Thursday, September 13, 2012

கதிர்வீச்சு - சிறு அறிமுகம்

கூடங்குளம், கல்பாக்கம் பற்றியும் இந்தியாவின் பல்வேறு அணு மின் உலைகள் பற்றியும் பேச்சு வரும்பொது கதிரியக்கம் பற்றியும் கதிர்வீச்சு பற்றியும் பேச்சு வரும். அதில் புரியாத பல விஷயங்கள் இருக்கும்.

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிறையுள்ள பொருள்கள் அடங்கிய ‘கதிர்’. இவற்றில் ஆல்ஃபா, பீட்டா கதிர்கள் அடங்கும். இவைதவிர நியூட்ரான் கதிர்கள், புரோட்டான் கதிர்கள் ஆகியவையும் சாத்தியம். மற்றொருவகைக் கதிரில் வெறும் ஆற்றல் மட்டும்தான் உண்டு. நிறையுள்ள பொருள் எதுவும் அதில் இல்லை. காமா கதிர்கள் என்று இவற்றுக்குப் பெயர்.

ஆல்ஃபா கதிர்கள் என்பவை அடர்த்தியான ஹீலியம் உட்கருக்களைக் கொண்டவை. அடர்த்தியானவை என்பதனாலேயே காற்றில் அதிக தூரம் இவற்றால் செல்லமுடியாது. எனவே அதன் மூலம் எங்கிருக்கிறதோ அதற்கு அருகிலேயேதான் இதன் செயல்பாடும் இருக்கும். வானில் பரவும்போது எலெக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டு ஹீலியம் அணுக்களாக மாறி, வானில் மேலே மேலே எழும்பிக் காணாமல் போய்விடும். பீட்டா கதிர்கள் என்றால் எலெக்ட்ரான்கள் அடங்கியவை. இந்த இரண்டு கதிர்களாலும், நம் உடலின் மேல் தோலைத் தாண்டி உடம்புக்குள் நுழைய முடியாது. ஆனால் நாம் உட்கொண்ட பொருள் உடலுக்கு உள்ளிருந்து ஆல்ஃபா, பீட்டா கதிர்களை வெளிவிடும்போது நிச்சயமாக பாதிப்பு உண்டு. காமா கதிர்கள் என்பவை மின்காந்த அலைகள் கொண்ட கதிர்கள்.

இவற்றை முதன்மைக் கதிர்வீச்சு என்று வைத்துக்கொண்டால், இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு அடுத்து உருவாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த முதன்மைக் கதிர்கள் வானில் பரவும்போது அங்கே உள்ள பல்வேறு தனிமங்களுடன் ஊடாடுகின்றன. அப்போது சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள் கதிரியக்கத் தன்மை கொண்டவையாக மாறுகின்றன. அவை தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்தும். இவைதான் இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு.

அடுத்ததாக, அணுப்பிளவு ஏற்படும்போது, கதிர்வீச்சு ஒரு பக்கம் இருக்க, ஒரு பெரிய அணு இரண்டு சிறு அணுக்களாக உடைகிறது. அப்படி உருவாகியுள்ள சிறு அணுக்களும் கதிர்வீச்சு கொண்டவையாக இருக்கும். அவை நம் உடலுக்குள் சேரும்போது பிரச்னை பெரிதாக மாறும்.

உதாரணமாக யுரேனியம் நம் உடலில் இருப்பதில்லை. நம் உடலில் பெரும்பாலும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் ஆகியவைதான் உள்ளன. இவைதவிர இரும்பு, அயோடின், சோடியம், பொடாசியம், பாஸ்பரஸ், கால்சியம் என்று ஏகப்பட்ட பிற தனிமங்களும் சிறு அளவில் உள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு ரத்தச் சிகப்பணுவிலும் இரும்பு உள்ளது. எலும்பில் கால்சியம் உள்ளது. கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியில் அயோடின் உள்ளது.

யுரேனியம் பிளக்கும்போது அயோடின்-131 என்ற ஒரு குறிப்பிட்ட அயோடின் ஐசோடோப் உருவாகிறது. சாதாரணமாக நிலையான அயோடின் ஐசோடோப் என்பது அயோடின்-127. இந்த அயோடின்-131-ல் நான்கு நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இந்த (கெட்ட) அயோடின் காற்றில் சேரச் சேர, இது கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலை நோக்கி வந்து சேருகிறது.

