Sunday, August 03, 2003

நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" - குறுநாவல் படித்தேன். Gone with the Wind கதையில் ஸ்கார்லட் ஓஹாரா "After all, tomorrow is another day!" என்று "நாளை" என்னும் வருங்காலத்தை நம்பிக்கையோடு பார்ப்பாள். ஆனால் கந்தன் - கதையின் நாயகன் - வாழ்க்கை வேறு தளத்தில் உள்ளது.

கந்தன் மொடாக்குடிகாரன். அதோடு விபசாரம், ஏமாற்றுவேலை, கட்டப் பஞ்சாயத்து என்று பணம் சம்பாதிப்பவன். அவனது தளத்தில் பெண்களும், ஆண்களும் திருமணம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதில்லை. தேவைக்கேற்ப வாழ்கிறார்கள். சமூகத்தில் உள்ள தேவைகளைத் தீர்த்துவைப்பதில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் எந்தத் தேவையாக இருப்பினும் அதைத் தீர்த்துவைத்து அதில் பணம் செய்து அவர்கள் வாழ்கிறார்கள்.

காலையில் எழுந்திருக்கும் கந்தன் போதையோடு நாளை ஆரம்பித்து நாளின் இறுதியில் யாரோ செய்த கொலையைப் பார்த்த சாட்சியாக காவல் நிலையம் வரை போய்க் கைதியாய் லாக்-அப்பில் முடிவடைகிறான். ஒரு நாள் முழுவதும் அவன் செயல்களும் அவன் வாழ்க்கையின் கடந்த கால நினைவோடல்களுமாகச் செல்லும் கதை.

கதாசிரியர் சர்வசாதாரணமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகும்போதும், எனக்கு பக்கமெங்கும் அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்களா என்று. எனது 33 வருடங்களில் ஜி.நா காட்டும் உலகத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் இதில் வரும் மக்கள் வெகு இயல்பாக நடக்கிறார்கள், துளி செயற்கை இல்லை. அதிர்ச்சியாயிருந்தாலும் நம்ப முடிகிறது.

"தொழில்" செய்யும் மீனாவைக் கட்டிய கந்தன், "தொழில்" செய்து கொண்டே கந்தன் மீது பாசத்தோடு இருக்கும் மீனா, யாராவது பசையான பார்ட்டியோடு கந்தன் தன்னை ஒட்டவைப்பானா என்று எதிர்பார்க்கும் சொர்ணா, கைம்பெண்ணாகக் கைக்குழந்தையோடு இருப்பவளை வளைத்துப்போடப் பார்க்கும் மேஸ்திரி முத்துசாமி, பதினைந்து வயதில் யாராலோ ஏமாற்றப்பட்டு வயிற்றில் குழைந்தையோடு இருக்கும், அதைக் கலைக்க முயற்சிக்கும் சித்தாள் பெண் (கல்யாணமான பெண்ணுக்குக் கலைக்க 100 ரூபாய், கல்யாணமாகாத பெண்ணுக்கு 200 ரூபாய், சித்தாள்னா 300 ரூபாய் என்னும் பெண் டாக்டர்!), எல்லாவித புரோக்கர் வேலையும் பார்த்து பெரிய ஆளான அந்தோணி, ஆங்கில இந்தியப் பெண்மணியை வைப்பாக்க ஆசைப்பட்டு, நிறைவேற்றிய செட்டியார், ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசும் ஆங்கிலோ-இந்திய வேசி, சாராயக் கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள், லாட்ஜுகள், வியாதி, சாவு, கொலை, ஏமாற்றல் ...

ஒருவித இருள் சூழ்ந்த உலகத்தில் வாழும் இவர்கள் - கந்தனைத் தவிர - ஒரு நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். கந்தனுக்குதான் இந்த உலகம் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டதாகத் தோன்றுகிறது. அவனது பாதையில் அடுத்து எங்கு போகப் போகிறோம் என்று தெரியாத போது தனது மனைவிக்கு (அதாவது கூட வாழும் பெண்ணுக்கு, அவளோடு அவனுக்கு இரண்டு குழந்தைகள் - பெண் இறந்து போகிறது, பையன் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகிறான்) ஏதாவது "ஏற்பாடு" செய்ய வேண்டும் (அதாவது அவளுக்கு வேறு ஒரு ஆண் துணை தேடி அவனோடு "செட்டில்" பண்ணி விடவேண்டும்) என்ற பரிவும், ஆதங்கமும் வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு இருளான கதை பற்றி எழுதும்போதும் ஆசிரியரின் நகைச்சுவை இழையோடுகிறது.

நாளை மற்றுமொரு நாளே - காலச்சுவடு பதிப்பகம் - விலை ரூ. 50

1 comment:

  1. பத்ரி,
    நான் ”நாளை மற்றுமொரு நாளே” இன்னும் படிக்கவில்லை, ஆனால், உங்கள் கதை சுருக்கத்திலிருந்து, க.நா.சு வின் பொய்த்தேவு நாவலின் கதாநாயகனான சோமுவின் ஞாபகம் வருகிறது. சோமுவின் முதற்பருவம், கிட்டத்தட்ட, நீங்கள் விவரித்த கந்தன் வாழ்க்கையைப் போலவே உள்ளது.

    -முருகன் கண்ணன்


    ReplyDelete