Ancient and Medieval Tamil and Sanskrit Inscriptions Relating to South East Asia and China: Noboru Karashima and Y. Subbarayalu
என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், நாகபட்டினம் தொடர்பான மூன்று கல்வெட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றின் தமிழ் வடிவம் இங்கே:
கி.பி 1014 அல்லது 1015-ல் எழுதப்பட்டிருக்கவேண்டும்:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீராஜேந்திர சோழர்க்கு யான் ... த்து நாகபட்டினத்து திருக்காரோணமுடைய மஹாதேவர் திருச்சுற்று மாளிகை வாசல் க்ஷத்ரியசிகாமணி யி... கொண்ட செய்வித்தான் ஸ்ரீ விஷையத்தரையர் கன்மி ஸ்ரீ மூலனகத்தீஸரன் இத்தன்மம் சந்திராதித்தவற் நி... இதினுக்கு.... கல்வெட்டிக் குடுக்கவென்று இவ்வாண்டு ஸ்ரீகாரியன் செய்கின்ற அளனாட்டு புத்தமங்கலமுடையான் னக்கன் குமரன் செங்.... தமு... பஞ்சாசாரியத் தேவ கன்மிகள் சொல்லவும் இப்பரிசு கல்வட்டினென், இவ்வூர் தச்சன் ஏறன் சடையனேன் தேவர் கண்ட ஆசாரியேன் எ...கி.பி. 1015-ல் எழுதப்பட்டது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 3 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு... பட்டினக்... ரோண... வெள்ளித்திருமேனி நாகையழகற்கு ஸ்ரீவிஜயத்தரையர் கன்மி ராஜராஜமண்டலத்து கீட்செம்பினாட்டு மேன்றோன்றி பட்டினத்... ய்வித்த க்ஷெ... ச... நிறை[பொ]ன் பதினால்க் களஞ்சரை இதில் வீரபட்டத்துக் கட்டின சாதிமாணிக்கம் பதினொன்று நடுவில் மகரத்து நடுவு கட்டின மரகத... ன மாணிக்... [உபாய] டின மாணிக்கம் மூன்று இதின்மேல்வாய்க் கட்டின பச்சை மகரத்தின் கீழ்வாய்க்... ன மாணிக்கம் அஞ்சு இதில் கீழ்வாய்க் கட்டின சற்பமொத்தி வலபக்கத்[து வட்டப்பூவில்] கட்டின மர... ஏழு இடப்பக்கத்து வட்டப்பூவில் கட்டின மாணிக்கம் ஏழு பின்பில் பருத்தக்குறளில் கட்டின மாணிக்கம் நாலு மகாமணியாகக் கட்டின மாணிக்கம் சாதி மாக்கல்லு நாற்ப.... வெற்றி... மாக நிறை ஆறு மாஞ்சாடி கல்லுட்பட காசு நிரை பதினாற்காழஞ்சே முக்காலே ம்... சாடி இப்பரிசு கல்வெட்டுக வென்று இவாண்டு ஸ்ரீகாரியஞ் செய்கின்ற அருமொழி... நாட்டுக... ரத்து காண்டியூருடயார் சேந்தன் ச... இத்தேவகன்மிகளும் சொல்லக் கல்வெட்டினேன் நாகபட்டினத்து ஏறஞ்சடையனான கண்டரா[சா]ரியனேன்.கி.பி 1019-ல் எழுதப்பட்டது:
கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 7 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு பட்டினக் குற்றத்து நாகபட்டினத்து திருக்காரோண ... டைய மஹாதேவர் கோயிலில் கிடாரத்தரையர் கன்மி ஸ்ரீ குருத்தன் கேசுவன்நான அக்ரலேகை எழுந்தருளிவித்த அர்த்தநாரிகளுக்கு அவிபலி அர்ச்சனைக்கு என்று மேற்படியான் வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு கழஞ்சே முக்காலும் மேற்படியா[ன்] இத்தேவர் கோயிலில் உத்தமாக்ரம் இரண்டு கலமுண்ண போகட்டுக்கு என்று வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு களஞ்சே முக்காலும் மேற்படியான் தேவர்க்கும் ப்ராமணர்க்கும் ... தயிரு ... என்று வரக்காட்டின உண்டிகைப்போன் [அ]றுபதின் கலஞ்சே முக்காலும் ஆக இப்பொன் இருநூற்று முப்பத்தாறு கலஞ்சே காலும் திருக் காரோணமுடையார்க்கு வேண்டும் திருவாபரணம் உள்ளிட்டன செய்யக் கொண்டு இத்தேவர் பண்டாரத்தை....மூன்றுமே காயாரோகணஸ்வாமி திருக்கோயிலில் (நீலாயதாட்சி அம்மன் கோயிலில்) கடார அரசன் விஜயனின் காணிக்கைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டுகள். அப்போது தமிழகம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் இருந்தது.
