்துவைத்திருப்பார்கள். நிஜ மேகங்கள் ஆங்காங்கே அடர்த்தியாக, உறைபனி போலப் பரவியிருக்கும். சில இடங்களில் பஞ்சு மிட்டாய் போலத் தூவப்பட்டிருக்கும். சில இடங்களில் புகைபோல உள்ளே பார்க்கக்கூடிய மாதிரி டிரான்ஸ்பேரண்டாக இருக்கும். பாற்கடல் என்பதற்கான இன்ஸ்பிரேஷன் மேகக் கூட்டங்களை மேலிருந்து பார்க்கும்போதுதான் வந்திருக்கவேண்டும்.

இந்த மேகங்கள் எல்லாமே நீரால் ஆனவை. ஆனால் எல்லா மேகங்களுமே மழையாக ஆவதில்லை. நமக்கே தெரியும், சாம்பல் அல்லது கறுத்த மேகங்கள்தான் மழையைக் கொண்டுவரும் என்று. வெண் மேகம், கறு மேகம் இரண்டுமே நீரால் ஆனாலும் எப்படி ஒன்றுமட்டும் மழையாகப் பொழிகிறது; மற்றொன்றில் மழை இல்லை?

சொல்லப்போனால், இதற்கான விடையே அதன் வண்ணத்தில்தான் உள்ளது.

சூடான காற்று நீராவியை கிரகித்து, மேலே மேலே ஏறிச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டதும், அங்கே நீராவி குளிர்ந்து ஆங்காங்கே காற்றின் இடையே உறை துளிகளாகக் கிடக்கிறது. ஆனால் அவற்றுக்கு கீழ்நோக்கி விழும் அளவுக்கான கனம் இல்லை. அதே நேரம், இந்தத் துளிகளுக்கு இடையே அதிக இடைவெளி கிடையாது. இந்த மேகத்தின்மீது சூரிய ஒளி படும்போது அந்த ஒளியால் நீர்த் துளிகளுக்கு இடையேயான இடைவெளியை ஊடுருவமுடிவதில்லை. இதனால் ஒளி பட்டுத் தெறிக்கிறது. அப்படிப் பட்டுத் தெறிக்கும் ஒளி காரணமாகவே அந்த மேகம் வெண்மையாக உள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த மேகத்தில் இருக்கும் நுண்துளிகள் நெருங்கி ஒன்றுசேரத் தொடங்குகின்றன. அப்போது நீர்த் துளிகள் கனம் பெறுகின்றன. அதே நேரம், துளிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் இப்போது அதன்மீது படும் ஒளியில் பெரும்பங்கு இடைவெளி வழியாக ஊடுருவி உள்ளே செல்வதால், பட்டுத் தெறிக்கும் ஒளி குறைவு. எனவே சாம்பல் நிறம்.

மேலும் மேலும் நீர்த் திவலைகள் ஒன்றுசேர, நீர்த்துளிகளின் கனம் அதிகமாக, இடைவேளி மேலும் அதிகமாக, அந்த மேகம் ஒளி எதையுமே சிதறடிப்பதில்லை. எனவே கறு மேகம். இந்நேரம் மழை கொட்டும் அளவுக்கு நீர்த் துளிகளுக்குக் கனம் உள்ளது. மழையும் கொட்டுகிறது.

இந்தக் கறு மேகங்கள் வழியாகச் செல்லும் விமானத்துக்குத்தான் அதிக டர்புலன்ஸ் - கொந்தளிப்பு. விமானம் மேலெழுந்து செல்லக் காரணமே அழுத்தத்தில் உள்ள மாறுபாடு. ஏரோஃபாயில் எனப்படும் விமான இறக்கையின் வடிவம் காரணமாக கீழே அதிக அழுத்தமும் மேலே குறைவான அழுத்தமும் இருக்கும். இதனால் ஏற்படுவதுதான் லிஃப்ட் எனப்படும் விசை. ஆனால் ஆங்காங்கே நீர்த்திவலைகள் பரவி இருக்கும் மேகத்துக்குள் வெவ்வேறு அடர்த்தி (டென்சிடி) நிலவும். இதனால் மேல் நோக்கி உருவாகும் லிஃப்ட் விசை ஒவ்வொரு புள்ளியிலும் மாறுபட்டு இருக்கும். இதனால்தான் விமானம் குலுங்குகிறது.

