Sunday, September 23, 2012

டீசல் விலை

டீசல் விலை ஏற்றம் கண்டு பலர் கொதித்துப்போயுள்ளனர். உண்மையில் இந்த விலையேற்றம் தாமதமாக வந்துள்ளது. பலமுறை பெட்ரோலின் விலை ஏற்றப்பட்டபோதெல்லாம் டீசல் விலை ஏற்றப்படவேயில்லை. அல்லது மிகக் குறைவாக ஏற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை ஏற்றவேண்டுமா என்பதிலேயே சில கேள்விகள் உள்ளன. அதீதமான வரிவிதிப்பு காரணமாகவே பிற நாடுகளைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்த விலையைக் குறைக்க MGNREGA போன்ற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (என்ன அற்புதமான பெயர்! வேலையே நடக்காத ஒன்றின் பெயர் வேலை வாய்ப்புத் திட்டம்) செய்யப்படும் வீண் செலவுகளைக் குறைக்கலாம் என்பேன். இடதுசாரிகள் வேறு மாதிரி பேசுவார்கள். தொழில்துறைக்கு அள்ளித்தரும் பல லட்சம் கோடி சலுகைகளைக் குறைத்து வரிகளாக விதித்துத் தள்ளினால், பெட்ரோல் விலையைக் குறைத்துவிடலாம் என்பார்கள். இன்னும் சிலர், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு, கரியை ஏலம் விட்டால் எத்தனை கோடிகோடி பணம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்பார்கள்.

வரி அதிகம் என்பது உண்மைதான். ஆனால் அதிலுமே சமநிலையற்ற தன்மை நிலவுகிறது என்பதும் உண்மை.

டீசல், பெட்ரோல் இரண்டையும் கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்ய, கிட்டத்தட்ட ஒரே செலவுதான் ஆகிறது. ஆனால் டீசல் விலை குறைவு. ஏனெனில் டீசல்தான் விவசாயிகளுக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும் மிக அவசியம். டீசல் அடிப்படைப் பொருளாகவும் பெட்ரோல் ஆடம்பரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் லாரிகள் மட்டுமல்ல, மெர்சிடிஸ் பென்ஸ் காரும் டீசலில் ஓடுகிறது, வோல்வோ பஸ்ஸும் டீசலில் ஓடுகிறது.

பெட்ரோல் விலையை 10 ரூபாய் ஏற்றி, டீசல் விலையை 1 ரூபாய் ஏற்றும் நிலைக்கு பதிலாக, டீசல் விலையை மட்டும் 5 ரூபாய் ஏற்றியதால் நாடே கொந்தளித்துள்ளது.

ஆனால் இந்த விலை ஏற்றத்தாலும் வேறு சில காரணங்களாலும் ஏற்றிய விலை விரைவில் இறங்கும் என்று கருதுகிறேன்.

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்கள், கடந்த ஒரு வருடத்தில்
நன்றி: http://www.x-rates.com/graph/?from=USD&to=INR&amount=1
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 10% வீழ்ந்துள்ளது. (கிட்டத்தட்ட 16% வீழுந்து பின்னர் வீழ்ச்சி குறைந்துள்ளது.) டீசல் விலையேற்றம் 10%-க்கும் குறைவே.

தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்வதன்மூலம் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குள் பாய்ச்ச முடியும். அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். இழந்த 10%-ஐ மீட்டாலே, டீசலில் விலை மீண்டும் பழைய இடத்துக்கே சென்றுவிட முடியும். பெட்ரோலின் விலையையும் குறைக்கலாம்.

மமதா மத்திய ஆட்சியிலிருந்து விலகி இந்தியாவுக்கு மிகப் பெரும் உதவி செய்திருக்கிறார்.

6 comments:

 1. Sir this the headline came in firstpost on friday "Dear Mamata, like Lalu, maybe you were never meant to government" !!!

  ReplyDelete
 2. ஆமாம் உண்மை. மம்தா விலகியது ஒரு பெரிய பாரத்தை நீக்கியுள்ளது என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 3. Pain in the neck என்பது போல மம்தாவின் தொந்தரவு மத்திய அரசில் இருந்தது என்பதே உண்மை.