ஒவ்வொரு கல்வெட்டிலுமே, எங்கள் ஊரை நாகபட்டினம் என்றே குறித்துள்ளனர். நாகப்பட்டினமோ, நாகப்பட்டிணமோ அல்ல.
.
புதிய தகவல்கள்
ReplyDeleteபட்டினம் தவறு, பட்டணம் சரி என நினைக்கிறேன். அப்போதே வழக்குமொழியை அப்படியே எழுதும் பழக்கம் இருந்ததோ என்னவோ. :)
ReplyDeleteதிண்ணையில் பாவண்ணனும் பட்டணம் என்பதே சரி என்றும், மதராச பட்டினம் என்று வைத்தது ஏனோ என்றும் சொல்கிறார்.
கல்வெட்டிக் குடுக்கவென்று - குடுக்கவென்றுதான் சரி என்று இப்போது ஏற்றுக்கொள்ளமுடியுமா?
ReplyDeleteகல்வெட்டுச் செய்திகளுக்கு நன்றி!
ReplyDeleteஇவற்றுள் மூன்றாம் கல்வெட்டில் காணும் "வரக்காட்டின" என்ற தொடர் பற்றி இந்த வலையின் பங்கீட்டாளரின் கருத்துக்கள் பற்றி அறிய ஆவல்.
கல்வெட்டுக்கு அப்பாற்பட்டு, இத்தொடரை முதல் முறையாக நான் கண்டது போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழுக்கான இலக்கணத்தில்தான் ("வரக்காட்டின ஓலை" என்று)! பிறகு வேறெங்கும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.
11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு மொழிக்கும் 16-ஆம் நூற்றாண்டில் அயல்நாட்டுப் பாதிரியார் பயின்று விளக்கிய பேச்சு மொழிக்கும் இவ்வளவு நெருக்கமான உறவா?!!!
பிரசன்னா: வினைச்சொல் பயன்படுத்தும் இடத்தில் வழக்குமொழியை நிச்சயமாகப் பார்க்கிறோம். ‘குடுக்கவென்று’ ஓர் உதாரணம். அதேபோல ராஜம் சொன்ன ‘வரக்காட்டின’ மற்றோர் உதாரணம். ‘தேவர்க்கு’, ‘தேவற்கு’ என்று வேற்றுமை உருபுப் புணர்ச்சியில் இலக்கணப் பிழை நேர்வதைப் பார்க்கிறோம். ஆனால் இடப் பெயர், ஆள் பெயரில் தவறு நேராது என்பது என் கருத்து.
ReplyDeleteஅந்நிய ராஜனின் பெயரில் சில மாற்றங்களைப் பார்க்கலாம். விஷையத்தரையர், விஜயத்தரையர், கிடாரத்தரையர் - அனைத்துமே கடார அரசன் விஜயனைக் குறிப்பவை. ஆனால் நாகபட்டினம் என்பதுதான் அன்றைய மக்கள் அந்த ஊரைச் சுட்டும் பெயராக இருந்திருக்கவேண்டும். அது ஏன் என்று வேண்டுமானால் ஆராயலாமே ஒழிய, அது தவறு என்று வாதிடுவது சரியான திசையில் செல்வதாக இருக்காது.
