Saturday, September 01, 2012

பத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்


சென்ற மாதம் இரண்டு வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துபோயின. தாம்பரத்தின் ஸீயோன் பள்ளி வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குழந்தை ஒன்று, பேருந்தின் ஓட்டைவழியாகக் கீழே விழுந்து அரைபட்டு இறந்துபோனது. கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் மூழ்கி இறந்துபோனான்.

ஸீயோன் பள்ளியின் தாளாளர் ஓரிரு தினங்களுக்குள் கைது செய்யப்பட்டு, நேற்றுதான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளியின் தலைமை அலுவலர் கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கவனக்குறைவு காரணமாக சம்பவிக்கும் மரணம் எனப்படும் வகையில் வரும் இந்தக் குற்றங்களுக்கு எது சரியான தண்டனை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால் இரு பள்ளிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் புரியவரும்.

நேற்று பத்திரிகையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தகவல் இதனை மேலும் உறுதிப்படுத்தும்.

தரக்குறைவான வண்டியை ஒப்பந்தம் செய்தது ஸீயோன் பள்ளிமீதான குற்றச்சாட்டு. ஆனால் பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்துள்ளது மிகப்பெரிய குற்றம் என்பது இப்போது தெரியவருகிறது.

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் நீச்சல் என்பது கட்டாயப் பாடமில்லை என்று சி.பி.எஸ்.ஈ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மற்றொரு பக்கம், பத்மா சேஷாத்ரி பள்ளி, மாநகராட்சி அனுமதியின்றி தன் வளாகத்துக்குள் நீச்சல் குளத்தைக் கட்டியுள்ளது. அத்துடன், இதனை அனுமதிக்குமாறு மாநகராட்சிக்கு அது அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆக, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி அளிப்பதும் சட்டவிரோதமானதே என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டட விதிமுறைகள் அல்லது மாநகராட்சி அனுமதிக்கு மாறாகக் கட்டடங்கள் கட்டிவிட்டு, பின்னர் அவற்றை ரெகுலரைஸ் செய்ய விண்ணப்பம் செய்வது என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் செய்கை. பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகள் தாம் சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே நடந்துவருகிறார்கள். மாணவன் இறப்பு போன்ற ஈடு செய்யமுடியாத தவறு நேரும்போதுதான் இம்மாதிரியான தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்விரண்டு வழக்குகளையும் நான் தொடர்ந்து கவனித்துவரப்போகிறேன். அவற்றைப் பற்றி இங்கே எழுதவும் இருக்கிறேன்.

தமிழ்பேப்பரில் வழக்கறிஞர் சொக்கலிங்கம் எழுதிய கட்டுரை

15 comments:

 1. நான் உட்பட எத்தனை பெற்றோர்கள்
  குழந்தைகளைச் சேர்க்கும் முன்னர்
  பள்ளி/கல்லூரியில் சட்ட விதிகள் மீறப் படுகின்றனவா என்று
  ஆராய்ந்து குழந்தைகளைச் சேர்க்கிறோம்.

  நாம் பார்க்கும் ஒரே அளவுகோல், எதிர் வீட்டு (எதிர் அடுக்காக) குழந்தையை விட
  என் குழந்தை கூடுதலாக ஒரு மார்க் எடுக்க உதவும் பள்ளி எது .

  எதிர் வீட்டு குழந்தையை விட என் குழந்தை வளாக நேர்முகத் தேர்வில் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வேலை கிடைக்க இந்தக் கல்லூரி உதவுமா

  ReplyDelete
 2. அனுமதியின்றி நீச்சல் குளம் கட்டியது பெரிய மோசடி. இதற்குக் காரணமானவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, அப்பள்ளி செய்யும் அநியாய பண வசூலுக்காகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிணையில் வருவது நீதிமன்றம் முடிவு செய்வது. அதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை. பத்மா சேஷாத்ரி, சீயோன், ஜேப்பியார் உள்ளிட்ட நபர்கள் பிணையில் வெளிவருவதில் என்ன தவறு?