  ReplyDelete
 4. டீசல், பெட்ரோல் உற்பத்திக்குத் தேவையான குரூட் எண்ணெயில் பெரும் பகுதி வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகிறது. 1970களில் இந்திரா ஆட்சியில் குரூட் எண்ணெய் விலை அடுத்தடுத்து உயர்ந்தது.ஆகவே பெட்ரோல் என்பது பெரும் பணக்காரகள் பயன்படுத்துகிற ஆடம்பரப் பொருளாகக் கருதி அதன் அதன் உபயோகத்தைக் குறைக்க அடுத்தடுத்து மத்திய அரசும் மானில அரசுகளும் வரிகளை உயர்த்தின . சரி. அப்போது நாட்டில் அம்பாசிடர் கார்களும் பியட் கார்கள் மட்டுமே இருந்தன.
  ஆனால் பின்னர் நாட்டை தொழில் மயமாக்குவது என்ற கொள்கையின் கீழ் வகைவகையான கார்களை உற்பத்தி செய்ய உரிமைகள் வழங்கப்பட்டன. லாரிகள் விஷயத்திலும் அப்படித்தான்.
  அதாவது பெட்ரோல் ஆடம்பரப் பொருள் என்ற கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது.கார் தயாரிப்பாளர்க்ளுக்கும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களுக்கும் இஷ்டத்துக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. மாத மாத கார இரு சக்கர வாகன விற்பனை தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் போக்கை காட்டுவதாக கணக்கில் கொள்ளப்பட்டது.
  இதன் விளைவாக எண்ணற்ற மக்கள் இந்த வாகனங்களை வாங்க முற்பட்டனர்.
  அதாவது ஆரம்ப முதல் நமது அரசுகளுக்கு தெளிவான சீரான போக்குவரத்துக் கொள்கை எதுவும் இருக்க வில்லை.இப்போது பெட்ரோல் டீசல் ஆகியவை ஆடம்பரப் பொருள் அல்ல ஆனால் அவற்றின் மீது பயங்கர வரி. இவற்றைக் குறைக்க மனம் இல்லை.ஓட்டுப் பிடிக்க கவர்ச்சியான் திட்டங்களுக்குப் பணம் வேண்டுமே.
  இன்றைக்கும் அமெரிக்காவில் பெட்ரோல் (லிட்டர் கணக்கிட்டால்) விலை கிட்டத்தட்ட ஒரு க்ப் காப்பியின் விலையை விட சற்றே அதிகம்.இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஒரு கப் காப்பியின் விலையை விட சுமார் ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகம். அனியாயமான வரிகளே இதற்குக் காரணம் இப்படி ஏழு எட்டு மடங்கு வரி போடும் அரசு மக்களுக்கான அரசா?

  ReplyDelete
 5. டெய்லி ஷேர் ஆட்டோ வில் போகணும். மளிகை பொருட்கள் வாங்கணும்.
  அப்போதான் இதன் impact புரியும். தின கூலிகள் ரொம்ப கஷ்டபடுகிறார்கள்.
  suv போறவன் diesel போடுறான்ன அவனுக்கு வரி போடு. சரக்கு மற்றும் பொது போக்குவரத்துக்கு இதில் இருந்து விலக்கு
  அளித்திருக்க வேண்டும்.
  diesel விலை ஒருவேளை குறைந்தாலும் விலை ஏற்றியது ஏற்றியதுதான். நிச்சயம் குறையாது.
  பெட்ரோல் விலை ஏற்றி இருந்தால் கூட இந்த அளவிற்கு பாதிக்காது.

  ReplyDelete
 6. கேட்டால் பெட்ரோல் விலை குறைந்தால் நுகர்வு அதிகரிக்கும், இன்னும் இறக்குமதி செய்வது அதிகரிக்கும்,அன்னிய செலாவணி அதிகம் தேவைப்படும் என்பார்கள்.அமெரிக்காவில் பெட்ரோல் விலை இந்தியா போல் இல்லை, ஏனெனில் அங்கு அதை வைத்து அரசு அதிக வருவாய் ஈட்டவிரும்பவில்லை.சந்தை சக்திகள் தீர்மானிக்கின்றன. இந்தியாவில் வரிகளை குறைத்தால் பெட்ரோல்,டீசல் விலை குறையும்.

  ReplyDelete