சோழநாடு - வளநாடு, அளநாடு என்றே அழைக்கப்பட்டதைக் கண்ணுறுக.
கன்மி என்ற சொல் agent அல்லது பிரதிநிதி என்பதைக் குறிக்கிறது என்று விளக்குகிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். அதுவும் எனக்குப் புதிது.
அன்றீக்குப் பாதிரியாரின் இலக்கணத்தில் "வரக்காட்டின" என்ற தொடர் "that which was sent" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது--"அனுப்பு" என்ற சொல்லுக்கு ஈடாக.
ReplyDelete"அனுப்பு" என்ற சொல் "கடன் வாங்கப்பட்ட சொல்" என்று கேள்விப்பட்டதுண்டு. அவ்வாறாயின், இதோ இந்தத் தொடரைப் புழங்கலாமே!
எனக்கு இன்னும் ஒரு வித சந்தேகம் இருந்தமையால் கல்வெட்டாய்வாளர் ராமசந்திரனிடம் கேட்டேன். அவர் பல விஷயங்கள் சொன்னார். நமக்குத் தொடர்புடைய முக்கியமான ஒன்று, ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது.
ReplyDeleteதேவர்க்கு' என்பது பன்மை
ReplyDelete'தேவற்கு' என்பது ஒருமை.'தேவன்+ நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்து 'தேவற்கு' என்றாகும்..
தேவன் + கு = தேவனுக்கு என்பதுதான் சரி. தேவற்கு வராது. தேவர்+கு = தேவர்க்கு என்பது சரி. சில இடங்களில் ர்க் சேர்ந்து வரும்போது ற் என்று எழுதினார்கள். வர்க்கம் என்பதை வற்கம் என்றும், சொர்க்கம் என்பதை சொற்கம் என்றும் எழுதினார்கள். குறிப்பாக மலையாளத் தொடர்பு உள்ள இடங்களில் - இது என் லாஜி. ;)
ReplyDeleteபட்டினம் என்பதே சரி. ”பட்டினப்பாலை” என்றொரு பழைய நூலே உள்ளது.
ReplyDelete”ப்” சந்தியும் அவசியமே.
பட்டினம் என்றால் கடலை ஒட்டிய ஊர். பின்பு அதுவே எல்லா நகரங்களுக்கும் ஆகி வந்தது.
பழங்காலத்தில் எழுத்தறிவு கொண்டவர்கள், முக்கியமாக் கல்வெட்டு எழுத்தர்கள் அனைவரும் இலக்கண இலக்கியத்தில் வல்லவர்களில்லை.
ReplyDeleteஇக்காலத்திலும் பத்திரலிகிதர்கள், சோதிடர்கள், கணக்குப்பிள்ளைகள் சொற்பிழைகள் கொச்சை மிகுந்து எழுதுவதைக் கருதுக.
காவேரிபூம்பட்டினம் என்று ஓர் ஊரும் இருந்தது. ஆனால் பட்டினம்/பட்டணம் என்பது தமிழ்வார்த்தை அல்ல. அதனால் அதற்குச் சரியான எழுத்துமுறை இல்லை என்று சொன்னார் நண்பர் ஒருவர். பிரச்னை, பிரச்சினை, பிரச்சனை போல. பட்டன் என்னும் சமிஸ்கிருத சொல்லிலிருந்து வந்திருக்கலாம் பட்டணம்/பட்டினம் என்னும் சொல் என்கிறார் அவர்.
ReplyDelete---ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ---
ReplyDeleteஅந்தக் காலத்திலேயே தமிழர்க்கு SEO பித்து பிடித்திருக்கிறது.