யுரேனியக் கதிர்வீச்சு அதிகமான நாகசாகி, ஹிரோஷிமா, செர்னோபில் ஆகிய இடங்களில் இதுதான் நடந்தது. கழுத்தில் உள்ள தைராய்ட் சுரப்பியின் செல்களில் அயோடின் இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? நாளடைவில் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் கழுத்துகளில் அயோடின்-127-க்குப் பதில், அயோடின்-131 அதிகமாகச் சேர்ந்துவிடும்.

இந்த அயோடின்-131 பீட்டா கதிர்வீச்சை வெளிப்படுத்தும். அப்படி ஆகும்போது இவை இருக்கும் செல்கள் அழிகின்றன. அதனால் அயோடின்-131 அதிகமானவர்களுக்கு தைராய்டு கேன்சர் கட்டாயம் வரும். செர்னோபில் விபத்தில் இது நன்றாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்று மருந்துகள் உண்டு. உதாரணமாக, காற்றில் அயோடின்-131 அதிகமாகியுள்ளது என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின்-127 அடங்கிய உப்பை/மாத்திரையை அதிகமாக உட்கொள்ளவேண்டும். அதன் காரணமாக அயோடின்-131 நம் உடலின் உள்ளே புகாமல் வெளியேற ஆரம்பிக்கும்.

***

ஐசோடோப் என்றால் என்ன என்று விரைவாகப் பார்த்துவிடுவோம். ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் உட்கருவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருக்கும். ஒரு புரோட்டான் என்றால் ஹைட்ரஜன் அணு. இரண்டாவது புரோட்டான் வந்துவிட்டால் அது ஹீலியம். ஆனால் உட்கருவில் நியூட்ரான் என்ற துகளும் உள்ளது. உட்கருவில் நியூட்ரானின் எண்ணிக்கை பொதுவாக புரோட்டானின் எண்ணிக்கைக்கு நெருங்கியதாக, பல நேரங்களில் இணையானதாக இருக்கும். ஆனால் ஒரே தனிமத்தின் சில அணுக்களில் மட்டும் நியூட்ரான் எண்ணிக்கை மற்ற அணுக்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஆனாலும் அந்த அணுக்கள் யாவும் வேதியியல் பார்வையில் ஒரே மாதிரியாகவே இயங்கும். இப்படிப்பட்ட, ஒரே புரோட்டான் எண்ணிக்கையைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கையைக் கொண்ட அணுக்களை அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் வெவ்வேறு ஐசோடோப்புகள் என்கிறோம். அயோடின் தனிமத்துக்கு அயோடின்-123, அயோடின்-127, அயோடின்-129, அயோடின்-131 என்ற நான்கு ஐசோடோப்புகள் உண்டு. அனைத்தின் அணுக்களிலும் 53 புரோட்டான்கள். ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே 70, 74, 76 மற்றும் 78. இதில் அயோடின்-127 என்பதுதான் நிலையானது. மற்றவை எங்கேயோ அணுப்பிளவு நடக்கும்போதுதான் உருவாகும். அதில் அயோடின்-131 மனிதர்களுக்கு ஆபத்தானது.

சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள்தான் கதிரியக்கத் தன்மை கொண்டவை. உதாரணமாக ஹைட்ரஜன் ஐசோடோப்புகளில் புரோட்டியம், டியூட்டிரியம் ஆகியவை கதிரியக்கத் தன்மை கொண்டவையல்ல. டிரிட்டியம் மட்டும்தான். யுரேனியத்தின் பல்வேறு ஐசோடோப்புகளும் கதிரியக்கத் தன்மை கொண்டவை. ஆனால் மிக மென்மையான கதிரியக்கம்.

கதிரியக்கம் வேகமானதா, குறைவானதா என்பதைப் புரிந்துகொள்ள அரை ஆயுள் என்ற எண்ணிக்கை அவசியம். இது ஒவ்வொரு ஐசோடோப்புக்கும் பிரத்யேகமானது. இது சுவாரசியமான ஒன்று. ஒரு ஐசோடோப்பின் அரை ஆயுள் பத்து நிமிடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஐசோடோப்பை பத்து கிராம் எடுத்து ஒரு தட்டில் வையுங்கள். பத்து நிமிடம் கழித்துப் பார்த்தால் பத்து கிராமில் பாதி அளவு (ஐந்து கிராம்) கதிரியக்கம் ஆகி, வேறு தனிமங்களாக ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மீதியுள்ள ஐந்து கிராம் பொருள், அதில் பாதி ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மேலும் பாதி... 10, 5, 2.5, 1.25 என்று குறைந்துகொண்டே போகும். ஆனால் எப்போதும் இருப்பதில் பாதி. அதனால்தான் இதற்கு அரை ஆயுள் என்று பெயர்.

