இரு நாள்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் நீயா, நானா படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தேன். பொதுவான நீயா, நானாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் ஒரு மாற்றம். 14 ‘நிபுணர்கள்’ வந்திருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து உலகமயமாதலால் இந்தியாவுக்கு நன்மையா, தீமையா என்பது பற்றி விவாதிக்கவேண்டும். அதுதவிர இளைஞர்கள் பலரும் அரங்கில் இருந்தனர். நிகழ்ச்சி பற்றி இங்கே நான் ஏதும் சொல்லப்போவதில்லை.
என்னைப்போலவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த பத்திரிகையாளர் ஞாநி, இடைவேளையின்போது, ‘பிரச்னை என்னன்னா, எல்லாத்தையும் பிளாக் அண்ட் வைட்டாவே பார்க்கறோம்’ என்றார். உண்மைதான். எனவே இந்தத் தொடர்பதிவுகள்.
உலகமயமாதல் என்றால் என்ன என்பதை நாராயண மூர்த்தி இவ்வாறு விளக்குகிறார்: ‘மூலதனம் எங்கு அதிகமாகக் குவிந்து இருக்கிறதோ, அங்கிருந்து அதனைப் பெற்று, மனிதவளம் எங்கு அபரிமிதமாகவும் செலவு குறைவானதாகவும் இருக்கிறதோ அங்கு உற்பத்தி செய்து, பொருள்களுக்கு எங்கு சந்தை அதிகமாக இருக்கிறதோ, அங்கு விற்பனை செய்வதுதான் உலகமயமாதல்.’ இங்கு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகள் அழிந்துபோகின்றன.
ஆனால் உலகமயமாதல் என்பதை வெறும் பொருளாதாரப் பார்வையில் மட்டும் சுருக்கிவிடமுடியாது. பொருளாதாரம் சமூகத்தைக் கட்டாயம் பாதிக்கிறது. அதனால் தொடர்ந்துவரும் பாரம்பரியக் கலாசாரங்கள் வேகமாக பாதிக்கப்படுகின்றன.
பாதிப்பு என்றாலே அது மோசமான பாதிப்புதான் என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. நல்ல பாதிப்புகளும் உண்டுதான்.
நிகழ்ச்சியின்போது உலகமயமாதல் என்பதைத் தனியாகப் பார்க்காமல், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (தா.த.உ) - அதாவது Liberalisation, Privatisation, Globalisation (LPG) என்று சேர்த்துப் பார்க்குமாறு கூறப்பட்டது. சிலர் உலகமயம் என்றால் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதையெல்லாம் சொன்னார்கள். ஆதிகாலத்திலிருந்தே இந்தியா உலகமயத்தைத் தழுவியது என்றார்கள். ஆனால் இன்று உலகமயத்தின் வரையறையே பொருளாதாரப் பின்னணியில் முதல் எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாகப் பாய்கிறது என்பதிலிருந்து ஆரம்பமாகிறது. உலகளாவிய அளவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தை நாம் உலகமயம் என்பதில்லை. முதலியம் என்ற கேபிடலிசம் உருவானபின் உருவான சொல்லான உலகமயத்துக்கு இன்றைய பொருள், முதலியப் பொருளாதாரப் பின்னணியில்தான் உள்ளது.
எனவே முதலியத்தை முதலில் ஆராய்ந்து, அதன் பின்னணியில்தான் உலகமயத்தை விளக்கவேண்டும்.
(தொடரும்)
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
5 hours ago
நீங்களும் நடு ராத்திரி வரை காத்திருந்தீர்களா?:)
ReplyDeleteஅப்படியே பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய மேலாண்மை வகுப்புகளை நினைவுபடுத்தி அட்டகாசமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். ரொம்ப நாள் கழித்து LPG என்று படித்தவுடன் சந்தோஷம் இருப்பு கொள்ளவில்லை.
ReplyDeleteஇதனைப்போலவே வந்த மற்றுமொரு வார்த்தை (நம்முடைய சந்தையாளர்கள் கண்டுபிடித்தது LPF - Level Playing Field )
தொடருங்கள்.
Dear badri
ReplyDeleteGood topic.super..start and tell me openly expecting some important thoughts .
pradeep
ராமதுரை எழுதியது
ReplyDeleteதடுப்புகளை அகற்றுவது தான் உலகமயமாதல். தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கத்திய நாடுகள் இந்தியாவில் உள்ள தடுப்புகளை அகற்றக் கோருகின்றன். இந்தத் தடுப்புகள் நீடிப்பது இந்திய மக்களுக்கு நன்மையா, இந்திய முதலாளிகளுக்கு நன்மையா, ஏகபோகக் குழுக்களுக்கு நன்மையா, தனிப்பட்ட சிலருக்கு நன்மையா என்ப்தில் தான் வேறுபாடு.
உலகமயமாதல் பொருளாதாரம் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. இந்தியாவின் கேபிள் டிவிக்களில் வரும் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், மொழிமாற்றம் செய்யப்பட்டு காட்டப்படும் ஆங்கில சினிமாப் படங்கள், ஆங்கில கார்ட்டூன்கள் முதலியனவும் உலகமயமாதலின் அடையாங்களே.
உலகமயமாதலில் நன்மையும் உள்ளது. தீமையும் உள்ளது.மேலை நாடுகளின் நெருக்குதலால் தடுப்புகளைத் தளர்த்துவதும் அகற்றுவதும் தவறு. அதே நேரத்தில் உள் நாட்டு நிர்ப்பந்தக் குழுக்களுக்குப் பணிந்து தடுப்புகளைத் தொடர்ந்து நீடிப்பதும் அதே போலத் தவறு.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலகமயமாதல் இருந்தது. தடுப்புகள் பின்னர் தான் வந்தன
ராமதுரை
உலகமயமாக்கல் என்றால் என்ன, அதன் விளைவுகள் என்ன ? உலகமயமாக்கல் பரவலாகாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? இக்கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாமலேயே பலரும் விவாதிப்பதால் பல குழப்பங்கள்.
ReplyDeleteகொலம்பிய பல்கலைகழக பேராசிரியர் ஜகதீஸ் பகவதி 2004இல் எழுதிய முக்கிய நூல் :
”In Defense of Globalization”
by Jagdish Bhagwati
http://www.complete-review.com/reviews/economic/bhagwj.htm
good sir it is very usefull i want more informations
ReplyDelete