Thursday, November 04, 2004

மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்

இந்தியா 104 & 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203.

நேற்று மழை. இன்று விக்கெட்டுகள்.

காலை ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா வெகு சீக்கிரத்திலேயே திக்குத் தெரியாமல் தடுமாறியது. டெண்டுல்கர் ஒரு ஸ்டிரெயிட் டிரைவ் அடித்தார். அந்த அடியும் எல்லைக்கோட்டுக்கு முன்னாலேயே நின்று விட்டது. மூன்று இன்னிங்ஸ்களில் டெண்டுல்கர் இன்னமும் ஒரு நான்கும் அடிக்கவில்லை. அட, விளிம்பில் பட்டுக்கூட நான்கு கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கையில் வலு இல்லை, மனதிலும் வலு இல்லை. கில்லெஸ்பியின் பந்து ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்று வெளியே போனது, விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்சானது. டெண்டுல்கர் 5, இந்தியா 29/3. அடுத்து வந்த லக்ஷ்மண் டெண்டுல்கர் அவுட்டானது போலவே ஆனார். கில்லெஸ்பியிடமிருந்து கிட்டத்தட்ட அதே போன்ற பந்து, மிக மெல்லிய விளிம்பு. கில்கிறிஸ்டிடம் கேட்ச். லக்ஷ்மண் 1, இந்தியா 31/4. காயிஃப் கடந்த இரண்டு டெஸ்ட்களில் ஓர் அரை சதத்தையாவது எடுத்தார். இங்கு சடாரென உள்ளே வரும் பந்தை விட்டுவிட எண்ணி பேட்டை உயரத் தூக்க, பந்து கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. காயிஃப் 2, இந்தியா 33/5. கில்லெஸ்பி நான்கு விக்கெட்டுகள்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தன் முதல் டெஸ்டில், இதைவிடக் கொடுமையான ஒரு நிலையை எதிர்பார்த்திருக்க முடியாது. திராவிட் உடன் ஜோடி சேர்ந்து நின்று விளையாட வேண்டியவர். கில்லெஸ்பியின் பந்தில் ஸ்லிப் வழியாக ஓர் எட்ஜ் நான்கு ரன்களுக்கு. அவரது பந்திலேயே மிட் விக்கெட் திசையில் நல்ல அடியோடு ஒரு நான்கு. ஆனால் காஸ்பரோவிச்சின் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் நேராக நடு ஸ்டம்பில் விழுந்து கழற்றியது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் இந்தப் பந்தை நான்கு ரன்களுக்கு அடித்திருக்கலாம். தினேஷ் கார்த்திக் 10, இந்தியா 46/6.

திராவிட் ரன்களே அடிப்பதில்லை என்று முடிவு கட்டியிருந்தார் போல. கல்லாக இருந்தார் மறுமுனையில். உள்ளே வந்த கும்ப்ளே மட்டையைச் சுழற்றி கவர், பேக்வர்ட் பாயிண்ட் ஆகிய திசைகளில் நான்கு பவுண்டரிகளைப் பெற்றார். ஆனால் புதியவர் நேதன் ஹவ்ரிட்ஸ் வீசிய லால்லிபாப் பந்து ஒன்றை மிட்-ஆஃபில் நின்ற பாண்டிங்கின் கையில் தூக்கியடித்து அவருக்கு முதல் விக்கெட்டை, அவர் வீசிய முதல் ஓவரிலேயே பெற்றுத் தந்தார். இதைவிடப் பொறுப்பில்லாத ஷாட் இருக்க முடியாது. கும்ப்ளே 16 (4x4). இந்தியா 68/7. அதே நேரத்தில் திராவிட் 81 பந்துகளில் 18 ரன்களுடன் யாகம் புரிந்து கொண்டிருந்தார். அடுத்து ஹர்பஜன் வந்தார். மெக்ராத்தின் பந்துகளில் ஸ்லிப் வழியாக ஒரு நான்கும், ரிவர்ஸ் ஸ்விங் ஆன ஒரு ஃபுல் டாஸை நேராக பந்துவீச்சாளரின் கால்களுக்கு அருகில் அடித்து லாங் ஆஃபில் ஒரு நான்கும் பெற்றார். ஓவர் முடிந்த பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் பிரத்யேக மொழியில் குசலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து ஹர்பஜன் பாண்டிங்குடனும் வாய்ச்சண்டை போட்டார்.

திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட திராவிட் குனிந்து முட்டி போட்டு ஹவ்ரிட்ஸ் பந்தை லாங் ஆன் மேலாக அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். யாரோ சொல்லியிருகக் வேண்டும், அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகளாக விழுந்து கொண்டிருக்கிறது என்று. ஆனால் ஹர்பஜன் ஹவ்ரிட்ஸை தர்ட்மேனில் ஒரு நான்கை அடித்ததும், அடுத்த பந்தை இறங்கி வந்து திராவிட் போல அடித்து சிக்ஸ் பெற நினைத்தார் போலும். ஆனால் ஷாட்டை கடைசி நேரத்தில் நிறுத்தியதால் அல்வா போல ஒரு கேட்ச் ஃபார்வர்ட் ஷார்ட் லெக் காடிச் கையில் விழுந்தது. ஹர்பஜன் 14, இந்தியா 100/8. முரளி கார்த்திக் வெகுநேரம் நிற்கவில்லை. ஹவ்ரிட்ஸ் வீசிய பந்தில் பேட்டில் உரசி, கில்கிறிஸ்ட் கையில் விழுந்தது. முரளி கார்த்திக் 0, இந்தியா 102/9.

ஜாகீர் கான் காஸ்பரோவிச் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் ஸ்டம்பை இழந்தார். கான் 0, இந்தியா 104 ஆல் அவுட். திராவிட் 104 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆடுகளம் கன்னாபின்னாவென்று ஸ்பின் எடுத்தது. ஹவ்ரிட்ஸ் வீசிய பந்துகள் தீபாவளி அணுகுண்டுகளைப் போல வெடித்தன. எனவே கும்ப்ளே, ஹர்பஜன், முரளி கார்த்திக் ஆகியோர் ஒரு கை பார்த்துவிடுவர் என இந்திய அனுதாபிகள் நினைத்தனர். முதல் ஓவரை கான் வீசினார். இரண்டாவது ஓவரை வீச ஹர்பஜன் வந்தார். லாங்கர் சுலபமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். புத்தம் புதுப் பந்தைக் கூட ஹர்பஜன் பயங்கரமாக ஸ்பின் செய்தார். லாங்கர் ஸ்வீப் செய்த பந்தை சேவாக் சரியாகப் பிடிக்காததால் லாங்கர் பிழைத்தார். அப்பொழுது அணியின் எண்ணிக்கை 11/0. ஆனால் லாங்கர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கான் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லாங்கர் 12, ஆஸ்திரேலியா 17/1. பாண்டிங் வந்தது முதற்கொண்டே நன்றாக விளையாடினார். ஆனால் கும்ப்ளே வீசிய பந்தை 'புல்' செய்யப்போய், கால்காப்பில் பட்டதால் எல்.பி.டபிள்யூ ஆனார். பந்தின் உயரம் சற்றே அதிகமாகத் தோன்றியது. பாண்டிங் 11, ஆஸ்திரேலியா 37/2.

இரண்டு பக்கத்திலிருந்தும் ஸ்பின்னர்கள் இப்பொழுது மாறி மாறி வீசினர். ஆனாலும் மார்ட்டினும் ஹெய்டனும் அவ்வப்போது நான்குகளையோ, ஆறுகளையோ பெற்றுக்கொண்டுதான் இருந்தனர். ஹெய்டன் ஒவ்வொரு ஸ்பின்னர் பந்திலும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் கார்த்திக் பந்தில் இறங்கி அடிக்க வந்தவர் தன் ஷாட்டை நிறுத்தி தடுத்தாட முற்பட, கிடைத்த கேட்சை ஷார்ட் லெக்கில் காயிஃப் நன்றாகவே பிடித்தார். ஹெய்டன் 35, ஆஸ்திரேலியா 81/3.

ஆனால் மார்ட்டினும், காடிச்சும் ஆஸ்திரேலியா எண்ணிக்கையை நூறைத் தாண்ட வைத்தனர். காடிச் கும்ப்ளே வீசிய லெக் பிரேக்கில், மட்டை, கால் காப்பு வழியாக ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃப் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். காடிச் 7, ஆஸ்திரேலியா 101/4.

கிளார்க் கும்ப்ளே பந்தில் இரண்டு அமர்க்களமான சிக்ஸ்கள் அடித்தார். ஹர்பஜன் பந்தில் உயரத்தூக்கி அடித்த ஷாட்டை சேவாக் ஸ்கொயர் லெக்கில் கோட்டை விட்டார். இது சேவாக் விடும் இரண்டாவது கேட்ச். ஆனால் கும்ப்ளே பந்தில் இறங்கி அடிக்க வந்த கிளார்க் பந்தை விட்டுவிட தினேஷ் கார்த்திக் அருமையாகப் பிடித்து நொடியில் ஸ்டம்பிங் செய்தார். பார்த்திவ் படேல் இதைத் தடவியிருப்பார் என்றே நினைக்கிறேன். கிளார்க் 17, ஆஸ்திரேலியா 121/5. அடுத்து கில்கிறிஸ்ட் கொஞ்சம் வேடிக்கை காட்டினார். அதிகமாக உதை வாங்கியது கும்ப்ளேதான். ஒரு சிக்ஸ், இரண்டு நான்குகள் அவரது பந்துகளில். கார்த்திக் பந்துவீச்சில் மற்றுமொரு மட்டை, கால் காப்பு கேட்ச் ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃப் கையில். கில்கிறிஸ்ட் 26, ஆஸ்திரேலியா 157/6.