சில சமயம் ஏர் பாக்கெட் எனப்படும் திடீர் வெற்றிடத்தில் (மிகக் குறைந்த அழுத்தம் கொண்ட இடத்தில்) மாட்டிக்கொள்ளும் விமானம் சடார் என்று கீழ் நோக்கி இறங்கும். உடனே விமானி அதன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வார். ஆனால் அந்த ஒரு விநாடிக்குள் வயிற்றில் கலவரமாக இருக்கும். நெஞ்சு அடைக்கும். ஒருமுறை நான் பெங்களூரிலிருந்து வரும்போது விமானம் சடாரென 5-6 அடி விழுந்திருக்கும். சட்டென விமானத்தில் ஒரே அமைதி. (மயான அமைதி என்று சொன்னால் அசிங்கமான ஜோக் ஆக இருக்கும்.) வண்டி கீழே இறங்கும்வரை யாருமே வாயைத் திறக்கவில்லை.

ஒருமுறை (1996) நான் நியூ யார்க் ஜே.எஃப்.கேயிலிருந்து லண்டன் ஹீத்ரோ வரை வந்த பயண அனுபவம் திகிலானது. கடுமையான மழை. அட்லாண்டிக் மேலாகப் புயல். நியூ யார்க் நகரில் பல இடங்களில் கடல் நீர் புகுந்திருந்தது. தெருவெல்லாம் டிராஃபிக் நெரிசல். விமானங்கள் பலவும் கேன்சல். பின் மழை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் லண்டன் செல்லவேண்டிய நான்கைந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் வரிசையாகக் கிளம்பின. விமானி தெளிவாகச் சொல்லிவிட்டார்... உணவு கிடையாது. காப்பி, டீ கிடையாது. எல்லொரும் பெல்ட்டை இறுகக் கட்டிக்கொண்டு அப்படியே உட்காரவேண்டியதுதான். டாய்லெட் போகமுடியாது. (ஆனாலும் சிலர் வெறு வழியின்றி எழுந்திருந்து தள்ளாடித் தடுமாறிப் போய்விட்டுதான் வந்தார்கள்.) விமானத்தில் பாதி பேர் வாந்தி. சிக் பேகைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். நம்மூர் ரோட்டில் டப்பா பஸ் குலுங்கிக் குலுங்கிப் போவதுபோலத்தான் வண்டி சென்றது. அவ்வப்போது கீழே இறங்கி, ஜிவ்வென்று மேலே ஏறி, ஒரு மாதிரி லண்டன் சென்றடைந்தது. கடல் மீது பறக்கும்போதுதான் அதிகபட்சப் பிரச்னையே. ஒருவழியாக லண்டனில் இறங்கியபோது இதமான காலை வெயில் அடித்துக்கொண்டிருந்தது.

எனக்கு பஸ்ஸில் பயணம் செய்வதே ஒத்துக்கொள்ளாமல் இருந்தது. ஐஐடி போனபிறகும்கூட ரயிலில் மட்டுமே பயணம் செய்வேன். பல்லவன் டிரான்ஸ்போர்ட்டில் கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை போனாலே வயிறு தொல்லை தரும். எனவே சைக்கிள்தான். முதல் விமானப் பயணம் திகிலாக இருந்தது. சென்னை-மும்பை-தில்லி (வழியாக)-ஃபிராங்ஃபர்ட்-ஜே.எஃப்.கே-(ல கார்டியா)-இதாகா - இதுதான் என் முதல் விமானப் பயணம் - 1991-ல். அதைவிடக் கொடுமையான அனுபவம் வேறு எதுவும் கிடையாது. போகும் வழி முழுக்க ஒன்றுமே சாப்பிடாமல், அப்படியும் வயிறைச் சங்கடப்படுத்தியபடியே இருந்தது. ஆனால் நாளடைவில் விமானத்தில் பறந்து பறந்தே சரியாகிவிட்டது.