சில பொருள்களுக்கு அரை ஆயுள் காலம் மிக மிக அதிகம். பல பில்லியன், பல டிரில்லியன் ஆண்டுகள் என்று இருக்கும். வேறு சிலவற்றுக்கு சில நாள்கள் அல்லது சில நிமிடங்கள்.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்கள் சில உள்ளன. அதே நேரம் செயற்கையாகக் கதிரியக்கத் தன்மை புகுத்தப்பட்ட பொருள்களையும் தயாரிக்க முடியும். அணு உலைகளில் நிகழ்வது இந்த இரண்டாவது விஷயம். யுரேனியம்-238 என்ற ஐசோடோப்பை எடுத்து அதன்மீது நியூட்ரான்களை அடித்தால், அது புளூட்டோனியம்-239 ஆக மாறி, பின் அது மேலும் உடைந்து, அதிலிருந்து மேற்கொண்டு நில நியூட்ரான்கள் வெளியே வந்து அவை அருகில் இருக்கும் யுரேனியம்-238-ஐத் தாக்கி, இப்படித் தொடர்ந்து நடப்பதுதான் சங்கிலி வினை.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்களைக் கடவுளே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜாதுகுடாவில் நாம் தோண்டாவிட்டாலும் அங்கே உள்ள யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. பூமிக்கு அடியில் இருந்தாலும் அங்கிருந்து கதிர்வீச்சு வெளியேறிக்கொண்டுதான் இருக்கும். அது அருகில் இருக்கும் நீரை மாசுபடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

அணு உலைகளை நடத்துவதன் காரணமாக மட்டும்தான் கதிர்வீச்சு என்ற அபாயம் உருவாவதுபோலப் பலரும் சொல்வது தவறு. நம் பூமியில் இயற்கையிலேயே கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் பல உள்ளன. பிரபஞ்சத்தில் பல இடங்களில் இவை இந்த விநாடியில் உருவாகிக்கொண்டேதான் உள்ளன.

மனிதன் அணு உலைகளில் இவற்றைச் செயற்கையாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். பொதுவாக, செயற்கையாக எதை உருவாக்கினாலும் அது ஏதோ பிரச்னைகளை ஏற்படுத்தத்தான் செய்யும். ஏனெனில் சமநிலை என்பது வேகமாக மாறுகிறது. ஆனால் அணுக் கழிவுகள் என்பது மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்பதுபோலப் பேசுவது தவறு. படிம எரிபொருளை எரித்து நாம் இதுகாறும் உருவாக்கியுள்ள எச்சங்களைவிடக் குறைவானவைதான் அணுக் கழிவுகள். இவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பூமிக்கு அடியில் புதைத்துவைத்தாலும் விடாது கருப்பு என்று இவை நம்மை வந்து துரத்தும் என்பதெல்லாம் மிகையான கூற்றுகள்.

கதிரியக்கப் பொருளை அடர்த்தியாக்க அடர்த்தியாக்க, அதன் கதிரியக்கம் அடர்த்தியாக இருக்கும். நீர்த்துப்போக வைக்கும்போது கதிரியக்கமும் நீர்த்துப்போகும்.

இது தொடர்பான தொழில்நுட்பம் அனைத்தும் எனக்குத் தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் எதிர்ப்பாளர்கள் சொல்வதுபோல அத்தனை பெரிய ஆபத்தானதாக எனக்குத் தோன்றவில்லை. அணுக் கழிவுகளைக் கையாள்வது சாத்தியம்தான். பூமிக்கு அடியிலோ, கடலுக்கு அடியிலோ, பாலைவனத்திலோ புதைத்துவைப்பதால் மனித இனத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனால் இந்திய அரசுக்கு இது தொடர்பாகக் கொள்கை ஒன்று இருக்கவேண்டும், அதனை இந்திய அரசு வெளியிடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

[சில தவறுகளைத் திருத்தியிருக்கிறேன். இதனை மீண்டும் சரி பார்க்கவேண்டும். அப்போது மேலும் சில திருத்தங்கள் செய்ய நேரிடலாம்.]

15 comments:

  1. If you claim that you dont know then you are not a Tamil writer or intellectual :)

    ReplyDelete
  2. அணு உலையை கையாளும் போது ஏற்படும் தீங்குகள், விபத்தின் போது ஏற்படும் தீங்குகள் மற்றும் எதிரிகளின் தாக்குதலின் போது ஏற்படும் தீங்குகள் என வகைபடுத்தி விளக்கினால் இன்னும் நலம்.