இதுபோல அதிரடியாக ரன்கள் பெற இந்தியாவில் யாருமே இல்லை என்பது வருத்தம் தரக்கூடியது.

கில்லெஸ்பி வந்தார். அசையாமல் நின்றார். இதற்கிடையே மார்ட்டின் சிறிது சிறிதாக ரன்கள் சேர்த்து தன் அரை சதத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டிருந்தார். கும்ப்ளே மற்றுமொரு மட்டை, கால்காப்பு முறையில் காயிஃப் வழியாக கில்லெஸ்பியை அவுட்டாக்கினார். இது காயிஃப் ஷார்ட் லெக்கில் பிடித்த நான்காவது கேட்ச். அடுத்த ஓவரில் மார்ட்டின் தன் அரை சதத்தைப் பெற்றார். அதற்கடுத்த கும்ப்ளே ஓவரில் ஹவ்ரிட்ஸ் தூக்கி அடிக்க, ஹர்பஜன் மிட் ஆஃபில் அதைப் பிடிக்க, கும்ப்ளே தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். ஹவ்ரிட்ஸ் 0, ஆஸ்திரேலியா 171/8. மார்ட்டினும், காஸ்பரோவிச்சும் எப்படியாவது முடிந்தவரை ரன்களைச் சேர்க்க முயன்றனர். ஆளுக்கொரு நான்குகளைப் பெற்றனர். மார்ட்டின் கார்த்திக் பந்தை கால் திசையில் கிளான்ஸ் செய்ய முயல, பந்து மட்டையில் பட்டு, ஸ்டம்பில் விழுந்தது. மார்ட்டின் 55, ஆஸ்திரேலியா 184/9. அதன் பின் மெக்ராத் வீணாக விக்கெட்டை விடாமல் கடைசி விக்கெட்டுக்கு 17 ரன்களைச் சேர்த்தார். மிக முக்கியமான ரன்கள் இவை. இறுதியாக கார்த்திக் பந்தை காஸபரோவிச் அடித்து, டீப் மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டில் நிற்கும் கும்ப்ளே கையில் கேட்ச் கொடுத்தார். காஸ்பரோவிச் 19, ஆஸ்திரேலியா 203 ஆல் அவுட். மெக்ராத் 9 ரன்கள் ஆட்டமிழக்காமல்.

ஆஸ்திரேலியா 99 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது.

நாளின் இறுதியில் மீதமிருந்த மூன்று ஓவர்களில் இந்தியா விக்கெட் ஏதும் இழக்காமல் 5 ரன்களைப் பெற்றிருந்தது. நாளை இந்தியா என்ன செய்யவேண்டும்? சேவாக் எப்பொழுதும் போல மட்டையை அங்கும் இங்கும் சுழற்றி முடிந்தவரை ரன்களைப் பெற வேண்டும். கம்பீரோ முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் உள்ளேயே இருக்க முயல வேண்டும். திராவிட் முதல் இன்னிங்ஸில் விளையாடியதைத் தொடரலாம். டெண்டுல்கர் பத்து ரன்களைத் தாண்டுவது கடினம். லக்ஷ்மண் பிரயோசனமில்லை. காயிஃப் ஒழுங்காக விளையாடி, திராவிட் உதவியுடன் அணியை 250 வரை கொண்டு சென்றால் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. இந்தியா 300ஐத் தொட்டால் இந்த மேட்சை இந்தியாதான் ஜெயிக்கும்.

2 comments:

 1. பத்ரி,

  விடாமல் இந்த மேட்சுகளை பார்த்து எழுதுகிறீர்கள்.

  உங்கள் கிரிக்கெட் ஆர்வத்திற்கு ஒரு ஷொட்டு.

  அன்புடன்

  ReplyDelete
 2. நன்றி. இன்று நான் எதிர்பார்த்தது போலல்லாமல் டெண்டுல்கர் சில நான்குகளை அடித்து நன்றாகவே விளையாடுகிறார். மீதி இன்று இரவு, இன்றைய ஆட்டம் முடிந்ததும். திராவிட் தனக்கு பதில் லக்ஷ்மணை முன்னால் அனுப்பி தன்னை நிரூபிக்கச் சொல்லியிருக்கிறார்...

  ReplyDelete