பஸ்ஸில் போகும்போதோ, விமானத்தில் போகும்போதோ ஏன் வயிறு சங்கடம் தருகிறது? ரயிலில் நல்ல வேகட்தில் போனால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லையே? ஏன்? பஸ்ஸில் உட்கார்ந்து செல்லும்போது பஸ் போகும் திசைக்கு எதிர்த் திசையை நோக்கி உட்கார்ந்தால் தலை சுற்றி, வாந்தி வரும்போலத் தெரிகிறதே? (எல்லோருக்கும் இல்லை; சிலருக்கு.) ஆனால் பஸ் போகும் திசையை நோக்கி உட்கார்ந்தால் பிரச்னையாக இல்லையே? ஏன்? ஆனால் இதே சிக்கல் ரயிலில் போகும்போது இல்லையே? ஏன்? இதைப்பற்றி நேரம் கிடைக்கும்போது விவாதிப்போம்.

5 comments:

  1. கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வாந்தி வருவது போல் இருப்பது காதுகளினாலா?

    ReplyDelete
  2. //கறுமேகம் குறித்த விளக்கத்திற்கு நன்றி, பத்ரி. வாந்தி வருவது போல் இருப்பது காதுகளினாலா? //

    காதுகளுக்குள் இருக்கும் semicircular canals, saccules, utricles இவைகளினால்

    இவற்றிற்கும் ஒலியை உணர்வதிற்கும் தொடர்பு கிடையாது

    ReplyDelete
  3. //விமானம் சடார் என்று கீழ் நோக்கி இறங்கும்//
    I had also faced this situation where plane had a free fall suddenly for 3-5 seconds in Airfrance while coming from Paris to Bangalore. People started screaming loud and my heart was filled with fear. No words to describe my feelings. Pilot somehow set right the plane and there was absolute silence for sometime. I even took oath at that time not to travel by plane in future :)

    ReplyDelete
  4. ரவி சுகா: பைலட் ஒன்றும் கஷ்டப்படவே வேண்டாம். மீண்டும் சாதாரண அழுத்தம் கொண்ட காற்று இருக்கும் இடத்துக்கு வந்ததும் விமானம் ஸ்டெடி ஆகிவிடும். லிஃப்ட் அறுந்து விழும்போது நீங்கள் அதன் உள்ளே இருந்தாலும் இப்படிப்பட்ட ஃபீலிங்தான் இருக்கும். ஆனால் லிஃப்ட் விஷயத்தில் நாம் காலி. விமானத்தில் பிரச்னை இல்லை.

    இதுதான் ஜீரோ கிராவிடி நிலை, அல்லது ஃப்ரீ ஃபால் என்பது. ஒருவித எடையற்ற தன்மை. இதெல்லாம் விண்வெளிக்குச் சென்றால்தான் உணரமுடியும். அதனை ஒரு ஏரோபிளேனில் நமக்குத் தரும் பைலட்களையும் விமானங்களையும் ஏர் பாக்கெட்டுகளையும் குறை சொல்வது தகுமா?

    ReplyDelete
  5. விமானப்பயணம் ...அப்படியே அறிவியல் மழை.. பின்பு மீண்டும் விமானப்பயணிகளின் அவஸ்தை ... அருமை சுஜாதாவை நினைவு படுத்துகிறது உங்கள் எழுத்து... வாழ்த்துக்கள்

    ReplyDelete