    ReplyDelete
  3. மிக அருமையாக தமிழில் - அறிவியல் கூறுகளை எழுதி இருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  4. நம் முன் உள்ள கேள்விகளை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்–

    1) அணு உலைகள் உண்மையிலேயே பாதுகாப்பானவையா?
    2) பாதுகாப்பானவையோ இல்லையோ, தமது பகுதியில் அணு உலை வரக்கூடாது என்று சொல்லும் உரிமை மக்களுக்கு இருக்கிறதா?
    3) அப்படியான உரிமை இல்லை என்றால், மக்கள் எதிர்ப்பை அரசு எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமா அல்லது ஆங்கிலேயர் ஜாலியன் வாலாபாக்கில் செய்ததுபோல வன்முறையை ஏவிவிடலாமா?
    4) அணு உலை தொடர்பான நாட்டின் சட்டங்களை (ஆய்வறிக்கைகளைப் பொதுவெளியில் வைப்பது, பேரிடர் மேலான்மைப் பயிற்சி தருவது போன்றவை) அரசு மதிக்கவேண்டுமா அல்லது ‘எப்படியோ மின்சாரம் வந்தால் போதும்’ என்று காற்றில் பறக்க விடலாமா?
    5) மாற்றுவழிகளோடு (இயற்கை எரிவாயு, சூரிய ஒளி-வெப்பம், காற்றாலை இன்னபிற) அனைத்து அம்சங்களிலும் (அபாயம், செலவு, வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் அழிவு இன்னபிற) ஒப்பிடும்போது அணு மின்சாரம் உண்மையில் இன்று எந்த இடத்தில் உள்ளது? இன்னும் பத்து-இருபது ஆண்டுகளில் எந்த இடத்தில் இருக்கும்? அப்போது சோலார், அணு உலைகள் என்ற கருத்தாக்கத்தையே காலாவதியாக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறதா?

    சரவணன்

    ReplyDelete
  5. The way we act is that, Everything is within our reach. We show our superiority (also our stupidity) in not only exploiting the nature, but also irreversibly changing it. If we are approving burying nuclear waste underwater is safe, it may only be safe for human beings of this generation, what we miss to realize is that the scenarios of quakes and leaks. Do we know when the waste loses it's lethal effect? Many many decades. Do we know how long it took for these heavier elements to form? We have to remember, the evolution took lot longer to change things on earth. By the arrogance of technology, we expedite the change, and we believe it is for good. Thanks to stupidity of human race. I wish, atleast we know, knowledge is not to be confused as wisdom!!!

    ReplyDelete
  6. செர்னோபில், ஃபுக்குஷிமா விபத்துகள் பற்றிப் பேசும் யாரும் ஏன் பிரான்சின் பாதுகாப்பான அணுமின் திட்டங்கள் பற்றிப் பேசுவதில்லை? பிரான்சின் 75% மின் தேவையை பூர்த்தி செய்வது அணு உலைகளே.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி. ஆனால் மிக எளிமையாக தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் சில பிழைகள் புகுந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    //ஆல்ஃபா கதிர்கள்... உருவாகும் இடத்துக்கு அருகில் இருந்தால், மேலே படும்போது மனித உடலுக்குக் கடுமையான தீங்கை விளைவிக்கும். அக்யூட் ரேடியேஷன் சிண்ட்ரோம் என்பார்கள். உயிர் போய்விடும் அல்லது நீண்டகாலத் தீங்கை விளைவிக்கும்.//
    1. Alpha radiation is not able to penetrate skin.

    2. Alpha-emitting materials can be harmful to humans if the materials are inhaled, swallowed, or absorbed through open wounds.

    More on this at this link
    http://nuclearsafety.gc.ca/eng/mediacentre/updates/2012/March-26-2012-radiation-protection-programs.cfm

    ஆல்ஃபா கதிர்களால் அக்யூட் ரேடியேஷன் ஸிண்ட்ரோம் (ARS)ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

    //சூரியன் நம்மீது பாய்ச்சும் வெப்பக் கதிர் காமா கதிர்தான். பாலைவனத்தில் தோலை முடிக்கொள்ள வழியில்லாமல் இருந்தால் மதிய நேரத்தில் இந்தக் கதிர்கள் உங்களைச் சுட்டெரித்தே கொன்றுவிடும்.//
    The Sun emits EM radiation across most of the electromagnetic spectrum. Although the Sun produces Gamma rays as a result of the nuclear fusion process, these super high energy photons are converted to lower energy photons before they reach the Sun's surface and are emitted out into space. As a result, the Sun doesn't give off any gamma rays.
    http://en.wikipedia.org/wiki/Sunlight

    சூரியனிலிருந்து அகச் சிவப்புக் கதிர்கள் வெளிப்படுகின்றன. வெயில் நமது தோலில் படும்போது நமக்கு சூடு உறைக்கிறது. அதற்கு சூரியனின் ஒளியோடு சேர்ந்து வருகிற அகச் சிவப்புக் கதிர்களே காரணம்.

