Thursday, February 09, 2012

புதுக்கோட்டை பயணம் - 7

நார்த்தாமலைப் பகுதிக்குச் செல்வதன் நோக்கம், அங்கே மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரம், சமணர் குடகு எனப்படும் பதிணெண்கீழ் விண்ணகரம், பழியிலி ஈசுவரம் ஆகிய கோவில்களைப் பார்ப்பது; தொடர்ந்து தாயினிப்பட்டியில் பெருங்கற்காலப் புதைவிடங்களை (Megalithic burial sites) பார்ப்பது, பின் ஆளுருட்டி மலை சமணப் படுகைகள், தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள், அடுத்து கடம்பர் மலையை ஒட்டியிருக்கும் மூன்று ஆலயங்களைப் பார்ப்பது.

அதன்பின் மதியம் பொழுது சாய்வதற்குள் சித்தன்னவாசல் சென்று அங்கே அறிவர்கோவில் (சித்தன்னவாசல் ஓவியங்கள் உள்ள சமணர் குகைக் கோவில்), ஏழடிப் பட்டம், நவச்சுனை ஆகியவற்றைப் பார்ப்பது.

இதுதான் இரண்டாம் நாள் திட்டம். சித்தன்னவாசல் குகைக்குச் செல்லச் சரியான நேரம் மாலைதான். ஏனெனில் மேற்குப் பார்த்திருக்கும் இந்தக் குகைக்கு உள்ளே மாலையில்தான் நல்ல வெளிச்சம் வரும். விஜயாலய சோழீசுவரத்தைக் காண அதிகாலையில் செல்லவேண்டும். தகதகவென் தங்கம் போல ஜொலிக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது விஜயாலய சோழீசுவரம் சிறிது சிறிதாக மேலிருந்து கீழாக வெளிச்சம் பெற்று மின்னுவதைப் பார்க்கலாம்.

அதிகாலையில் மேலமலை

காலை 4.30-க்கு எழுந்து, அனைவரையும் கிளப்பிக்கொண்டு 5.30-க்கு பேருந்தில் ஏறிவிட்டோம். நார்த்தாமலைக்கு 6.00 மணிக்குள் வந்துவிட்டோம். (படங்கள் + பயணக் கட்டுரையைக் காண பூஷாவளியின் பக்கத்துக்குச் செல்லுங்கள்.)

பிக்ச்சர் போஸ்ட்கார்ட் இடம் என்பார்கள். வெளியூர் பயணம் செய்யும்போது அங்கிருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் போஸ்ட்கார்ட் அனுப்புவது வழக்கமாக ஒரு காலத்தில் இருந்தது. அப்போது மனத்தைக் கவரும் படமாக இருக்கும் ஒன்றாகப் பார்த்து அனுப்பினால்தானே நன்றாக இருக்கும்? அதுபோன்ற காட்சிகளாகத் தேடி, படமெடுத்து, அச்சிட்டு வைத்திருப்பார்கள். அதற்கெனவே உருவாக்கப்பட்டமாதிரி இருக்கும் இடங்களைத்தான் இப்படிச் சொல்வது வழக்கம். நார்த்தாமலையே அப்படிப்பட்ட ஓர் இடமாகத் தோன்றியது. ஒரு மாபெரும் பரப்பில் ஒரு பக்கம் அமைதியான இயற்கை ஏரி. ஆங்காங்கே நெடிதாக உயர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். சுற்றிலும் பசும் வயல்கள். அருகில் பசுமை மாறா உலர் வெப்ப மண்டலக் காடுகள் (Tropical Dry Evergreen Forest). நடுவில் கொண்டுவந்து வைத்ததுபோன்ற கருங்கல் மலைகள்.