  ReplyDelete
  Replies
  1. பிணை தவறே இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நடப்பதுதான் தில்லுமுல்லே. ஜேப்பியார் துரத்தப்பட்டார். கஷ்டப்பட்டுத்தான் பிணை வாங்கவேண்டியிருந்தது. விஜயனுக்கு மிகத் தாமதமாகப் பிணை வழங்கப்பட்டது. ஆனால் பத்மா சேஷாத்ரி பள்ளியில் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

   என் இத்தனை வித்தியாசம்?

   Delete
 3. ஆனால் சீயோன் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டது போல பத்மா சேசாத்ரி பள்ளி தாளாளர் இந்த குற்றத்துக்கு பொறுப்பாக்கபடாதது ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை...

  ReplyDelete
 4. பத்ரி, இந்த விஷயத்தில் பத்மாவும் சியோனும் ஒரே விதத்தில் நடத்தப்படவில்லை. இனியும் நடத்தப்படும் என்பதும் ஐயமே.

  ஆனாலும் இந்தப் பள்ளிகளின் மீதான வழக்குகள் நியாயமான முடிவுகளோடு பள்ளிப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றவர்கள் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொள்ள வேண்டிய நிலை மாற வேண்டும். மாறும் என நம்புவோம்.

  ReplyDelete
 5. தனியார் பள்ளிகள் மீதான மோகம் இம்மாதிரி அசம்பாவிதங்களினால் குறைய வாய்ப்புண்டு.

  ReplyDelete
 6. பத்மா சேஷாத்ரி பள்ளித் தாளாளர் திருமதி ஒய்.ஜி.பி. என அறியப்படும் ராஜலக்ஷ்மி அம்மையார். அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? அவரும் அவரது கணவரும் தமிழக முதல்வருக்கும் அவரது தாயார் சந்தியாவுக்கும் குடும்ப நண்பர்கள் என்பது காரணமில்லை என்றால் வேறு என்னவாம்?

  சரவணன்

  ReplyDelete
 7. பாரபட்சம் காட்டப்படுவதில் என்ன ஆச்சர்யம்? காவல், சட்ட, நீதித் துறை அதிகாரிகளின் குழந்தைகளே எங்கு படிக்கிறார்களாம்? சீயோன் பள்ளி அடிப்படையில் நடுத்தர வர்க்கப் பள்ளி.PSBB பணக்காரப் பள்ளி.
  ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் எல்லாம்
  காசுள்ள பக்கம் பாயாதடா என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. (உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் அதே தொடக்கச் சொற்கள் கொண்ட பாடல்)
  பின்னூட்டங்களில் பார்ப்பன,ஹிந்துத்துவ, கிறிஸ்துவ சண்டை இன்னும் நாற ஆரம்பிக்கவில்லையே, அது தான் ஆச்சர்யம். பூவண்ணன் ஸார் லீவில போயிட்டாரா?

  ReplyDelete
 8. பார்பன பத்மா சேஷாத்ரி-க்கு எதிராக பார்பன பத்ரி சேஷாத்ரி பதிவா? வினவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்....!!!
  -- Arun!

  ReplyDelete
  Replies
  1. எருமை மாடு. “பார்ப்பன” spelling கூட தெரியாம இதைப் பத்தி வந்துட்டியே!

   Delete
  2. appo nee periya panniya?

   Delete
 9. அனுமதியின்றி நீச்சல் குளம் கட்டியது தவறுதான். ஆனால் இந்த அனுமதிகளின் லட்சணம் என்ன? ஓட்டுனர் உரிமங்கள் எப்படி வழங்கப்படுகின்றன? சீயோன் பள்ளிப் பேருந்து fitness certificate பெற்று இருந்ததே!

  ஒரு பள்ளியின் நிர்வாகி எப்படி அனைத்தையும் கவனித்துக்கொள்ள முடியும்? நீச்சல் குளம் கட்டலாம். சரியான பயிற்சியாளர்களை நியமிக்கலாம். இதையும் மீறி விபத்து ஏற்படும் போது என்ன செய்வது? ஒரு தனியார் பேருந்து ஏறி விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ஓட்டுனரை விசாரிக்க வேண்டுமா அல்லது உரிமையாளரையா? இதை பத்மா சேஷாத்ரி பள்ளிக்காக மட்டும் நான் சொல்லவில்லை சீயோன், ஜேப்பியார் நிறுவனத்தையும் சேர்த்து தான். உரிமையாளர் மீது தவறு இருந்ததா என்பதை நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்.