    //அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் காமா கதிர்கள்தான் வெப்பம் உருவாக்கி, அதன்மூலம் நீரை ஆவியாக்கி, டர்பனை இயக்கி, ஜெனரேட்டரை இயக்கி, மின்சாரத்தைத் தயாரிக்கின்றன.//
    Heat generationThe reactor core generates heat in a number of ways:

    The kinetic energy of fission products is converted to thermal energy when these nuclei collide with nearby atoms.
    Some of the gamma rays produced during fission are absorbed by the reactor, their energy being converted to heat.
    Heat is produced by the radioactive decay of fission products and materials that have been activated by neutron absorption. This decay heat source will remain for some time even after the reactor is shut down.
    http://en.wikipedia.org/wiki/Nuclear_reactor#Heat_generation
    ஐன்ஸ்டீனின் (E=mc^2) சமன்பாட்டில் உள்ள மாஸ் டிஃபெக்ட் எனப்படும் நிறை இழப்பு வெப்பசக்தியாக மாறுவதுதான் அணு உலையின் வெப்பத்திற்கு பெரிய காரணம். காமாக் கதிர்கள் அணு உலை உலோகத்தால் கிரகிக்கப் படும்போது சிறிதளவு வெப்பம் ஏற்படும் ஆனால் அது சிறிய அளவே ஆகும்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி. இவற்றை மாற்றித் திருத்த முற்படுகிறேன்.

      Delete
    2. What I like most about you is your politeness & humility which are true hall-marks of any learned person. It's very refreshing to have you in the ocean of half-cooked characters.

      Delete
  8. badri,dont act smart.first read ind-russia agreement fully. dont shit bla bla bla . situvation in TN very sensitive at this moment.

    ReplyDelete
    Replies
    1. Moron, phrase your comments properly. Dr. Badri Seshadri B.Tech.(IITm), Ph.D.(Cornell) doesn't have to act smart because he is genuinely one. You better try to become smart by showing respect to his scholarship & maturity.

      Delete
  9. Atomic Energy Act என்ற சட்டம் ஒன்று உண்டு. இன்று நாம் கூடங்குளம் மற்றும் இதர அணு உலைகள் பற்றி எழுதி பேசி வருவது எல்லாவற்றையும் தடை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அரசு விரும்பினால் அப்படி செய்ய முடியும்.
    ஏதோ ஒரு கால் கட்டத்தில் இந்தியா மேலை நாடுகளுக்குத் தெரியாமல் அணுகுண்டுகளை உருவாக்கி வந்த காலத்தில் அச்சட்டம் பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அச்சட்டம் அர்த்தமற்றதாகி விட்டது. ஆனாலும் அச்சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் செய்யப்படவில்லை.
    நான் மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் அணுசக்தி பற்றிய எல்லா விஷயங்களும் மூடுமந்திரமாக வைக்கப்பட்டிருந்தன. படித்தவர்களுக்கே பல விஷயங்கள் தெரியாமல் போய் விட்டது.
    இந்த சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று யாரேனும் போராட்டம் நடத்தினால் அது சரியாக இருக்கும்.
    இன்னொரு விஷயம். அமெரிக்காவில் அணுமின் நிலையங்களை மேற்பார்வையிட சுயேச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு Independent Regulatory Commission உள்ளது. அது மாதிரியான சுயேச்சை அதிகாரம் கொண்ட அமைப்பு இந்தியாவில் இல்லை (ஜப்பானில் அப்படி இல்லாமல் போய் விட்டதால் தான் புகுஷிமே விபத்து நடந்தது)
    அமெரிக்காவில் உள்ளது போன்ற அமைப்பு இந்தியாவில் வேண்டும் என்று யாரேனும் போராட்டம் நடத்தினால் அதில் அர்த்தம் இருக்கும்.

    ReplyDelete
  10. Here is my direction of explaining this
    http://velsubra.blogspot.com/2012/10/blog-post_30.html

    ReplyDelete
  11. " யுரேனியம்-238 என்ற ஐசோடோப்பை எடுத்து அதன்மீது நியூட்ரான்களை அடித்தால், அது புளூட்டோனியம்-239 ஆக மாறி".. from atomic number 92 to 94 without Beta-decay??????

    ReplyDelete