Sunday, September 23, 2012

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.

இன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்டு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.

தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.

வெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.

இன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

அரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும்.

வளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.

இதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் - இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை - மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.

22 comments:

  1. என்னுடைய பதிவில் உங்களது இந்தப் பதிவை மீள்பதிவு செய்கிறேன். விருப்பம் இல்லை என்றால் தெரிவிக்கவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றாகச் செய்யுங்கள். என் பதிவில் வருபவை எல்லாமே CCL 2.5 India உரிமம் (http://creativecommons.org/licenses/by/2.5/in/) கொண்டவை. யார் வேண்டுமானாலும் இதனைத் தம்மிஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

      Delete
  2. ”முதலீடு செய்யும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை” என்று கூறியிருக்கிறீர்கள். இதனை நான் ஏற்கமாட்டேன். இந்தியர்கள் கோடி கோடியாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்தத் தங்கம் அனைத்தும் நாட்டுக்குப் பய்ன்படாமல் ‘துருப்பிடித்து’க் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரிடமும் உள்ள தங்கத்தின் மதிப்பு பல லட்சம் கோடிக்குத் தேறும். இந்த முதலீடு அனைத்தும் வீண். நாட்டுக்கு ஒரு காசுக்குப் பயன் இல்லை.1933 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் யாரும் தங்கம் வைத்திருக்கலாகாது என்று தைரியமாக உத்தரவு போட்டு அத்தனை தங்கத்தையும் விலை போட்டு வாங்கி அதை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்தினார். இந்தியாவில் அப்படிச் செய்ய முடியாது. நாடு முழுவதும் கலகம் மூளும். தங்கத்துக்கு அடிமையாக இருக்கும் மனோபாவத்திலிருந்து நாடு மீண்டால் விமோசனம் இருக்கலாம்.

    ReplyDelete
  3. enka urula vivasa kuli aatkalukku, 250 for men/day and 150 for women/day. Athe venkayam nadavu,parippuku rs 200 for women...

    ReplyDelete
  4. நன்றாக சொன்னீர்கள் பத்ரி. எத்தனை பேருக்கு இது புரிய போகுதுன்னு தான் தெரியலெ.

    ReplyDelete
  5. இப்படி மாதம் ஒரு பதிவாது போட்டு வினவோ பிறரோ திட்டாவிட்டால் உங்களுக்கு திருப்தி இருக்காது போலும் :)

    ReplyDelete
  6. This entire debate is diversion tactics. Entire country and tv channels are focussed on FDI.
    Lokpal, CWG, 2G, Coalgate is totally forgotten. Now they will blame on SP, BSP, Left etc and drop the FDI initiative also. Till next elections nothing is going to change. DMK continued to be in power for the past 3 govts in centre. Recent DMK support to strike may be a pointer to Congress not in govt next time. With SP, TMC, DMK, Left, TDP etc forming next govt. GOD save India from the looters

    ReplyDelete
  7. Badri - Another post with out basic understanding. You are writing as if FDI is some thing new. 100% FDI is allowed in Electricity, Oil Exploration,Hospitals, pharma, Banking, Non Banking, Hotels, 74% in Telecom. For retail,it was earlier 51% now allowed up to 100%. The question is why is there a need for increase in retail.

    Please write about Sri vaishavism or some thing you really know about.

    ReplyDelete
  8. we can encourage economic reforms sir in sectors where it is needed. for e.g, retail sector is not fund deficit i guess. whereas in aviation and power it is needed. more over, we also see manufacturing sector going down. FDI in it will improve our exports.

    major developed countries concentrate on selling their products to other countries and make money. In india, we have little or no R&D in terms of inventing new things or improving existing things. we most of the time, buy technology from outside rather than doing ourself i guess.

    coming to the reforms by UPA, where did UPA went all these years when rupee value was 36 against dollar? very very highest....! India va intha nilaikku thallunathu UPA only due to all scandals. also even this reforms are announced to divert coalgate issues i guess.

    congress had their income of 2000+ crore's last year. how and where did this come from? if UPA/MSS has got gut, It should pay IT on these money and also ask most ashrams to pay IT.

    I agree that diesel price should be on par with international prices. what abt taxes on it? why does govt want to impose lots of tax and burden people? in the end, all taxes being paid are eaten by corrupted politicians.

    if govt concentrates on infrastructure for the businesses in india, then export will flourish and thereby we get more foreign exchange. right now we end up paying in dollars even though we can get it for rupees.

    also govt spent 100 cr by advertising in medias. all these are necessary? govt want to be in power rather than doing good for the people.

    we are always following others later in terms of using technology. making internet to reach everyone - govt does not concentrate. setting up solar/wind farms to generate renewable energy - govt does not concentrate.

    even with FDI in retail, why cant the companies be asked to procure 60% from local manufacturer? there are many things like this in my mind. may be i have little knowledge around it or just expressing my frustration.

    some informative links for good reads
    http://realityviews.blogspot.in/2011/12/detailed-analysis-fdi-good-or-bad-for.html
    http://sujaiblog.blogspot.in/2012/09/india-is-not-producing-enough.html

    ReplyDelete
  9. சார்! பத்ரி சார்! சூப்பர் சார்! மொதல்ல கைய கொடுங்க சார்! எப்டி சார் உங்களால மட்டும் இதெல்லாம்! நீங்க பொறியியல் வல்லுநர் இல்ல சார்! பொருளாதார மாமேதை!

    << தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? >>

    செம காமெடி சார் இது! பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இரும்டுபோசுன்னு நினைக்குமாம்! உங்களுக்கு மூணு வேளையும் நெய் போட்ட சோறு கிடைக்கும் போது இப்படித்தான் எழுத தோன்றும்!

    ஏன் சார் செக்ஸ் புக் ஆயில் பிரிண்ட் நல்லா போதாமே! நீங்க ஏன் அத பப்ளிஷ் பண்ண கூடாது!

    ReplyDelete
  10. //பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது.//
    மக்கள் தொகை குறைந்த அளவு உள்ள நாடுகளில் பரவாயில்லை. நம் ஊரில் எப்படி இது சரியான ஒன்றாக இருக்க முடியும்? முதலாளிகளாக உள்ள பலரை வேலைக்காரர்களாக அல்லவா இது மாற்றும்? இதே தான் ரீடைலில் பெரு முதலாளின் வருகைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Tue Sep 25, 12:38:00 AM GMT+5:30

      சரி தவறு என்பது வேறு. நடைமுறை யதார்த்தம் என்பது வேறு. நமது அடுத்த தலைமுறை உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட பரம்பரை தொழில்களில் இருந்து விடுபட்டு அலுவலக உழைப்பை (இது மட்டும் உடல் உழைப்பு இல்லையா என்று கேட்காதீர்கள் தயவு செய்து) சார்ந்து நகர்ப்புறம் நோக்கி இடம்பெயர்வது கண்கூடு. இதனால் நமது விவசாயத்தொழில் மாற்றத்துக்கு உள்ளாவது தவிர்க்க இயலாதது. நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த எண்கள் குடும்பத்தில் என் சகோதரர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அவரும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக (விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லாமை, கொள்முதல் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளால்) நஷ்டத்திலேயே போக, ஏறக்கட்டிவிட்டு வடநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இப்போது விவசாயம் செய்ய யாரும் இல்லாததால் சவுக்கு நட்டிருக்கிறோம்.

      ஆக கார்பொரேட் விவசாயமே நிகழ இருக்கும் யதார்த்தம் என்பதுதான் எனது புரிதலும் கூட.

      ஆனால் இது கொண்டுவரப்போகும் மாற்றங்கள்தான் பயமுறுத்தலாக இருக்கும்.

      தான் விளைவிக்காத வம்புக்கும் மஞ்சளுக்கும் பாஸ்மதி அரிசிக்குமே உரிமம் கொண்டாடிய மேற்கத்தியர்கள் இங்கே விவசாயமும் செய்ய ஆரம்பித்துவிட்டால், உரிமம், மரபணு மாற்ற விதைகள் / தானியங்கள் / காய்கனிகள், அவற்றால் ஏற்பட இருக்கும் உடல் ரீதியான மாற்றங்கள் என்று என்னென்ன தாண்டவம் ஆடப்போகிறார்களோ ?

      Delete
  11. << தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? >>

    பத்ரி

    இதற்கு காரணம், கடந்த 20 ஆண்டுகளாக நாம் வியாபாரி அல்லது சேவை அளிப்பவராக இருந்தோம்
    அதனால் நம்மிடம் பணம் வந்தது

    walmart வந்தால் நாம் வாடிக்கையாளர்
    நம்மிடமிருந்து பணம் போகும்

    நாம் மீண்டும், பஞ்சம், பசி, பட்டினி பார்க்க வேண்டியது தான்

    இது குறித்த என் பதிவு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

    ReplyDelete
  12. ayya badri appadi aella viduya. poangaya neengalum unga econamicsum.

    ReplyDelete
  13. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு FDI வேண்டுமா என்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன.ஆட்சியாளர்களோ வால்மார்ட் போன்றவை வந்தால் இடைத்த்ரகர்கள் ஒழிந்து குறைந்த் விலையில் பொருட்கள் கிடைக்கும் என்கிறார்களோ. இதை எதிர்ப்பவர்களோ வால்மார்ட் போன்றவை வந்தால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நடுத்தெருவில் நிற்பார்கள் என்கிறார்கள்.
    வால்மார்ட் போன்றவற்றை அனுமதிக்காமலேயே இடைத்தரகர்களை ஒழித்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்படி செய்ய முடியாதா? அதற்கு வழி இல்லையா? அன்னிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் இடைத்தரகர்களை ஒழிக்க மாற்று வழி சொன்னால் நல்லது. அன்னிய ஆதிக்கமும் இராது. இடைத் தரகர்களும் ஒழிக்கப்படுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் முடியும் ராமதுரை சார்.
      ஆனால் இதற்கு அமைப்பின் உதவி தேவை.
      அரசின் நியாய விலைக் கடைகள் வால்மார்ட்டின் பங்கைச் செய்ய வேண்டும்;அரசின் கொள்முதல் பெரும் அளவிலும் அரசின் விற்பனை விலைக் குறியீடு, பொது நலன் சார்ந்து தேவையான அளவு லாபத்திலும்,சந்தையின் போக்கைக் கட்டுப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

      அரசின் நிழப் படும் எதுவும்தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறதே,இந்தியாவில்? பின் இது எப்படி சாத்தியம்?