  நடக்கும் அனைத்துக்கும் நிர்வாகியே பொறுப்பு என்றால், பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, எந்த தொழிலும் செய்ய முடியாது.

  ReplyDelete
  Replies
  1. Venkatesan , அனுமதியின்றி குளத்தை கட்டியவர் உரிமையாளர் தானே ? விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை என்பது சரி , விபத்துக்கு காரணம் உரிமையாளர் செய்த விலை குறைப்பு நடவடிக்கைகள்(like less trainers, less safety equipments etc..) என்றால் யாரை பிடிப்பது ?

   But , Say whatever , we always leave in a Partial world of some form.

   Delete
 10. சாலையோர கடையில் சாப்பிடும் காபியில் ஈ இருந்தால் கூட எடுத்துப்போட்டு விட்டு குடிப்பவர்கள், சரவண பவனில் வாங்கிய காபி சூடு ஆறிவிட்டது என்றால் கூட சத்தம் போட்டு புது காபி கேட்கிறார்களே ஏன்...? நாம் கொடுக்கும் காசுக்குத் தகுந்த தரத்தை எதிர்பார்க்கிறோம், அது இல்லையென்றால் கோபம் வருவது இயல்புதானே!

  காசு பிடுக்கும் PSBB மாதிரியான பள்ளிகள், Process, Quality என்பதற்கெல்லாம் தரும் முக்கியத்துவம் என்ன லட்சணம் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. பள்ளிகளுக்கும் தரச்சான்று கட்டாயமாக்கப்படவேண்டும்

  ReplyDelete
 11. வெங்கடேசன் சார் கருத்தை ஆமோதிக்கிறேன்
  எல்லா தவறுகளுக்கும் தலைமை நிர்வாகியை பிடித்து உள்ளே வைத்தால் எந்த தொழிலும் செய்ய முடியாது
  ரயில் விபத்து ஏற்பட்டால் ,பல உயிர்கள் இழந்தாலும் எந்த நிர்வாகி மீதாவது கை வைக்க முடிகிறதா
  சட்டத்தில் குற்றங்களுக்கு என்ன தண்டனை உண்டோ அது தான் கிடைக்கும்.கும்பகோணம் பள்ளியில் 98 குழந்தைகள் இறந்த விபத்தில் யாருக்கு எவ்வளவு தண்டனை கிடைத்தது
  குடித்து ஏழு பேர் மீது வண்டி ஏற்றி கொலை செய்தவனுக்கு கிடைத்த தண்டனை என்ன.கார் வாங்கி கொடுத்த பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறுவது போல தான் உள்ளது எல்லா தவறுகளுக்கும் விஜயன்,ஜேப்பியார்,திருமதி ஒய் ஜி பி அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை

  ஆனால் திருமதி ஒய் ஜி பி அவர்கள் மீது உள்ள முக்கிய குற்றசாட்டுகளை பற்றி யாரும் கவலைபடுவதே இல்லை.அரசு பள்ளி நடத்த சென்னை மத்தியில் 14 கிரௌண்ட் நிலம் ஒதுக்கியுள்ளது.பத்மா சேஷாத்ரி என்ற பெயர் பண உதவி செய்தவரின் மனைவி பெயர். ஏழை குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பண உதவி செய்தவர் பெயரில் உள்ள பள்ளியில் எத்தனை ஏழை குழந்தைகள் படிக்கின்றனர்
  அபோல்லோ நிலம் வாங்கி மருத்துவமனை கட்டும் போது முப்பது சதவீதம் நோயாளிகள் இலவசமாக பார்க்கப்படும் என்ற உடன்படிக்கையின் படி தான் acre நிலம் ஒரு ரூபாய்க்கு அதற்கு தரப்படுகிறது.அதே போல் தான் அரசு பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு நிலம் வழங்கியதும்.எவ்வளவு ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள்,எவ்வளவு ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை தான் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டுமே தவிர அரிதாக நடக்கும் தவறுகளை ஊதி பெரிதாக்குவது சரியல்ல
  பூவண்ணன்

  ReplyDelete