அதில் ஒரு மலைதான் மேலமலை. அதில் ஏற்கெனவே சமணர் குடகு என்ற குடைவரைக் கோவில் இருந்தது. இதற்கு சமணர் குடகு என்று அவ்வூர்ப் பகுதியில் பெயர் இருந்தாலும், உள்ளே கருவறையில் சிவனுக்கு ஆவுடை உள்ளது. அதைவிட ஆச்சரியம் இதன் அர்தமண்டபத்தில் சுவரில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக செதுக்கப்பட்ட 12 விஷ்ணு சிலைகள். இம்மாதிரி அடுத்தடுத்து நிற்கும் மிக அழகான 12 விண்ணவர் சிலைகளை எங்குமே காணமுடியாது. ஏன் 12? இதனைப் பின்னர் பார்ப்போம்.

நாம் முதலில் பார்க்கவந்திருப்பது விஜயாலய சோழீசுவரத்தை. பதிணெண்கீழ் விண்ணகரம் குகைக்கு நேர் எதிராக உள்ள இடத்தைச் சமமாக ஆக்கி, மேற்கு நோக்கிப் பார்க்கும் இந்தக் கட்டுமானக் கோவில் முத்தரையர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவர்களின் இறுதிக் காலமும் விஜயாலயன் தலைமையிலான சோழர்களின் ஆரம்பக்காலமுமான 9-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பல்லவர்கள்கீழ் குறுநில மன்னர்களாக இருந்துவந்த முத்தரையர்களும் கட்சி மாறிய காலம். விஜயாலயன் பெயர் இந்தக் கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நேரடியாகக் காணப்படுவதில்லை என்றாலும் பின்னர் வெட்டப்பட்டுள்ள (அருகில் நடந்துவரும் பாதையில் உள்ள) பிற கல்வெட்டுகள் இந்தக் கோவிலை விஜயாலய சோழீசுவரம் என்றே அழைக்கின்றன.

இந்தக் கோவில் நிச்சயமாக பின்னால் கட்டப்படப் போகின்ற தொடக்ககாலச் சோழர் (Early Chola) கோவில்களுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் அவற்றையெல்லாம்விடப் பெரியது, பிரம்மாண்டமானது. பரிவார தேவதைகளுக்கான சந்நிதிகளை உள்ளடக்கியது. இதுவே ஒரு ஆச்சரியம். இந்தப் புதுக்கோட்டை பயணத்தில் நாங்கள் ஆரம்பகட்ட சோழர் கோவில்களையெல்லாம் பார்க்க உள்ளோம். காளியாபட்டி, விசலூர் சிறந்த உதாரணங்கள். பின்னர் மூவர் கோவிலைப் பார்க்க உள்ளோம். பின்னர் திருக்கட்டளையில் இருக்கும் சிவன் கோவிலைப் பார்க்க உள்ளோம். அங்கு பரிவார தேவதைகளுக்கான சுற்றுப்புறச் சந்நிதிகள் மிகவும் முழுமையாக இருப்பதைப் பார்க்க உள்ளோம்.

ஆனால் விஜயாலய சோழீசுவரத்திலேயே அவற்றுக்கான திட்ட வரைபடம் இருந்துள்ளதா?

***

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்ப எழும்ப தூரத்தில் விமானத்தின்மீது வெயில் படிந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கி வெளிச்சம் பரவியது. அதனை முழுதுமாகப் பார்த்துவிட்டு, மலைமேல் ஏறத் தொடங்கினோம். எங்கள் குழுவில் 80 வயதானோர் இருவர் இருந்தனர். 70-களில் இருவர். இவர்களாலேயே மெதுவாக மேலே ஏறிவிடக் கூடியதுதான் இந்த மலை.

(தொடரும்)

2 comments:

  1. கட்டுரை அருமை..படங்கள் அருமை..
    (படங்கள் இன்னும் சற்று தெளிவாக இருந்திருந்தால் அழகான வண்ண ஓவியமாக இருந்திருக்கும்.)
    ***
    வர வர பதிவுகள் சுருங்கி கொண்டே வருகின்றன..:(:(

    ReplyDelete
  2. I would like to know more about Visalur temple... do you know any source? My ancesters are from that village... We have our family deity there only.

    ReplyDelete