      இதற்கு வைத்தியமாக வால்மார்ட்டை வரவழைத்தால் அவர்கள் கொள்ளையடிப்பதோடு, அதைக் கொண்டும் சென்று விடுவார்கள் !

      Delete
  14. நான் balachandar muruganantham னோடு ஒத்து போகிறேன்.ரேசனில் இலவச அரிசி வாங்குபவர்களைவிட வாங்கதவர்களே அதிகம். பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப்போய் உள்ளதை நீங்கள் பார்க்கவில்லை போலும்.எது முன்னேற்றம்? அளவுக்கு அதிகமா மீண்டும் மீண்டும் விளம்பரபடுத்தி மக்களை ஆடம்பர பொருட்களை வாங்க வைத்ததுதான் முன்னேற்றமா? இன்று பால், பஸ் கட்டணம், மின்சார கட்டண உயர்வு பெட்ரோல் டீசல் போன்ற விலை உயர்வால் மக்கள் படும் பாடு உங்களால் அறியப்படவில்லை. மக்களிடம் இப்பொழுது வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது இப்போ எல்லா வீட்டிலும் பிரிட்ஜ் டிவி வாசிங் மெசின் நிறைந்துள்ளது என்று சொல்வது பேத்தல்.அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடையே முன்பு இருந்ததைப்போல ஒரு புரிதல், இணக்கம், ஒற்றுமை இப்பொழுதெல்லாம் சிதைந்து போய் மக்கள் காலையில் எழுந்தவுடனே அவரவர்களின் பிரச்சனைகளை தலைமேல் ஏற்றிக்கொண்டு ஓடுகிறார்கள்.எல்லோரையும் தங்களை சுற்றியுள்ள பல ஆபத்துகள் மேல் கவனம் செலுத்த விடாமல் சுயநலவாதிகளாக மாற்றிவிட்டது தற்கால அரசியல். வீட்டில் முன்பிருந்த நிம்மதி சமாதானம் இப்போ இல்லை. இதுதான் முன்னேற்றமா? நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகலேல்லாம், வளர்ச்சி திட்டங்கலேல்லாம் (மருத்துவம், விவசாயம், கல்வி மற்றும் பல துறைகளும்) மக்கள் தொகை குறைவான நாடுகளை அடித்தளமா வச்சு ஏற்பட்டவை. அது ஒருக்காலும் நம் நாட்டிற்கு பொருந்தாது. மக்களை கஷ்டத்துக்கு மேல் கஷ்டபடுவதைத்தான் முன்னேற்றம் என்று சொல்கிறார்களா.உலக பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருந்த வேலையில், இந்திய பொருளாதாரம் சரியாமல் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம், எல்லாமே இங்கு குடும்பம் சார்ந்த தொழில்கள்தான் என்பது தாங்கள் அறியாதது இல்லை. அடுத்த நாட்டில் உதவிக்கு வருவது போல வந்து பின் குழப்பத்தை ஏற்படுத்தி பின் அதன் மூலம் ஆதாயம் பெறுவது என்பது அமெரிக்காவின் வாடிக்கையாக இருப்பது வரலாறு.கீழைநாடுகள் மக்களிடையே காணப்படும் ஒரு பாச பிணைப்பு, ஒரு இணக்கம் என்பது அமெரிக்கர்களிடையே காண முடியாது. அதை அவர்கள் ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது. முன்பு படை பலமிகுந்த நாடுகள் உலகத்தை ஆண்டன. இன்று பணபலம் மிகுந்த வியாபார்கள்தான் ஆள்கிறார்கள். ஒரு நாட்டின் பட்ஜெட்டை கூட அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மக்களின் நல திட்டங்களை விட வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்தான் அதிகம் கவனம் செலுத்தபடுகிறது.அதற்க்கு நம் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள். வெட்கக்கேடு. கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். நன்றி

    ReplyDelete
  15. குருமூர்த்தியின் ரீஃபார்ம்ஸ் அட் நேஷன்ஸ் காஸ்ட்- செப் 20 நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் படித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இன்று அதை விட ஒரு அற்புதமான கட்டுரை, வாட் இஸ் ரீஃபார்ம்ஸ் மிர்.பிரைம் மினிஸ்டர்' என்ற தலைப்பில்.
      (அக்டோபர் 4, நீயூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்-குருமூர்த்தி)

      இரண்டு கட்டுரைகளுக்கும் உங்கள் கருத்து எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

      Delete
  16. Search about Wal-Mart in "YouTube"..You can see a lot of things about against Wal-Mart in America...


    -----------Maakkaan

    ReplyDelete
  17. I've written a small write up on my scrambled thoughts http://visionofarun.blogspot.in/2012/10/food-culture.html

    Check it out if you get time and let me know your comments.

    ReplyDelete